”என்னுடைய இராமன், தசரதனின் மகனான – அயோத்தியின் அரசனான – இதிகாச இராமன் இல்லை. ..! அவன் நிரந்தரமானவன்” என்று சொல்லும் காந்தி, ”அந்த இராமனை நான் கோவிலில் தேடியதில்லை” என்கிறார்! காந்தியின் ராமனுக்கும், பாஜகவினர் காட்டும் ராமனுக்கும் தான் எத்தனை பெரிய முரண்பாடுகள்..!
காந்தியடிகள் மரணிக்கும் போது “ஹே ராம்” என உச்சரித்து கொண்டே தான் சாய்ந்தார். அவருடைய சிறு வயதிலிதிருந்தே பகவான் இராமர் ஒரு இன்றியமையாத பங்கினை , செல்வாக்கை செலுத்தி வந்தார். தன்னுடைய சுயசரிதையில் காந்தி இந்த செல்வாக்கை பற்றி பின்வருமாறு கூறுகிறார்;
வைஷ்ணவ இந்து குடும்பத்தில் பிறந்ததால் இராமர் மற்றும் கிருஷ்ணர் கோவில்களுக்கு செல்வது பழக்கம். ஆனாலும், அந்த கோவில்களில் கிடைக்காத பெரும் இன்பம், அமைதி, பக்தி, என்னை பராமரித்த வயதான செவிலியர் ரம்பா அவர்களிடமிருந்தே கிடைத்தது. காரணம், அவர்கள் என்னிடம் இருந்த பயத்தை போக்க இராம நாமத்தை ஜெபிக்க சொன்னது என்னை இராமருடன் பிணைத்தது. என் வாழ்நாள் முழுதும் அவர்கள் கற்று தந்ததே நிரந்தரமானது. ஆனால், அவர் சொன்ன இராம நாமம், கோவில்களில் சிலைகளாகவோ, உச்சரிக்கும் பாராயணங்களிலோ இல்லை. அது இதயத்தின் ஆழ் மனதில் இருக்கிறது.
ஆன்மீகத்தின் வேர்களில் :
காந்தியடிகள் அரசியலில் மதம் சார்ந்த விசயங்களை கொண்டு வந்தார். ஆனால், அவரின் மதமோ ஆன்மீகத்தின் வேர்களில் இருந்தது. காந்திய ஆய்வாளர் ராகவன் ஐயர் தன்னுடைய நூலான ‘காந்தியின் அரசியல் மற்றும் ஒழுக்க சிந்தனை’ யில் பின்வருமாறு சொல்கிறார்;
அவர் அரசியலில் பக்தியோடும், ஒழுக்க நெறிகளோடும் பயணிப்பதற்கான பலவற்றை முன்னெடுத்தார். அதன் ஒரு பகுதியாக சமூக முன்னெடுப்பகளோடு, ஆன்மீக உணர்தலை அரசியலின் முக்கிய காரணியாக்க, இதை முற்காலத்தில் செயல்படுத்திய ஜனகர் மற்றும் இராமரை முன்னுதாரமாக கொண்டும் – அதை நவீன வடிவத்தில் இந்தியாவில் அமல்படுத்திய விவேகானந்தரையும், அரவிந்தரையும் போலவும் – செய்ய முயற்சித்தார்.
காந்தியடிகள் அரசியலை தூய்மைபடுத்துவதையும், வழமையான மதத்தை மறுமலர்ச்சிக்குள்ளாக்குவதையும் ஒரு இலக்காக கொண்டார். அவர் இராமருக்கும், இராம ராஜ்ஜியத்திற்கும், இராம நாமத்திற்கும் புதிய அர்த்தங்களை தந்து, அதை தன் பேருரைகளின் மூலம் விளக்கினார். அவர் தன்னை தூய்மைபடுத்தி கொள்வதற்கே, இராமநாமத்தை தொடர்ந்து உச்சரித்தார். ஆழ்மனதில் பிரார்த்தனையாக செய்து வந்தார்.
