பாஜகவின் அழுத்தத்திற்கு அடி பணியுமா அதிமுக?

-சாவித்திரி கண்ணன்

பலவீனமான கூட்டாளிகளை சேர்த்துக் கொண்டு பரிதாப நிலையில் பாஜக! அதிமுக இல்லாமல் தேர்தலை சந்திக்க அச்சம்; இறுதிகட்ட சாம, தான, பேத, தண்ட பிரயோகங்கள் நடக்கின்றன! ‘அச்சப்பட்டு அடி பணிவதா?’ ‘துச்சமாக கருதி துணிவதா?’ அதிமுகவிற்குள் கலக்கம்..! என்ன நடக்கிறது..?

தேர்தல் நெருங்க ஆரம்பித்தவுடன் திருடர்கள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைக்கத் தயாராகி விடுகிறார்கள்! பெரிய திருடர்கள் தாங்கள் அடித்த கொள்ளையை சிறிய திருடர்களுக்கு அவரவர் மாஸ் பலத்தைக் கணக்கிட்டு சற்று பங்கிட்டுக் கொடுக்கிறார்கள்!

இன்றைய தினம் அரசியல் கட்சிகள் அனைத்துமே பெரும்பாலும் மக்களிடம் இருந்து அன்னியப்பட்டே இருக்கிறார்கள்! அதனால், தங்கள் சொந்த பலத்தை மட்டும் நம்பி வெற்றி பெறக் கூடிய நிலையில் எந்தக் கட்சியும் இல்லை! இன்றைய காலகட்டத்தில் 20 முதல் 30 சதவிகித வாக்குகளை பெறக் கூடிய கட்சியே பெரிய கட்சியாகவும் நாட்டை ஆளக் கூடிய கட்சியாகவும் உள்ளது. அதாவது 70 முதல் 80 சதவிகித மக்களால் புறக்கணிக்கப்பட்ட கட்சியே நாட்டை ஆளும் தகுதியை பெற்றுவிடுகிறது. எனவே தங்கள் பலவீனத்தைக் கருதியே தங்களைவிட படு பலவீனமான சிறிய கட்சிகளோடு கூட்டணி வைக்கிறார்கள்! அதுவும் தமிழ்நாட்டில் ஒரு சதவித ஓட்டுபலம் கூட இல்லாத கட்சிகள் கூட தேர்தல் நேரத்தில் முக்கியத்துவம் பெற்று விடுகின்றன! காரணம், இத்தனை கட்சிகள் அணிவகுக்கும் கூட்டணி என்ற எண்ணிக்கை பலமே ஒரு இமேஜைத் தந்துவிடுகிறது!

இப்படி கூட்டணி பலத்தைக் காட்டுவதில் மாஸ்டர் பிளான் கொண்ட கட்சி என்றால், அது பாஜக தான்! தமிழ்நாட்டில் கவைக்குதவாத, கால் காசுக்கு தேறாத கட்சி எல்லாம் பாஜகவால் முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன!

தமிழகத்தில் பாஜகவின் ஒட்டுண்ணியாக அரசியல் பிழைப்பை நடத்தும் கட்சிகள் வரிசையில் உள்ளவை அனைத்துமே மக்கள் செல்வாக்கு இல்லாத கட்சிகள் மட்டுமல்ல, மிகப் பெரிய கறுப்பு பண முதலைகளின் கட்சிகளாகும்!

எல்லாவற்றையும் விலை பேச முடிந்த பாரிவேந்தர்.

பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி, கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், பிரேமலதாவின் தேமுதிக, ராமதாஸுன் பாமக, டி.டிவியின் அ.ம.மு.க ஆகிய கட்சிகளை தன் கூட்டணியில் வைத்துள்ளது பாஜக. இந்தக் கட்சிகள் எல்லாமே தனித்து நின்று ஒரு தொகுதியில் கூட ஓட்டு பெற முடியாத கட்சிகள் தாம்!

