அடங்காத இந்து இயக்கங்கள்! அடிபணிவதா நீதிமன்றங்கள்?

-ச.அருணாசலம்

முன்னெப்போதும் இல்லாத பதற்றம் இந்திய இஸ்லாமியர்களிடையே எழுந்துள்ளது! காரணம், பாபர் மசூதி இடிக்கப்பட்டு ராமர் கோவில் உருவாக்கத்திற்கு பிறகு தற்போது வாரணாசியின் ஞானவாபி, மதுராவின் ஷாயி ஈத்கா மசூதி, டெல்லியில் சுனேஹ்ரி போன்றவற்றை சங் பரிவாரங்கள் குறிவைத்து முன்னேறுகின்றன!

இந்திய இஸ்லாமியர்களின் குழு ஒன்று குடியரசுத் தலைவரை சந்தித்து தங்கள் அச்சத்தையும், கவலையையும் எடுத்துச் சொல்ல நேரம் கேட்டுள்ளனர். இந்திய இஸ்லாமியர்களின் மசூதி மற்றும் வக்பு வாரிய சொத்துக்களை அபகரிக்கும் முயற்சிகள் தற்போது வேகம் பெற்று வருகின்றன. இதில் குடியரசுத் தலைவரின் கவனத்தை கோர உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

1992 ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பொழுது  அவர்கள் எழுப்பிய கோஷம்  ‘ அயோத்தி ஒரு ட்ரைலர் தான், காசியும், மதுராவும் பாக்கி உள்ளது’ என்ற கோஷம் . இதன் பொருள் , எங்களது அடுத்த இலக்கு காசியில் உள்ள கியான் வாப்பி மசூதியும், மதுராவில் உள்ள ஷாயி ஈத்கா மசூதியும் விரைவில் நொறுக்கப்படும் என்பது தான். அது தான் தற்போது நடந்து கொண்டுள்ளன!

இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களிடையே மத உணர்வையும், வெறுப்பையும் கிளப்பி பாஜகவினர்  அடுத்தடுத்து மோதல்களை உருவாக்கியதால், அதை சட்ட ரீதியாக எதிர் கொள்ள 1991-ல் நரசிம்ம ராவ் அரசு வழிபாட்டு தலங்கள் சிறப்பு சட்டம் ( Places of Worship Act 1991) என்ற சட்டத்தை நிறைவேற்றியது.

இதன்படி ‘இந்தியா சுதந்திரமடைந்த நாளான ஆகஸ்டு 15, 1947ல் வழிபாட்டுத் தலங்கள் என்ன குணாதிசயங்களோடு, எந்த மத அடையாளங்களோடு இருந்ததோ, அவை அப்படியே தொடர வேண்டும், நீடிக்க வேண்டும்’ sec.4(1) என்றும்,

இது குறித்து 1947ல் ஏதாவது சர்ச்சையோ, புகாரோ, வழக்கோ, சட்ட வழிமுறை தேடலோ நிலுவையில் இருந்தால், அவை நீர்த்துப் போகும், எந்த ஒரு வழிபாட்டுத் தலமும் 1947, ஆகஸ்டு 15 ல் என்ன நிலையில் எந்த மதத்தை சார்ந்து இருந்ததோ அது அப்படியே தொடரும் sec.4(2) என்றும் சட்டம் இயற்றப்பட்டு நிறைவேறியது. ஒரு வழிபாட்டுத் தலத்தின் தன்மை அதே மதத்தின் வேறு பிரிவுக்கோ அல்லது வேறு ஒரு மதத்தின் தன்மைக்கோ மாற்றக் கூடாது என்றும் இந்த சட்டம் கறாராகக் கூறுகிறது.

வரலாற்றில் நிகழ்ந்த பழைய நிகழ்வுகளுக்கு இன்றைய சமூகம் பலிகடாவாக மாற்றப்படக் கூடாது, மக்களின் இறை உணர்வும், மத உரிமையும் பின்னிப் பிணைந்துள்ள வழிபாட்டு தலங்களுக்கு உரிமைகூறி, அவற்றை மாற்றத் தலைப்பட்டால், அதற்கு ஒரு முடிவு கிடையாது, மதச் சார்பின்மையை போற்றும், பாதுகாக்கும் ஓர் அரசு மக்களிடையே மத உணர்வை தூண்டி குளிர்காய நினைக்கும் அரசியல் சக்திகளின் இத்தகைய  முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கவே இந்த சட்டத்தை நிறைவேற்றியது.

