குறுகி சிறுக்கும் குமரி மாவட்ட ஆறுகள் காப்பாற்றப்படுமா?

-தமிழ்தாசன்

ஆறுகளைத் தேடி – 3

கோதையாறு, பறளியாறு, குழித்துறையாறு, வள்ளியாறு, பழையாறு உள்ளிட்ட சிறிதும் பெரிதுமாக 20க்கும் மேற்பட்ட ஆறுகள் பாய்கிறது கன்னியாகுமரியில்! பல்லாயிரமாண்டுகளாக நாஞ்சில் நாடான குமரி மாவட்டத்தை வளமுடன் வைத்திருக்கும் ஆறுகள் பற்றி அறிந்து கொள்வது காலத்தின் தேவையாகும்;

இந்த பயணத்தை தெற்கில் இருந்து துவங்கலாம். குமரியை தமிழ்நாட்டின் தென் எல்லையாக தொல்காப்பியத்தின் சிறப்புப்பாயிரம் குறிப்பிடுகிறது.

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ் கூறும் நல்லுலகு

கன்னியாகுமரியின் மேற்கில் மேற்குத்தொடர்ச்சி மலைகளும், தெற்கில் இந்திய பெருங்கடலும், கிழக்கில் வங்க கடலும் வடக்கில் திருநெல்வேலியும் எல்லைகளாக விளங்குகிறது. மேற்கு தொடர்ச்சி மலையான குறிஞ்சி, முண்டந்துறை புலிகள் வனக் காப்பகத்தைக் கொண்ட முல்லை, வற்றாத சிற்றோடைகளால் செழித்துக் கிடக்கும் வயல் வெளிகளைக் கொண்ட மருதம்,  நீண்ட கடற்பரப்பை கொண்ட நெய்தல், தேரிக்காடுகளை உள்ளடக்கிய பாலை என்ற ஐந்து நிலப் பரப்புகளையும் உள்ளடக்கியதாக குமரி மாவட்டம் திகழ்கிறது.

இங்கு நில மேலெழுச்சிப் போக்கினால் கடல் உள்வாங்கிச் சென்றுள்ளது. ஆழமான நீரோடைகள், அருவிகள், நெடிதுயர்ந்த தொங்கு பள்ளத்தாக்குகள், மிக உயர்ந்த இடத்தில் ஆங்காங்கே தென்படும் கடற்பாறைப் படிவங்கள் மற்றும் குளச்சல், சுசீந்திரம் ஆகிய இடங்களில் காணப்படும் கடற்குன்றுகள் கடல் கோளின் அடையாளங்களாகக் காணப்படுகின்றன. “இந்நில மேலெழுச்சி’ என்றும் வற்றாத நீரோடைகள் தோன்றுவதற்கு காரணமாகின்றன.

கோதையாறு, பறளியாறு, குழித்துறையாறு, வள்ளியாறு, பழையாறு உள்ளிட்ட சிறிதும் பெரிதுமாக 20க்கும் மேற்பட்ட ஆறுகள் பாயும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொல்பழங்காலத்தைப் சேர்ந்த நுண்கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம் ஆகிய பண்பாடுகளைச் சார்ந்த கி.மு. 4000 தொடங்கி கி.பி. 300க்கு இடைப்பட்ட காலங்களிலான கற்கருவிகளும், மட்கலயங்களும் இரும்பு ஆயுதங்களும் கிடைக்கின்றன.

குமரி நாஞ்சில் நாடு என்றும் அழைக்கப்பட்டது. நாஞ்சில்நாடு என்பது தற்போதைய அகத்தீஸ்வரம், தோவாளை வட்டங்களை உள்ளடக்கியதாகும். சங்க இலக்கியம் குமரியில் பஃறுளி, குமரி என்னும் இரண்டு ஆறுகளை பற்றி குறிப்பிடுகிறது. அதில் பஃறுளி ஆறு கடல் சீற்றத்தால் கடலுக்குள் போனதாக இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

சங்க இலக்கியம் காட்டும் ஆறுகளை பற்றி உரையாடும் முன் சமகாலத்தில் நம் கண்முன் உள்ள குமரி மாவட்ட ஆறுகளை நிலை என்ன?

தமிழ்நாட்டை பொறுத்தவரை மேற்கில் தோன்றி கிழக்கு நோக்கியே ஆறுகள் பாய்ந்தோடும். ஆனால் மேற்கு  நோக்கி கேரளா பகுதிக்குள் பாய்ந்தோடும் ஒரு ஆறு குமரி மாவட்டத்தில் தோன்றுகிறது. அந்த ஆற்றின் பெயர் கருப்பையாறு. பெரியாறு, காவிரி, பாலாறு போல இரு மாநிலங்களிடையே ஓடும் கருப்பையாற்றிலும்  நீர் உரிமைக்கான போராட்டங்கள், சிக்கல்கள் நீடிக்கின்றன.


