பறளியாற்றை வளமிக்க ஆறாக வைத்திருக்கும் காட்டாறுகள்!

- தமிழ்தாசன்

கன்னியாகுமரி மாவட்டம் மகேந்திரகிரி மலைத்தொடர்களின் தெற்கு சரிவில் தோன்றுகிறது பறளியாறு. கோதையாறு போல பழமையான பாசன கட்டுமானங்களை கொண்டது பறளியாறு. அதன் தொன்மை பற்றி அறியும் முன் பறளியாற்றை வளமிக்க ஆறாக வைத்திருக்கும் காட்டாறுகளை குறித்து அறிந்துக் கொள்வோம்.

வல்வன்கல் மலை, பாலமோர், மாறாமலை, வில்லுசாரிமலை, ஆலம்பாறை, வலியமலை, புறாவிளை, சாம்பகுச்சி, முடுவன்பொற்றை, இஞ்சிக்கடவு, கொட்டப்பாறை, கூவைக்காடுமலை, வெள்ளாம்பி உள்ளிட்ட மலைகளில் தோன்றும் ஊற்றுக்கள், ஓடைகள், காட்டாறுகள் பறளியாற்றை வளமிக்க ஆறாக வைத்திருக்கிறது. பெருஞ்சாணி அணை என்கிற பெரும்பள்ளத்தில் தேக்கிவைத்திருக்கும் பறளியாற்றில் பல காட்டாறுகள் வந்து சேருகின்றன. அவைகள் தோன்றும் இடங்கள் நோக்கி போக வேண்டும்.

மணலோடை

புறாவிளை, வில்லுசாரி, முடுவன்பொற்றை மலைப்பகுதியில் தோன்றுகிறது மணலோடை. ஆலம்பாறை, மணலோடை ஆகிய பகுதிகளை கடந்து பெருஞ்சாணி அணையின் மேற்கு முனையில் மணலோடை நீர் வந்து சேர்க்கிறது. பொற்றை என்றால் மலை அல்லது கரடு என்று பொருள். இன்று மலை என்று சொல்லப்படுகிற பல இடங்களை சாம்பகுச்சி பொற்றை, வில்லுசாரி பொற்றை என்றே காணி மக்கள் அழைத்து வந்துள்ளனர்.

ஆலங்கேசம் ஆறு

இஞ்சிக்கடவு மலையில் தோன்றி பெருஞ்சாணி அணையில் வந்து சேர்க்கிறது ஆலங்கேசம் ஆறு. ஆலம் என்ற சொல் நீரை குறிக்கும். கூந்தல் போல ஓடும் நீரை ஆலங்கேசம் என்ற பொருளில் அழைக்கின்றனர்.

காளிகேசம் ஆறு

காளிகேசம் ஆறு

பாலமோர் மலைப்பகுதியில் தோன்றுகிறது காளிகேசம் ஆறு. பாலமோர், கொடுமுடி கடந்து காளிகேசம் அருகே அருவியாக விழுந்து துவரங்காடு அருகே பெருஞ்சாணி அணையில் கலக்கிறது. அருவி கொண்ட காளிகேசம் குமரி மாவட்டத்தின் புகழ்பெற்ற ஓர் சுற்றுலா தலமாகும். கீரிப்பாறையில் இருந்து காளிகேசம் செல்லும் வழியில் காளிகேசம் ஆறு மலைகளை அறுத்து கொண்டு ஓடும் அழகை பார்க்க முடியும்.

காளிகேசம் அருவிக்கரையில் ஒரு காளியம்மன் கோவில் உள்ளது. காளியின் கேசம் (சடை) போல விழும் அருவி என்பதால் அப்பெயர் பெற்றது. காலமூட்டு தம்பிரான், அஞ்சுகூட்டான் தம்புரான், விட்டுக்காட்டு தம்புரான் இந்த மூன்றும்தான் இப்பகுதியில் வாழும் காணி மக்களின் குலதெய்வங்களாக குறிப்பிடுகின்றனர்.

எருமை கயத்தாறு

பெரும் நீர்ச்சுழியை ஏற்படுத்தக்கூடிய வெள்ளம் பாயும் ஆழமான பள்ளங்களை கயம் என்று காணி மக்கள் குறிப்பிடுகின்றனர். மாறாமலை மலைப்பகுதியில் தோன்றுகிறது எருமை கயத்தாறு. எருமை கயம் என்ற இடத்தில் அருவியாக விழுந்து கீரிப்பாறை அருகே சிற்றாறுடன் கலந்து பெருஞ்சாணி அணையை அடைகிறது. இதனை மாசிபட்டி ஆறு என்று ஆவணங்கள் கூறுகிறது. அப்பகுதியில் வாழும் காணி பழங்குடி மக்கள் இதனை எருமை கயத்தாறு என்கின்றனர். அருவியாக விழும் இடத்தை வட்டப்பாறை அருவி என்று அழைக்கின்றனர். வட்டப்பாறை அருவியில் உயிரிழப்புகள் நடந்ததை தொடர்ந்து இவ்விடத்தில் குளிக்க தமிழ்நாடு வனத்துறை தடை விதித்துள்ளது.

