பாஜக அரசின் பதவி காலம் பத்தாண்டு முடியவுள்ளது. பாஜக ஆட்சிக்கு முன்னும், பின்னுமான இந்தியாவின் பொருளாதார நிலைகளை ஒப்பீட்டு பிரதமர் மோடியும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி, ஒரு வெள்ளை அறிக்கையை சமர்பித்தனர். இதன் உண்மைத் தன்மை என்ன?
”காங்கிரஸ் ஆட்சியில் அரசியல் தலையீட்டால் வங்கித் துறை பெரும் நஷ்டத்தைச் சந்தித்தது. காங்கிரஸ் ஆட்சி கால கட்டத்தில் வராக் கடன்கள் மிகப் பெரிய அளவில் அதிகரித்தன…” என அடிக்கடியும், தற்போதும் மோடியும், நிர்மலா வைத்துள்ள குற்றச்சாட்டைப் பார்ப்போம்;
காங்கிரஸ் ஆட்சியில் வாராக் கடன்களாக தள்ளுபடி செய்யப்பட்டவை 2.8 லட்சம் கோடிகளாகும். ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் அதானி, அம்பானி போன்ற மிகப் பெரிய தனியார் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பாஜக அரசு கடன் கொடுத்ததில், வாராக்கடன் எனும் கணக்கில் தள்ளுபடி செய்த தொகை மட்டுமே ரூ. 25 லட்சம் கோடிகள்…என்பது ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆவணங்களில் காணக் கிடைக்கிறது! இந்தத் தொகை பொதுத் துறை வங்கிகள், வணிக வங்கிகள் இரண்டின் வாராக் கடன்களை உள்ளடக்கியதாகும்! சென்ற ஆண்டு ( ஆகஸ்ட் 7, 2023) திமுக எம்.பியான கனிமொழி எழுப்பிய கேள்விக்கு சபையில் எழுத்து பூர்வமாக வழங்கி பதிலில், மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பகவத் காரத் அளித்த பதிலில், ‘’கடந்த ஒன்பது ஆண்டுகளில் மொத்தம் 14,56,226 கோடி ரூபாய் அளவிலான கடன்கள், பொதுத் துறை வங்கிகளில் மட்டுமே வராக் கடன்களாக மாறியுள்ளன’’ என தெரிவித்து இருந்தார்.
2014 இல், காங்கிரஸ் பதவி இறங்கும் போது வெளி நாடுகளில் இந்திய அரசாங்கம் வாங்கி இருந்த கடன்கள் ரூ. 55.9 லட்சம் கோடியாக இருந்தன! ஆனால் பாஜக அரசோ, அந்தக் கடனை 2023-ஆம் நிதியாண்டில் 152.17 லட்சம் கோடியாக அதிகரித்து சாதனை படைத்துள்ளது!
மேலும் தன் பேச்சில் நிர்மலா சீதாராமன், ”காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு துறைகள் பொருளாதார ரீதியில் பின்தங்கி இருந்தது. பொருளாதார முறைகேடு மற்றும் பரவலாக ஊழல் நிறைந்து இருந்தது” எனக் குறிப்பிட்டார். அதே போல ”மோடியும், இந்திய நாட்டின் வீழ்ச்சிக்கு எல்லாம் நேருவும், காங்கிரஸ் ஆட்சியுமே காரணம்” என கொந்தளித்தார்.
அதே சமயம் தற்போது, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 10 ஆண்டு மேற்கொண்ட நீண்ட முயற்சிகள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், தற்போது வளர்ச்சிப் பாதையில் பொருளாதாரம் உள்ளதாகவும், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு விட்டுச் சென்ற சவால்களை தற்போதைய அரசு வெற்றிகரமாக முறியடித்துள்ளதாகவும் நிர்மலா தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்து மதுரை மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி.சு.வெங்கடேசன் அளித்துள்ள பதில் மிகச் சிறப்பாக உள்ளதால், அதில் இருந்து சில துளிகள்;
2014-ஆவது ஆண்டில் இந்தியாவில் 70 பில்லியனர்கள் இருந்தார்கள். இன்றைக்கோ 170 பில்லி யனர்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் தனிநபர் சராசரி வருமானம் உலகத்தில் 142-ஆவது இடத்தில் இருக்கிறது. மனித வள குறியீட்டில் 132-ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது. கார்ப்பரேட்டுகள் மகிழ்ச்சியில் திளைக்கிற ஒரு நாட்டில் மக்களின் மகிழ்ச்சி கடலினுள் தான் மூழ்கி கிடக்கும். எனவே தான், இந்தியா உலகின் மகிழ்ச்சிக் குறியீட்டில் 136-ஆவது இடத்தில் இருக்கிறது. சர்வதேச உணவுக் கொள்கைக் கழகத்தினுடைய பட்டினிக் குறியீட்டில் 122 நாடு களில், இந்தியா 107-ஆவது இடத்தில் இருக்கிறது.
