பத்தாண்டு பாஜக ஆட்சி அனைத்திலும் படு தோல்வியே!

- திருச்சி சிவா

‘விவசாயிகளை காக்கிறோம்’ என்ற பெயரில் காப்பீட்டு நிறுவனங்கள் 40 ஆயிரம் கோடி கொள்ளை! விவசாயிகள் தற்கொலை, வேலையின்மை அதிகரித்துள்ளது. பொதுத் துறை நிறுவனங்களில் லட்சக்கணக்கான காலியிடங்களை நிரப்ப மறுக்கிறீர்கள்! பலவிதங்களிலும் பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்திருப்பதை பட்டியலிடுகிறார்;

நாடாளுமன்றத்தில் திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் ஆற்றிய உரை:

இந்த அரசாங்கமானது நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவும்  என்பதற்காக, ஒரு நாளை நீடிப்பு செய்துள்ளது. வெள்ளை அறிக்கை மூலம் தனது அரசாங்கத்தின் சாதனைகளை சொல்லி இருப்பதாக கூறியிருக்கிறது. இதில் கடந்த ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் தோல்விகளை கூறுகிறது. இதைச் சொல்வதற்கு இந்த அரசாங்கத்திற்கு நம்பகத்தன்மை உள்ளதா?

2024 பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு ‘இந்தியா’ கூட்டணி தலைமையிலான புதிய அரசாங்கம் பொறுப்புக்கு வரும். அப்போது நாங்கள் தற்போது நடந்து கொண்டிருக்கும் பாஜக அரசின் செயல்பாடு குறித்து வெள்ளை அறிக்கை வைப்போம். அப்போது பேச உங்களுக்கு போதிய வாய்ப்பு அளிப்போம்.

பாராளுமன்றத்தில் எதிர் கட்சிகளின் குரல்கள் நசுக்கப்படுகின்றன. விவாதங்களில் எங்களுக்கு போதுமான நேரம் ஒதுக்கப்படுவதில்லை.  தொலைக்காட்சிகளில் எங்களை முக்கியப்படுத்தி காட்டுவதில்லை. ஒலி பெருக்கிகள் நிறுத்தப்படுகின்றன. ஜனநாயகத்தில் நாங்களும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். இந்த நாடாளுமன்றத்தில் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த, பல கட்சிகளை சார்ந்த உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆளுகட்சிக்கும் எதிர்கட்சிக்கும் சமமான நேரம் ஒதுக்க வேண்டும்; அது தான் ஜனநாயகம் ஆகும்.

இந்த மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்த அண்ணாதுரை அவர்கள் பின்னாளில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். அப்பொழுது மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். ரயில்வே பெட்டிகளை மாணவர்கள் கொளுத்துகிறார்கள், போராட்டத்தை நிறுத்த துப்பாக்கியால் சுட அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சராக இருந்த அண்ணாவிடம் காவல்துறையினர் அனுமதி கேட்டார்கள்.

‘’ரயில்வே பெட்டி போனால்,  வேறுபெட்டி  செய்துகொள்ளலாம், ஆனால் மாணவர்கள் உயிர் போனால் அதைத் திருப்பி தர முடியாது எனவே சுடுவதற்கு உத்தரவு தர முடியாது’’ என்றார் அண்ணா.

இந்த அரசாங்கமானது மூன்று விவசாய சட்டங்களை அவசரகதியில் கொண்டு வந்தது. விவசாயிகளின் போராட்டங்களின் காரணமாக பிறகு அதை விலக்கிக் கொண்டது. அப்போது நடந்த போராட்டத்தில் மட்டும் 700 விவசாயிகள் இறந்து போனார்கள்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையை இந்த அரசாங்கம் மேற்கொண்ட போது வங்கிகளின் வாசலில் நின்றிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் இறந்து போனார்கள்.

இந்த அரசாங்கம் கொரோனா பெருந்தொற்றின் போது  நான்கு மணிநேரம் மட்டுமே அவகாசம் கொடுத்து முதல் பொது முடக்கத்தை அறிவித்தது. அதில் நூற்றுக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்து போனார்கள்.

விவசாயத்தை வீழ்த்துகிறீர்கள்!

