ஆறுகளைத் தேடி -4
தமிழ் நாட்டில் இயற்கை எழில் கொஞ்சும் பேரதிசயங்களை கொண்டது கன்னியாகுமரிமாவட்டம்! கொட்டித் தீர்க்கும்! குதூகலித்து ஓடும்! கண்களை விரிய வைக்கும்! இதயங்களை அள்ளும்! மனதை வருடும், மயக்கம் கொள்ள வைக்கும்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்..! இங்கே ஒரு சிறிய அறிமுகம்;
குமரி மாவட்டத்தில் ஓடும் தாமிரபாணி ஆற்றை நலம் விசாரிக்க எண்ணி நீங்கள் ஒரு மடல் எழுதினால், அதன் முகவரியில், கோதையாறும் பறளியாறும் தோன்றும் வனப்பகுதியும் இடம் பெற்றாக வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையில் தோன்றி மேற்கு திசையில் பாய்ந்தோடி அரபிக்கடலில் கலக்கும் குழித்துறையாற்றின் தாய் ஆறுகள் தாம் கோதையாறும் பறளியாறும். இவை இரண்டும் இணைந்து உருவாகும் ஆறுதான் குழித்துறையாறு. தாமிரபரணி ஆற்றின் தமிழ் பெயர் குழித்துரையாறு. நெல்லையில் ஓடும் தாமிரபரணி ஆற்றின் பெயர் பொருநை ஆறு. தாமிரபரணி என்பது வடமொழி சொல். குழித்துறையாற்றின் தாய் ஆறுகளான கோதையாறும் பறளியாறும் பாய்ந்தோடுகின்ற நிலத்தின் ஊடே அவை தோன்றும் மலைக்காட்டு பகுதிக்கு செல்வோம்.
கோதையாறு:
கிழாமலை, மோதிரமலை, நாலுமுக்கு, வெள்ளச்சித்தோடு, வீரப்புலி வனப்பகுதிகளில் தோன்றுகிறது கோதையாறு. மேல்கோதையாறு மலையில் மயிலாறு பகுதியில் உள்ள முத்துமாரியம்மனுக்கு கோதையம்மன் என்ற பெயரும் உண்டு என்கிறார்கள் அவ்வூர் மக்கள்.
கோதையாற்றை நலம் விசாரிக்க கிளம்பினால் வழியில் நந்தியாறு, சிற்றாறு, கிழவியாறு, மயிலாறு, கல்லாறு, குற்றியாறு, சின்னக்குற்றியாறு என பல காட்டாறுகளை சந்திக்க வேண்டும். இந்த காட்டாறுகள் தான் கோதையாற்றை வளமிக்க ஆறாக வைத்திருக்கிறது.
இந்திய பெருங்கடல், அரபிக் கடல், மன்னார் வளைகுடா என இந்திய ஆறுகளில் மூன்று கடலோர எல்லைகளை கொண்ட ஒரே வடிநில கோட்டமாக கோதையாறு விளங்குகிறது. குமரி மாவட்டத்தின் நாகர்கோயில், குழித்துறை, குளச்சல், பத்மனாபுரம் மற்றும் நெல்லை மாவட்டத்தின் ராதாபுரம் வட்டங்கள் கோதையாறு மூலம் பாசனம் பெறுகிறது. கோதையாறு தோன்றும் மலைப்பகுதிகளை மேல்கோதையாறு கீழ்கோதையாறு என பிரித்து பாசன மற்றும் மின்னாற்றல் தேவைக்காக தமிழ்நாடு மின்சார வாரியம் & பொதுப்பணித்துறையால் அணைகள் கட்டப்பட்டுள்ளன. அப்படியே குற்றியாறு அணை அமைந்திருக்கும் மேல்கோதையாறு நோக்கி புறப்படுவோம்.