10 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான வரிகள் 3.5 மடங்கு உயர்ந்திரு க்கிறது, டீசல் மீதான வரி 9.5 மடங்கு உயர்ந்திருக் கிறது. இதற்கு யார் காரணம்? யமுனையின் கரையிலே சாந்தி வனத்திலே உறங்கிக் கொண்டிருக்கிற ஜவஹர்லால் நேரு தான் இதற்கும் காரணமா?
கார்ப்ப ரேட்டுகளின் வரி 2016-ஆவது ஆண்டு 33 சத விகிதம் இருந்தது. பாஜக ஆட்சியில் கார்ப்பரேட்டுகளின் வரி 22 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. 1 சதவிகிதம் கார்ப்ப ரேட் வரி, 50 ஆயிரம் கோடி ரூபாய் கோடி எனில், 11 சதவிகிதம் என்றால் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் என்று நிதியமைச்சர் இந்த அவையிலே கணக்கு முன் வைப்பாரா?
மக்களுக்குக் கொடுத்தால் அது சலுகை, இலவசம். ஆனால், கார்ப்ப ரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுத்தால் அது ஊக்கத் தொகை என்பது உங்களது அகராதியா? உங்களது வெள்ளை அறிக்கை ஏழைகளின் கண்ணீராலும், கார்ப்பரேட்டுகளின் புன்னகையாலும் நிரம்பி வழிகிறது.
இறைவனை வழிபடுகிற ஒவ்வொரு இந்தியனும் சூடம் பொருத்தி வழிபடுவது இந்திய மரபுகளிலே ஒன்று. ஆனால், நீங்கள் இறைவனை வழிபடுவதற்கான சூடத்திற்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி விதித்த வகையில் சூடனுக்கு வரி விதித்த வரலாற்றின் முதல் நபராக நீங்கள் இருக்கிறீர்கள். தமிழ்நாட்டில் தன்னை ‘நாத்திகன்’ என்று அறிவித்துக் கொண்ட கருணாநிதி, ”சூடம் என்பது எளிய மக்கள் பயன்படுத்தும் பக்திப் பொருள்; எனவே, அதற்கு வரி விலக்கு அளிக்கிறேன்” என்று வரி விலக்கு அளித்தார்.
1975-ஆவது ஆண்டில் துவங்கி 2013 வரை ஒன்றிய அரசு அமல்படுத்திக் கொண்டிருந்த 15 திட்டங்களின் பெயர்களை நீங்கள் சமஸ்கிருதத்தில் மாற்றினீர்கள். திட்டங்கள் மட்டுமல்ல, சட்டங்களுக்கும் சமஸ்கிருதத்தில் பெயர் (ஐபிசி உள்ளிட்டு) வைத்திருக்கிறீர்கள். இவற்றின் உச்சபச்சமாக பண மதிப்பிழப்பின் பொழுது நீங்கள் புதிதாக கொண்டு வந்த 500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுகளில் வரலாற்றில் இதுவரை இல்லாதபடி முதல் முறையாக ‘தேவநாகரி’ எண்களை நீங்கள் பொருத்தி இருக்கிறீர்கள்.
வேலைவாய்ப்புப் பற்றிப் பேசியிருக்கிறீர்கள். 15 வயது முதல் 24 வயது வரை இருக்கிற இளைஞர்களில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பாகிஸ்தா னில் 11 சதவிகிதம், பங்களாதேஷில் 12 சதவிகிதம். ஆனால் இந்தியாவில் 24 சதவிகிதம் இருக்கிறார்கள்!
அதே போல முன்னோர்கள் சேர்த்து வைத்தச் சொத்தை எல்லாம் ஊதாரிப் பிள்ளை தொலைப்பதைப் போல தொலைத்துக் கொண்டுள்ளீர்கள்!
பிஎஸ்என்எல்க்கு 4G சேவையை தரவிடாமல் அதை சாகடித்தது யார்?
‘ஏர் இந்தியா’வை தனியாருக்குத் தூக்கிக் கொடுத்தது யார்?
எல்ஐசி- பங்குகளை தனியாருக்கு தாரை வார்த்டது யார்?
வங்கி உள்ளிட்ட அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களையும் தனியாருக்குத் தூக்கிக் கொடுக்கச் சட்டத்தைக் கொண்டு வந்தது யார்?
