கிளாம்பாக்கம் நவீன பேருந்து நிலையம் வளர்ச்சியா? வீழ்ச்சியா?

சாவித்திரி கண்ணன்

சென்னை அநியாயத்திற்கு விரிந்து பரந்து,பிதுங்கி வழிகிறது! ஐம்பது ஆண்டுகளாக சென்னையில் வசிப்பவன் என்ற வகையில், பெருத்துக் கொண்டே போகும் சென்னையும், போக்குவரத்து நெரிசல்களும் என்னை அச்சுறுத்துகிறது. நகர விரிவாக்கம் என்பது நரக விரிவாக்கமாகவே என்னால் உணர முடிகிறது! சென்னையை சுற்றியிருந்த விவசாய நிலங்களெல்லாம்  விழுங்கப்பட்டுக் கொண்டே வருவதை ஆண்டுதோறும் பார்த்து அதிர்ந்த வண்ணம் உள்ளேன்! உலக தரத்திலான சாலை வசதிகளோ, பேருந்து நிலைய வசதிகளோ நமக்கு மகிழ்ச்சியை தரலாம். ஆனால், உண்மையில், அவை, மகிழ்ச்சிக்குரியவை தானா…? என்ற மறு பரிசீலனை தற்போது அவசியமாகிறது! இந்த கட்டுரை தற்போது கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையத்திற்கான தேவை ஏன் எழுந்தது என விவரிக்கிறது!

பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு,சென்னைக்கு வெளியில் வண்டலூர் பக்கத்தில் ஊரப்பாக்கம் அருகே கிளாம்பாக்கத்தில் நவீன முறையில் உலகத் தரத்தில் பிரம்மாண்டமாக, புறநகர்  பேருந்து நிலையம் கிட்டதட்ட  மூன்றாண்டுகளாகத் பேசப்பட்டு வருகிறது! அது செயல்பாட்டுக்கு வர இன்னும் ஒன்றரை ஆண்டுகளாகலாம் என்று நம்பப்படுகிறது. எனினும், இடைக்காலமாக அடுத்த ஆண்டு துவக்கத்திலிருந்து அங்கேயிருந்து உள்ளுர் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது!  சென்ற ஆண்டு(2019) பிப்ரவரியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு அடிக்கல் நாட்டினார். இது தயாராகிவிடும் பட்சத்தில் சென்னையின் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிதுங்கி வழிந்த பிராட்வே!

சென்னையில் வெளியூர் செல்லும் பயணிகளுக்கான பேருந்து நிலையம் முன்பு பிராட்வேயில் மட்டுமே இயங்கியது. அது மொத்தமே ஒன்றரை ஏக்கர் இடம் தான்! இருபதாண்டுகளுக்கு முன்பு வரை வெளியூருக்கு பஸ்பிடிக்க பிராட்வேக்கு தான் அனைவரும் செல்வார்கள்! அங்கே அதிகபட்சம் ஐம்பது, அறுபது பேருந்துகளுக்கு  மேல் நிறுத்த முடியாத நிலை நிலவியது. சிறுமழை பொழிந்தால் கூட அந்த இடம் தண்ணீர் தேங்கி நிற்கும். இது தவிர எழும்பூரில் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. அப்போது நிலவிய கடும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஜீன்  1999 ஆண்டு சென்னைக்கு வெளியே  கோயம் பேட்டில் புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு,அது நவம்பர்  2002 ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது.

திக்குமுக்காடிய கோயம்பேடு!

கோயம்பேட்டில் மொத்தம் ஆறுநடை மேடைகள் உள்ளன. இங்கே ஒரே நேரத்தில் 270 பேருந்துகளை  கையாள முடியும்! ஆனால்,காலப்போக்கில் சுமார் 500 பேருந்துகளை  கையாள வேண்டிய நிர்பந்தம் உருவானது. நாளொன்றுக்கு இங்கிருந்து சுமார் 2000  பேருந்துகள் வந்து போகும் என்ற நிலை மாறி சுமார் 3000 பேருந்துகள் வந்ததாலும்,அதுபோல வந்து செல்லும் மக்கள் தொகை 3,00000 என்பதாக எல்லை மீறிப் போனதாலும் கோயம்பேடு பிதுங்கி வழிந்தது!

ஆகவே,கோயம்பேடு புழக்கத்திற்கு வந்த பத்தாண்டுகளிலேயே இந்த இடம் பற்றாது என்ற சூழல் உருவானது. மேலும், கோயம்பேட்டிலிருந்து புறப்பட்ட பேருந்துகள் தாம்பரத்தைக் கடக்கவே இரண்டு முதல் மூன்று மணி நேரமானது. கிலோமீட்டர் கணக்கில் பஸ்கள் ஊர்ந்து வரக் கூடிய நிலை தோன்றியது.

இதைத் தொடர்ந்தே புறநகர்ப் பகுதியில் புதிய பேருந்து நிலையம் உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.2013 ஆண்டு வண்டலூர் அருகே அல்லது கூடுவாஞ்சேரியில் புதிய  பேருந்து நிலையத்திற்கான முயற்சிகள் எடுத்த நிலையில் அங்குள்ள விவசாய நிலங்களைப் பயன்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியில் ஊரப்பாக்கம் அருகே கிளாம்பாக்கம் தேர்வானது. அங்கு 44.5 ஏக்கரில் ரூபாய் 394 கோடி செலவில் சுமார் ஒன்றரை லட்சம் பயணிகள் வந்து போகக் கூடிய வகையில் நவீன பேருந்து நிலையத்திற்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்ற ஆண்டு (2019) பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார்.