மூன்று கேள்விகள்! முத்தான விளக்கங்கள்:
1933ஆம் ஆண்டு “ ஹரிஜன்” இதழில், ஒரு ஆசிரியரின் மூன்று கேள்விகளை முன் வைத்து தீர்க்கமாக, நயமாக விளக்கமளித்தார்;
முதலில் அந்த கேள்விகளை பார்ப்போம்.
# ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தியின் வாழ்வியல் நெறிமுறைகளை பின்பற்றும் ஒரு இந்து, கோவிலுக்கு சென்று அவரை வழிபட வேண்டுமா? அன்றாட வாழ்க்கையில் செய்வதை விட கோவிலில் சென்று தரிசிப்பது மேலா?
# நம்மோடு வாழ்கின்ற மனிதர்களை பார்க்கும் போது, நம் கைகளை குவித்தோ, தலையைக் குனிந்து பணிவாகவோ வணக்கத்தை சொல்லும் போது, அவரும் அவ்வாறே செய்கிறார்…! ஆனால், சிலைகள் அப்படி செய்யாதே..! நமக்கு பதிலே அளிக்காத ஒருவருக்கு நாம் கடிதங்களை ஏன் எழுத வேண்டும்?
# ஒரு இந்து யாரை வணங்குகிறாரோ, அவர் வாழ்நாளில் பல தவறுகளை செய்திருக்க கூடும். அப்படிப்பட்ட குறைகளுள்ள ஒருவரை வணங்கும் போது, அவருடைய தவறுகளையும் ஏற்று, தானுமே அந்த தவறுகளை செய்வது இயல்பு தானே? { மகாத்மா காந்தியின் தொகுப்பு நூல் – பகுதி 54 பக்கம்..111-112 }
ஒவ்வொருவரின் உள் மனதிலும், சிந்தனையிலும் இருக்க வேண்டிய இராமர், சிலையாக மாற்றப்பட்டதை மகாத்மா ஏற்றுக் கொண்டதே இல்லை. ”துரதிஷ்டவசமானது” என்றே கருதினார். ஆனாலும், கோவிலில் சென்று இராமரை வழிபடும் நம்பிக்கையை அவர் குறை சொன்னதே இல்லை.
அதற்கும் ஒரு அற்புதமான விளக்கமளிக்கிறார் காந்திஜி.
“ கோவிலில் சென்று தான் இராமரை இந்துக்கள் வழிபட வேண்டிய அவசியமில்லை. ஆனால், அவர்களுக்குள் இருக்கும் இராமரை உணர்ந்து கொள்ள முடியாமல் போகும் பட்சத்தில், கோவிலில் இருக்கும் இராமரை சென்று வழிபடுவதில் உள்ள நம்பிக்கையை நான் விமர்சிக்கவோ, தொந்தரவோ செய்ய மாட்டேன்.
ஒவ்வொருவரின் செயல்களும், நடவடிக்கைளும் இறை தரிசனத்தை விட முக்கியமானது. அமைதியான பிரார்த்தனையின் மூலமே இறைவனிடம் கோரிட முடியும். இறைவன் கோவில்களில் மட்டும் இருப்பதில்லை. எனக்கு கோவில், தேவாலயம், மசூதி என எந்த பாகுபாடும் கிடையாது என எழுதினார்.
