அரசியல் ஆயுதமாக்கப்படுகிறது என்.ஐ.ஏ!

-சாவித்திரி கண்ணன்

நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில் என்.ஐ.ஏவைக் கொண்டு சில அரசியல் நகர்வுகளையும், சூழல்களையும் உருவாக்குகிறது பாஜக அரசு. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் சோதனை, விசாரணை ! மீண்டும் கோவை கார் குண்டு வெடிப்புக்காக சோதனைகள், கைதுகள்.. ஆகியவற்றின் பின்னணியில் நடப்பது என்ன?

கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபரில் கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு, காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. அதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். இறந்தவர் இஸ்லாமியர் என்ற காரணத்திற்காகவே பாஜக இந்த நிகழ்வை விசாரிப்பதற்கு முன்பாகவே, எடுத்த எடுப்பில் பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படுத்தி, புயலைக் கிளப்பியது.

இந்த வழக்கை காவல்துறை மூலம் துரிதமாக விசாரித்து வந்த தமிழக அரசு பாஜகவின் பழிச் சொல்லில் இருந்து தப்பித்தால் போதுமென, என்ஐஏவிடம் ஒப்படைத்துவிட்டது. அதற்கும் கூட, ”நான்கு நாள் தாமதமாக என்ஐஏவிடம் தருவதா? உடனே தராதது ஏன்?” என ஏகத்துக்கும் மிரட்டினார்கள்! இது பாஜக மாநில அரசையும், அதன் காவல் துறையையும் துச்சமாக மதிக்கும் போக்கை அன்றே துல்லியமாக வெளிப்படுத்தியது.

கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக அப்போதே ஒரு பெரிய பில்டப்பை தந்து 13 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் 14 வது நபராக போத்தனூர் திருமலை நகரை சேர்ந்த தாஹா நசீர் என்பவர் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி கைது செய்தனர். இவர், கார் சர்வீஸ் நிறுவனத்தில் பெயின்டராக வேலை பார்த்து வந்த ஒரு தொழிலாளி. இவர் உயிரிழந்த ஜமேஷா முபினிடம் முந்திய நாள் பேசியவர் என்பதாலேயே கைதானார்.

தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகையில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, கடலூர்  உள்ளிட்ட 8 மாவட்டங்களில் என தமிழ்நாட்டில் பரவலாக  20 க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மீண்டும் சோதனையில் ஈடுபட்டு,  நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

மாநில காவல்துறையை அதிகாரமற்ற பதுமைகளாக்கி என்.ஐ.ஏ வைக் கொண்டு தேர்தல் பரப்புரைக்கான நிகழ்வுகளையும், சூழல்களையும் கட்டமைக்கிறது பாஜக!

பத்து நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையிட்டதுமே கூட இந்த ரகம் தான்!

நாம் தமிழர் கட்சியை பொறுத்த வரை அது விடுதலைப் புலிகள் ஆதரவை என்றுமே பகிரங்கமாக வெளிப்படுத்தி வரும் கட்சி தான்! புலிகள் வலுவாக இலங்கையில் ஆயுத யுத்தம் நடத்திய காலத்திலேயே தமிழகத்தில் பிரபாகரன் புகழ் பாடி வந்தவர்கள் தாம்! அதே சமயம் இது வரை நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் எங்கும் பயங்கரவாத செயல்கள் எதையும் செய்ததில்லை. குண்டு வைப்பு, துப்பாக்கிச் சூடு என எதிலும் ஈடுபட்டதாக செய்தியும் இல்லை, வழக்கும் இல்லை. வீரியமாகப் பேசுவார்களே அன்றி, காரியத்தில் தீவிரம் எதையும் காட்டியதில்லை.

நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், ஐடி விங்க் நிர்வாகி ரஞ்சித் குமார், கோவை காளப்பட்டி முருகன், நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் இசை மதிவாணன் , சிவகங்கை மாவட்டம் இளையான்குடி விஷ்ணு பிரதாப் உள்பட பல நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் நாம் தமிழர் கட்சியின் மாணவர் அணி செயலாளர் இடும்பாவனம் கார்த்திக், சாட்டை துரைமுருகன் உள்பட 4 நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி என்ஐஏ அதிகாரிகள் விசாரித்தனர். இவர்கள் ஜெர்மனியில் வசிக்கும் ஒருவருடன் பிரத்யேக செயலி மூலம் அடிக்கடி பேசி வந்ததையே விசாரணைக்கான முகாந்திரம் எனக் கூறியுள்ளனர்.

இது நமக்கு வேடிக்கையாக உள்ளது. புலம் பெயர் தமிழர்கள் தமிழகத்தில் உள்ளவர்களோடு பேசுவதே பயங்கரவாத செயலுக்கான முகாந்திரமாகிவிடுமா? ஜெர்மனி ஒன்றும் பயங்கரவாதத்தில் ஈடுபடும் நபர்களுக்கு அடைக்கலம் தரும் நாடும் அல்ல.