குண்டாறு / பாம்பாறு / சிற்றாறு

அசம்புமலை வனப்பகுதியில் இருந்தும் சாம்பக்குச்சி மலையில் இருந்தும் குண்டாறு, சிற்றாறு, பாம்பாறு, உள்ளிட்ட மூன்று காட்டாறுகள் தோன்றுகிறது. கீரிப்பாறை அருகே இம்மூன்று ஆறுகளும் எருமை கயத்தாற்றுடன் இணைந்து பெருஞ்சாணி அணையில் பறளியாற்று நீருடன் கலக்கிறது.

காணி மக்கள் இழந்த காட்டாற்று மீன்கள்

கல்லுக்கரும்பி அல்லது கல்லொற்றி என்று அழைக்கப்படும் கப்பறுந்தி மீன்கள் இன்று காட்டில் ஓடும் எந்த காட்டாறுகளிலும் காண முடியவில்லை. 30 வருடங்களுக்கு முன்பாக காட்டாறுகளில் இயல்பாக காணக்கூடிய பஞ்சலை, சேமென், விரால், கூதல், விரால், பெருமீனால் உள்ளிட்ட மீன் வகைகளை இன்று காண முடிவதில்லை. கூட்டம் கூட்டமாக வரும் கூதல் மீன்கள் அற்றுப் போய்விட்டது. ஏறக்குறைய இந்த மீன்களை எல்லாம் பார்த்து 20-30 வருடங்கள் ஆகிவிட்டது. ஆறுகளிலும், அணைகளிலும் காயல்களிலும் இன்று இருப்பது வளர்ப்பு மீன்கள்தான். முன்பிருந்த இயற்கையான நன்னீர் மீன்கள் இன்று கிடைப்பதில்லை என்கிறார்கள் காளிகேசம் பகுதிவாழ் காணி பழங்குடி மக்கள். உணவு தேவைக்கான மீன்கள் நிலை இவ்வாறு இருக்கிறதெனில், இதர நன்னீர் மீன்கள் மீன்கள், நீர்வாழ் உயிரிகளின் நிலை என்ன என்பதை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்.

சரி, மீண்டும் நீரோடும் வழித்தடங்கள் நோக்கி செல்வோம். மணலோடை, ஆலங்கேசம் ஆறு, காளிகேசம் ஆறு, எருமை கயத்தாறு, குண்டாறு, சிற்றாறு, பாம்பாறு உள்ளிட்ட காட்டாறுகள் பெருஞ்சாணி அணையில் வந்து சேர்க்கிறது. இந்த காட்டாறுகள் இணைந்து பறளியாறு என்ற பெயரில் மேற்கு நோக்கி ஓடுகிறது. பெருஞ்சாணி அணையை கடந்து செல்லும் பறளியாறு வழியில் காயல்கரை பாய்ச்சி என்ற காட்டாற்று நீரையும் பெறுகிறது.

பெருஞ்சிலம்பு ஓடை

வேளிமலையில் தோன்றும் பல்வேறு ஊற்றுகள் ஒன்று சேர்ந்து பெருஞ்சிலம்பு ஓடையை தோற்றுவிக்கிறது. பெருஞ்சிலம்பு தடுப்பணை கடந்து பெருஞ்சிலம்பு – குமராபுரத்திற்கு ஊர்களுக்கு இடையில் காயல்கரை பாய்ச்சியில் கலக்கிறது.

காயல்கரை பாய்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் பனிப்போதை மலைகளில் இருந்து பல்வேறு ஊற்றுகள் சேர்ந்து காயல்கரை பாய்ச்சியை உருவாக்கிறது. பொதுவாக நீர்வழித்தடங்களுக்கு ஆறு, ஓடை, பள்ளம், வாரி என பெயர் வைப்பது தமிழர் வழக்கம். ஆனால் இயற்கையான நீர்வழித்தடம் ஒன்று பாய்ச்சி என பெயர் பெயர் பெறுவது அரிதாக இருக்கிறது. பாய்ந்து வரும் புனலை பாய்ச்சி என இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.
பாய் புனல் (பரி 24: 74), பல் நீரால் பாய் புனல் பரந்து (கலி 34: 2), குன்று ஏறி புனல் பாயின் (புறம் 352:6) என்று பாய்ந்து வரும் புனல் பற்றி சங்க இலக்கிய பாடல்கள் குறிப்பிடுகிறது.