அவரிடம் வைக்கப்பட்ட மூன்றாவது கேள்விக்கு தெளிந்த நீரோடை போல விளக்கமளிக்கிறார்;
என் சிந்தனையும், ஆழ்மனதும் தொடர்ந்து நீண்ட காலமாக “உண்மை தான் கடவுள்’’ என என்னைக் கண்டறிய வைத்தது. ‘நான் உண்மையின் வடிவில் இராமரை உணர்கிறேன்…பார்க்கிறேன்…’
வாழ்வின் இருண்ட காலத்திலிருந்து எம்மை வெளிச்சத்துக்கு கொண்டு காப்பாற்றியதும், காப்பாற்றி கொண்டிருப்பதும் அந்த “பெயர்” தான் ( மகாத்மாவின் தொகுப்பு நூல் பாகம் 54 பக்கம் 112)
காந்தியடிகளின் உரைகள், கட்டுரைகள், கடிதங்கள் என அனைத்திலும் இராமர், இராம நாமம், இராமயணம் நூற்றுக் கணக்கான முறை மேற்கோள்களாக இடம் பெற்றிருக்கும்.
காந்தியின் இராமர் யார் ?
உண்மையிலேயே, ”காந்தியின் இராமர் யார்? அவர் இந்துக்களின் கடவுள் மட்டும் தானா?” எனும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பல முறை அவரே பதில் அளித்துள்ளார்.
1946 ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் நாள் புது டில்லி பிர்லா நிலையத்தில் உரையாற்றும் போது, ”இராமரை சொந்தம் கொண்டாடுவதும், இராம நாமத்தை உச்சரிப்பதும் இந்துக்கள் மட்டும் தான் செய்ய வேண்டும் என்றும், இசுலாமியர்கள் அதில் எப்படி இணைந்து கொள்ள முடியும்? எனச் சிலர் சொல்லும் போது எனக்குள் நானே சிரித்து கொள்வேன்.
இசுலாமியர்களுக்கு, கிறித்துவர்களுக்கு, பார்சிகளுக்கு, இந்துக்களுக்கு என வேறு வேறு கடவுளா இருக்கிறார்? இல்லை..! கடவுள் எங்கும் நிறைந்தவன் ..! எல்லா இடங்களிலும் இருப்பவன். அவன் நமக்கு பழக்கப்பட்ட, பரிச்சயப்பட்ட வெவ்வேறு பெயர்களில் உணரப்படுகிறான்.
என்னுடைய இராமர், என் பிரார்த்தனைகளில் இருக்கும் இராமபிரான்!
அவன் தசரதனின் மகனான – அயோத்தியின் அரசனான – இதிகாச இராமன் இல்லை.
அந்த இராமர் எப்போதும் நிலையான, இன்னும் பிறக்காத – அவனை போலவே வேறு யாரும் இல்லாத – நிரந்தரமானவன்.
இத்தகைய இராமரையே நான் பிராத்திக்கிறேன், உதவி கோருகிறேன், அதையே நீங்களும் பின்பற்ற வேண்டும் என விழைகிறேன்.
அவர் எல்லோருக்கும் பொதுவானவர் என்பதால், அவரின் திருப்பெயரை பயன்படுத்திட, ஒரு இசுலாமியருக்கோ, அல்லது வேறு எவருக்குமோ எந்த பிரச்சனையும் இல்லை. அல்லது, ‘இராம நாமம் மட்டுமே கடவுள்’ என அங்கீகரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. அவர்கள் அல்லா என்றோ, அல்லது குதா ஹவிஸ்.. என்றோ தனக்குள்ளே சொல்லி கொண்டு, நல்லிணக்கத்தை பேணும் செயலை தொடர்வார்கள் ( காந்திஜியின் தொகுப்பு நூல் பாகம் 83, பக்கம் 364)
இராமரை முன்னிறுத்தி, முன் மாதிரியாக கொண்டு, இந்தியா போன்ற பல மதம் மற்றும் நம்பிக்கைகளை கொண்டுள்ள நாட்டின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பது பற்றி காந்தியடிகளுக்கு ஆழமான புரிதலும், அதனால் ஏற்படும் சிக்கல்கள் பற்றியும் அறியாதவரில்லை. அதே போல பிரிட்டிஷ்காரர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு, நூறாண்டுகளாக இந்து- இசுலாமிய வேற்றுமையை கணக்கில் கொண்டு, அவர் மிகுந்த எச்சரிக்கையோடு கோவில்களுக்கோ, மசூதிகளுக்கோ, தேவாலயங்களுக்கோ போவதை முற்றிலுமாக தவிர்த்தார்!ஆனாலும், தான் பிறந்த மதத்தின் பாரம்பரியங்களை பின்பற்றி வந்தார்.
