ப்ளஸ் 2  தோற்றவர் விடா முயற்சியால் ஐபிஎஸ் ஆபிசர்!

-வசந்த் பாரதி

சம்பல் பள்ளத்தாக்கு  கொள்ளையர்கள் நிறைந்த பகுதியின்  கிராமத்தில் ப்ளஸ் டூ தோற்ற பையன்  எப்படி ஒரு ஐபிஎஸ் ஆபிசராகிறார்  என விவரிக்கிறது இந்த ஹிந்தி படம்!  நேர்த்தியான திரைக் கதை, யதார்த்தமான கதாபாத்திரங்கள், கூர்மையான எழுத்து போன்றவற்றால்  ஒரு நிஜக் கதை அற்புத படைப்பாகிறது.

எழுத்தாளர், இயக்குநர் விது வினோ சோப்ராவின் உருவாக்கத்தில் வந்துள்ள இந்த திரைப்படம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவருக்கும் போட்டுக் காட்ட வேண்டிய படம் என்றால், மிகையில்லை!

ஏழ்மை பின்னணியில் மிகவும் கஷ்டப்பட்டு படித்து ஒரு ஐ பி எஸ் ஆபிசரான  மனோஜ் குமார் சர்மா என்கிற  ஒரு ஐ பி எஸ் ஆபிசரின் நிஜ கதை தான் இது. புத்தகமாக 2019 ல் அனுராக் பத்தாக் எழுதி வெளி வந்துள்ளது. அது தான் தற்போது திரைப்படமாக வெளி வந்துள்ளது. டிஸ்னி ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம்.

நாயகன் வசிக்கும் சம்பல் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பில்காம்  என்கிற கிராமத்தில் செயல்படும்   மேல்நிலைப் பள்ளி அந்த ஊர் தலைவரால் நடத்தப்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் காலாகாலமாய் பள்ளி இறுதி தேர்வில் ஒட்டு மொத்தமாக எல்லோரையும் காப்பி அடிக்க அனுமதிப்பது என்பது வழமையாக உள்ளது.

பரிட்சை நடந்து கொண்டிருக்கும்போது  அந்த ஊருக்கு புதியதாக வந்திருக்கும் ஒரு நேர்மையான போலிஸ் ஆபிசர் டி எஸ் பி துஷ்யந்த் (பிரியன் ஷோசட்டர்ஜி ) இதனை கையும் களவுமாய் பிடிக்கிறார். ”இந்த பகுதி கொள்ளையர்கள் வசிக்கும் பகுதி இந்த கொள்ளை கூட்டத்தை சார்ந்தவர்களின் பிள்ளைகள் எல்லாம் இங்கு மாணவர்கள்   உங்கள் வீட்டையே எரித்து விடுவார்கள்” என்று தலைமை ஆசிரியர் எச்சரிக்கை செய்தும், லஞ்சமாக பணம் கொடுத்தும் எதற்கும் அசையாத துஷ்யந்த் தலைமை ஆசிரியரை கைது செய்கிறார்!

அந்த வருடம் அனைவரும் பெயில். அதில் பாதிக்கப்பட்ட ஒருவன் மனோஜ் .படிப்பு தடைப் பட்டதால் குடும்ப வருமானத்திற்கு அவனும் அவன் அண்ணனும் சேர்ந்து ஷேர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்த செல்கின்றனர். அங்கேயும் ஒரு தடை ஏற்படுகிறது  ஊர் தலைவர் மூலமாக!  இந்த ஷேர் ஆட்டோவால்  அவரின் பஸ் சர்விஸ் பாதிக்கப்படுவதாக அண்ணன் தம்பி இருவர் மீதும் போலீசில் பொய்புகார் கொடுக்கப்பட இதை அறிந்த டி எஸ் பி போலிஸ் நிலையம் வந்து  இந்த இருவரையும் விடுவித்து அவர்களை வீட்டில் கொண்டு சென்று விடுகிறார்.