காயல்கரை பாய்ச்சி தண்ணீர் எருமப்பட்டி, பெருஞ்சிலம்பு, குமராபுரம், சித்திரங்கோடு கடந்து வலியாற்றுமுகம் அருகே பறளியாற்றில் கலக்கிறது. பறளியாறும் காயல்கரை பாய்ச்சியும் கூடும் வலியாற்றுமுகம் இயற்கை எழில் கொஞ்சம் அழகான பகுதியாகும். குமராபுரம் எழானைபொற்றை அருவி நீரும் காயல்கரை ஓடையில் வந்து சேர்கிறது. குலசேகரம் பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோயில் பங்குனி திருவாதிரை விழா ஆறாட்டு நிகழ்வும், முட்டைக்காடு கிருஷ்ணன் கோயில், சித்திரங்கோடு கிருஷ்ணன் கோயில் ஆறாட்டு நிகழ்வு மாசி மாதம் சிவராத்திரியன்று வலியாற்றுமுகத்தில் நடைபெறுகிறது. இப்பகுதியில் ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதியாக விளங்கும் மலைகள் கல்குவாரிகளால் அழிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் நடைபெறும் கல்குவாரிகளால் வலியாற்றுமுகம் குவாரி தூசி புகைகளால் புழுதி காடாக காட்சியளிக்கிறது.

பறளியாறு

மேற்சொன்ன ஓடைகள் காட்டாறுகள் எல்லாம் இணைந்து பறளியாற்றை பெருக்கெடுத்து ஓடச் செய்கிறது. பறளியாற்றின் குறுக்கே பெருஞ்சாணி அணை கட்டுவதற்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன் கி.பி. 1116 ஆம் ஆண்டு பாண்டிய மன்னன் பறளியாற்றின் குறுக்கே கட்டிய அணை பற்றிய கல்வெட்டு பாடல் தெரிவிக்கிறது. அக்கல்வெட்டு பறளியாறு என்றே குறிக்கிறது. பறளியாற்றில் இருந்து பழையாற்றுக்கு நீரை திருப்பிவிடும் நோக்கில் கட்டப்பட்ட இந்த அணையை பாண்டியன் அணை என்றும் தலையணை என்றும் அழைக்கப்பட்டது. பறளியாற்றில் இருந்து பழையாற்றை இணைக்க உயரமான பாறைக் குன்றுகளைக் குடைந்து சுமார் 2 மைல் நீளத்துக்குக் கால்வாய் வெட்டப்பட்டது. இரண்டு ஆறுகளை இணைக்கும் முதல் நதிநீர் இணைப்பு திட்டமாக இது கருதப்படுகிறது.

அதே போல கி.பி.1750-ம் ஆண்டு பாண்டியன் அணைக்குக் கீழே 460 மீட்டர் தள்ளி சரிவான பகுதியில் பறளியாற்றின் குறுக்கே 6 அடி முதல் 30 அடி வரை கற்சுவர்கள் எழுப்பப்பட்டு புதிய அணை திருவிதாங்கூர் மன்னர் முதலாம் மார்த்தாண்ட வர்மன் ஆட்சியில் கட்டப்பட்டது. அதுவே புத்தன் (புதிய) அணை.என்று அழைக்கப்படுகிறது. ஏற்கனவே இருந்த பாண்டியன் அணையின் தடுப்பணை ஒன்றை மேம்படுத்திக் கட்டப்பட்டதுதான் புத்தன் அணை என்று கூற்றும் நிலவுகிறது. புத்தன் அணையில் பத்மநாபபுரம் வரை கால்வாய் வெட்டப்பட்டு நீர் எடுத்து செல்லப்பட்டது. பாண்டியன் அணை, புத்தன் அணை அது கூறும் செய்தி பற்றி பழையாறு நோக்கி நாம் போகும் போது விரிவாக அறிந்து கொள்வோம். பாண்டியன் அணைக்கு மேலே பறளியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பெருஞ்சாணி அணைக்கு செல்வோம். பெருஞ்சாணி அணை கட்டும் பணிகள் 1948 இல் துவங்கப்பட்டு 1958 இல் முடிக்கப்பட்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜர் ஆட்சியில் திறக்கப்பட்டது.

