ஊடகப் பெண் போராளியின் ஓய்வறியா போராட்டம்!

- பீட்டர் துரைராஜ்

ஒரு யூ டியூப் ஊடகத்தை நடத்தும் ஒர் சுயாதீனப் பெண் பத்திரிகையாளரின் சமூக அக்கறையும், மனித நேயமும் தான் படத்தின் கரு. சினிமாத் தனங்கள் இல்லாத யதார்த்தமான படம். மற்றவர்கள் படும் இன்னல்கள், இம்சைகளை கண்டும் காணாமல் கடந்து செல்லும் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கி செயல்படத் தூண்டும் படம்..!

அரசு ஆதரவோடு நடந்துவரும் ஒரு இளம்பெண்கள் இல்லத்தில் நடந்துவரும் பாலியல் அத்துமீறல்களையும், கொடுமைகளையும்  வெளிக் கொணரும் படம் Bhakshak. காணொளி ஊடகம்  நடத்தி வரும் ஒரு பத்திரிகையாளர், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த முற்படுவது தான் கதை.

ஒரு சிறிய நகரம், அதில் பெரிய பின்புலமில்லாத எளிய குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண். அவள் தன் ஊடகத் தொழிலை உள்ளார்ந்து நேசிக்கிறாள்! அதன் மூலம் இந்த சமூகத்திற்கு சிறிய அளவிலேனும் நன்மை செய்ய முடியாதா? என்ற துடிப்பே அவளை இயக்குகிறது. ஒரு சுமாரான கேமரா. ஒரு கேமிரா மேன், பயணிக்க சிறிய வேன். இவ்வளவே அவள் பலம். மேலும், பயன்படுத்தப்படும் சாதனங்களும் சுமார் ரகமே!. பார்வையாளர்களும் அதிகம் இல்லை. ஆனாலும் நல்ல செய்திகளைத் தருகிறாள். ஒரு காணொளி ஊடகத்தை சொந்தமாகத் தொடங்க வேண்டும் என்பது அவளுடைய குறிக்கோள்.

வைசாலியின் கணவன் ஒரு அரசாங்க ஊழியன். சராசரியான  கணவன். காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் தான். தனியாக காணொளி ஊடகத்தை ஆரம்பித்த பிறகு, குழந்தை பெற்றுக் கொள்வது என்ற முடிவோடு இருக்கிறார்கள். இது கதையின் தொடக்கம்.


அரசாங்க ஆதரவோடு நடக்கும் விடுதியில், இளம் பெண்கள் சரி வர நடத்தப்படுவதில்லை என்ற ஒரு தகவல் அவளுக்கு கிடைக்கிறது. அந்த விடுதியை படம் எடுக்கக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. இதனை செய்தியாக்குகிறார். பிரச்சினை கொஞ்சமாக வெளிவருகிறது.

போஸ்கோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி, நீங்கள் சொல்லும் ஆய்வறிக்கை எனக்கு வரவில்லை என்கிறார். அதிகாரப்பூர்வமாக அறிக்கை வராமல் நான் எதுவும் செய்ய முடியாது என்கிறார். மற்ற ஊடகங்கள் இதனைக்  கண்டுகொள்ளவில்லை. அந்த விடுதிக்குள் யாரும் போகமுடியாது. ஆனால் அங்கு பெண்களுக்கு கொடுமை இழைக்கப்பட்டு வருகிறது; குழந்தைகள் காணாமல் போகிறார்கள்; தைப் பற்றி கேட்க ஆளிள்ளாத அனாதைகள்.  செய்தி வெளியே வந்தால்தான் அந்தப் பெண்களைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை இருக்கிறது. பார்வையாளர்கள் அதிகம் இல்லாத காணொளிப் பதிவை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனாலும், வைசாலி புகைப்படக்காரருடன் தொடர்ந்து செயல்படுகிறார்.