இதனால், இங்கு தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் குறிப்பாக விழுப்புரம், திருச்சி வழியாக மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட ஊர்களுக்கான பேருந்துகள் வந்து செல்லும்.சென்னையின் பல பகுதிகளில் இருந்து இங்கே வந்து போகக் கூடியவரையில் மாநகர் பேருந்து நிறுத்தமும் இங்கிருந்து செயல்படவுள்ளது! மேலும்ஆட்டோக்கள்,இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்களும் சிறப்பாக ஏற்படுத்தப்படுகிறது. மேலும் ஆண்,பெண் பயணிகள் தங்கவும்,ஓட்டுனர், நடத்துனர் ஓய்வெடுக்கவுமான வசதிகள் செய்யப்படவுள்ளன. அத்துடன் இங்கு அவசரத்திற்கு சிகிச்சையளிக்க ஒரு சிறிய மருத்துவமனையும்,இளம் தாய்மார்கள் குழந்தைக்கு பாலூட்டும் இடமும் ஏற்படுத்தப்படுகிறது. மிக முக்கியமாக அதிகமான அளவில் கழிவறைகள் ஏற்படுத்தப்படுகிறது.இந்த கழிவறைகள் விமான நிலையத்தில் பராமரிப்பது போலச் சுத்தமாகப் பராமரிக்கப்படும்.

இந்தகிளாம்பாக்கத்தின் பேருந்து நிலையம் அருகே மெட்ரோ ரயில்வே  ஸ்டேசனையும் கொண்டு வரும் திட்டம் வருங்காலத்தில் செயல் படுத்தப்படும். அப்படி வரும்பட்சத்தில் கிளாம்பாக்கத்திற்கு வந்து செல்வதற்கு இன்னும் சுலபமாக இருக்கும்.

முன்னதாக கோயம்பேடு நெரிசலைத் தவிர்க்க வட சென்னை புறநகர்ப் பகுதியான மாதவரத்தில் காளகஸ்தி, திருப்பதி, நெல்லூர், புட்டபர்த்தி, விசாக பட்டிணம், ஹைதராபாத் போன்ற இடங்களுக்கான பேருந்து நிலையம் எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் ரூபாய் 95 செலவில் கட்டப்பட்டு, எழில்மிகு தோற்றத்துடன் அக்டோபர்  2018 ஆம்  ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தில் ஒரே நேரத்தில் 200 பேருந்துகள் நிற்கும் வசதியுடன், அடித்தளம், தரைதளம், மேல்தளம் என மூன்று அ டுக்குகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு  நாளொன்றுக்கு 15,000 க்கும் மேற்பட்ட  பயணிகள் வருகின்றனர்.

இதேபோல கூத்தம்பாக்கம் அருகே சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் மற்றொரு பேருந்து நிலையமும் 20  ஏக்கரில் ரூபாய்  150 கோடி செலவில் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கான  பேருந்துகளுக்காக உருவாக்கப்படவுள்ளது. இங்கிருந்து பெங்களூர், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கோவைபோன்ற ஊர்களுக்கான பேருந்துகள் புறப்படும். இந்த பேருந்து நிலையம் அனேகமாக இன்னும் இரண்டு வருடத்தில் தயாராகிவிடும் என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர்,செயலர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் முக்கிய அம்சங்கள்;

பேருந்து நிலையத்தின் நிலப்பரப்பு – 44 ஏக்கர்

உருவாக்கப்படும் தளங்கள்-  4

இரண்டு அடித்தளங்கள் -கார்கள், இரு சக்கர வாகன நிறுத்துமிடம்

தரைதளம் – பயணிகளுக்கான வசதிகள், கடைகள், உணவகங்கள்

முதல்தளம் – ஓட்டுனர்,நடத்துனர்கான வசதிகள்

பேருந்து நிலைய கட்டுமான பரப்பளவு– 6,40,000 சதுர.மீ.

வெளியூர் பேருந்துகள் நிற்க முடிந்த எண்ணிக்கை –216

மாநகர பேருந்து நிறுத்த நடை மேடைகள் – 11

கார்கள்  நிற்க முடிந்த எண்ணிக்கை –329

இரு சக்கர வாகனங்கள்  நிற்க முடிந்த எண்ணிக்கை – 2,764

அனுமதிக்கப்பட்ட கடைகள் –50

அனுமதிக்கப்பட்ட உணவகங்கள்- 4

ஆண்களுக்கான ஓய்வறையில் 100 ஆண்கள் தங்கலாம்.

பெண்களுக்கான ஓய்வறையில் 40 பெண்கள் தங்கலாம்.

தினமும் சுமார் ஒன்றரை லட்சம் பயணிகள் வரக் கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது. விவசாய நிலப்பரப்புகளை எதிர்ப்புகளை புறந்தள்ளி ஆக்கிரமித்துத் தான் இந்த பேருந்து நிலையம் உருவாகி வருகிறது! எனவே வருங்காலத்தில் போக்குவரத்து வசதிகள் கூடுமானவரை தவிர்க்கக் கூடிய தாக  சமூக கட்டமைப்பை உருவாக்கவில்லை என்றால், எவ்வளவு பெரிய பேருந்து நிலையமும் காலப் போக்கில் போதாமையாகத் தான் ஆகும்!

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time