சினிமா வியாபாரத்திற்கு பாய்! பிழைப்புக்கு சங்கி!

-சாவித்திரி கண்ணன்

ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவின் ‘லால் சலாம்’ படத்தில் மத நல்லிணக்கம் பேசப்பட்டுள்ளது. இது அதிசயமல்ல, தமிழ் மண்ணில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தாத படம் வியாபாரம் ஆகாது! அதே சமயம், ‘பாஜகவின் காவி அரசியலுக்கு கை கொடுப்பதில்’ நிஜ வாழ்க்கையில் சமரசமே இல்லாத பயணத்தை ரஜினி உறுதிபடுத்தி வருகிறார்;

ரஜினியே சொன்னது போல சினிமா என்றால் காசு, பணம்,டப்பு வரணும் என்ற கணக்கில் தான் அவர் மகள் ஐஸ்வர்யா லால்சலாம் படம் எடுத்துள்ளார்!

முன்னதாக லால் சலாம் விழாவில் பேசிய ஐஸ்வர்யா, ”என்னுடைய அப்பாவை சங்கி என்று எல்லோரும் சொல்லும் போது கோபம் வரும். இப்போது சொல்கிறேன், என்னுடைய அப்பா சங்கி கிடையாது. சங்கியாக இருந்திருந்தால், அவர் என்னுடைய ‘லால் சலாம்’ படத்தில் நடித்திருக்க மாட்டார். அவர் மனிதநேயவாதி. இந்த படத்தில் அவரை தவிர அவ்வளவு தைரியமாக யாருமே நடித்திருக்க மாட்டார்கள்”என்று குறிப்பிட்டு இருந்தார்.

அந்த பேச்சு குறித்து ரஜினியும் ஒரு விளக்கம் தந்து இருந்தார்; ”சங்கி என்பது கெட்ட வார்த்தை இல்லை. என்னுடைய மகள் சரியாகத்தான் பேசுகிறார். அப்பா ஆன்மீகவாதி அவரை ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்பது தான் என்னுடைய மகளின் ஆதங்கம்” என்று கூறி இருந்தார்.

லால் சலாம் படத்தில் காதர் மொய்தீன்பாய் ஒரு மனித நேயவாதியாக காட்டப்படுகிறார்! அப்படி இருக்க அந்த கேரக்டரில் நடிக்க ரஜினியைத் தவிர யாருமே அவ்வளவு தைரியமாக நடித்து இருக்க மாட்டாங்க என ஐஸ்வர்யா பேசுவதன் உளவியல் சிக்கலை நாம் பார்த்தால்.., இன்னைக்கு இருக்கும் சூழலில் ஒரு முஸ்லீம் பாயாக நடிப்பதே ஒரு சவாலான விஷயமாக அவர் பார்க்கிறார் என்று தான் தோன்றுகிறது. ஐஸ்வர்யாவே இங்கு ஒரு சங்கியின் மன நிலையில் குறிப்பாக தன் சார்ந்த பார்ப்பன சமூக மன நிலையில் இப்படி யோசித்து அந்தப்படியே பேசி இருக்கிறார். உண்மையில் இது படு அபத்தமான பேச்சு! இந்த கேரக்டரில் நடிக்க அனேகமாக எந்த தமிழ் நடிகருமே அச்சப்படமாட்டார்கள் என்பது மட்டுமல்ல, மிகவும் விரும்புவார்கள்! இந்த அடிப்படை புரிதல் கூட ஐஸ்வர்யாவுக்கு இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

ரஜினிக்கே இந்த கேரக்டரில் நடித்தற்காக ஏதோ ஒருவித பதற்றம் அடிமனதில் இருந்திருக்குமோ என்ற சந்தேகத்தை அன்றைய அவரது பேச்சு நமக்கு தோற்றுவித்தது! ஏனென்றால், அவர் வழக்கத்திற்கு மாறாக இந்து மதம் என்றால் என்ன என்பதற்கு வியாக்கியானம் தருகிறார். சனாதனம், புராதனம், வேதம், உப நிஷத்து, பகவத் கீதை, பரமாத்மா, ஜீவாத்மா என்றெல்லாம் பேசியதன் பின்னுள்ள உளவியலை நாம் கவனிக்க வேண்டும்.

இயற்கையிலேயே அவர் ஒரு ஆன்மீகத் தேடல் உள்ளவரென்றாலும்  ஏதாவது குரு, சாமியார், சீடர் கதையைத் தான் பேசுவார்! ஆனால், சர்ச்சைக்குரிய சனாதனத்தை நியாயப்படுத்தும் விதத்தில் அவர் பேச முன்வந்ததை நாம் கவனிக்க வேண்டும்.

