அதிகாரங்களைப் பறிப்பதும், அடிமைப்படுத்த துடிப்பதும்!

-ச.அருணாசலம்

‘பாஜக ஆட்சியல்லாத மாநில அரசுகளை வஞ்சிக்காதீர்கள்…’ என தென் இந்திய மாநிலங்கள் ஓங்கி குரல் கொடுக்கின்றன! மத்திய அரசின் கீழ் மாநில அரசுகளை உரிமைகளில்லா பதுமைகளாக்கும் நோக்கமா? பாஜகவின் நகர்வுகள் எதிர்கால இந்தியாவை சிதறடிக்கவா? சின்னாபின்னப்படுத்தவா?

மாநில அரசுகளின் நிதி நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறதை உச்ச நீதிமன்றமும், நாடாளுமன்ற வளாகமும் கண்மூடாமல் கவனித்துக் கொண்டுள்ளன என்றே கூற வேண்டும். கர்நாடக மாநில முதல்வர் சித்தாராமையாவும்,ஒட்டு மொத்த மாநில தலைவர்களும்  அமைச்சர்களும், ஒன்றிய அரசை எதிர்த்து, அதன் ஓர வஞ்சனையை எதிர்த்து, மாநிலத்திற்கு உரிய நிதி கொடுக்க மறுப்பதை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

மத்திய அரசுக்கு வழங்கிய 100 ரூபாயில் கர்நாடகாவுக்கு ரூ.12 அல்லது ரூ.13 மட்டுமே திரும்பக் கிடைக்கிறது.” என, சித்தராமையா கூறினார்.

அது ஏற்படுத்திய அதிர்வலைகள் ஓயுமுன்னர் கேரள மாநில முதல்வர் பினாரயி விஜயன் தலைமையில், கேரள அரசும்,நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு ஏற்படுத்தும் நிதி நெருக்கடியை கண்டித்து ஆர்ப்பாட்டமும் பொதுக்கூட்டமும் நடத்தினர். கேரளாவில் இருந்து மத்திய அரசு பெறுகின்ற ரூ.100ல் ரூ.21 மட்டுமே கேரளத்திற்கு மத்திய அரசு திரும்பத் தருகிறது. ஆனால், உத்திர பிரதேசத்திற்கோ ரூ 100க்கு 46 திரும்பக் கிடைக்கிறது…”என சொல்லப்பட்டது.  இந்த போராட்டத்தில் பல மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

பன்னிரண்டு ஆண்டுகள் முதல்வர் பொறுப்பை வகித்த நரேந்திர மோடி , 2014 தேர்தல் பிரச்சாரத்தின் போதும் , ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் Co operative Federalism கூட்டுறவான கூட்டாட்சி யே தனது பாதை என்றார் , இதன்மூலம் இந்தியாவை முன்னெடுத்து செல்வோம் , அதற்காக நாம் அனைவரும்-ஒன்றியமும் மாநில அரசுகளும் –

ஒத்துழைப்போம். ‘டீம் இந்தியா’ (Team India)  அந்த வேலையை செய்யும் என்றார். யார் யார் இந்த டீம் இந்தியாவில் உள்ளனர் என்றால், ஒன்றியத்தின் பிரதம அமைச்சரும், அனைத்து மாநில முதல்வர்களும் அடங்கியது தான் இந்த குழு என்றார். நாட்டு மக்கள்  எல்லோருக்கும் ‘புல்லரித்து ‘ போய்விட்டது எனலாம்.

‘டீம் இந்தியா’ பற்றி இப்பொழுது யாராவது பேசுகிறார்களா? பிரதமர் பேசுகிறாரா? ஆளுங்கட்சியான பா ஜ க பேசுகிறதா ? எதிர்கட,சிகளை விடுங்கள் , கூட்டணி கட்சியில் இருக்கும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேசுகிறாரா? இல்லை மௌளனக்கூட்டாளியாக இருக்கும் ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாயக் பேசுகிறாரா?

நம் காதுகளில் விழுவதெல்லாம் ஒரே நாடு, ஒரே தேர்தல்,ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே கட்சி , ஒரே தலைவர்  என்ற வார்த்தைகள் தாம்!

நாம் எங்கு திரும்பினாலும் பார்ப்பது ஒரே முகம், ஒரே காரண்டி ஆங் … அது மோடி காரண்டி தான்!!