கருப்பையாறு:
குமரி மாவட்டத்தின் கொண்டைக்கட்டி மலை, ஆறுகாணி  பத்துகாணி மலைப்பகுதிகளிருந்து பல சிற்றோடைகள் வழியாக நீரை பெற்று ‘அணைமுகம்’ என்கிற பகுதியில் கருப்பையாறு தோன்றுகிறது. கருப்பையாறு மேற்கு நோக்கிப் பயணித்து கேரளத்தின் நெய்யாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிக்கு போய் சேர்கிறது. குமரி மாவட்டத்தின்  ஆறுகாணி, பத்துகாணி, பேணு, கற்றுவா உள்ளிட்ட பகுதிகளும் நெய்யாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளாக உள்ளது.

தமிழ்நாட்டில் தோன்றி கேரளா மாநிலத்தில் பாயும் நெய்யாற்றில் கலக்கும் ஆற்றுநீர் என்பதால் ஆற்றுநீரின் உரிமை தமிழ்நாட்டிற்கும் உண்டு. ஆற்று நீரின் உரிமையடிப்படையில் 1963 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர்  காமராஜர் அவர்களால் தமிழ்நாடு அரசு – கேரளா அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பேரில் நெய்யாறு இடது கால்வாய் வழியாக அமைத்து, அதன் பாசனநீர் கன்னியாகுமாரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்தில் உள்ள அண்டுக்கோடு, இடைக்கோடு, பாக்கோடு, குளப்புறம், மெதுகும்மல், ஆறுதேசம், கொல்லங்கோடு, ஏழுதேசம் ஆகிய 9 வருவாய் கிராமங்களில் வேளாண்மைக்காக திறந்து விட்டப்பட்டது. ஏற்கனவே, வலது  கால்வாய் வழியாக கேரளத்தின் பாறசாலை, வெங்கானூர், விழிஞ்ஞம், அருமானூர், பூவார், ஓலத்தாணி உள்ளிட்ட ஊர்கள் பாசன நீர் பெற்று வந்தன.


கேர‌ள‌ அர‌சு 1958ம் ஆண்டு வெளியிட்ட‌ அம் மாநிலத்தின் நீர் ஆதார‌ங்க‌ள் ப‌ற்றிய‌ அறிக்கையில் நெய்யாறு இருமாநில‌ ஆறுதான் என‌க் குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து. இந்நிலையில்  2003 – ஆம் ஆண்டு கேரளத்தில் ஏ.கே.அந்தோணி தலைமையிலான காங்கிரஸ் அரசு வேறு மாநிலங்களுக்கு  தண்ணீர் தர வேண்டுமெனில், கேரள சட்டப் பேரவையின் ஒப்புதலோடுதான் தர முடியும் என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்தது. அதன் பின் 2004 ஆம் ஆண்டு முதல் நெய்யாறு இடது பாசன கால்வாயில் தண்ணீர் விடுவதை கேரளா அரசு நிறுத்தியது. இது குறித்து தமிழ்நாடு அரசு பல்வேறு கடிதங்களை கேரளா அரசுக்கு எழுதியது. கேரள முதலமைச்சரை நேரிலும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்து தண்ணீர் திறந்துவிட கோரினர்.

நெய்யாறு தண்ணீரில் குமரி மாவட்டத்திற்கு உள்ள உரிமையை தமிழ்நாடு அரசு நிலைநாட்ட வேண்டுமென கேட்டு உழவர்கள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். கேரளா அரசுடன் தமிழக அரசு நடத்திய கலந்துரையாடல்கள், குமரி மாவட்ட வேளாண் மக்களின் போராட்டம் என எதற்கும் பலனில்லை. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இன்று வரை நெய்யாறு இடதுக் கால்வாயில் கேரள அரசு நீரை திறந்து விடவில்லை.

20 ஆண்டுகளாக நீர் உரிமை மறுக்கப்பட்டதால் வேளாண்குடிகள் மாற்றுத் திட்டங்களை வலியுறுத்தி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் ஓடும் முல்லையற்றில் தடுப்பணை கட்டி அந்த நீரை நெய்யாற்றின் இடதுக் கால்வாய்க்கு திருப்பிவிட வழிவகை செய்யும் மாற்றுத் திட்ட வரைவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு அதனை நடைமுறைப்படுத்தும் சாத்தியக் கூறுகளை ஆய்ந்து வருகிறது. இதை விரைந்து நடைமுறைப்படுத்தினால் வேளாண்மைக்கு நல்லது.

கேரளத்தையும் தமிழ்நாட்டையும் கருப்பையாறு இணைப்பது போல கேரளத்தில் நெய்யாறு கடலில் சேரும் பூவாறு கழிமுகத்தையும் – தமிழ்நாட்டின் குழித்துரையாறு கடலில் சேரும் தேங்காய்பட்டினம் கழிமுகத்தையும் இணைக்கும் நீர்வழி போக்குவரத்து கால்வாயாக ஏவிஎம் கால்வாய் விளங்குகிறது.