குற்றியாறு & சின்ன குற்றியாறு:
குற்றியாறு, கோதையாறு என்றதும் நமக்கு அரிக்கொம்பன் யானைதான் நினைவுக்கு வரும். கேரளா வனப்பகுதியில் இருந்து தேனி கம்பம் நகருக்குள் நுழைந்த அரிக்கொம்பன் யானையை வனத்துறை பிடித்து முத்துகுழி வயல் வனப் பகுதியில் விட்டனர். அந்த யானை மேல் கோதையாறு, குற்றியாறு பகுதியில் சுற்றி வருவதாக அவ்வப்போது செய்திகள் வந்தன! இப்படித் தான் குற்றியாறு என்கிற பகுதி தமிழ்நாட்டு மக்களுக்கு பரவலாக அறிமுகம் ஆனது.
குற்றியாறு – குட்டியாறு என்று இந்த ஆறு அழைக்கப்படுகிறது. குற்றியாறு என்பதே சிறிய காட்டாறை குறிக்கும் சொல்தான். ஆனால் அதைவிட குட்டியான ஆறு ஒன்று அருகே ஓடுகிறது. அதனை சின்ன குட்டியாறு என்று மக்கள் பெயரிட்டு உள்ளனர்.
குற்றியாறும் சின்ன குற்றியாறும் வீரப்புலி வனப்பகுதியில் உருவாகிறது. இந்த இரண்டு காட்டாறுகளின் குறுக்கே 1973-76 ஆண்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் தனியே இரன்டு அணைகள் கட்டப்பட்டது. குற்றியாறு ஆற்றுநீர் குற்றியாறு அணையில் தேக்கப்பட்டு, அதன்பின் மதகுகள் மூலம் சின்ன குற்றியாறு அணைக்கு திருப்பி விடப்படுகிறது. சின்ன குற்றியாறு ஆற்றுநீரும், குற்றியாறு அணையில் இருந்து திரும்பிவிடபட்ட நீரும் சின்ன குற்றியாறு அணையில் தேக்கபப்டுகிறது. சின்ன குற்றியாறு அணையில் இருந்து 110 அடி உயரத்தில் இருக்கும் மேல் கோதையாறு அணைக்கு குழாய்கள் மூலம் சின்ன குற்றியாறு அணையிலிருந்து நீர் மேலேற்றப்படுகிறது.
மேல்கோதையாறு & கீழ்கோதையாறு அணை:
1963-72 ஆண்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் மேல்கோதையாறு அணையும் கீழ் கோதையாறு அணையும் கட்டப்பட்டது. வீரப்புலி வனப்பகுதியின் உயரமான சிகரங்களில் இருந்து வரும் கோதையாற்றின் குறுக்கே மேல்கோதையாறு அணை கட்டப்பட்டுள்ளது. கோதையாறு ஆற்றுநீரும், குற்றியாறு அணை, சின்ன குற்றியாறு அணை நீரும் மேல் கோதையாறு அணையில் தேக்கப்படுகிறது. அதன் பின் கீழ்கோதையாறு அணைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
மேல் கோதையாறு அணையில் 60 மெகா வாட் திறன் கொண்ட மின்னுற்பத்தி நிலையமும், கீழ் கோதையாறு அணையில் 40 மெகா வாட் திறன் கொண்ட மின்னுற்பத்தி நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. கீழ்கோதையாறு மிகைநீர் பேச்சிப்பாறை அணைக்கு வருகிறது.
கோதையாறு தேக்கப்படும் பேச்சிப்பாறை அணைக்கு போவதற்கு முன்பு கோதையாறு மலைப்பகுதியில் தோன்றும் இன்னும் சில காட்டாறுகளை நாம் காண வேண்டும்.
கல்லாறு:
கோதையாறு மலைப்பகுதியில் தோன்றும் கல்லாறு அருவியாக விழுந்து கீழே பேச்சிப்பாறை அணைக்கு சென்று கோதையாறுடன் கலக்கிறது. சுற்றுலா செல்பவர்களுக்கு நன்கு அறிமுகமான இடம் கோதையாறு பகுதியில் உள்ள இரட்டை அருவி. அது கல்லாறு தான். மக்கள் குளிப்பதற்காக கல்லாறு அருவியை இரட்டை அருவியாக தமிழக அரசு சீரமைத்துள்ளது.