இந்த சட்டத்தை, உச்ச நீதிமன்ற அமர்வும் செல்லும் என்றும், இந்திய நாட்டின் மதச்சார்பற்ற நிலையை நிலைநாட்டும் வகையில் நாடாளுமன்றம் எடுத்த நடவடிக்கை என 2019 ராமர் கோவில் வழக்கு தீர்ப்பிலும் கூட உறுதிபடுத்தி உள்ளது!

பாறைகளில் சமண மதச் சிற்பங்கள்!

ஏனென்றால், கடந்த மன்னராட்சி காலங்களில் அந்தந்த மன்னர்களின் மதச் சார்புக்கு ஏற்ப வழிபாட்டுத் தலங்கள் இடிப்பும், அதைத் தொடர்ந்து புதிய வழிபாட்டுத் தலங்கள் உருவாக்கமும் நடந்துள்ளன! நமது தமிழகத்திலேயே கூட காஞ்சிபுரத்தில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட புத்தர் கோவில்கள் இடிக்கப்பட்டு சமணர் கோவில்களாக மாறியதும், பின்பு அவை சிவன் கோவிலாகவும், அம்மன் கோவில்களாகும், பெருமாள் கோவில்களாவும் மாற்றம் கண்டதும் வரலாறு! தென் தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் ஏராளமான சமணர் கோவில்கள் இடிக்கப்பட்டு சைவ கோவில்களாக மாற்றம் கண்டுள்ளன! இதற்கெல்லாம் வரலாற்று ஆதாரங்களும் உள்ளன. எனவே, இது போன்ற உரிமை கோரல்களை இன்று பெளத்தர்களும், சமணர்களும் எழுப்பத் தொடங்கினால் இந்தியாவில் ஆயிரக்கணக்கான இந்து கோவில்களின் நிலைமை கேள்விக்கு உள்ளாகி விடும்.

ஆனால், ஆட்சி அதிகாரம் இருப்பதால் தனக்கு கீழ் உள்ள சங்க பரிவாரங்களை உசுப்பேத்தி, நீதிமன்றங்களை நாடச் செய்து, பலவித அழுத்தங்களை செலுத்தி, நாட்டில் ஒருவித பதற்றத்தை தோற்றுவிக்கின்றனர் மத்திய ஆட்சியாளர்கள்!

சங்கப் பரிவாரத்தை சேர்ந்த ஐந்து மகளிர், வாரணாசி கோர்ட்டில் 2021ல் ஒரு வழக்கு தொடுத்தனர்.அதில் கியான்வாப்பி மசூதி வளாகத்தில், சிருங்கார கௌரி மாதா, வினாயகர், அனுமான் மற்றும் கண்ணுக்கு தெரிந்த மற்றும் தெரியாத விக்கிரகங்கள் உள்ளன, அவற்றை வழிபட இந்துக்களுக்கு அனுமதி வேண்டும் என்று கோரி இருந்தனர்.

இந்த கோரிக்கை என்பதே அடிப்படையில் கியான்வாப்பி மசூதியை இந்துக் கோவிலாக மாற்றும் முயற்சி தவிர வேறொன்றுமில்லை. ஆனால், இக் கோரிக்கைக்கு வாரணாசி நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. இதை எதிர்த்து மசூதி கமிட்டி அலகாபாத் உயர்நீதி மன்றத்தை அணுகியது, ஆனால் உயர்நீதி மன்றமும் இக்கோரிக்கையை ஏற்கவில்லை.

முப்பது வருடங்களுக்கு முன்னால் நீதிமன்றங்கள் எடுத்த நிலைக்கும், தற்போது நீதிமன்றங்கள் கடைபிடிக்கும் நிலைக்கும் நிறைய வித்தியாசங்கள் புலப்படுகின்றன.

