தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக கட்சியினர் ஆறாண்டுகள் அடைந்த ஆதாயங்கள் கொஞ்சமா? நஞ்சமா? வருமான வரித்துறையை கட்டப் பஞ்சாயத்தாக மாற்றி, காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலையீடு! இது போல EVM தில்லு முல்லுகளை முன் கூட்டியே தடுக்குமா உச்ச நீதிமன்றம்..?
உச்சநீதி மன்றம் மோடி அரசின் தேர்தல் பத்திர சட்டங்கள், ”அரசியல் சாசன விதிகளுக்கு முரணானது, உள் நோக்கம் கொண்டது, வெளிப்படைத்தன்மை இல்லாத சட்டம். எனவே, இது செல்லாது” எனத் தீர்ப்பளித்தது.
இதையடுத்து, பாரதீய ஜனதா அரசின் ஏவல் பூதமாக மாற்றப்பட்டுள்ள வருமான வரித்துறை மூலம் எதிர் கட்சியான காங்கிரசின் வங்கி கணக்குகளை முடக்க பாஜக கும்பல் துணிந்துள்ளது.
2018-19 ஆம் ஆண்டிற்கான வருமானவரி தாக்கல் செய்வதற்கு 45 நாட்கள் தாமதம் நேர்ந்ததற்காக, 210 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது வருமான வரித்துறை. மொத்த கணக்கின் அளவே 14.5 லட்சம் ரூபாய் தான்! ஆனால், இவர்களின் அபராதத் தொகையோ 210 கோடி! அந்த தொகையை கைப்பற்ற காங்கிரசின் பல்வேறு வங்கி கணக்குகளையும் முடக்கி வைத்தது மோடி அரசு.
பொதுவாக வருமான வரி சமர்பிப்பதில் ஏற்படும் காலதாமதத்திற்கு அப்போதைக்கு அப்போதே அபராதக் கட்டணம் வாங்கிவிடுவார்கள். ஆனால், விசித்திரமாக சுமார் ஐந்தாண்டுகள் கடந்த நிலையில் கலவரப்படுத்தக் கூடிய ஒரு தொகையை அபராதமாக கட்டச் சொல்கின்றனர். இது, வருமான வரித்துறையா? அல்லது கட்டப் பஞ்சாயத்தா? இந்த கட்டப் பஞ்சாயத்தால் பொது வெளியிலும், மக்கள் முன்னும் அம்பலப்பட்டு, இறுதியில் உச்ச நீதி மன்றத்தில், அவமானப்பட்டு நிற்கும் பாஜக அரசு எப்பாடு பட்டும் எந்த மாபாதகச் செயலின் மூலமும், ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள பெரு முயற்சி செய்கிறது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் காங்கிரஸ் கட்சி செய்த 45 நாட்கள் தாமதத்திற்கு 210 கோடி அபராதமென்றால், அந்த அபராதத் தொகையை ஐந்து ஆண்டுகள் காலதாமதப்படுத்தி தேர்தல் நேரம் வரை காத்திருந்து, வங்கி கணக்குகளை உள் நோக்கத்துடன் முடக்கிய வருமான வரித் துறைக்கு என்ன அபராதம் விதிக்கலாம் என்பதையும் நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்.
”வருமான வரித்துறை அதனுடைய வேலையை செய்கிறது, ஆளுங்கட்சிக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்கிறது பா ஜ க . எல்லாமே சட்டப்படி நடப்பது போல் கூறுவது, ‘வெறும் பம்மாத்து வேலை’ என்பது இச்சட்டம் ஆளுங்கட்சியின் அத்துமீறல்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு எதிர்கட்சிகளின், மீது மட்டும் பாய்வது ஓர வஞ்சனை மட்டுமல்ல, அவை சட்டங்களை ஆயுதமாக்கி எதிர்கட்சிகளை முடக்குவது ஜனநாயக விரோதச் செயலாகும்.
