நேர்த்தியான கதை அம்சமுள்ள கன்னடப் படம் ‘சுவாதி முத்தினா மேல் ஹனியே’. மென்மையான தென்றலை போன்ற காதல் கதை! இறந்து கொண்டிருக்கும் ஆணும், உயிர்ப்புடன் இருக்கும் பெண்ணும் பற்றிய காதல் கவிதை! துன்பமான வாழ்க்கைக்கு இடையிலும் நம்பிக்கையையும், காதலின் மென்மையையும் காட்டும் படம்:
படத்தின் தலைப்புக்கு, ‘முத்தாக தோன்றிடும் மழைத்துளி’ என்பதே பொருளாகும்! வாழ்க்கையின் நோக்கத்தை தேடும் ஆழமான கேள்விகள், ரசிகர்கள் மனதில் பல கோணங்களில் எழும் வகையில் இப் படம் உள்ளது.
Hospice என்பது வயதானவர்களை வைத்து பராமரிக்கும் ஒரு இடமாகும். இதற்கு இணையான ஒரு தமிழ்ச் சொல் இன்னமும் வரவில்லை (ஐரோப்பாவில் உருவான அமைப்பு என்பதால் ஒருவேளை நமக்கு அந்நியமான ஒன்றாக இருக்கலாம்).Hospice என்றால் பிணியாளர் பராமரிப்பகமாகும்.
இக்கதையின் நாயகி பிரேரனா ஒரு மருத்துவர் – மனநல ஆலோசகர். மரணத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு ஆலோசனை வழங்கும் மையத்தில் பணிபுரிகிறார். அந்த மையம் (hospice) எழில்சார்ந்த மலைப் பிரதேசத்தில் உள்ளது. கதை மைசூரிலும், நீலகிரியிலும் படமாக்கப்பட்டுள்ளது. அந்த மையத்தில் தனி வீடுகள் உள்ளன. முதியோர்கள் மரணத்தை நல்லவிதமாக எதிர்கொள்ள வைப்பதும், வலியைக் குறைக்கும் குறைந்த பட்ச மருத்துவம் தருவதும் அதன் நோக்கமாகும். ஒரு அறக்கட்டளை அந்த மையத்தை நடத்தி வருகிறது.
வீட்டிற்கு முன் உதிர்ந்து இருக்கும் பூக்களை பெருக்கி, கழிவறையை சுத்தம் செய்து, தோசை ஊற்றி சமையலறையிலேயே சாப்பிட்டுக் கொள்ளும் நாயகி பிரேரனா, முன்னறையில் கணிணியில் பணிபுரிந்து கொண்டிருக்கும் கணவனுக்கு முன் காபி வைத்து விட்டு செல்லுவதில் தொடங்குகிறது கதை. கிட்டத்தட்ட புகழ்பெற்ற இயக்குநரான சத்தியஜித் ரே சித்தரிக்கும் கதாநாயகி போல வருகிறாள்.
தனியார் வானொலி அறிவிப்பாளராக இருந்த சிரி ரவிக்குமார் நாயகி பிரேரனாவாக மென் உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்தி கச்சிதமாக நடித்துள்ளார். ஆக, இவர் நாயகி மட்டுமல்ல, படத்தின் மையமான கதாநாயக கேரக்டராகவும் அசத்துகிறார்..! ஆழமான கதை அவளுடைய நடிப்பிற்கு மெருகூட்டுகிறது.
அந்த மையத்தில் பலவிதமான கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். இரண்டு மகள்கள் இருந்தும், சொத்துக்களை விற்று, தனது மனைவியை ஒருவர் பார்த்துக் கொள்கிறார். தனது மனைவி, ‘பால் சம்மந்தப்பட்ட எதையும் சாப்பிடக் கூடாது’ என்பதால், இவரும் பால் இல்லாத சாயா தான் குடிக்கிறார். அந்த நபரோடு சேர்ந்து பிரேரனா கறுப்புச் சாயா அருந்துகிறார். தனது இறப்பிற்கு பிறகு கணவர் எங்கு செல்வார் என மனைவி கவலை கொள்கிறாள். ‘ரொம்பவும் உணர்வு பூர்வமாக அணுக வேண்டாம், நீ ஒரு மருத்துவர் என்ற எல்லைக்குள் இரு’ என அந்த மருத்துவமனை நிர்வாகியான டாக்டர் மன்மோகன் பிரேரனாவிற்கு ஆலோசனை கூறுகிறார். இவர் பிரேரனாவின் கணவருக்கு நண்பரும் கூட.
பிரேரனாவிற்கு ஜன்னல் ஓரம் உள்ள இருக்கை வேண்டும்; ஏரியைப் பார்க்க வேண்டும்; மனதை வருடும் கவிதை பிடிக்கும். சுவையான தோசையை செய்யத் தெரியும். இவை குறித்த எந்தப் பார்வையும் இல்லாதவனாக கணவன் இருக்கிறான். இவளுக்கு எதற்காக விருது கிடைத்துள்ளது என்பதைக் கூட அவளது கணவனிடம் அவன் நண்பன் தான் சொல்கிறான். இப்படிப்பட்ட விட்டேத்தியான கணவனோடு எத்தனை ஆண்டுகள் வாழ்ந்து என்ன பயன் ? ஏன் வாழ வேண்டும்..? இது இந்தப் படம் எழுப்பும் கேள்வி.
