அரசுத் துறைகளில் கலவரப்படுத்தும் காலி பணியிடங்கள்!

-சாவித்திரி கண்ணன்

வரலாறு காணாத வகையில் தமிழ்நாட்டில் பல்வேறு அரசுத் துறைகளில் 40 விழுக்காட்டிற்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன ! சுமார் 6,00000 பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன! அவுட்சோர்ஸ், காண்டிராக்ட், தற்காலிக பணி என்பதாக அரசு பணிகளில் அத்துக்கூலி முறையை அமல்படுத்தும் தமிழக அரசு;

அரசுத் துறைகளுக்கு ஆள் எடுத்துத் தரும் போட்டித் தேர்வுகளை, துறை ரீதியான தேர்வுகளை நடத்துகின்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமே முடங்கிக் கிடக்கிறது. இதில் தலைவர் உட்பட பல உறுப்பினர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த இடத்திலேயே அதுஅதற்கான பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், அதிகாரிகள் கிடையாது.. என்றால், தமிழ்நாட்டு அரசின் பேரவலத்திற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை.

நாடாளுமன்றத் தேர்தல் வருவதை கவனத்தில் கொண்டு, ”முதலமைச்சர் ஸ்டாலின் வரும் இரண்டாண்டுகளில் 50,000 பணியிடங்கள் நிரப்படும்” எனத் தெரிவித்துள்ளார். அதே போல முடங்கி இருந்த டி.என்.பி.எஸ்சிக்கு ஐந்து உறுப்பினர் நியமனத்தை அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டரசின் தலைமையகமாக உள்ள தலைமைச் செயலகத்திலேயே சுமார் 1,200 பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. துறைச் செயலாளர்கள், உதவிச் செயலாளர்கள், டைப்பிஸ்ட், கிளார்க் உள்ளிட்ட பல பொறுப்புகளுக்கு ஆட்கள் இன்றி ‘பைல்கள்’ தேங்கிக் கிடக்கின்றன. பணிகள் ஆமை போல நடக்கின்றன!

பரிதாப நிலையில் பள்ளிக் கல்வித் துறை

பள்ளிக் கல்வித் துறையில் சுமார் ஓரு லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்படாமல் உள்ளன. தற்காலிக ஆசிரியர்கள் நியமனம், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் மலிவான ஊதியத்திற்கு ஆசிரியர்களை நியமித்து ஒப்பேற்றுவது.. என்பது தொடர்கிறது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தேர்வுகளை நடத்தவோ, நடத்திய தேர்வின் வினாத்தாள்களை திருத்தவோ முடியாத நிலை தோன்றியுள்ளது.  அந்த அளவுக்கு பணியாளர் பற்றாக் குறை நிலவுகிறது. தேர்வுகள் நடக்கும் சமயத்தில் வெளிமுகமை மூலமாக அவசரவசரமாக ஊழியர்களை தருவிப்பது ஏற்கத்தக்கதல்ல. உயர் கல்வித் துறையில் அரசு கல்லூரிகளிலும், பல்கலைக் கழங்களிலும் பேராசிரியர் பணி இடங்கள் ஆயிரக்கணக்கில் நிரப்பப்படாமல் உள்ளன. அத்துக் கூலிகளாக பேராசிரியர்களையே அடிமாட்டுக் கூலிக்கு நியமிக்கும் அவலத்தை என்னென்பது?

தலைமை ஆசிரியர் பற்றாக்குறையால் ஆயிரக்கணக்கில் அரசு பள்ளிகள் தள்ளாடுகின்றன. ஓராசிரியர், ஈராசியரைக் கொண்டு செயல்படும் அவலம் இன்றைக்கும் நிலவுகிறது. அந்தந்த துறைக்கான ஆசிரியர்கள் இல்லாத நிலையில் மாணவர்கள் நிலை திண்டாட்டமாகிறது. இருக்கும் சொற்ப ஆசிரியர்களையும் வெவ்வேறு பணிகளுக்கு திசை திருப்பும் அவலமும் நடக்கின்றது. பள்ளிக் கல்வித் துறை உண்மையிலேயே கதி கலங்கிக் கிடக்கின்றது. வருங்காலத் தலைமுறையை வளர்த்தெடுப்பதில் அரசு காட்டும் அலட்சியம் ஏற்கவொண்ணாதது.