தேர்தல் பத்திர சட்டங்கள் மூலம் இது வரை எதிர்கட்சிகளை முடக்கி வந்த மோடி அரசு, தற்போது ஐ.டி. சட்டங்கள் மூலம் தனது எண்ணத்தை எதிர்கட்சிகளை முடக்கும் நோக்கத்தை நிறைவேற்றி வருகிறது.
பணத்திற்கு அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் வல்லமை உள்ளதால், அதை திரட்டுவதில், எதிர் கட்சிகளை முடக்கி வைத்து தேர்தலில் வெற்றி பெற்று விட மோடி அரசு துடிக்கிறது.
ஒருபுறம் சட்டங்களை சீராக அமல் படுத்தாமல் , ஆளுங்கட்சி , எதிர்கட்சி வேண்டியவர், வேண்டாதவர் என பாரபட்சமாக அமல் செய்யப்படுகிறது. இவ்வாறு செய்வதன்மூலம் தன்னை எதிர்ப்பவர்கள் மீது சட்டத்தை ஏவி, அவர்களை அப்புறப்படுத்தும் மோடி, தன்னைச் சார்ந்த கயவர்கள் மீதும் , தாவி தன் பக்கம் வந்தவர்கள் மீதும் இச்சட்டங்கள் பாயாதவண்ணம் காப்பாற்றி வருகிறார்.சட்டங்களை ஆயுதமாக்கி ஏதேச்சதிகாரம் செய்கிறார்.
இதற்காகவே ஊழல் தடுப்பு சட்டம், , தகவல் உரிமை சட்டம், F C R A , U A P A, N I A , P M L A , C V C Act போன்ற சட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சி பி ஐ, வருமான வரித்துறை, இ.டி, என் ஐ ஏ போன்ற அமைப்புகள் மோடி அரசின் ஏவல் பூதங்களாக மாற்றப்பட்டுள்ளன. அவை, இன்று எதிர்கட்சி தலைவர்கள் மட்டுமல்ல, மாநில முதல்வர்களையும் அமைச்சர்களையும் கைது செய்து முடக்குவது நடந்து வருகிறது.
இந்த ஜனநாயகப் புதுமையை – குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமலேயே முதல்வர்களும், அமைச்சர்களும் சிறைவாசம் அனுபவிக்கும் நடைமுறையை – கொண்டு வந்ததில் பாஜக அரசுக்கு மட்டுமின்றி, அவற்றை தடுத்து நிறுத்தாமல் அனுமதித்த நீதி மன்றங்களுக்கும் பெரும்பங்கு உள்ளது. இதற்கு (உதவிய ) வழிகோலிய நீதிபதிகளுக்கு,அவர்கள் ஓய்வு பெற்றபின் வெகுமதியும் பாஜக அரசு கொடுத்துள்ளதை நாடறியும்.
இவ்வாறாக தாமதித்த நீதியும், நீர்த்துப் போன நீதியும் வளமையாகி விட்ட இந்த வேளையில், ”தேர்தல் பத்திரங்கள் சட்டம் அரசியல் நெறிகளுக்கு முரணானது” என தள்ளுபடி செய்த தீர்ப்பு நமக்கு சிறு நிம்மதியை கொடுத்துள்ளது. ஆனால், ஏழு வருடங்கள் கழித்து- உச்ச நீதி மன்றம் இச்சட்ட மசோதாவை எதிர்த்த பொது நலமனுவில் தீர்ப்பளிக்கிறது. 2017 ஆம் ஆண்டு இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததில் அக்டோபர் 3ந்தேதி ஒன்றிய அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது நீதிமன்றம்.