வழிபாட்டுதலங்கள் சட்டம் 1991ல் நிறைவேற்றப்பட்ட காலத்திலேயே வாரணாசி நீதிமன்றத்தில் சுயம்பு ஜோதிலிங்க பகவான் விஷ்வேஷ்வர் என்ற நபர் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் 3 கோரிக்கைகளை முன்வைத்தார்.

# கியான்வாப்பி மசூதியில் இந்துக்கள் வழிபட உரிமை வேண்டும்,

# மசூதி வளாகம் முழுவதும் காசி விசுவநாத கோவிலின் ஒரு பகுதியே என அறிவிக்க வேண்டும்.

# இஸ்லாமியர்களை அந்த வளாகத்திலிருந்து அப்புறப்படுத்தி, மசூதியை இடித்து தள்ள வேண்டும்.

என மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார். வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாமல் தூங்கி கொண்டிருந்தது.

அஞ்சுமான் இந்தஜாமியா மசூதி கமிட்டி 1998ல் மேற்கூறிய வழக்கை ஒரு கீழமை நீதிமன்றம் (civil court) விசாரிக்க முடியாது, அதை தடுக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உயர்நீதி மன்றம் அதை ஏற்று அந்த விசாரணைக்கு தடை விதித்தது.

இது நடந்த வருடம் 1998, தடைவிதிக்க காரணம் 1991ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வழிபாட்டு தலங்கள் சிறப்பு சட்டம்தான். இந்த தடை இருபத்தி இரண்டு வருடங்கள் நீடித்தது.இந்த தடை 22 ஆண்டுகள் நீடித்தது.

2019ல் ரஸ்தோகி என்ற நபர் ,  ‘தான் சுயம்பு ஜோதிலிங்க பகவான் விஷ்வேஷின் நண்பன் என்று கூறி வாரணாசி நீதிமன்றத்தில் ஏற்கனவே தடைவிதிக்கப்பட்ட வழக்கில் தன்னை இணைத்து கொண்டு , மசூதி வளாகத்தில் தொல்லியல்துறை ஆய்வு நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.

2020ல் இந்த இரண்டாவது “புதிரான” நண்பனின் கோரிக்கையை எதிர்த்து அஞ்சுமான் கமிட்டி அலகாபாத் உயர்நீதி மன்றத்தை அணுகியது. ஆனால் இதற்கு உயர்நீதி மன்றம் 1998ல் நடந்தது போல் தடை விதிக்கவில்லை!

ஆக, வழக்கு – காலங்கள், சூழல்கள், அதிகாரங்கள், மற்றும் ஆட்கள் மாறிய நிலையில் – மீண்டும் உயிர் பெற்றது என்றே சொல்ல வேண்டும்.

மே மாதம் 2021ல் வாரணாசி நீதிமன்றம் , மசூதி வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வுக்கும், அதை முழுவதும் வீடியோ பதிவு செய்து சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டது.

இதற்காக ஒரு நீதிமன்ற ஆணையரையும் நியமித்தது.

இம்முடிவை எதிர்த்து மசூதி கமிட்டி மீண்டும் அலகாபாத் உயர்நீதி மன்றத்தை அணுகிய போது, அங்கு அவர்களுக்கு நீதியோ, நிவாரணமோ கிடைக்கவில்லை.

மே மாதம் 13ந்தேதி உச்ச நீதிமன்றத்தில் தொல்லியல் ஆய்வை எதிர்த்த அஞ்சுமான் மசூதி கமிட்டியின் மனு விசாரணைக்கு வந்தது. வழிபாட்டு தலங்கள் சிறப்பு சட்டத்தை மேற்கோள் காட்டி ஆய்வுக்கு தடைவிதிக்க கோரிய மசூதி கமிட்டியின் கோரிக்கையை உச்ச நீதி மன்றம் ஏற்கவில்லை. ஆனால், மீண்டும் இத்தடை கோரிய மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ஒய்.வி. சந்திர சூட் அமர்வுக்கு மாற்றியது.