நிர்கதியான நிலையில் நீதிமன்றங்கள்:

நாட்டின் உச்சபட்ச அமைப்பான நீதித் துறையையே தள்ளாட வைத்துள்ளது தமிழக அரசு! கீழமை நீதிமன்றங்களில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காலிப் பணியிடங்கள் எண்ணிக்கையால், நீதித்துறையின் அன்றாட நிர்வாகப் பணிகளில், பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட உரிமையியல், கூடுதல், உதவி அமர்வு நீதிமன்றங்கள் மற்றும் சிறப்பு நீதிமன்றங்களில், உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், தட்டச்சர், பென்ச் கிளார்க், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பொறுப்புகளில் பல்லாயிரம் காலிப் பணியிடங்கள் காலியாக உள்ளதால் நீதிமன்றப் பணிகள் ஸ்தம்பிக்கின்றன!

அணைந்து போகத் துடிக்கும் மின்சாரத் துறை;

தமிழகத்தின் மின்துறை மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்ந்தது ஒரு காலம். ஆனால், தமிழக அரசு, தானே மின்சாரம் உற்பத்தி செய்து விநியோகித்த வரை மட்டுமே கடன் இல்லாமல் கம்பீரமாக ஒளிவீசி பிரகாசித்தது. கடந்த இருபதாண்டுக்கு முன்பு, தமிழ்க மின்சாரத் துறை தனியாரிடம் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரக் கொள்முதலை ஆரம்பித்தது. இதில் கிடைக்கும் கமிஷன், கையூட்டு ஆட்சியாளர்களுக்கு பெரும் போதையை ஏற்படுத்தியது. அதிலும் அதானி  போன்ற பெருநிறுவனங்கள் மின் தயாரிப்பில் இறங்கியதும், ஊழல், முறைகேடுகள் உச்சத்திற்கு சென்றன. இதன் விளைவாக இன்றைக்கு தமிழக மின்சார வாரியம் சுமார் 2 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது.

இதனால், மேன்மேலும் மின்வாரியத்தை பிளந்து தனியார்மயமாக்கும் முயற்சிகள் தான் நடக்கிறதே அல்லாது, ஒரு சுய பரிசீலனைக்கே ஆட்சியாளர்கள் தயாரில்லை. அந்த வகையில் தற்போது தமிழக மின்வாரியத்தில் 58,000 ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. ஹெல்ப்பர் எனப்படும் உதவியாளர்கள், வையர் மேன், கேங் மேன், போர் மேன் போன்ற பதவிகளில் தேவையான ஊழியர்களை நியமிக்காத நிலை உள்ளது. இதனால் பழுதுகள் ஏற்பட்டு, மின் தடை உருவாகும் போது பழுதுபார்க்க ஆள் வருவது காலதாமதமாகிறது. இதிலும், ஒப்பந்த முறையில் சொற்ப ஊதியத்தில் ஆண்டுக்கணக்கில் ஊழியர்கள் வேலை வாங்கப்படும் அவலம் நிலவுகிறது. அனுபவமில்லாத ஊழியர்கள் மின் பழுதை பார்க்கும் போது ஷாக்கடித்து இறக்கும் கொடுமைகளை கண்டும் காணாமல் சர்வசாதரணமாக கடந்து போகிறது தமிழக மின்வாரியம்.

தள்ளாடும் போக்குவரத்துக் கழகங்கள்;

போக்குவரத்துக் கழகங்களில் 24 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. ஓய்வு பெறும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பணியிடங்கள் ஒவ்வொரு ஆண்டும் நான்காயிரம் ஏற்படுகிறது. அவை அப்படியே விடப்படுகின்றன! அவுட்சோர்சிங் முறையில் ஒப்பந்தக் கூலிகளாக டிரைவர்கள் இயங்க நிர்பந்திக்கப் படுகிறார்கள். இந்த இரண்டரையாண்டுகளில் பணியில் இருக்கும் போதே இறந்த ஆயிரம் தொழிலாளர்களின் வாரிசுகள் மட்டுமே வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக சென்னையில் மட்டும் 900 அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இதனால், மக்களுக்கான சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் நடத்தும் பொராட்டங்களெ சாட்சி! புதிய பேருந்துகளுக்கு முதலீடு செய்கிறார்கள்! புதிய பேருந்து நிலையத்தை பிரம்மாண்டமாக எழுப்ப பல நூறு கோடி செலவிக்கிறார்கள்! ஆனால், அதற்கான பலன்கள் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால், அங்கு மானுட சக்தி தேவை என்பதை மட்டும் ஏனோ உதாசீனப்படுத்துகிறார்கள்!  போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வைப்பு நிதி, காப்பீட்டு நிதி உள்ளிட்டவற்றிலிருந்து ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் அரசு எடுத்து தான்தோன்றித் தனமாக செலவழித்துவிட்டது. ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 90 மாதங்களுக்கு மேலாக வழங்க வேண்டிய பஞ்சப்படி இதுவரை வழங்கப்படாத நிலையில், அவர்களின் குடும்பங்கள் சொல்லொண்ணா துயரத்தை அனுபவிக்கின்றனர்.