1929 ஆம் ஆண்டு போபாலில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் தன் நிலையை மிக தெளிவாக எடுத்துரைத்தார்.
நான் இந்தியாவில் “ இராம ராஜ்ஜியம்” அமைய வேண்டும் என்று சொல்வதை தவறாக எண்ணும் இசுலாமிய நண்பர்களுக்கு எச்சரிக்கிறேன். நான், இராம ராஜ்ஜியம் என சொல்வது ‘இந்து ராஜ்ஜியம்’ இல்லை. மாறாக, ‘கடவுளின் ராஜ்ஜியம்’, ‘ஆன்மீக ராஜ்ஜியம்’. என்னை பொறுத்தவரையில் இராமரும், ரஹீமும் ஒரே கடவுளர் தான். வேறு வேறு இல்லை. நான் ஏற்றுக் கொள்ளும் ஒற்றை கடவுள், “ சரியான பாதையில் செல்லும், உண்மையின் உருவமாக இருக்கும் கடவுள் மட்டுமே.
காந்திஜி அரசியலிலும், பொது வாழ்விலும் முன்னிறுத்திய கடவுள் அது ஒன்று மட்டுமே.
”என்னுடைய கற்பனை உருவமான இராமர் இவ்வுலகில் வாழ்ந்தாரா? இல்லையா? என நான் அறியேன். ஆனால் “இராம ராஜ்ஜியம்” என்பது ஒரு சாதாரண குடிமகனுக்கு எவ்வித விரிவான ஏற்பாடுகளும், செலவும் இல்லாமல், நீதி கிடைத்திட வேண்டும். சிறு பிராணியான நாய்க்கு கூட இராம ராஜ்ஜியத்தில் நீதி கிடைத்தாகச் சொல்வார்கள் ..! அந்த மாதிரியான உயர்ந்த பட்ச ஜனநாயக மாண்புகளை கொண்ட ஒரு அரசு அமையவே நான் விரும்புகிறேன்” என காந்திஜி எழுதினார்.
மாறியுள்ள இன்றைய நிலை;
இன்றைய சூழலில் காந்திஜியின் இராம ராஜ்ஜியம், இராம நாமம் பற்றிய புரிதலை நாம் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. மதங்களை வைத்து, அரசியல் செய்வதற்கு நேர் எதிராக உறுதியாக நின்றவர் மகாத்மா.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, இன்று எழுப்பப்பட்டுள்ள இராமர் கோவிலின் கும்பாபிஷேகத்தையொட்டி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி இந்தியாவின் பிரதமர் எல்லோருக்கும் நல் வாழ்த்துக்களையும், நல்லெண்ணங்களையும் பகிர்ந்திருக்க வேண்டும். ஆனால், அது அப்படி நடக்கவில்லை.
பல்வேறு மதங்களையும், கலாச்சாரங்களையும் தன்னகத்தே கொண்ட இந்தியாவின் பிரதமர் தன் மதத்தை மட்டுமே முன்னிறுத்தி கொண்டு , ஒரு மதத்தை மட்டும் சார்ந்து, நடந்து கொண்டது நாட்டிற்கு நல்லதல்ல.
மிக கோலகலமாக கொண்டாடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள அந்த கோவிலில் நிச்சயமாக காந்தியின் இராமர் இருப்பதற்கான வாய்ப்பில்லை.
கட்டுரையாளர்; சுதர்ஷன் ஐயங்கார்
தமிழாக்கம்; சிவகுரு நடராஜன்
நன்றி ; ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ்
Excellent article that vouches the secular ethos of our country. Thanks a lot.