ஆனால், உச்ச நீதிமன்றம் அவ்விசாரணையை நடத்துமுன், தொல்லியல் ஆய்வறிக்கை வாரணாசி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் முன்னரே வாரணாசி நீதிமன்றம் மசூதியின் ஒரு பகுதியை              ( சிவலிங்கம் கண்டு பிடிக்கப்பட்டதாக சமூக வலைத் தளங்களில் கூறப்பட்ட பகுதி) சீல் வைத்து பாதுகாக்கவும் அவ்விடத்தில் முஸ்லீம்களின் தொழுகையை நிறுத்தி வைக்கும்படியும்  மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.

ஞானவாபி மசூதி இந்துக்கள் நுழைந்து வழிபட பாதுகாப்பு தரும் போலீசார்!

2022 மே மாதம் தொல்லியல் ஆய்வும், படப்பிடிப்பும் தொடங்கியது. பல குழப்பங்களுக்கிடையில், நீதிமன்ற ஆணையர் அஜய் மிஸ்ராவின் மீது இந்து ‘மனுதாரர்களே’ குற்றச்சாட்டுகளும், புகார்களும் எழுப்பிய நிலையில் , வீடியோ ஆதாரங்கள் பொதுவெளிக்கு வந்த நிலையில், புதிய ஆணையரும் நியமிக்கப்பட்டு ஒருவழியாக ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அது19 மே,2022 சமர்ப்பிக்கப்பட்டது .  இதற்கு மசூதி கமிட்டின் அங்கீகாரமோ, பங்களிப்போ இல்லை ( ஒரு தரப்பானது) என்பது முக்கியமானது ஆகும். இஸ்லாமியர் தரப்பில் , அங்கு கண்டுபிடிக்கப்பட்டது ஒரு நீரூற்று வாய் தானே தவிர (fountain) சிவலிங்கமல்ல எனக் கூறப்படுகிறது.

மே மாதம் 20 அன்று, உச்ச நீதி மன்றம், இவ் வழக்கு விசாரணையை வாரணாசி கீழமர்வு நீதிமன்றத்திலிருந்து மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றியது.தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்திய நீதிமன்ற உத்திரவு வழிபாட்டு தலங்களின் சிறப்பு சட்ட விதிகளுக்கு எதிரானது என்ற அஞ்சுமான் மசூதி கமிட்டியின் வாதத்தை உச்ச நீதிமன்றம ஏற்கவில்லை.

ஆய்வு செய்வது , வழிபாட்டு தலத்தின் குணாதிசயத்தை மாற்றுவது ஆகாது என்ற வினோதமாக தீர்ப்பளித்தார் நீதிபதி ஒய்.வி. சந்திரசூட்.

கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்தை பத்திரமாக பாதுகாக்கும்படியும் உச்ச நீநிமன்றம் அறிவுறுத்தியது.

ஆனால் மசூதியின் ஒரு பகுதியை சீல்வைத்து மூடியும், முஸ்லீம்களின் உரிமையை மறுத்தும் வாரணாசி நீதிமன்றம் தொல்லியல் ஆய்வுக்கு உத்தரவிட்டதன் மூலமும் மசூதியின் ஒரு பகுதியை சீலிட்டு மூடியதாலும், மசூதியின் தன்மையை (அடையாளத்தை) மாற்ற முயன்றது. இதைத் தான் 1991ம் ஆண்டு வழிபாட்டு தலங்கள் சட்டம் ”சட்ட விரோதமான செயல்” என கூறுகிறது.

ஞானவாபி மசூதிக்குள் இந்துக்கள் பூஜை!

அப்படி சீல் வைக்கப்பட்ட இடத்தில்தான் இந்த ஆண்டு  ஜனவரி 31 அன்று மாவட்ட நீதிமன்றம், இந்து விக்கிரகங்களை வைத்து வழிபட அனுமதி கொடுத்துள்ளது. இதை எதிர்த்து எதிர்தரப்பினர் மேல்முறையீடு செய்ய ஏழு நாட்கள் அவகாசமும் கொடுத்து உத்தரவிட்டது.