விழிபிதுங்கும் மருத்துவமனைகள்;

மருத்துவத் துறை என்ற சுகாதாரத் துறையை எடுத்துக் கொண்டால், தமிழகத்தில் மொத்தம் 330 அரசு மருத்துவமனைகள் உள்ளன. இது தவிர 18 மாவட்டத் தலைமை மருத்துவமனை எனப்படும் பெரிய ஆஸ்பத்திரிகள் உள்ளன! 2,748 ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளன. இவை 26,61,000 வெளி நோயாளிகளையும், 11,27,000 உள் நோயாளிகளையும் எதிர் கொள்கின்றன. ஆனால், இருப்பதோ சுமார் 19,000 மருத்துவர்கள் தாம். தேவைப்படுவதோ, 47,000 மருத்துவர்கள்!

இதே போல செவிலியர்கள் எண்ணிக்கை வெறும் 38, 000 மட்டுமே உள்ளது. எட்டு படுக்கைக்கு ஒரு செவிலியர் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், 32 படுக்கைக்கு ஒரு செவிலியர் இருப்பதால், சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது, சுமார் 1,90,000 செவிலியர்கள் தேவைப்படும் இடத்தில் ஐந்தில் ஒரு பங்கே இருக்கிறார்கள். அதே போல கடை நிலை ஊழியர்கள் இரண்டு லட்சம் பேர் இருக்க வேண்டிய இடத்தில் 60,000 தான் இருக்கிறார்கள்!

இந்த லட்சணத்தில் புதுப்புது மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் கட்டி எழுப்பபடுகின்றன. மகிழ்ச்சி. ஆனால், அதற்கேற்ப மருத்துவ பணியாளர்கள் எண்ணிக்கை இல்லையே! மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் இல்லாமல் அரசு மருத்துவமனைகள் திணறுகின்றன. இப்படியாக உயிர்காக்கும் மருத்துவமனைகளையே ஊசலாட்டத்தில் வைத்துள்ளது தமிழக அரசு.

கதிகலங்கி நிற்கும் காவல்துறை;

சட்டம், ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவல்துறை பணிச் சுமையால் மிக மோசமான நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. இருக்கின்ற குறைந்தபட்ச காவலர்கள் விஐபி பாதுகாப்பு, கோயில் திருவிழா, அரசின் அன்றாட நிகழ்வுகள், நீதிமன்ற வழக்கிற்கான பணிகள், போராட்டங்கள், அடிதடிப் பிரச்சினை, கொலை,கொள்ளை என பல்வேறு நிலைகளில் பயணிப்பதால், காவல் நிலைய பணிகளில் புகார்அளிக்க வருபவர்களின் புகார்களை உரிய முறையில் விசாரிப்பது தொடங்கி, புகார்களை பெறுவது வரை பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன!

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகபட்சமாக 202 மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. ஆனால், தற்போது தமிழக காவல் துறையில் 20 சதவீதம் ஆள் பற்றாக்குறை உள்ளது. அதாவது, சுமார் 25,000 பணியிடங்கள் பற்றாகுறையாக உள்ளது. பணிச் சுமையால் காவலர்கள் அடிக்கடி தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் தொடர்கின்றன. இந்த நெருக்கடியிலும்  சுமார்  8 சதவிகிதம் போலீசார் உயர் அதிகாரிகள் வீட்டில் ஆர்டர்லியாக பணியாற்றக் கூடிய துர்பாக்கிய நிலையை ஒழிக்க முடியவில்லை.