மயிலாறு:
கோதையாறு மலைப்பகுதியில் தோன்றும் மயிலாறு, கோதையாறு இரும்பு பாலம் கீழாக ஓடி பேச்சிப்பாறை அணைக்கு வந்து சேர்க்கிறது. மேற்கே மோதிரமலையில் இருந்து வரும் மோதிரமலை அருவியோடு சேர்ந்து பேச்சிப்பாறை அணையில் மயிலாறு கோதையாற்றுடன் கலக்கிறது.
கிழவியாறு:
கிழாமலை பகுதியில் இருந்து தோன்றி பேச்சிப்பாறை அணைக்கு ஒரு காட்டாற்று வெள்ளமாக வருகிறது கிழவியாறு.
சித்தாறு அணை 1 & 2:
குருசுமலை, காளிமலை, பத்துகாணி, குறிஞ்சி மலை, மருதம்பாறை, தலக்கு மலை, கிழாமலை வனப் பகுதியில் இருந்து இரண்டு ஆறுகள் தோன்றி கோதையாறு நோக்கி வருகிறது. அந்த இரண்டு ஆறுகளுக்கும் மக்கள் சிற்றாறு என்றே பெயர் வைத்துள்ளனர். மக்கள் வழக்கில் சித்தாறு என்றும் இதனை அழைப்பதுண்டு. அதனை வேறுபடுத்தி காட்ட சிற்றாறு 1 மற்றும் சிற்றாறு 2 என்று அரசு ஆவணங்கள் குறிப்பிடுகிறது. அம்பாடி என்னுமிடத்தில் சிற்றாறு 1 குறுக்காகவும், ஆலஞ்சோலை என்னுமிடத்தில் சிற்றாறு 2 குறுக்காகவும் திரு. காமராஜர் முதலமைச்சராக இருந்த காலத்தில் (1964-69) அணைகள் கட்டப்பட்டது.
சிற்றாறு 1 அணையும் சிற்றாறு 2 அணையும் கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளதால் இரண்டு அணைகளின் முழு தேக்களவும் சம மட்டம் கொண்டவையாக இருக்கிறது. இந்த இரண்டு சிற்றாறுகளும் கோதையாற்றின் துணையாறுகளே. அணைகள் கட்டியபிறகு இவ்விரண்டு ஆறுகளும் கோதையாற்றில் இயற்கையாக கலந்தயிடம் எதுவென்று அடையாளம் காண முடியவில்லை. சிற்றாறு அணைகளின் ஆற்றுநீர் பட்டணம்கால் என்கிற கால்வாய் வழியாக பாசனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு கோதையாற்றின் இடது கால்வாயுடன் இணைக்கப்பட்டு நெல்லை மாவட்டத்தின் ராதாபுரம் பகுதி உள்ளிட்ட குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் பாசனம் பெறுகிறது.
நந்தியாறு:
நந்தியாற்றின் கரையில் அமைந்துள்ள திருநந்திக்கரை ஊரில் கி.பி. 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால குடைவரைக் கோயில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி முகளியடிமலையில் தோன்றுகிறது நந்தியாறு. திருநந்திக்கரை, அஞ்சுகண்டறை, பிணந்தோடு கடந்து கடையல் அருகே கோதையாற்றில் கலக்கிறது.
சேல்கெண்டை காக்கை கெண்டை ,செத்தை கெண்டை , விரால் , கொரவை , பஞ்சலை , நீள்மீசை கெளுத்தி , பொன் மீன் உள்ளிட்ட நன்னீர் மீன்கள் பேச்சிப்பாறை அணையில் இருந்ததாகவும், ஜிலேபி , ரோகு , கட்லா , மிர்கால் , வெள்ளி கெண்டை உள்ளிட்ட அயல் மீன் இனங்கள் 1959-60 காலகட்டத்தில் பேச்சிப்பாறை அணையில் அறிமுகப்படுத்தப்பட்டதாக ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது. அறிமுகப்படுத்தப்பட்ட அயல் மீன் இனங்களால் நாம் இழந்த நம் நாட்டு நன்னீர் மீன் இனங்கள் பல.