இவ்வளவு பயங்கரவாத நபர்களை தமிழக காவல்துறை அலட்சியமாக விட்டுவிடும் என கருதுவதற்கு இடமில்லை. நியாயப்படி தமிழக காவல்துறை இந்தக் குற்றச்சாட்டில் உள்ள உண்மைத் தன்மை குறித்து தானே முன் வந்து விசாரிக்க வேண்டும். கையைக் கட்டி, ‘தேசிய புலனாய்வு முகமை  தமிழகத்திற்குள் பாஜகவின் அரசியலுக்கு ஏற்ப என்ன வேண்டுமானாலும் வேலை செய்யட்டும்’என வேடிக்கை பார்க்கக் கூடாது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மெளனம் சாதிக்கக் கூடாது. அதன் மெளனம் நாளை அவர்களின் சொந்தக் கட்சியை சேர்ந்தவர்களுக்கே கூட ஆபத்தாக முடியலாம்!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் தன் அரசியலுக்கான காய் நகர்த்தலாகவே என்.ஐ.ஏவை பாஜக அரசு கையாள்கிறது! இன்றைக்கு நாம் தமிழர் கட்சி மீது பாய்ந்த என்,ஐ.ஏவின் அம்புகள் நாளை திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என யார் மீது வேண்டுமானாலும் பாயலாம். எனவே, மற்ற அரசியல் கட்சிகளும் இதில் மெளனம் காட்டக் கூடாது.

பொதுவாக நாம் தமிழர் இயக்கம் திமுகவை தாக்குவதை தன் பிரதான பிரச்சாரமாகவும், பாஜகவை விமர்சிப்பதை ஆகக் குறைவாகவுமே செய்து வந்தது. இதனால் அவர்கள் பாஜகவின் பி.டீம் என்றும் விமர்சிக்கப்பட்டனர். இந்த விமர்சனம் சற்று தூக்கலாகவே சமூக வலை தளங்களில் பரவியது. ஆகவே, இதை சம நிலைபடுத்தவோ, என்னவோ பாஜகவின் தவறுகளையும் சீமானின் தம்பிகள் பேசத் தொடங்கினர். திமுகவை நாம் தமிழர் விமர்சித்த போது அதை மிகவும் ரசித்து, ”ஆகா, காதில் தேன் வந்து பாய்க்கிறதே…” என மெய் சிலிர்த்த பாஜகவினர், தங்களை நோக்கியும் அவர்கள் விமர்சனம் தூக்கலாக வர ஆரம்பித்ததும், ‘சற்று தட்டி வைக்கலாம்’ என்ற தன்மையில் இந்த என்.ஐ.ஏ ஆயுதத்தை எடுத்திருப்பார்கள் போலும் என்பதே பலரது பார்வையாக உள்ளது.

அதைப் போலவே,இந்த என்.ஐ.ஏ சோதனையும், விசாரணைகளும் ஒரு கண் துடைப்பு போல நடந்து முடிந்துள்ளது மாத்திரமல்ல, அதில் ஒரு அரசியல் நரித்தனத்தையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் தங்களுக்கு ஆதரவான ஊடகங்களைக் கொண்டு செய்துள்ளனர். என்.ஐ.ஏ சோதனைகள், விசாரணைகள் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் சொன்னதாக தினமலரும், தினகரனும் மாத்திரம் பிரதான முக்கியத்துவத்துடன் இந்த செய்திகளை பிரசுரித்து இருந்தனர்;

தினமலர் மற்றும் தினகரனில் வந்த செய்திகள்!

அந்த செய்தியானது, ‘நாம் தமிழர் கட்சித் தலைவரான சீமானுக்குத் தெரியாமல் அவரது தம்பிகள் பல கோடி நிதிவசூல் செய்தனர். கட்சியை இரண்டாம் கட்டத் தலைவர்களான சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் போன்றோர் நாம் தமிழர் இயக்கத்தை கைப்பற்றும் சதியில் இறங்கியதாக’ சொல்கிறது!  ஆனால், இந்த செய்தியை கசிய விடும் முன்பும், பின்பும் சீமானை விசாரணைக்கு அழைக்கவில்லை. சீமானை ஏன் விசாரணைக்கு அழைக்கவில்லை..? உண்மை இதுவாக இருந்தால் ஏன் இவர்களை கைது செய்து சிறையில் தள்ளவில்லை? உண்மை தான் எனில், அதைச் செய்யட்டுமே!

இது 1990 களில் திமுக விவகாரத்தில் கருணாநிதிக்கு போட்டியாக உருவெடுத்த வைகோவை திமுகவில் இருந்து தூக்க அன்றைய உளவுத் துறை விடுதலைப் புலிகளை சம்பந்தப்படுத்தி செய்தியை பரப்பியது தான் நினைவுக்கு வந்தது!