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், பிரபலக் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொலைகாட்சி ஊடகம் ஆகியவற்றை நடத்தும் கறுப்பு பண முதலையான பாரிவேந்தர் தன் வெற்றிகரமான கல்வி வியாபாரத்தை பாதுகாக்கவே அரசியல் கட்சி ஆரம்பித்து நடத்தி வருகிறார். கூடவே தன் உடையார் சாதி அடையாளத்துடனும் இவர் இருப்பதால் தான் நிற்கும் பெரம்பலூர் தொகுதியில் பணத்தை தண்ணீராக இறைத்து சுமார் இரண்டு லட்சம் ஓட்டுகளை தனித்தே வாங்கிவிடுபவர்! சென்ற தேர்தலில் திமுக தலைமைக்கு ஒரு பெரும் தொகையை கொடுத்து பெரம்பலூர் தொகுதியை பெற்றார். அதே சமயம் சொத்து பாதுகாப்புக்காக 100 சதவிகித பாஜக விசுவாசத்தையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். இவரது கட்சிக்கு இன்னொரு தொகுதியில் கூட நிற்க வைக்க ஆள் கிடையாது!

மித மிஞ்சிய பணபலத்தில் ஏ.சி.சண்முகம்

புதிய நீதிக் கட்சித் தலைவரான ஏ.சி.சண்முகமும் ஒரு வெற்றிகரமான கல்வி வியாபாரி மட்டுமல்ல, ஸ்டார் ஹோட்டல்கள் மற்றும் சில வணிகமும் செய்பவர். முதலியார் சாதி அடையாளமும் கொண்டவர். வேலூர் தொகுதியில் மட்டும் பணத்தை அள்ளி இறைத்து கணிசமான ஓட்டுகளை பெற முடிந்தவர். இவரும் கறுப்பு பணத்தை அடைகாக்கவே பாஜகவை அண்டிப் பிழைப்பவரே! வேலூர் தொகுதிக்கு அப்பால் இவர் ஒரு செல்லாக்காசே! மேற்படி இருவருமே ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபதிகளே தவிர, மயிரளவுக்கு கூட மக்கள் செல்வாக்கு இல்லாதவர்கள்!

அடுத்ததாக புதிய தமிழகம் கிருஷ்ணசாமி ஏற்கனவே அரசியலில் இருந்து அவுட்டேட் ஆனவர்! சொந்த சாதியான தேவேந்திரகுல வேளார்களாலேயே புறக்கணிக்கப்பட்டவர்! அரை சதவிகித வாக்கு வங்கிக்கு கூட அருகதையற்றவர்! சுயநலத்தின் உச்சத்தை தொட்ட கிருஷ்ணசாமியின் பின்னால் அவர் நிழலைத் தவிர நிற்க யாருமில்லை! அவரும் பாஜகவின் பாதங்களில் விழுந்து, புரண்டு பிழைப்பு நடத்தி வருகிறார்.

பண்ணையார் ஜி.கே.வாசன், அப்பா மூப்பனாரின் அடையாளத்தால் அரசியலுக்கு வந்தார். அதிர்ஷடவசமாக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைமை, மத்திய அமைச்சர் பொறுப்பு கிடைத்தும் எதிலும் ஜொலிக்க முடியாமல் காங்கிரசில் இருந்து கல்தா கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார். அரசியலில் அனாதையானவர்களுக்கு அடைக்கலம் தருவதற்கு என்றே அவதாரம் எடுத்துள்ள பாஜகவின் தயவில் தற்போது மேல்மட்ட பாலிடிக்ஸ் செய்து கொண்டுள்ளார். தனியாக ஒரு கவுன்சிலர் தேர்தலில் நின்றால் டெபாசிட் கூட தேறமாட்டார்! இப்ப இவர் தான் அதிமுகவை பாஜக அணிக்கு இழுக்கும் தரகு வேலையை செய்து கொண்டு இருக்கிறார்!