ஏ.வி.எம் கால்வாய்:

ஆனந்த விக்டோரிய மார்தாண்டன் கால்வாய் என்பதன் சுருக்கமே ஏவிஎம் கால்வாய். கேரளா – தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள இக் கால்வாய் இரண்டு மாநிலங்களையும் இணைக்கிறது. 1860 தொடங்கி 1867 வரை இக்கால்வாய் வெட்டுவதற்கு ஏழாண்டு காலம் ஆனது. கன்னியாகுமரி தொடங்கி கொச்சி வரையிலும் இடையில் திருவனந்தபுரம்,கொல்லம் ஆகியவற்றின் வழியே படகு போக்குவரத்திற்காக திருவிதாங்கூர் மன்னர்களால் உருவாக்கப்பட்டதே இந்தக் கால்வாய்! அந்தக் காலத்தில் குமரி மாவட்டத்தின் மண்டைக்காடு தொடங்கி நீரோடி வரை ஓடிய இதில் அரிசி, உப்பு சுமந்த வணிக படகுகள் சென்றன. இக்கால்வாய் குமரி மாவட்ட விளவங்கோடு கல்குளம் வட்டங்களின் நீர்த் தேவையை நிறைவு செய்த நன்னீர் கால்வாயாக இருந்தது. ஆனால், இன்றோ அழிவின் விழிம்பில் இருக்கிறது!

முறையான பராமரிப்பின்றி காட்சியளிக்கும் ஏ.வி.எம்.கால்வாய்!

கேரளா பகுதியில் இன்றும் இக் கால்வாயில் படகு  போக்குவரத்து நடக்கிறது.

குடில்கள், உணவகங்கள் அமைக்கப்பட்டு சுற்றுலாத் துறை வருவாய் ஈட்டுகிறது. ஆனால், குமரி மாவட்டத்திலோ, ஏவிஎம் கால்வாய் அக்கிரமிப்புகளால் சுருக்கப்பட்டு, இன்று கழிவு நீரையும், குப்பைகளையும் சுமந்து செல்லும் துயரமான நிலையில் உள்ளது. அக்ஷிவின் விழிம்பில் இருக்கும் அந்த அழகான கால்வாய் காப்பாற்றப்பட வேண்டும். நமது பக்கத்து மாநிலமான கேரளாவைப் போல இயற்கை வளங்களை பாதுகாத்து, எழில் கொஞ்சும் படகு சவாரிகள் குமரியிலும் சாத்தியமாகும் காலத்திற்கு ஏங்குகிறார்கள் குமரி மாவட்ட மக்கள்!

கேரளாவில் ஆறுகள் நன்கு பராமரிக்கப்பட்டு, எழில் கொஞ்சும் படகு சவாரி நடக்கிறது.

பன்றி ஓடை:
கன்னியாகுமரி மாவட்டம் பொன்மலை காத்தாடி மலை பகுதிகளில் இருந்து உருவாகிறது பன்றி ஓடை. மக்கள் அதனை பன்னி வாய்க்கால் என்று அழைக்கின்றனர். மழை நீர்கசிவுகள், ரெட்டைகுளம் உபரி நீர் – பன்றி ஓடையை உற்பத்தி செய்கிறது.  சுங்கான் கடை, பிராந்தநேரி, பெருவிளை, வேம்பனூர் குளம், ஆசாரிப்பள்ளம், பாம்பன் விளை, சங்கரன் குழி, காரவிளை, பிள்ளையார்விளை, இராஜாக்கமங்கலம், கணபதிபுரம் கடந்து இராஜாக்கமங்கலம் துறை அருகே அரபிக் கடலில் கலக்கிறது.  சுமார் 13 கி.மீ நீளம் ஓடும் பன்றி ஓடையை பன்றி வாய்க்கால், பன்றிக்கால் என்றும் அழைக்கின்றனர்.

பாம்புரி ஓடை:  
குமரி மாவட்டம் கருங்கல் மலை, எடமலைக்கோணம் உள்ளிட்ட மலைகளில் இருந்து வரும் நீரூற்றகள் கப்பியறை ஊரின் காதே குளம் நிரப்பி பாம்புரி ஓடையாக உருப் பெறுகிறது. கோதையாறு இடது கால்வாயிலிருந்து வெட்டப்பட்ட பட்டணம்கால் வாய்க்கால் அணையில் இருந்து மிகைநீர் பாம்பூரி வாய்க்காலுக்கு கிடைக்கிறது.கப்பியறை, மத்திக்கோடு, ரித்தாபுரம், கரியாகுளம், வெள்ளியாகுளம் கடந்து ஏறக்குறைய 15 கி.மீ நீளமுடைய பாம்புரி வாய்க்கால், குளச்சல் துறைமுகத்திற்கு மேற்கில் அரபிக் கடலில் கலக்கிறது.

திருநெல்வேலியில் ஓடுவதை போல குமரி மாவட்டத்திலும் தாமிரபரணி  ஆறு ஓடுகிறது. தெற்கில் துவங்கும் தமிழ்நாட்டின் முதல் ஆறு அது தான். அதை பற்றி அடுத்த கட்டுரையில் காணலாம். ஆறுகளைத் தேடுவோம்.

கட்டுரை, படங்கள் ; தமிழ்தாசன்

சுற்றுச் சூழலியல் செயற்பாட்டாளர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time