இப்படி அரசுத் துறைகள் ஒவ்வொன்றாகப் பட்டியல் போட்டால், அனுமார் வாலைப் போல நீளும். மொத்தத்தில், பல துறைகளில் ஊழியர்கள் பற்றக்குறை இருப்பதால், மக்களுக்கு ஒருசில நாட்களில் வழங்கப்பட வேண்டிய சேவைகள், காலவரம்பின்றி இழுத்தடிக்கப்படுகின்றன. இந்த உண்மைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, ‘அரசு அலுவலகங்களில் பணிகள் தடைபடாமல் நடக்கின்றன..’ என்று கூறி, காலி பணியிடங்களை ரத்து செய்ய துடிக்கிறது தமிழக அரசு. இது மிகப் பெரிய அநீதி ஆகும்.

காலி பணியிடங்களை நிரப்பாமல் சமாளிப்பதே கொள்கையாம்!

‘தமிழக அரசுத் துறைகளில் 5 ஆண்டுகளுக்கும் மேல் நிரப்பப்படாமல் குறிப்பிட்ட பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அந்த பணியிடங்கள் இல்லாமலே, இருக்கும் ஊழியர்களை நிர்பந்தித்து வேலை எப்படியோ நடக்கின்றன எனும் போது, அந்த பணியிடத்தை நிரப்ப வேண்டியதில்லை’ என அரசு கருதுவது தான் வேதனையாகும்.

‘ஒரு பணியை ஐந்தாண்டுகளுக்கு மேல் நிரப்பாமலேயே, அந்த பணியிடம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்ற முடியும் என்றால், அத்தகைய பணியிடங்களை இனியும் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்பது தான் பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் ஏற்படுத்திச் சென்ற நிதித் துறையின் பார்வை ஆக உள்ளது.

ஜி.எஸ்.டி வருமானத்தின் வழியே மத்திய அரசு மாநிலங்களுக்கு கிடைத்து வந்த வரி வருவாயை அபகரித்துக் கொண்டது. அதற்கு இழப்பீடாக தர ஒத்துக் கொண்ட 20,000 கோடிகளை தராமல் ஏமாற்றுகிறது மத்திய அரசு என்பது மேற்படி பிரச்சினைகளுக்கு மறுக்க முடியாத காரணம்! அத்ற் சமயம் நிதி நிர்வாகத்தை தவறாகக் கையாள்வதாலும், ஊழல் முறைகேடுகளாலும் பெரும் பின்னடைவு ஏற்படுகிறது. ஓட்டு வேட்டைக்காக தேவைக்கும் அதிகமாக இலவசங்கள் வழங்குவது ஒரு பெரும் நிதிச் சுமையாகிறது! பள்ளிக் கல்வித் துறையில் மாணவர்களுக்கு 14 விதமான இலவசங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், தரமான கல்விக்கு அவசியமான ஆசிரியர் நியமனத்தில் மட்டும் ஆர்வம் காட்ட மறுக்கிறார்கள்! இதில் எது அத்தியாவசியம் என முடிவெடுக்க வேண்டும்.

மதிய உணவில் வழங்கப்படும் முட்டையில் மட்டும் ஒவ்வொரு முட்டைக்கும் ஒன்றேகால் ரூபாய் கமிசன் அடிக்கிறார் துறையின் அமைச்சர்! ஒவ்வொரு நாளும் 80,000 முட்டைகள் எனில், ஓராண்டுக்கு எவ்வளவு பணம் கொள்ளை போகிறது எனப் பார்த்தால் மலைப்பே மிஞ்சுகிறது! மணல் குவாரிகள் மூலமான லாபம் அரசைவிட ஆட்சியாளர்களுக்கும், காண்டிராக்டர்களுக்குமே கிடைக்கிறது. டாஸ்மாக் விற்பனையிலும் கூட இதுவே நிலை.  இப்படி ஒவ்வொரு நிர்வாகச் செயல்பாட்டிலும் , ஆட்சியாளர்களின் சுயநலம் ஒளிந்துள்ளது! ஊழல், முறைகேடுகள், கையூட்டுகளை களைய முடிந்தாலே கூட, பெருமளவு நிதி நிலைமை சீராகும். ஊழியர்கள் நியமனங்கள் நடந்தேறும்.

மானுட சக்தியை மதிக்காத எந்த அரசாலும் மக்கள் பணியை செவ்வனே செய்ய இயலாது. உழைப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்காத எந்த தலைமையும் வென்றதாக வரலாறில்லை. இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் மிகக் கீழ் நிலையில் உழைக்கும் பணியாளர்களை வைத்திருப்பது பேரவலமாகும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time