ராதாபுரம் பகுதி பாசனம் பெற சிற்றாறு பட்டணம்கால் திட்டம் அமைக்கப்பட்டபோது கோதையாறு அணையின் தேக்க நீர்மட்ட உயரம் உயர்த்தப்பட்டது போல பெருஞ்சாணி அணையின் நீர்மட்டமும் 1972இல் உயர்த்தப்பட்டது. அரிதாக மேற்கு திசை நோக்கி ஓடும் தமிழ்நாட்டு ஆறுகளில் பறளியாறும் ஒன்று. பெருஞ்சாணி அணை கடந்து செல்லும் பறளியாறு – பொன்மனை, வலியாற்றுமுகம், அண்டுர், மலவிளை, அருவிக்கரை, திருவட்டாறு கடந்து மூவாற்றுமுகம் அருகே கோதையாற்றுடன் கலந்து குழித்துறையாறு என்ற பெயரில் கடலில் சென்று அரபிக் கலக்கிறது.

பறளியாறு அருவியாக விழும் இடத்தை அருவிக்கரை என்று அழைக்கின்றனர். அருவிக்கரை ஊர் சுற்றுலா செல்வபர்களுக்கான இடமாக திகழ்கிறது. குமரி மாவட்டத்தில் பறளியாற்றின் கரையில் உள்ளது திருவட்டாறு. இவ்வூரைச் சுற்றிப் பறளியாறு வளைந்து வட்டமாக ஒடுவதால் “வாட்டாறு” எனப் பெயர் பெற்றுது என்பர். இதுவே கி.பி.11-ஆம் நூற்றாண்டில் பிற்காலச் சோழர் காலத்திலிருந்து “திரு”எனும் அடைமொழி சேர்த்து “திருவாட்டாறு” என வழங்கப்பட்டு வருகிறது.

சங்க காலத்தில் குறுநில மன்னனாக இருந்த எழினி ஆதன் என்பவனின் ஆளுகைக்குட்பட்ட தலைமையிடமாக திருவட்டாறு இருந்ததாகப் “வள நீர் வாட்டாற்று எழினியாதன்” (புறம் 396: 13) என்று புறநானூற்றுப் பாடல் குறிக்கிறது. இங்குள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களுள் ஒன்றாகும். பத்மநாபபுரம் அரண்மனையைத் தலைமை இடமாகக்கொண்டு ஆட்சி புரிந்த திருவிதாங்கூர் மன்னரின் குல தெய்வமாக ஆதிகேசவப்பெருமாள் கோயில் விளங்கியது. கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் இவ்வூரையும், இறைவனையும் “மணிமாட வாட்டாற்றான் ”” எனத் தம் பாடலில் குறிக்கிறார். இக்கோயில் முன் மண்டபத்தில் முதலாம் குலோத்துங்க சோழனின் கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துண்டுக் கல்வெட்டொன்று பொறிக்கப்பட்டுள்ளது. இதுவே இக்கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் பழமையானதாகும் . கல்வெட்டுகள் இவ்வூரையும் இறைவனையும் ”திருவாட்டாற்றுப் பள்ளி கொண்டருளிய பெருமாள்” எனக் குறிக்கிறது.

பெருஞ்சாணி அணை கடந்து வரும் பறளியாறும் பேச்சிப்பாறை அணை கடந்து வரும் கோதையாறும் இணைந்து குழித்துறையாறு என்ற புதுப் பெயர் பெறுகிறது. கோதையாறும் பறளியாறும் கூடுமிடம் மூவாற்றுமுகம் என பெயர் பெறுகிறது. இருவேறு ஆறுகள் இணைந்து மூன்றாவது ஒரு முகம் பெறுகிறது அல்லது மூன்றாவதாக ஒரு ஆற்றை தோற்றுவிக்கிறது என்ற பொருளில் மூவாற்றுமுகம் என்று பெயர் வந்திருக்கலாம். திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதமும் ஐப்பசி மாதமும் பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவின்போது பறளியாறும் கோதையாறும் கூடும் மூவாற்றுமுகத்திலும், ஐப்பசி மாதத் திருவிழாவின்போது களியல் அருகே கோதையாற்றிலும் பெருமாள் திருமேனி நீராடி பக்தர்கள் முன்னிலையில் எழுந்தருளும் ஆறாட்டு நிகழ்வு நடைபெறுகிறது.பறளியாறும் கோதையாறும் இணைத்து குழித்துறையாறாக புதுப்பிறப்பெடுக்கிறது. இனி குழித்துறையாறு பற்றி அறிந்துக் கொள்வோம்.