மீன்பிடிக்கும் உரிமையை தனியாருக்கு குத்தைகைக்கு விடுவதால், பூர்வகுடி மக்கள் மீன்பிடிக்கும் உரிமை மறுக்கப்படுகிறது. குமரி மாவட்ட அணைகளில் மீன் பிடிக்கும் தங்கள் மரபார்ந்த உரிமையை கேட்டு காணி பழங்குடி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். நம் நன்னீர் நிலைகள் இழந்த மீன் இனங்கள், நம் பூர்வக்குடி மக்கள் இழந்த மீன்பிடிக்கும் உரிமைகள் பற்றி தனியாக ஒரு நூலே எழுதலாம். சரி இனி கோதையாறு நோக்கி திரும்புவோம்.
பேச்சிப்பாறை அணை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனப் பயிர்களின் உயிராக விளங்குவது, பேச்சிப்பாறை அணை. 48 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் மூலம் குமரி மாவட்டத்தில் இரு போக சாகுபடிகள் நடக்கின்றன.. இது, முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டது! இங்குள்ள பேச்சியம்மன் கோவில் முக்கியத்துவம் வாய்ந்தது. குமரி மாவட்ட வேளாண் நிலங்களை பெருக்கும் நோக்கில் 1896 – 1906 ஆம் ஆண்டுகளில் அலெக்சாண்டர் ஹம்ப்ரே மிஞ்சின் என்னும் ஆங்கிலேயே பொறியாளர் பொறுப்பில் பேச்சிப்பாறை அணை கட்டப்பட்டது.
திருநெல்வேலி ராதாபுரம் பகுதியை வளப்படுத்தும் நோக்கோடு காமராஜர் முதலமைச்சராக இருந்த (1964-69) காலத்தில் ராதாபுரம் பகுதி வரை கால்வாய்கள் வெட்டப்பட்டு பேச்சிப்பாறை அணையின் உயரம் 42 அடியில் இருந்து 48 அடியாக உயர்த்தப்பட்டது. சுற்றுலா பயணிகள் இந்த இடத்தை அதிகம் விரும்புகிறார்கள்!
திற்பரப்பு அருவியில் குளித்து இருக்கிறீர்களா? அது கோதையாறு தான். கோதையாறு என்பது ஒரு ஆறு அல்ல. பல காட்டாறுகள், சிற்றாறுகளின் கூட்டமைப்பு. வீரப்புலி வனப்பகுதியில் இருந்து வரும் கோதையாற்றுடன் குற்றியாறு, சின்ன குற்றியாறு, கல்லாறு, மயிலாறு, உள்ளிட்ட ஆறுகள் இணைந்து கோதையாறு என்ற பெயரில் பேச்சிப்பாறை அணை நீர்த்தேக்கத்தில் தேக்கப்படுகிறது. பேச்சிப்பாறை அணை கடந்து வரும் கோதையாற்றில் சிற்றாறு1, சிற்றாறு 2 ஆகிய ஆறுகள் கலக்கிறது. அதனை கடந்து கடையல் பகுதியில் நந்தியாறு கோதையாற்றுடன் கலக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து வரும் கோதையாறு அம்பாடி, மன்னான்பாறை, கடையல், திற்பரப்பு, திருவரம்பு கடந்து திருவட்டாறு அருகே மூவாற்றுடுமுகம் என்ற பகுதியில் பறளியாறுடன் கலக்கிறது.
Also read
மேல் கோதையாறு பகுதியில் இருந்து பேச்சிப்பாறை அணை கடந்து மூவாற்றுமுகம் வரை கோதையாற்றில் நனைந்து கொண்டே வந்துவிட்டோம். தாமிரபரணி என்னும் குழித்துறையாற்றின் தாய் ஆறுகளில் மற்றொரு ஆறான பறளியாறு தோன்றும் மகேந்திரகிரி மலைகாட்டு பகுதி வரை போய் வருவோமா?
ஆறுகளைத் தேடுவோம்.
கட்டுரையாளர்; தமிழ்தாசன்
சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர்
Mr Savitri Kannan,
Thank you for the nice article about our Native.
Will connect with Mr FA Xavier & he will share you many more places.
Take care. Do well.