ரஜினி பேச்சை அப்படியே தருகிறேன்;

எல்லா மதங்களுக்கும் ஸ்தாபகர்கள் இருக்காங்க. ஆனா இந்து மதத்திற்கு மட்டும் ஸ்தாபகர்கள் கிடையாது. ஏனென்றால், இது சனாதனம், சனாதனம் என்றால், புராதனம்! அதாவது பழசு. ஆதி! அப்ப வந்து ரிஷிகள் வந்து மெடிடேசன் இருந்தாங்க. அப்ப அவங்க ஒரு டாச்க்கில இருந்த போது, அவங்களுக்கே தெரியாமல் சில சவுண்ட்ஸ் வருது! அது தான் வேதம்.

பிராக்குரிதி என்றால்  நேச்சுரல். (இயற்கை) அந்த நேச்சுரலுக்குள் இறைவன் ‘புருஷா’ என்ற மனிதனை வைத்தான். அவனுக்கு ‘பஞ்ச இந்திரியங்களை’ கொடுத்தான். அதை அனுபவிக்க ‘மனசு’ என்ற புத்தியை வைத்தான். இது தான் வேதங்களில் இருக்கு… இதை புரிஞ்சுக்கிறது அவ்வளவு ஈசி கிடையாது. வேதத்துடைய ‘எசென்ஸ்’ தான் உப நிஷத்து! ‘தத்துவமசி’. ‘அதாவது, நீ ஒரு இந்த உடல் இல்லை, இந்த புத்தி இல்லை. அந்த பரம்பொருளின் அங்கம். அந்த யூனிவர்ஷலில் ஒருவன்’ இந்த உப நிஷத்தை புரிந்து கொள்வதும் அவ்வளவு எளிதல்ல, அதனால அதன் சாரம்சமாக வந்ததே பகவத் கீதை!

கிருஷ்ணா என்பது ஒரு உருவமல்ல, டிவைன்! சூப்பர் கான்ஷியஸ். அர்ச்சுனா என்பது கான்சியஸ். பரமாத்மா ஜீவாத்மாவுடன் பேசுவது தான் பகவத் கீதை! அதுல பக்தி யோகா, கர்ம யோகா, ஞான யோகா..என பல பாதைகள் இருக்கு.

கவனித்தீர்களா? ஒரு முஸ்லீம் பாயாக நடித்ததற்கு பிராயசித்தமாக ஒரு ஆர்.எஸ்.எஸ் காரர் அதாவது, ஒரு சங்கி என்ன பேசுவாரோ.., அந்தக் குரலாக ஒரு திரைப்பட விழாவில் கோடானு கோடி மக்களுக்கு பேசி பரப்புரை செய்துள்ளார் ரஜினி.

”அவர் பேசியது ஆன்மீகம் தானே! இதுல, எங்க சங்கியோட குரல் இருக்கு?” எனச் சிலர் கேட்கலாம்.

‘இதுல எது ஆன்மீகம்? எது சங்கியின் குரல்’ என்பதை பார்ப்போம்;

முதலாவதாக எந்த ஒரு மதமுமே ஆன்மீகத்திற்கான பாதையல்ல. மதம் என்பது பக்திக்கானது. ஆன்மீகம் என்பது மதங்களை கடந்த ஒரு அனுபவமாகும். ஆன்மீகத்தை அவரவரும் தன் சொந்த ‘அனுபூதி’ என்ற அனுபவத்தின் மூலமே உணர முடியும்.

‘மதம்’ என்பது பக்தியின் வழியே  இறை குறித்த ஒரு அச்சத்தை உருவாக்கி சமூக தளத்தில் மனிதனை ஒழுங்குபடுத்துவது அவ்வளவே! அதே சமயம் நடைமுறையில் அந்த மதத்தை வழி நடத்துவதன் மூலமும், சில கற்பிதங்களை உருவாக்குவதன் மூலமும் ஒரு குறிப்பிட்ட சமூகம் தன் பிழைப்பையும், தன் சமூக அதிகாரத்தையும் உருவாக்கி, உறுதிபடுத்திக் கொள்கிறது.

அந்த வகையில் பார்த்தால், இந்தியாவில் எண்ணற்ற மதங்கள், இறைவழிபாடுகள் உள்ளன! சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், செளமாரம், காணபத்யம் இன்னும் சில இனக் குழுக்கள் மற்றும் பழங்குடிகளின் மதங்கள்.. என பல மதங்கள் உள்ளன! அதில், ஒரு இனக் குழுவான பிராமணர்கள் மட்டுமே பின்பற்றிய மதம் தான் சனாதனம் என்ற ஒன்று. எப்படி கர்நாடகத்தின் லிங்காயத்துகள் தங்கள் மதத்தை இந்து மதமல்ல, எங்களுடையது தனி மதம் என்கிறார்களோ..’ அது போல பிராமணர்களும், ”நாங்கள் இந்துக்கள் அல்ல, சனாதன தர்மத்துக்குரியவர்கள்” என்று 60வது, 70 வது வருடங்கள் முன்பு வரை சொன்னது தான் வரலாறு!

தற்போது அனைத்து இந்திய மதங்களையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இந்து மதம் என்பது உறுதியான நிலையில், இந்து மதத்தையே ‘சனாதனம்’ எனச் சொல்லி ஒட்டு மொத்தமாக தங்களுடையதாக்கப் பார்க்கிறார்கள் பிராமணர்கள்!