பூமி பட்னேகர் என்ற நடிகை வைசாலி என்ற ஊடகவியலாளராக அற்புதமாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் ஏதோ ஒரு செய்தியாக எடுக்கத் தொடங்கி, ஒரு கட்டத்தில் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்கிற உறுதி எடுக்கிறாள். முடிச்சுகள் ஒன்றோடு ஒன்றாகப் பின்னப்பட்டுள்ளன. குழந்தைகள் நலத் துறை எங்களுக்கு அறிக்கை வரவில்லை என்கிறது. காவல்துறை ஆதாரம் இல்லை என்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் சொல்ல முடியாது. பெரிய ஊடகங்களுக்கு இது  செய்தியே இல்லை. குற்றவாளி வீட்டு வைபத்திற்கு முதலமைச்சரே வரும் அளவுக்கு குற்றவாளி அரசியல் செல்வாக்குமிக்கவன்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல்துறை கண்காணிப்பாளர் உதவி செய்ய முற்படுகிறாள். ஆனால் அவளை ‘நீ பதவியேற்ற பிறகு எல்லாரும் ஹெல்மெட் போடுகிறார்கள். அடுத்ததாக சீட்பெல்ட் இல்லாமல் யாரும் செல்லக்கூடாது என்ற நிலையை நீ ஏற்படுத்த வேண்டும்’ என அவளுடைய உயரதிகாரி சொல்கிறார். ‘ஒரு புறத்தில் அதிகாரத்தை கொடுத்து, மறுபுறத்தில் அதிகாரத்தை பறிக்கும் அமைப்பு இது’. என்று தனது கையறு நிலையை அந்த அதிகாரி வைசாலியிடம் கூறுகிறாள். சாட்சி இருந்தால், ஆதாரம் இருந்தால் தன்னால் உதவ முடியும் என்கிறாள்.

இவளது கணவன் மிரட்டப்படுகிறான். குடும்பத்தினர் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். தாக்கியவர்களின் பெயர் இல்லாமல் முதல் தகவல் அறிக்கையை காவல் துறையினர் பதிவுசெய்கிறார்கள்.

புகைப்படக்காரராக சஞ்சை மிஸ்ரா நடித்துள்ளார். இவர்தான் அந்த ஊடகத்தின் உரிமையாளர். கதாநாயகிக்கு அடுத்த முக்கியமான பாத்திரம்.சிறந்த துணை நடிகருக்கான விருது இவருக்கு கிடைக்கலாம். இதில் வில்லன், பெண் காவல் அதிகாரி, கணவன், அவருடைய அண்ணன்- அண்ணி என அனைவரின் நடிப்பும் இயல்பாக உள்ளது.

வைசாலியும் நாள் முழுவதும் பணிபுரிந்து தான் இரவு வீட்டிற்கு வருகிறாள். அவளுக்கு முன்பாக அவள் கணவன் வீட்டிற்கு வந்தாலும் வைசாலி தான் சமைக்க வேண்டும். பெண்கள் எதிர்கொள்ளும் யதார்த்தமான சம்பவங்கள் வருகின்றன. படம் நாடக பாணியில் செல்கிறது. மிகையான சம்பவங்கள் இல்லை. மிகையான வசனங்கள் இல்லை. எளிமையான காட்சிகள்.

வைசாலியின்  மைத்துனன் ஒரு வழக்கறிஞர். ”இதையெல்லாம் நீதான் செய்ய வேண்டுமா ! விடுதியை ஆய்வு செய்த அறிக்கை மீது நடவடிக்கை இல்லை என்று ஒரு பொதுநல வழக்குப் போடவேண்டியதுதானே” என்கிறான். ”நீங்கள் வழக்கறிஞராக இருக்கிறீர்களா ?” என்று இவள் எதிர் கேள்வி கேட்கிறாள். ”கிடைத்ததை சாப்பிட்டு விட்டு தூங்குவது தான் நமது வேலையா? கிடைப்பதையெல்லாம் சாப்பிடும் விலங்குகளா நாம்?” எனக் கேள்வி கேட்கிறாள்!  இது தான் இந்தப் படத்தின் பெயர்க் காரணம். ‘பக்‌ஷாக்’ என்றால், ‘அதீத வேட்கையோடு உண்பவர்’ என்பது பொருள்.

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், இப்படத்தை புல்கிட் என்பவர் இயக்கியுள்ளார். சினிமாத் தனம் இல்லை. மிகையான வசனங்கள் இல்லை. இரண்டு மணிநேரமும் கதை எதார்த்தமாகப் பயணிக்கிறது. நெட்பிளிக்சில் இந்தப் படம் ஓடுகிறது.  தன்னை ஒரு செயற்பாட்டாளர் என்று சொல்லிக் கொள்ளும் பூமி பட்னேகருக்கு இது முக்கியமான படமாக இருக்கும். எளிமையும் யதார்த்தமும் எப்போதும் அழகு தானே !

விமர்சனம்; பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time