முல்லையாறு

மூவாற்றுமுகம் கடந்து குழித்துறைக்கு ஊருக்கு செல்லும் முன்பு திக்குறிச்சி அருகே குழித்துறையாற்றில் வந்து கலக்கிறது முல்லையாறு. கன்னியாகுமரி மாவட்டம் ஐந்துளி மலையிலிருந்து தோன்றுகிறது முல்லையாறு. மலைக்கோடு, அண்டுகோடு, கடமக்கோடு, மேல்புறம் கடந்து திக்குறிச்சி அருகே குழித்துறையாற்றுடன் கலக்கிறது.

குழித்துறையாறு

கோதையாறும் பறளியாறும் இணைந்து மூவாற்றுமுகத்தில் பிறப்பெடுக்கிறது குழித்துரையாறு. சிதறால், ஆத்தூர், திக்குறிச்சி, குழித்துறை, அதங்கோடு, மாங்காடு, முஞ்சிறை, பருத்திக்கடவு, தேங்காய்பட்டினம் அருகே அரபிக்கடலில் கலக்கிறது. குழித்துறையாறு தாமிரபரணி ஆறு என்றே இப்போது அழைக்கப்படுகிறது.

குழித்துறை ஊர் தாமிரபரணியாற்றின் தென்கரையில் உள்ளது. குழித்துறை அஞ்சல் நிலையத்திற்கு அருகே பழைய வேணாட்டரசர் அரண்மனை ஒன்றும் , சத்திரமொன்றும் உள்ளது. இதனருகே ஒரே வளாகத்தில் பழமையான கி.பி.15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன்கோவில் ஒன்றும் பெருமாள் கோவிலொன்றும் உள்ளது. குழித்துறையாற்றின் கரையில் உள்ளது அதங்கோடு. சங்ககாலப் புலவன் அதங்கோட்டு ஆசான் பிறந்த ஊராகும் . இப்புலவன் சங்க காலப் பாண்டிய மன்னன் நிலந்தரு திருவிற் பாண்டியன் அவைக்களத்தில் இருந்ததைத் தொல்காப்பியம் குறிக்கிறது. இவ்வூரிலுள்ள சூரியமேடு என்ற இடத்தில் கிடைத்த குலுக்கையொன்றில் ரோமானியரின் ரெளலட்டட் அலங்கார வேலைப்பாடுகள் காணப்படுகிறது. சங்க காலத்தில் ரோமானியர்கள் அதங்கோட்டுடன் தொடர்பு கொண்டுள்ளனர். இதனோடு கூம்பு வடிவிலான அடிப்பகுதியைக் கொண்ட சிவப்பு வண்ண மட்கலயமொன்றும் கிடைத்துள்ளது. இக்குலுக்கை தானியம் சேமித்து வைக்கப் பயன்பட்டிருக்கலாம் . இக்குலுக்கையும் , மட்கலயமும் கி.பி.100-300க்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததாகும்.

குழித்துறையாறு (தாமிரபரணி) கடலில் கலக்கும் இடத்தின் கிழக்கு கரையில் உள்ளது தேங்காப்பட்டினம் ஊர். ஆய் மன்னர்கள் ஆண்ட தெங்கநாடு என்ற நாட்டுப் பிரிவில் இவ்வூர் இருந்துள்ளது. தெங்கநாடு என்ற சொல்லிலிருந்தே தற்போதைய பெயரான தேங்காப்பட்டினம் தோன்றியிருக்கலாம் . பண்டைக் காலத்தில் வணிகத் தொடர்புள்ள கடற்கரைப்பட்டினமாக இவ்வூர் இருந்துள்ளது. குறிப்பாக கி.பி. 15-16-ம் நூற்றாண்டில் தேங்காப்பட்டினத்துடன் அரேபியர்கள் வணிகத்தொடர்பு கொண்டிருந்தனர் . இங்கிருந்து பாம்புத்தோல், கருவாடு, சணல், சுறாமீனின் இறகு ஆகியன மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

ஆற்றுமணல் கொள்ளை, கழிவு நீர் கலப்பு, ஆக்கிரமிப்பு என குழித்துறையாறு பல பேரழிப்புகளை சந்தித்து வருகிறது. குழித்துறையாற்றின் நாடி பிடித்து பார்த்தல் அதில் ஏறக்குறைய பத்துக்கும் மேற்பட்ட ஆற்றுநரம்புகளின் துடிப்புகளை உணர முடியும்.

குமரி மக்களே வாங்க, அடுத்து வள்ளியாற்றின் நாடி பிடித்து பார்ப்போம்.

-கட்டுரையாளர் தமிழ்தாசன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time