ஆனால், அவசரவசரமாக பூஜைகளும் அடுத்த நாளே மசூதி வளாகத்தில் நடத்தப்பட்டது. அரசு நிர்வாகமும், மனுதாரர்களும் பேசி வைத்துக் கொண்டு சட்டம் தன் கடமையைச் செய்ய எந்த அவகாசமும் அளிக்காமல் மசூதி வளாகத்தில் இந்து மத சடங்குகளையும் , விக்கிரகங்களை நிறுவி பூஜைகள் செய்தது  நமக்கு ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்துகிறது.

ஆம், 1949ல் சட்ட விரோதமாக, கிரிமினல் நோக்கத்துடன் திருட்டுதனமாக ராமர்சிலையை பாபர் மசூதி வளாகத்தில் வைத்து அந்த இடத்தின் “தன்மையை” மாற்றினார்களே , அந்த செயல்தான் நினைவிற்கு வருகிறது.

அன்று ஒருசில கிரிமினல்கள் செய்ததை, அரசு நிர்வாகம் பேணியது, இன்று நீதிமன்றங்களும், உ.பி. அரசு நிர்வாகமும் “அந்த வேலையை” செய்கிறது. யோகி ஆதித்திய நாத் இஸ்லாமிய மசூதிகளை எல்லாம் இந்து கோவில்களாக்கத் துடிக்கிறார்!

அந்த வகையில் உத்தர பிரதேசம் மதுராவின் ஷாயி ஈத்கா மசூதி நிலத்தை கிருஷ்ணர் கோயிலிடம் ஒப்படைக்கக் கோரும் மனுக்களும் விசாரிக்கப்பட்டு வருகின்றன!

உ.பியில் உள்ள மதுரா ஷாயி ஈத்கா மசூதி

முறையற்று விசாரணை நடத்துவதும், காரணமின்றி வழக்குகளை புதிய அமர்வுகளுக்கு மாற்றுவதும், இணை உயர் நீதிமன்றம் ( co ordinate bench of H.C.) அளித்த தீர்ப்பை கண்டு கொள்ளாமல் நகர்வதும், உத்தர பிரதேசத்தில் உள்ள நீதிமன்றங்களில் மட்டுமல்ல, உச்ச நீதி மன்ற நடவடிக்கைகளிலும் தெரிகிறது எனலாம்.

2022ல் பா ஜ க வின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான அஸ்வினி குமார் உபாத்யாயா, ‘வழிபாட்டு தலங்கள் சட்டம் அரசியல் சாசன நெறிகளுக்கு முரணானது’ என மற்றொரு வழக்கை தொடுத்துள்ளார். அதுவும் விரைவில் விசாரணைக்கு வரலாம்! அந்தச் சட்டத்தை நீக்கிவிட்டால், இந்தியாவில் இன்னும் ஏராளமான மசூதிகள் சிக்கல்களை சந்திக்க நேரலாம். இதனால், இந்து- இஸ்லாமிய விரோதம் வேகம் பெறலாம். அதைக் கொண்டு இஸ்லாமியர்கள் மேலும், மேலும் ஒடுக்கப்படலாம்! நினைத்துப் பார்க்கவே அதிர்ச்சியாக உள்ளது!

ஏனென்றால், ஆர்.எஸ். எஸ் சின் “அஜென்டா” காசி கியான்வாபியை அடுத்து  மதுராவில் உள்ள ஷாகி ஈத்கா மசூதியோடு நிற்கப் போவதில்லை…!  அவர்கள் ஏறத்தாழ 3,000 மசூதிகளை நாடு முழுவதும் குறித்து வைத்துள்ளனர். இவ்வாறு நிரந்தர பகைமையை மக்கள் மத்தியில் விதைத்து உயர் சாதி ஆதிக்கத்தை இந்த மண்ணில் நிலைநிறுத்துவதே அடுத்த இலக்காகும் .

இன்று நடக்கும் இத்தகைய நிகழ்வுகள் தற்செயலாக நடப்பவை அல்ல, எல்லாமே ஒரு செயல் திட்டத்தின் அடிப்படையில் இயக்கப்படும் நிகழ்வுகள் தாம்!

என்று விலகும் இந்த மாயை?

கட்டுரையாளர்;ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time