தேமுதிகவானது விஜயகாந்த் இருக்கும் போதே கடைசியாக அரை சதவிகித ஓட்டு பெறும் அவல நிலைக்கு வந்துவிட்டது! அரசியலில் ஒகோ என்று உயர்ந்து வந்து கொண்டிருந்த விஜயகாந்த் 2014 ஆம் ஆண்டு பாஜகவுடன் உறவு கொள்ள ஆரம்பித்தது தொடங்கி தான் பாதாளத்தில் வீழ்ந்தார்! விஜயகாந்தின் அரசியல் புரிதலின்மையால் அவரது கொடை உள்ளமும், சினிமா பிரபலமும் அரசியலில் பயனற்று போய்விட்டன! மனைவி சொல்லே மந்திரம் என்று வாழ்ந்து கடைசி காலங்களில் மண்ணைக் கவ்வினார்! அரசியலை பெருவணிகமாக கருதும் பேராசை பிடித்த பிரேமலதா எல்லா தரப்பிலும் பேரம் பேசி அம்பலப்பட்டு போனார் ! ஆனால், அரசியல் அனாதைகளுக்கென்றே தோற்றுவிக்கப்பட்டுள்ள பாஜக அவரை அரவணைத்துக் கொண்டு வருகிறது!

தான் உருவாகி வளர்ந்த அதிமுகவை தூக்கி பாஜகவுக்கு அடகு வைக்க துடித்த ஒ.பன்னீர்செல்வம் அதிமுகவில் மெல்ல,மெல்ல ஓரம் கட்டப்பட்டு பிறகு ஒரேயடியாக வெளியேற்றப்பட்டு, தற்போது மோடி, அமித்ஷாவிடம் அடைக்கலமாகி உள்ளார். ஏற்கனவே திகார் ஜெயிலைக் கண்ட தில்லாலங்கடி டி.டி.வி தினகரன் கொள்ளையிட்ட கோடானுகோடி சொத்துக்களை பாதுகாக்க பாஜகவின் பாதத்தில் விழுந்து கிடக்கிறார்! இவருக்கு அரை சதவிகித ஓட்டு கிடைப்பதே அபூர்வம்!

இவர்களில் இருந்து சற்றே மாறுபட்டவர் ஐயா ராமதாஸ்! இவருக்கு இன்னும் இரண்டரை சதவிகித வாக்கு வங்கி இருக்கிறது. பாமகவின் சாதி செல்வாக்கு பெருமளவு சரிந்தது என்றாலும், 35 ஆண்டுகால கட்சி என்பதால் வேர் ஆழமாக ஊன்றப்பட்டதால் உயிர்த்து இருக்கிறது! அதனால் யாராவது ஒரு பெரிய கட்சியேனும் இவர்களை அரவணைத்துக் கொள்ளும். அன்புமணி மத்திய அமைச்சராக இருந்த போது செய்த ஊழல்களால், பாஜகவிடம் இருந்து விடுபட முடியாமல் பணிந்து கிடக்கிறது பாமக.

மகனுக்கு மகுடம் சூட்டி மகிழ காத்திருக்கும் ராமதாஸ்.

ஆக, மொத்ததில் தன்னுடைய பலவீனமான கூட்டாளிகளைக் கொண்டு நாடாளுமன்றத் தேர்தலை ஒரு போதும் எதிர் கொள்ள முடியாது என்பதால் அதிமுகவை எப்படியாவது வளைத்துப் போட துடிக்கிறது பாஜகவின் டெல்லித் தலைமை! எடப்பாடியை படிய வைக்க சாம, தான, பேத, தண்டம் அனைத்தையும் பிரயோகித்து வருகிறது!

அதிமுகவில் எடப்பாடி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் அனைவருமே பொருளாதார குற்றப் பின்னணி உள்ளவர்கள் என்பதால், கடைசி ஆயுதமாக பாஜக தலைமை தண்டத்தை கையில் எடுத்து மிரட்டவும் வாய்ப்புள்ளது. ஆனால், அதிமுகவை பொறுத்த வரை அது பாஜகவுக்கு கடந்த காலத்தில் அடக்கமாக இருந்த கட்சி மட்டுமல்ல, அட்சய பாத்திரமாகவும் இருந்து அள்ளி வழங்கிய கட்சி என்பதால் அராஜகத்தை பிரயோகிக்காமல் பேசிப் பேசியே பணிய வைக்க பார்க்கிறது. மேலும், தங்களுடைய மாநிலத் தலைவர் அண்ணாமலையின் அடங்காத வாய் கொழுப்பினால் பொறுத்து, பொறுத்துப் பார்த்து பொங்கி எழுந்து, அதிமுக விலகியது என்பதையும் அவர்கள் உணராமல் இல்லை.