பின் எதற்கு தலைநகர் தில்லியில் அரவிந்த கெஜ்ரிவாலும், வடக்கே இமாச்சல் பிரதேச முதல்வரும் , கிழக்கில் ம்மதா பானர்ஜியும் , தென் கோடியில் ஸ்டாலினும், பினாரயி விஜயனும், அடுத்து சித்தாரமைய்யாவும் மாநிலங்களுக்கு உரிய நிதியை ஒன்றிய அரசு கொடுக்க மறுக்கிறது என கொதித்தெழுந்துள்ளனர். இம்மாநிலங்களுக்கு நிதி நெருக்கடியையே ஏற்படுத்தி உள்ளது மோடி அரசு என குற்றஞ்சாட்டப்படுகிறது. கேரள அரசு  மாநிலத்தின் உரிமைகளை மறுத்து ‘குரலவளை’யை நெரிக்கிறது ஒன்றிய அரசு என்று அதன் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளது .

ஆனால், அம்மையார் நிர்மலா சீத்தாராமனோ, ”நாங்கள் அதிக அளவு நிதி உதவி செய்துள்ளோம் , இவர்களெல்லாம் (தமிழ்நாடு, கர்நாடகா,கேரளா போன்ற மாநிலங்கள்)  கொடுத்த நிதியை முறையாக செலவு செய்யாமல் வளர்ச்சியற்ற வகையில் வீண் செலவு செய்கின்றனர். நிதி மேலாண்மை தகுதி இவர்களுக்கு இல்லை. இந்தியாவில் வளர்ச்சி குறைந்த மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உதவினால், அதை குறை கூறுபவர்கள் ஒட்டு மொத்த இந்திய வளர்ச்சியை எதிர்க்கிறார்கள்” என்று சீனி பட்டாசு போல வெடிக்கிறார்.

உண்மை நிலவரம்தான்  என்ன?

இந்திய நாட்டில் , மக்களின் மீதும் பொருள்கள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் மீது பல்வேறு வகையான – மறைமுக மற்றும் நேர்முக – வரி வசூலிப்பதை “வரி வருமானம்”(Tax Revenue) என்கிறோம்.

இவ்வாறு நாடு முழுவதும் வசூலிக்கப்படும் வருமானத்தை மக்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டுள்ள மாநிலங்களும், மேலாண்மை நிலையில் உள்ள ஒன்றியமும் எவ்வாறு பங்கீடு செய்வது என்பதை சுயேட்சை அதிகாரம் கொண்ட நிதி ஆணையம் (Finance Commission)  தீர்மானிக்கும் . அதை ஒன்றிய அரசு அமல் செய்ய வேண்டும் , இது அரசியல் சாசன ஏற்பாடு.

நாடு சுதந்திரமடைந்த நாள்முதல் இந்த ஏற்பாடே தொடருகிறது. 14வது நிதி ஆணையம் 2015-2016ல் சமர்ப்பித்த தனது அறிக்கையில், மொத்த வரி வருமானத்தில் 42% விழுக்காட்டை மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்க பரிந்துரை செய்தது.

ஆனால் 14வது நிதி ஆணையத்தின் தலைவரான பேராசிரியர் . ஒய்.வி. ரெட்டியை , (நாட்டாமை , தீர்ப்பை மாத்து! என்றது போல்) மாநிலங்களுக்கு ஒதுக்கிய 42% அளவை  32% ஆக குறைக்க  மோடி நிர்ப்பந்தித்தார் என்று முன்னாள் நிதி ஆயோக் செயல் தலைவர் (முன்னாள் பிரதமர் அலுவலக அதிகாரி) திரு.  பி.வி.ஆர். சுப்பிரமணியம்  கூறியதை சமீபத்தில் ‘அல்-ஜசீரா ‘ வெளியிட்டது

பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மோடியின் இரட்டை வேடத்தை, அதிகார அத்துமீறலை பாசிச மனப்போக்கை கண்டிக்க எந்த ஊடகமும் முன்வரவில்லை என்பது நமது பரிதாப நிலையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

ஒய். வி. ரெட்டி மோடியின் நிர்ப்பந்தத்தை மறுத்த பின்னர் , மாநிலங்களின் பங்கை குறைக்க வேறுவழிகளில் மோடி முயன்றார். இன்று அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

வரி வருமானத்தை தான் மாநிலங்களும் ஒன்றிய அரசும் நிதி ஆணையம் பரிந்துரை செய்தபடி பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் செஸ் , சர்சார்ஜ் போன்ற குறிப்பிட்ட நோக்கத்திற்காக வசூலிக்கப்படும் தனி வரிகளை ஒன்றிய அரசு மாநிலங்களுடன் பங்கீடு செய்யத்தேவையில்லை.