இந்த விவகாரத்தில் சீமானுக்கு தன் தம்பிகள் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்த எந்த அறச் சீற்றமும் வெளிப்படாதது ஆச்சரியம் அளிக்கிறது. இந்த என்.ஐ.ஏ சோதனை மற்றும் விசாரணை தொடர்பாக அவர் தமிழகம் தழுவிய அளவில் ஒரு பெரிய போராட்டம் நடத்தி இருந்தால், தன்னை நம்பி வந்தவர்களுக்கு  உண்மையாக இருக்கிறார் என புரிந்து கொள்ளலாம். மாறாக, ”எங்களை பாஜகவின் பி.டீம் என விமர்சித்து வந்தனர். ஆனால், எங்க தம்பிகள் மீதே என்.ஐ.ஏ பாய்வதன் மூலம் அது பொய் என்றாகிவிட்டது” என பெருமைபட்டுள்ளார்.

முன்னதாக சென்ற ஆண்டு மே மாதம் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இருவரை என்.ஐ.ஏ தூக்கி விசாரித்த வகையிலுமே கூட, சீமான் இன்று வரை தெளிவுபடுத்தவில்லை.

2022ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி ஓமலூர் காவல் துறையினர் புளியம்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, சேலத்திலிருந்து ஓமலூர் நோக்கி வந்த இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை நிறுத்தி விசாரித்தார்களாம்! அதன் பிறகு அவர்கள் தங்கி இருக்கும் இடத்தில் இரண்டு கைத் துப்பாக்கிகள், துப்பாக்கி தயாரிப்பதற்கான உதிரி பாகங்கள், கத்தி, தோட்டா, வெடிமருந்து, முகமூடி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

சஞ்சய் பிரகாஷ் பொறியியல் பட்டதாரி,  நவீன் சக்கரவர்த்தி எம்.சி.ஏ. சேலம் மாவட்ட ‘க்யூ’ பிரிவு காவல்துறை விசாரித்து கொண்டு இருக்கும் போதே, அவர்களை விலக்கி விட்டு மூக்கை நுழைத்தது என்.ஐ.ஏ.

அப்போது இந்த வழக்கை தானே வலிய வந்து தேசியப் புலனாய்வு முகமை எடுத்துக் கொள்ளும் அளவில் எதுவும் நடக்கவுமில்லை. விடுதலைப் புலிகள் இயக்கம் அது தோன்றிய இடத்திலேயே பூண்டோடு அழிக்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த நிலையில், இன்னும் விடுதலைப் புலிகள் பூச்சாண்டியைக் காட்டி தமிழக கட்சிகளையோ, அரசியல் எதிரிகளையோ ஒழிக்க நினைப்பது ஆரோக்கியமல்ல!

பொறுப்பில்லாத சீமான்;

சமீபத்தில் தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் என்ற நிகழ்ச்சியில் சீமான்  அளித்த பேட்டியில், ‛‛நாங்கள் ஏகே 47 கிடையாது. நாங்கள் ஏகே 74” என உதார்விட்டதோடு, ”ஓமலூரில் பிடிக்கப்பட்ட 4 பேர் எங்களின் கட்சியா? இல்லையா?” என்பது தெரியவில்லை… என பொறுப்பற்ற பதிலைக் கூறியுள்ளார்.

ஓமலூர் சம்பவம் நடந்து சுமார் பத்து மாதங்கள் ஆகின்றன. இது வரையிலும் அவர்கள் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் என என்.ஐ.ஏவும் சரி, ஊடங்களும் சரி தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகையில் சம்பந்தப்பட்டவர்கள் தன் கட்சியில் தான் இருக்கிறார்களா? என்பதில் கூட அக்கறை காட்டாத ஒரு தலைவரை எப்படி புரிந்து கொள்வது? இதில் ஒரு திட்டவட்டமான பதிலை சொல்லாமல் நழுவுவது பொறுப்பற்ற அணுகுமுறை மட்டுமல்ல, ஒரு தலைவனுக்குரிய பண்பும் இல்லை.

கைது செய்யப்பட்டவர்கள் மிக சாதாரண பின்புலம் கொண்டவர்கள் என்பதால் கை கழுவுகிறார். நியாயப்படி, ”இந்தக் கைது நியாயமில்லை” என அவர் போராடி இருக்க வேண்டும்.  அதாவது, ‘என்.ஐ.ஏ என்ன செய்தாலும், அது தன்னை நெருங்காத வரை கவலையில்லை’ என்று நினைக்கிறாரா? அல்லது ‘என்.ஐ.ஏ தன்னை ஒரு போதும் நெருங்கவே நெருங்காது’ என்று நம்புகிறாரா? புரியவில்லை.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time