இந்த நிலையில் மத்திய வயதில் இருக்கும் அனிகேத் ( வீடற்றவர் என்ற பொருள்) தனியாக அந்த மையத்திற்கு வந்து சேருகிறான். ‘தனக்கு மனநலஆலோசனை வேண்டாம்’ என்று கூறுகிறான். ‘ஜன்னல் வைத்த அறை வேண்டும்’ என்பது தான் அவனுடைய ஒரே நிபந்தனை. வந்த சில நாட்களிலேயே பிரேரனாவிற்கும், அனிகேத்திற்கும் புரிதல் ஏற்படுகிறது. ”இறக்கும் நிலையில் உள்ள ஒருவனிடம் ‘சீரியசாக பேசு’ என்கிறாயே, நீ என்ன ஆலோசகர்” என்ற வசனமே, அவன் வித்தியாசமானவன் என்பதைச் சொல்லி விடுகிறது.
“நந்தியாவட்டை பூக்கள் சுதந்திரமானவை அது மற்றவருக்காக பூப்பதில்லை. அப்படி பூப்பது நிர்பந்தம் தனக்காகப் பூப்பதே சுதந்திரம். “. நோயோடு போராடி வாழும் அனிகேத் தன் நினைவாக மருத்துவமனை வளாகத்தில் நந்தியாவட்டை செடியை விரும்பி நடும் போது வெளிப்படுத்தும் வார்த்தைகள் இவை.
ராஜ் பி ஷெட்டி என்பவர் எழுதி, இயக்கி, அனிகேத்தாக நடித்து இருக்கிறார். விமர்சன ரீதியில் இத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இவர் நவீன கன்னட சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக கொண்டாடப்படுகிறார்.
‘உனக்கு இரவு நேர பணி கூட உண்டா ?’ என்று கேட்கும் கணவனுக்கு பதில் சொல்ல அவள் எடுத்துக் கொள்ளும் தாமதம் பல அவதானிப்புகளை நமக்குத் தருகிறது. திரைமொழி மிகச் சிறப்பாக இந்தப் படத்தில் வெளிப்படுகிறது. பிரேரனா உடுத்தும் பருத்திப் புடவைகள் கூட அழகு தான். இதை அவள் கணவனுக்கு ரசிக்கத் தெரியவில்லை. ஆனால், மென்மையாக அனுமதி கேட்டு அனிகேத் அந்தப் புடவையை மிருதுவாக முகர்ந்து பார்க்கிறான்.
பிரேரனாவின் தாய் வரும் போது மருமகன் காட்டும் பாராமுகமும், நோயாளியாக இருந்தாலும் நாள் முழுவதும் அவளோடு கலகலவென்று பேசும் அனிகேத்தும் வெவ்வேறானவர்கள். அனிகேத்தும், அவள் அம்மாவும் பேசிக் கொண்டிருப்பதை படம் பிடிப்பதன் மூலம், அவளுக்கு உண்மையான மகிழ்ச்சி எங்கு இருக்கிறது என்பது நமக்கு தெளிவாகப் புரிகிறது.
ஒருத்தி தன் மனக்கிலேசங்கள் அனைத்தையும் தாயாரிடம் வெளிப்படையாக பேச முடியுமா? ‘முடியும்’ என்று சொல்கிறது இந்தப் படம். ஓய்வு பெற்ற ஆசிரியையான அம்மாவுக்கு தன் மகள் எதிர் கொள்ளும் அன்பற்ற வாழ்க்கை தெரிகிறது. அவளுக்கு கிடைத்துள்ள புதிய அன்பை அங்கீகரித்து சரியாக வழிகாட்டுகிறாள். சில நிமிடங்களே வந்தாலும், நினைவில் இருக்கும் காட்சி அது. ஒரு பக்கம் அலட்சியமான- வேறு பெண்களோடு உறவுள்ள – கணவன், மறுபக்கம் தன்னை நேசிக்கும் எதிர்பார்ப்புகள் அற்றவன் என இரு உறவுகளோடு வளைய வரும் கதாநாயகி என்றாலும், எந்த இடத்திலும் பாலியல் காட்சிகள் இல்லாததே படத்தின் சிறப்பாகும்.
அந்த மையத்தின் காவலராக தோட்டத்தை பார்த்துக் கொள்பவனுக்கும் ஒரு கதை இருக்கிறது. அந்த மையத்தில் எந்த இறப்பு நடந்தாலும், மறு நாள் தன்னை மறந்து அவன் குடிப்பது ஏனோ?
இதில் சின்னச் சின்ன காட்சிகள் அற்புதமாக காட்டப்படுகின்றன. ‘அன்பை எப்படியெல்லாம் வெளிபடுத்தலாம்’ என்பதை சொல்கின்றன. மகிழ்ச்சியாக இருப்பதற்கு வீடு தேவையில்லை; சேர்ந்து ஒரே வீட்டில் இருப்பதாலேயே மகிழ்ச்சியாக இருப்பதாக இருக்க வேண்டும் என்றில்லை. இதன் தாக்கத்தால் மேலும், சில நல்ல படங்கள் வெளிவரலாம். இது பிரைம் தளத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது.
Also read
எழுத்தாளராளரும், திரைக் கலைஞருமான கொற்றவை ‘மனிதர்களின் மென் உணர்வுகளைக் கூட திரைப்படமாக்க இயலும்’ என இந்தப் படம் குறித்து கூறுகிறார். ‘வாழ்க்கைப் பற்றிய அக மனத்தின் தத்துவங்களை திரை உரையாடலாக மாற்றுவது அவ்வளவு எளிதானதல்ல!’ அதை இந்தப் படம் சாத்தியப்படுத்தி உள்ளது.. என இதனை வியந்து எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவாளரான பிரவீன் ஷ்ரீனின் கேமரா, படத்திற்கான சூழலை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளது. முகுந்தனின் இசையும் கதையின் ‘மூடிற்கு’ ஏற்றார் போல இசைந்து வெளிப்பட்டுள்ளது.
திரை விமர்சனம்; பீட்டர் துரைராஜ்
அருமையான பதிவு.