அந்த அதிகாரியின் நேர்மை மனோஜை கவர்கிறது  அவரைக் கண்டு பிரமித்து போகிற மனோஜ், ”நான் உங்களைப்போல ஆக என்ன செய்ய வேண்டும்” என்று மனோஜ் கேட்க அதற்கு துஷ்யந்த் “ஏமாற்றுவதை நிறுத்து ..அது போதும்” என்கிறார்.  இந்த ஒரே வார்த்தை மனோஜ் வாழ்க்கையை புரட்டி போட்டு விடுகிறது.

அடுத்த வருடம் ப்ளஸ் 2 வகுப்பு   தேர்வு வருகிறது. அதற்குள்   டி எஸ் பி மாற்றுதலாகி சென்று விட அந்த பள்ளியில் பழைய முறை அமுலுக்கு வருகிறது. எல்லோரும் காப்பி அடித்து பரிட்சை எழுத மனோஜ் மட்டும் சொந்தமாய் படித்து பாஸ் செய்கிறான்..! மற்றவர்கள் எல்லாம் முதல் கிரேடில் பாஸ் செய்ய மனோஜ் மூன்றாவது கிரேடில் பாஸ். இதனை தொடர்ந்து கல்லூரியில் பி ஏ படிக்கிறான்.

மனோஜ் தந்தை கோர்ட், கேஸ் விசயமாய் அலைவதால், மனோஜ் படிப்பிற்கு வீட்டில் உள்ள ஒவ்வொரு விலை மதிப்புள்ள பொருளும் விற்கப்படுகிறது. மாடுகள் நிறைந்திருந்த மாட்டு கொட்டகை காலியாகி விடுகிறது, மனோஜ் படிப்பை முடிப்பதற்குள்.

மனோஜ் படிப்பை முடித்து பிஏ பட்டம் பெற்றதும், அவனின் பாட்டி, தான் சேர்த்து வைத்திருந்த கத்தை கத்தையான பணத்தை மனோஜிடம் கொடுத்து, ”நீ ஒரு போலிஸ் ஆபிசராகத்தான் ஊர் திரும்ப வேண்டும்” என்று கேட்டுக் கொள்கிறாள்.

டெல்லிக்கு வெறுங்கையோடு வருகிற ஐஏஎஸ் ஆர்வலர்கள் செய்கிற முதல் பணியான கழிவறையை சுத்தம் செய்கிற வேலையை செய்கிறார். பகுதி நேர படிப்பும் தொடர்கிறது. நூலகத்தில் பெருக்குகிற வேலை, அங்கேயே ஜாகையும்.

வறுமையின் பின்னணியில் வந்தவன் என்பதால் அடிக்கடி அவன் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கி திருட்டுப் பட்டம் கட்டுகிறார்கள்! அப்போது அறச் சீற்றத்தில் மனோஜ் செருப்பைக் கழற்றிச் சீறும் காட்சி, டார்ஜிலிங்கில் காதலியின் வீட்டை கஷ்டப்பட்டு தேடி போன போது, ”அவள் பார்க்க முடியாது” என்று சொல்வது, மகனின் தேர்வு வெற்றியை தொலைபேசியில் கேட்ட பாமரத் தாய் ஆனந்த கண்ணீர் வடிப்பது, அனைத்தையும் நேர்மையாக அணுகும் உறுதிப்பாடு என படத்தின் பல அம்சங்கள் மனதில் நிலைபெற்று விடுகின்றன!

மூன்று முறை தோற்று போய் இறுதியாய் மிகவும் கஷ்டப்பட்டு படித்து மெயின் பரிட்சை பாஸ் செய்து இன்டர் வியுவில் கேட்கப்படுகிற முதல் கேள்வி இந்த படத்து டைட்டிலுக்கு பொருத்தமானதாக அமைகிறது.

”நீ ஏன் 12ஆம் வகுப்பில் பெயில் ஆனாய்?”  என்கிற  நேர்முக தேர்வு  தலைவர் கேள்வி  ஏவுகணைப் போல  மனோஜை தாக்குகிறது. டிஎஸ்பி கற்றுக் கொடுத்த அதே மந்திரம் மனதில் தோன்ற, ”அந்த பரிட்சை போது ஒரு நேர்மையான டிஎஸ்பி துஷ்யந்த்  எங்களை   காப்பி அடிக்க அனுமதிக்க வில்லை. அதனால் தான் தோற்று போனேன்” என்றதும், அந்த அறையில் உட்கார்ந்திருந்த ஆறு அறிவு ஜீவிகள் கன்னத்தில் அறைந்தது போல ஒரு சூழல்.