பிரதம மந்திரி பசல் யோஜனா என்று சொல்லும் காப்பீடு திட்டத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் 40 ஆயிரம் கோடி ரூபாய் பலன் அடைந்துள்ளதாக இந்த அரசாங்கத்தின் வெள்ளை அறிக்கை கூறுகிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பக தகவல்படி, 2022 ம் ஆண்டில் 11, 290 பேர் தற்கொலை செய்து கொண்டனர். அதில் 5207 பேர் விவசாயிகள்; 6083 பேர் விவசாய தொழிலாளிகள்.

விவசாயிகளுக்கு கொடுத்து வரும் பட்ஜெட் ஆதரவானது கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைந்துள்ளது.

விவசாய கருவிகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்வரி 12 %, டிராக்டர்களுக்கு மாட்டும் டையர் வரி 18 %, உரத்திற்கான வரி 5 %, பூச்சிக்கொல்லிகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி 15%, என உள்ளது. இதுவா விவசாயத்திற்கு தரும் ஆதரவு?  பூச்சிக்கொல்லிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் 13% குறைக்கப்பட்டுள்ளது. 2.67. % மட்டுமே இந்த பட்ஜெட்டில் விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

உலக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது அமெரிக்காவின் ஜிடிபி 0.18 ஆக இருந்தது .இங்கிலாந்தில் 1.7%, ஜெர்மனியில் 1%, ஜப்பானில் 1.5%, பிரான்சில் 1.4%, கனடாவில் 1.9%  என ஜிடிபி  இருந்தது. ஆனால் அதே காலத்தில், அப்போது ஐக்கிய முன்னணி – I அரசாங்கம் ஆட்சியில் இருந்தது. அப்பொழுது இந்தியாவின் ஜிடிபி 8% இருந்தது.  அதற்கு காரணம், விவசாய பொருளாதாரமும், பொதுத்துறை நிறுவனங்களும்,  எம்எஸ்எம்இ  என்று சொல்லக்கூடிய சிறு, குறு தொழில் நிறுவனங்களும்தான். இவைகளை சிதைக்கும் முறையில் இந்த அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது.

இலாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுகின்றன. ஜிடிபியில் சிறு,குறு தொழில் நிறுவனங்களின் பங்கு 29 சதமாக இருக்கிறது. அவை 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருகிறது. ஏற்றுமதியில் 45 % பங்கு வகிக்கிறது. இதற்கு இந்த அரசாங்கம் ஆதரவளிப்பதில்லை.

வேலை இல்லாதோர் எண்ணிக்கை 4 கோடி!

2012 இல் வேலையில்லா திண்டாட்டம் ஒரு கோடியாக இருந்தது இப்போது நான்கு கோடியாக உயர்ந்து இருக்கிறது. முன்னே எப்போதும் இல்லாத வகையில் வேலை இல்லா திண்டாட்டத்தின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய முன்னணி ஆட்சியில் விவசாயம் அல்லாத வேலைவாய்ப்பு 75 லட்சம் கிடைத்தது. அது இந்த ஆட்சியில் 29 லட்சமாக குறைந்துள்ளது. ஒன்றிய அரசின் நிறுவனங்களில் ஒன்பது லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

ரயில்வேயில் 15 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. உத்திரவாதம், பாதுகாப்பு அற்ற ஒப்பந்த தொழிலாளர் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்து இருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம், விவசாயம் என அனைத்திலும் இந்த அரசாங்கம் தோல்வியடைந்து இருக்கிறது.

”நேரம் அதிகமாகி விட்டது நிறுத்துங்கள்” என்று நீங்கள் பேசுகிறீர்கள். நான் பேசுவது முக்கியமான பிரச்சினைகள். இதற்கு ஏன் குறுகிய கால விவாதத்தை நடத்த வேண்டும். ஆளுங்கட்சிக்கு ஏற்ப  பாராளுமன்ற விவாதங்கள் நடைபெறுகின்றன.

கடந்த ஆண்டு டிசம்பரில் தமிழகத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது நிதி கொடுக்க வேண்டும் என்று பிரதம மந்திரியைச் சந்தித்து முதலமைச்ச ர்மு.க.ஸ்டாலின் முறையிட்டார். பாராளுமன்ற உறுப்பினர்களின்  குழு உள்துறை அமைச்சரை சந்தித்தது. பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழகத்திற்கு வருகை தந்து பார்வையிட்டார். ஆனாலும், வெள்ள நிவாரண நிதி எங்களுக்கு வழங்கப்படவில்லை.

மொழி பெயர்ப்பு: பீட்டர் துரைராஜ்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time