எனவே அதைக் கூட்ட தீர்மானித்தார் . பல தில்லுமுல்லுகள், பொய்யுரைகளுக்கு ஊடே 2015-2016ல் 85,638 கோடிகளாக இருந்த செஸ் மற்றும் சர்சாரஜ் வசூல், 3,63,000 கோடிகளாக 2023-2024ல் கூடியுள்ளதிலிருந்து அதை  நாம் அறிய முடியும்.

இந்த செஸ் வரிகளில் ஜி. எஸ். டி . க்கு மாநிலங்கள் மாறியதற்காக கொடுக்கப்படும் இழப்பீட்டிற்கான செஸ் வரியை நாம் சேர்க்கவில்லை. ஆனால் அந்த இழப்பீட்டு தொகை கூட இன்னமும் முழுமையாக வளர்ந்த மாநிலங்களுக்கு கிடைக்கவில்லை.

ஆக 14.6 லட்சம் கோடிகளாக இருந்த ஒன்றிய அரசின் மொத்த வரி வருமானம் , 2023-2024ல் 33.6 லட்சம் கோடிகளாக (செஸ் மற்றும சர்சார்ஜ் போன்ற வரிகளால்) உயர்ந்தது.

ஜி.எஸ்.டி. முறையில் நுழைந்ததால் மாநில உரிமைகள்  பறி  போயின என்றால் அது மிகையல்ல. மக்களிடம் நேரடியாக தொடர்பில் உள்ள மாநில அரசுக்கு நிதி நிர்வாகத்தை செவ்வனே நடத்த வரி விதித்து வசூலிக்கும் அதிகாரம் ஒரு அடிப்படை தேவையாகும்.

அந்த அடிப்படை  உரிமையை காவு கொடுத்துதான் இந்த ஜி.எஸ்.டி. முறைக்கு மாநிலங்கள் சென்றன என்பது வேதனையான வரலாறு.

 

இதன்மூலம் ஒன்றிய அரசின் மொத்த வரி வருமானம் (Gross Tax Revenue) சுமார் மூன்று மடங்கு பெருகினாலும், மாநிலங்களுக்கு கிடைக்கும் வருவாய் – வரி மாற்றல் மற்றும் உதவித்தொகை (grants in aid) மூலம் கிடைக்கும் தொகை குறைந்தது என்பதே உண்மை!

48.2% சதவிகிதத்திலிருந்து 35.32% மாக குறைந்தது தான் மாநிலங்கள் கண்ட பலன்.

அம்மையார் நிர்மாலா அரைகுறை உண்மைகளை மட்டும் பேசுவதால் பயனில்லை, யாரையும் நீண்ட காலம் ஏமாற்ற முடியாது.

மாநிலங்களுக்கு சேரவேண்டிய நிதி குறைந்துவருவதும்,அதே சமயம் ஒன்றியத்தின் மொத்த வரி வருமானம் பல மடங்கு பெருகி வருவதும் ஒரு புதிய நிலையை உருவாக்கியுள்ளது. இதனால் ஒன்றிய அரசின் கைகளில் கிட்டும் நிதி அளவு கூடுவதும், அவற்றை மாநிலங்களுடன் பங்கிடாமல் தன் விருப்பப்படி ஒன்றிய அரசு செலவழிக்கலாம் என்ற புதிய நிலை தோன்றியுள்ளது.

இதனால், ஒன்றியம் விரும்பிய மாநிலங்களுக்கு உதவிகளும், முதலீடுகளும் அதிகமாக அளிக்க வகை செய்கிறது இந்த புதிய நிலை மூலம் பாஜ க அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுகின்றன.

பாஜக அல்லாத ஒவ்வொரு மாநிலமும் மத்திய நிதி வருமானத்திற்கு  ஒரு ரூபாய் கொடுத்தால, திரும்ப பெறுவது என்பது 20 முதல் 30 பைசாக்களாக திரும்ப பெறுகின்றன. ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களோ 40 முதல் 50 பைசாவாக திரும்பப் பெறுகின்றன! ஏன் இந்தப் பாகுபாடு?