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைக் கசக்கிப் பிழிகிற ஒரு கொள்கையை நீங்கள் தொடர்ந்து அமல் படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். உங்களின் அதிகாரப் பசிக்காக இந்தியாவி னுடையக் கூட்டாட்சிக் கோட்பாட்டை, இந்த நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்க முயலாதீர்கள். நீங்கள் கைவிட்ட நிறுவனங்களைக் கேரள அரசு மீண்டும் எடுத்து நடத்துகிறது. இது ஒன்றிய அரசுக்கு அவமானமாகத் தெரிய வில்லையா?
அதிக வருமானத்தை ஈட்டிக் கொடுக்கிற மாநிலம் தமிழ்நாடு. ஆனால் இந்தப் பத்து ஆண்டுகளில் நீங்கள் தமிழ்நாட்டை வஞ்சித்த விதம் ஒன்றா? இரண்டா?
இன்றைக்கு வரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிலை என்ன? நிலம் கையகப் படுத்துவதிலே தாமதம், ஜெய்காவினுடய ஒப்பந்தத்தில் தாமதம், கோவிட் காரணம் என்று வரிசையாக பொய் காரணங்களை அடுக்குகிறீர்கள்.
இந்தக் காரணங்கள் எல்லாம் நீங்கள் ஆட்சி நடத்துகிற மாநிலங்களில் உருவாக்கப் பட்ட எய்ம்ஸ்களுக்கு ஏன் பொருந்தவில்லை? உங்களது நோக்கம் எய்ம்ஸ்க்கு நிதி தராமல் இழுத்தடிப்பது மட்டுமல்ல, தமிழ்நாட்டை வஞ்சிக்க வேண்டும் என்ற ஒற்றைப் புள்ளிதான். மதுரை ‘நைபர்’ (மருந்தியல் ஆராய்ச்சிக் கழகம்) இன்றைக்கு வரை கிடப்பிலே இருக்கிறது. வரிசையாக எங்களால் அடுக்கிக் கொண்டே போக முடியும். இரண்டு பெரும் வெள்ளத்தால் மூழ்கிக் கிடந்த தமிழ்நாட்டுக்கு ஒரு பைசா நிதியைக் கூட இப்பொழுது வரை கொடுக்கமாட்டேன் என்று விடாப்பிடியாக இருக்கிறீர்கள். வெள்ளம் வடிந்துவிட்டது, ஆனால் உங்களுடைய வஞ்சக அரசியல் வடியவில்லை.
சில மனிதர்கள் நிகழ்காலத்திற்கு அஞ்சி கடந்த காலத்திலே வாழ்வார்கள். அதே போலத் தான் சில கட்சிகளும்…! தேர்தல் வந்துவிட்டால் நாங்கள் எல்லாம் வளர்ச்சியைப் பற்றி, வேலையின்மை பற்றி, வறுமையைப் பற்றி பேசினால், அவர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு, 600 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆக்கிர மிப்பைப் பற்றிப் பேசுவார்கள். நாங்கள் பண வீக்கத்தைப் பற்றிப் பேசினால், அவர்கள் பாபரைப் பற்றிப் பேசுவார்கள், நாங்கள் கார்ப்ப ரேட்டுகளைப் பற்றிப் பேசினால், அவர்கள் கஜினி முகமதைப் பற்றிப் பேசுவார்கள். கடந்த காலத்தைக் கழித்து விட்டால், அவர்களிடம் எதிர்காலத்தைச் சந்திக்கிற எந்த ஒரு கருவியும் இல்லை.
Also read
2024 இந்தியாவின் வளர்ச்சி, உலக வளர்ச்சியைப் பற்றிப் பேசச் சொன்னால் இந்த தேர்தல் யுத்தத்தை துவங்கும்பொழுது பத்து ஆண்டுகள் பின்னால் போய் நின்று கொண்டிருப்பது இந்த அரசினுடைய தோல்வியின் இன்னொரு அடையாளமாகும்!
இந்த வெள்ளை அறிக்கையில் இருக்கும் அனைத்து சாராம்சத்தையும் எடுத்துப் பார்க்கையில் எழுத்தாளர் அருந்ததி ராயினுடைய புகழ்மிக்க மேற்கோளை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ‘இந்தியாவை ரெண்டு பேர் விற்றுக் கொண்டிருக் கிறார்கள், இரண்டு பேர் வாங்கிக் கொண்டிருக் கிறார்கள்’. அந்த நாலு பேர் யார்? என்பதை நாடறி யும். அந்த நாலு பேர் யார்? என்பதை 140 கோடி மக்கள் அறிவார்கள். வணக்கம்!
இவ்வாறு மதுரை எம்.பியான சு.வெங்கடேசன் பேசினார்.
மிகச் சரியான கேள்விகள் ! மக்கள் சிந்திப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.