அதிமுகவை பொறுத்த வரை பலவீனமான கட்சிகளையும் தன் கூட்டணிக்கு இழுத்துப் போட்டு ஒரு பெரிய அணியாக காட்ட வேண்டும் என நினைக்கிறது! அந்த வகையில் கோவை வேலுமணி பாமக, தேமுதிக, புதிய தமிழகம் ஆகியவற்றுடன் பேசுகிறார். அவர்களோ பாஜாக் கூட்டணிக்கு வரும்படி அதிமுகவை அழைக்கிறார்கள்! இதனால், திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தையில் விரக்தி அடைந்த ஓரிரு கட்சிகளேனும் அதிமுக கூட்டணிக்கு வரக் கூடும் என நம்புகிறது. யார் வந்தாலும், வராவிட்டாலும் இருக்கும் கட்சிகளைக் கொண்டு களத்தில் இறங்கலாம் என்ற முடிவில் தான் உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் தருவோம் என்பதே அதிமுகவில் தற்போதைய நிலவரமாகும்.

பாஜகவிடம் இருந்து விலகி வந்த அதிமுக, தங்களிடம் இருந்து விலகி நின்ற சிறுபான்மையினரை அரவணைத்து மகிழத் தொடங்கிவிட்டது. பாஜகவை விட்டு விலகி நிற்பதால் சுதந்திரமாக சுவாசிக்கும் சுகத்தையும் பார்த்து விட்டது. ‘மீண்டும் அடிமையாகி கட்சியை அடகு வைக்க வேண்டாம்’ என உள்ளார்ந்த வகையில் நினைக்கிறது! பாஜகவை விட்டு விலகியதால் அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ள ஒரு புதிய இமேஜை இழப்பது தற்கொலைக்கு சமமாகும். இந்த நிலையில் பாஜகவுக்கு பணியுமா? அல்லது பதமாக விலகி நிற்குமா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

ஆனால், ஒன்று! ‘பாஜக கூட்டணிக்கு அதிமுக பணிந்துவிட்டால், இனி அதற்கு எதிர்காலம் என்ற ஒன்றே இருக்காது’. எடப்பாடியை பாஜக கூட்டணிக்குள் இழுப்பது பாஜக, அதிமுக இரண்டுக்குமே பெரிய பலனை தராது!

அவ்வளவு கசப்பு இரு தரப்பிலும் மண்டிக் கிடக்கிறது மட்டுமல்ல, அதிமுகவின் வாக்கு வங்கி ஒ.பி.எஸ்சுக்கும், டி.டி.வி.தினகரனுக்கும், பாஜகவுக்கும் டிரான்ஸ்பர் ஆகாது! அதே போல அவர்களின் ஆதரவு வாக்குகள் அதிமுகவுக்கும் டிரான்ஸ்பர் ஆகாது. உடைந்த கண்ணாடிச் சிதறல்கள் ஒட்டுவது சிரமம். இந்த முயற்சியில் ஈடுபடுவதை விடுத்து அதிமுகவை சற்று சுதந்திரமாக நிற்க பாஜக அனுமதித்தால், திமுக பக்கம் செல்லும் சிறுபான்மையினர் வாக்கு வங்கியின் கணிசமான பகுதியும், ஆளும் திமுக மீதான அதிருப்தி வாக்குகளையும் அதிமுக சற்றேனும் அறுவடை செய்வதன் மூலம் திமுக பலவீனப்பட வாய்ப்புள்ளது. அதிமுகவை அரவணைத்தே அழிக்க நினைக்கும் பாஜக என்ன முடிவெடுக்கப் போகிறதோ..?

என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time