மேலும், வளர்ச்சி அடைந்த மாநிலங்களும் , மக்கள் கொகையை கட்டுபடுத்தி முன்னேற்றம் கண்ட மாநிலங்களும் கடுமையாக தண்டிக்கப்படுகின்றன. வளர்ச்சி அடையாத மாநிலங்களுக்கு உதவுகிறேன் என்று கூறுவதில் உண்மை இல்லை. குஜராத் பெரிதும் வளர்ந்த மாநிலம் தான்!  பழிவாங்குந் தன்மையற்ற நேர்மையான வழி இதற்கு தேவை.

ஆனால், ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு நேரடியாக உதவ இரண்டு வழிகளை கடைபிடிக்கிறது.

ஒன்றிய அரசு முன்மொழியும் திட்டம் ( Centrally Sponsored Scheme)

ஒன்றிய அரசின் நேரடி  திட்டம் (Central Sector Schemes) என இரண்டு வகைகளில்

நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

CSS திட்டங்கள் மூலமாக ஒன்றிய அரசு மாநிலங்களின் தேவைகளை ,கோரிக்கைகளை கணக்கிலெடுக்காமல் தாங்கள் முக்கியம் என நினைக்கும் திட்டங்களை மாநிலங்கள் மீது திணிக்கின்றன. இத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு ஒரு பங்கும் மாநில அரசு ஒரு பங்கும் முதலீடு செய்ய வேண்டும், மாநில அரசு விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மோடியின் படத்தை போட்டு இத்திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் . இதன்மூலம் நிதி ஒதுக்கீடு மாநிலங்களின் தேவைக்கேற்ப இல்லாமல் ஒன்றியத்தின் “அரசியல் லாபத்திற்காக” விரயம் செய்யப்படுகிறது. நிதி உதவியும் இத்திட்டத்தின் முன்னேற்றத்தை பொறுத்தே ஒன்றிய அரசு கொடுக்கும்

இது போன்ற 59 ஒன்றிய அரசு முன்மொழிந்த திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி (2023-2024) 4.76 லட்சம் கோடி ரூபாய்கள். இதில் மாநிலங்களுக்கு இதுவரை கொடுக்கப்பட்டது ₹3.64 லட்சம் கோடிதான் . மீதியுள்ள ₹1.12 லட்சம் கோடி யை ஒன்றிய அரசு தன் வசமே வைத்துள்ளது.

மகாத்மா காந்தி கிராம்ப்புற வேலைவாய்ப்பு திட்டம்

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா

தேசிய சமூக உதவி திட்டம்

பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா

தேசீய சத்துணவு திட்டம்

பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா

கிராம்ப்புற குடிநீர் திட்டம்  போன்றவை ஒன்றிய அரசு முன்மொழிந்து மாநில அரசு செயல்படுத்தும் (CSS) திட்டங்கள் ஆகும்.

ஒன்றிய அரசின் நேரடி திட்டங்கள் (Central Sector Scheme )என்பது ஒன்றிய அரசே நிதி முதலீடு செய்து நேரடியாக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களாகும்.

ஏழைகளுக்கு எரிவாயு சிலிண்டர் LPG கொடுக்கும் திட்டம்

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா

ஸ்டேன்ட அப் இந்தியா

பிரதான் மந்திரி ஸ்வஸ்தய சுரகஷா யோஜனா. போன்றவை ஒன்றிய அரசின் நேரடி திட்டங்களாகும்(Central Sector Schemes)

இத்தகைய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு , ஒன்றிய அரசுடன் இணைந்து ஆனால் மாநில அரசு நடைமுறை படுத்தும் திட்டங்களை (CSS) விட  மிக அதிகமாகும்.

வெறும் 5.21 லட்சம் கோடிகளாக இருந்த நிதி ஒதுக்கீடு 2023-2024ல் 14.68 லட்சம் கோடியாக பெருகியுள்ளது.

மாநில அரசுகளின் வரி போடும் உரிமையை பறித்து , தேவைப்படும் நிதிக்கு ஒன்றியத்திடம் கையேந்துபவராக மாநில அரசை சிறுமைப்படுத்தியதோடன்றி , மேற்கூறிய இரண்டு திட்டங்கள் மூலமும் குறிப்பாக Central  Sec. Scheme மூலமாக மாநிலங்களின் பொது வருமானம், பொது செலவினம்,மற்றும் பொதுக்கடன் ஆகியவற்றை நிர்வகிக்கும் பொறுப்பை மாநிலங்களிடமிருந்து தட்டி பறித்துள்ளது மோடி அரசு.