அந்த குழுவின் தலைவர் அதிர்ச்சி அடைகிறார்.  உடனடியாக மனோஜ் அந்த அறையை விட்டு வெளியே விரட்டி அடிக்கப்படுகிறார். மனோஜ் கூறிய உண்மை தன்மை அங்கு அமர்ந்துள்ள ஒரு போர்டு உறுப்பினரை பாதிக்க, ”மனோஜ் சிறிது நேரம் வெளியே காத்திருங்கள்” என்று சொல்லி விட்டு அவர்களுக்குள் விவாதித்து விட்டு மறுபடியும் அந்த அறைக்கு அழைக்கப்பட்டு, ”அவரிடம் நீ ஏன் உண்மையை கூறினாய் நீ பொய் சொல்லி இருந்திருக்கலாமே”   என்றதற்கு தன் வாழ்க்கையை மாற்றிய   அந்த நேர்மையான போலிஸ் ஆபிசர் பற்றி கூறுகிறார். ”தான் காப்பி அடித்திருந்தால் முதல் டிவிசனில் மட்டுமே பாசாகி இருந்திருப்பேன்” என்றும், ‘படித்து பரிட்சை எழுதியதால் மூன்றாவது டிவிசனில் பாசானதாக’ கூறுகிறார்!

தேர்வு முடிவு வெளி வருகிற நாள். மனோஜிற்கு நம்பிக்கையே இல்லை. ஆனால், மனோஜ் தன்னுடைய லட்சியத்தை அடைந்து ஒரு ஐ பி எஸ் ஆகிறார்!

மனோஜ் நேர்முகத்தேர்வு அறையை விட்டு வெளியேறியதும்   குழுத்தலைவர் மனோஜ் மீது நம்பிக்கை இழந்து பேசும்போது ஒரு உறுப்பினர் குறுக்கிட்டு, ”இவரை போல ஒரு உன்னதமான எண்ணங்களை கொண்டிருப்பவர்களை காண்பது அரிது. இவர் போலிஸ் துறைக்கு ஏற்ற ஆள். இந்த துறைக்கு இவரைப் போல துணிச்சலான நேர்மையான ஆட்கள் தான் தேவை. இவரை போன்றவர்களை தேர்வு செய்யவில்லை எனில், இந்த தேர்வு முறை எதற்கு?” என்று கேட்டதில் மனோஜ் தேர்வு செய்யப்படுகிறார்.

கதை நாயகனாக விக்ராந்த் மான்சோ அசத்தலாக நடித்துள்ளார்! கடின உழைப்பை வெளிப்படுத்தும் துயர் மிகுந்த நேரங்கள், நேர்காணலை எதிர் கொண்ட விதம், காதலியிடம் உருகும் தருணம் என நடிப்பில் நவரசங்களை காட்டியுள்ளார்.

மனோஜ் வாழ்க்கை வரலாறு லட்சிய புருஷர்களுக்கு ஒரு நல்ல பாடமாக அமையும். உயர்ந்த பதவியை அடைய பெரிய படிப்பு மட்டுமே ஒருவனுக்கு தகுதி ஆகி விடாது அதனை கடந்து உண்மை, நேர்மை, கடின உழைப்பு லட்சியத்தில் சமரசம் கொள்ளாமை, தெளிவான சிந்தனை  இவை இருந்தால் எவராலும் ஒரு உயர்ந்த இடத்தை அடைய முடியும் என்கிறது இந்த படம்

இந்தப் படம் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பட்டுள்ளது.கடந்த ஆண்டின்  சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விருது இந்த படத்திற்கு கிடைத்துள்ளது அதனுடன் சிறந்த இயக்குனர்  சிறந்த எடிட்டிங், சிறந்த நடிகர் சிறந்த திரைக்கதை விருதும்  இந்த படத்திற்கு கிடைத்துள்ளது.

விமர்சனம்; வசந்த் பாரதி         

         

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time