இல்லை, இந்து மதம் என்பது யாக வேள்விகள், ஹோமங்கள் செய்யும் சனாதன மதமல்ல. அவரவர்களுக்கு பிடித்த ஒரு உருவத்தையோ அல்லது சூரியன் அல்லது குறிப்பிட்ட மரம் போன்ற இயற்கையையோ வழிபடும் மதம் என்பதே யதார்த்தம். சனாதனத்தில் சிவன் ,சக்தி, முருகன், பிள்ளையார், பெருமாள்..போன்ற எந்த தெய்வமும் இல்லை.

அப்படியிருக்க, ‘சனாதனம் தான் இந்து மதம்’ என்றும், ‘இந்து மதத்திற்கு  வேதங்கள், உப நிஷத்துக்கள், பகவத் கீதை ஆகியவையே அத்தாரிட்டி’ என்றும் ரஜினி கூறுவது அவரது சொந்தக் குரல் அல்ல, அவரை பேச வைத்துள்ள ஆர்.எஸ்.எஸ் – பிராமண சமூகத்தின் குரலே அது. வேதங்களாலும், பகவத் கீதையாலும் யாரும் ஆன்மீகத்தை பெற்றதாக வரலாறே இல்லை. அந்த அனுபவத்திற்கு அதில் இடமில்லை! யாகங்கள், வேள்விகள், ஹோமங்கள் நடத்துவது போன்ற சடங்குகள் ஆன்மீகமே அல்ல, அது தான் சனாதனம்!

வேள்வி, யாகங்கள்,ஹோமங்கள்..என்ற சடங்குகளே சனாதனம்!

இஸ்லாமிய பாயாக நடிப்பது சினிமா வியாபாரத்திற்காக என்றால், நடைமுறை வாழ்க்கையில் பிழைப்பையும், இருப்பையும் தக்க வைக்க சங்கி வேடம் போட்டுக் கொண்டுள்ளார் ரஜினி! இந்த விழாவில் ரஜினியின் பேச்சு முழுக்கவே பார்ப்பனர்களின் ஊது குரலாகவே ஒலித்தது. ஆக, நிஜ வாழ்க்கையில் ‘டபுள் ஆக்‌ஷன்’ வேடத்தில் கலக்குகிறார் ரஜினி!

நன்றாக கவனியுங்கள், அந்த லால் சலாம் விழாவில் ரஜினி பேசுகிறார்; ஒரு ஒற்றையடிப் பாதையாம். இருவர் பயணிக்கிறார்களாம்! நல்லவர் இருவரும் எதிர் எதிரே வரும் போது, அந்தப் பாதை ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து மூன்று வழிப் பாதையாகிறது. அந்த ஒருவரில் ஒருவர் மட்டும் நல்லவராக இருக்கும் போது அந்தப் பாதை இரண்டு வழி பாதையாகிறது. இருவருமே பிடிவாதம் பிடிக்கையில், அங்கே அந்தப் பாதை யாருமே போகாமல் மூடப்பட்டு விடுகிறது. இன்றைக்கு இது தான் நடந்து கொண்டு இருக்கிறது! (அதாவது கடைசியில் சொன்னது. இவ்வாறு ரஜினி பேசி முடித்ததும் அந்தக் கூட்டத்தில் இருந்த நாமம் தரித்த பிராமணர் ஒருவர் கையை பலமாகத் தட்டியதை குளோசப்பில் காட்டினார்கள்.) ”அவரவர் பாதையில் அவரவர் போவோம் என இருந்தால் பிரச்சினை ஏது?” என ரஜினி முடித்தார்!

”பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்குவோம்” என சங்கீகள் கலவரங்கள் நடத்தி ஆயிரமாயிரம் உயிர்கள் பலியான போது நீங்கள் பேசவில்லை. இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்ட போதும், நீங்கள் பேசவில்லை. அங்கே ராமர் கோவில் கட்டப்பட்டதும் போகிறீர்கள்!

தற்போது வாரணாசியில் ஞானவாபி மசூதியை கேட்கிறார்கள்! இந்துக்கள் உள்ளே நுழைந்து பூஜைகளும் நடக்கின்றன! நீங்கள் வாய் திறக்கவில்லை. அங்கே மசூதி இடிக்கப்பட்டு சிவன் கோவில் கட்டப்பட்ட்டதும் போவீர்களோ என்னவோ!  அதே போல மதுராவிலும் மசூதியை குறிவைத்து கிருஷ்ணர் கோவில் கட்ட முயற்சிகள் நடக்கின்றன! ”இவை வேண்டாம். அவரவர் பாதையில் அவரவர் செல்வோம்” என நடைமுறை வாழ்க்கையில் உங்களால் சொல்ல முடிந்தால் மட்டுமே நீங்கள் உண்மையான ஆன்மீகவாதி!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time