இதன் மூலம் வேண்டாத மாநில அரசுகளை கையாலாகாத அரசுகளாக சித்தரிப்பதும், எல்லா திட்டங்களுக்கும் மோடி முகத்தை காட்டி அந்த மன்னரின் தயவில் மக்கள் வாழ்வது போல சித்தரிப்பதும் ஒன்றிய அரசின் வேலையாக உள்ளது.

CSS மற்றும் CSec.Scheme மூலமாக நிதி ஒதுக்குவதும் வழங்குவதும் எந்த ஒரு சட்டவிதிப்படியோ, அல்லது நிதி ஆணையத்தின் பரிந்துரையை ஒட்டியோ நடப்பதல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் . இந்த ஒதுக்கீடுகளும் வழங்கல்களும் முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் (மோடியின்) விருப்பப்படியே நடக்கிறது.

இதன் மூலம் வேண்டிய மாநிலங்களுக்கு அதிக ஒதுக்கீடும் (பா ஜ க ஆளும் உ.பி. ம.பி.பீகார்,) மற்ற மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை குறைத்தும், நிறுத்தி வைத்தும் அரசியல் லாபம் அடைவது ஒரு இலக்கு .

மற்றொரு முக்கியமான இலக்கு மாநிலங்களை உரிமைகளற்ற டம்மிகளாக மாற்றி , ஒற்றை அதிகார மையமாக , நிதி ஆதார மையமாக ஒன்றியத்தை மாற்றுவதுதான் . அதை நோக்கியே மோடி காய்களை நகர்த்துகிறார் .

இந்த உரிமை பறிப்பை எதிர்த்தே கேரள அரசு உச்ச நீதி பன்றத்தின் நெடிய கதவுகளை தட்டியுள்ளது. கேரள அரசு மாநில வளர்ச்சி திட்டங்களுக்காக  பொது வெளியில் கடன் பெறுவதை ஒன்றிய அரசு தடை செய்வதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஒரு மாநிலத்தின் பொதுக்கடன் (Public Debt) குறித்து சட்டம் இயற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது, ஏனெனில் மாநிலத்தின் பொதுக்கடன் என்பது அரசியல் சட்டத்தில் உள்ள மாநில உரிமைகளில் 43வதாக பட்டியலிடப்பட்ட உரிமையாகும் (Entry 43 of the State List of the Constitution ). எனவே அது குறித்து சட்டம் இயற்றவும், நிர்வகிக்கவும், தீர்மானிக்கவும் மாநில சட்டசபைக்கே உரிமை உள்ளது.

மாநிலத்தின் பொதுக்கணக்கில் (public debt) உள்ள ஈவுகளை (balance) கணக்கில் எடுத்துக்கொண்டு ஒன்றிய அரசு கடன் தடையை (Net Borrowing Ceiling -NBC) மாநில அரசின்மீது திணிக்க கூடாது என கேரள அரசு அரசியல் சட்டப்பிரிவு 293,266(2) ஆகிய பிரிவுகளை சுட்டிக்காட்டி வாதிடுகிறது.

கேரள கட்டுமான முதலீட்டு நிதி மேலாண்மை (Kerala Infrastructure Investment Fund Board KIIFB) என்பது கேரள மாநிலத்தின் கட்டுமான வளர்ச்சிக்காக பட்ஜட்டிற்குள் வராத வெளி சந்தைகளில் நிதி திரட்டும் அமைப்பாகும்.

இந்த அமைப்பு குறிப்பாக மத்திய கிழக்கு , வளைகுடா நாடுகளில் நிதி திரட்ட ஒன்றிய அரசு தடைவிதித்து கேரள அரசின் எதிர்காலத்தையே இருட்டிப்பு செய்ய முயல்கிறது . மோடி அரசின் இந்த மோசமான செயலை கண்டித்துதான் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது .

குதிரை குப்புற தள்ளியதுமின்றி புதைக்க குழியும் தோண்டுகிற கதையாக மோடி அரசு மாநிலங்களை குறிப்பாக எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களை முடக்க முழு மூச்சில் செயல்படுகிறது .

உண்மையான கூட்டாட்சி என்பது ஒன்றிய அரசின் அதிகாரங்களை மாநிலத்திற்கு பங்கிட்டு கொடுத்தாலே மட்டுமே கை கூடும்.

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time