ஆனால், தற்போது தான் ”இச்சட்டங்கள் சட்டவிரோதமானவை” என உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டாலும், இந்த ஐந்தாறு ஆண்டுகளில் இச்சட்டங்கள் விளைவித்த முறைகேடுகளை, குறிப்பாக 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கும், பிறகு நடந்துள்ள பல மாநில தேர்தல்களுக்கும் இந்த பணத்தை பயன்படுத்தி ஆதாயம் அடைந்துவிட்டது குறித்த கேள்விக்கு உச்ச நீதிமன்றத்திடம் பதில் இல்லை.
ஏனெனில், இந்த இழுத்தடிப்பும் – காலந்தாழ்த்திய விசாரணையும், தீர்ப்பும் – பல கேள்விகளை எழுப்பியுள்ளன. நடந்தது எல்லாம் நல்லதற்கே , இனி எதிர்காலத்தில் இம் மோசடி சட்டங்கள் இருக்காது என பலரும் வாதிட்டாலும், அந்த “எதிர் காலம்” 2024க்குப் பிறகு, எப்படி இருக்கும் என யார் உத்தரவாதம் கொடுக்க இயலும்?
இப்போதைய ஆட்சியாளர்கள் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால் தேர்தலே இருக்குமா என்ற ஐயம் பலர் மனதில் எழுவது தவிர்க்க முடியாதது ஆகும்.
ஆனால் மோடி அரசு இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது? கடந்த கால அனுபவங்கள் நமக்கு உணர்த்துவதென்ன?
தேசீய நீதிநீதிபதிகள் நியமன சட்டத்தை (NJAC Act) நீதிமன்றம் நிராகரித்தபோது ,அண்மையில் புதுதில்லி நிருவாக சீரமைப்பு சட்டத்தையும், தேர்தல் ஆணையர் நியமன முறையையும் நீதிமன்றம் நிராகரித்த போது மோடி அரசு அத் தீர்ப்புகளை ஏற்றுக் கொண்டு தனது வழிமுறைகளை மாற்றிக் கொண்டதா?
இல்லை ! மாறாக அத்தீர்ப்புகள் நீர்த்துப்போக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தது,அடுத்து அவற்றிற்கெதிராக அவசர சட்டம் (ordinance) கொண்டுவந்ததை நாம் பார்த்துள்ளோம்..
தேர்தல் நடந்து அதில் மோடி தோற்றால், இத் தீர்ப்பு தேர்தல் களத்தில் அனைவருக்கும் சமநிலையை உருவாக்கும்.
ஆனால் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், இத்தீர்ப்பு சீரான ஜனநாயகத்திற்கு உதவுமா என்றால்…? இல்லை என்றே கூற வேண்டும். ஏனெனில், ஏற்கனவே மோசடி தேர்தல் பத்திரங்கள் மூலம் பல்லாயிரங்கோடி இருப்பு வைத்துள்ள பாஜக எங்கே?
210 கோடி அபராதம் கட்டமுடியாத நிலையில் முடக்கப்பட்டுள்ள காங்கிரசின் நிதி நிலை எங்கே?
பணபலத்தாலும், அதிகார பலத்தாலும் எட்டமுடியாத உச்சியில் இருக்கும் பாஜகவின் மோடி சமமற்ற தேர்தல்களத்தில் கோலியாத்து போல் நிற்கிறார்! எதிரணியின் ஒற்றுமையைக் குலைக்க , பலவீனப்படுத்த ஏவல் நாய்களான இ.டி., சி பி ஐ , ஐ.டி என்ஐஏ போன்ற துறைகளை வைத்துள்ளார்.
இந்து மதவெறியை தூண்டியும் வெறுப்பு அரசியலை பரப்பியும் அடையாள அரசியல் மூலம் தனது வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொள்ள முயலுகிறார்.
இத்தனை தகிடுத்ததங்களையும் மீறி மக்கள் வாக்களித்தால் அதை சமாளிக்க EVM எனப்படும் தேர்தல் வாக்குப் பதிவு எந்திரங்களை நம்பியுள்ளார் மோடி.
பல லட்சம் வாக்குபதிவு இயந்திரங்கள் கணக்கிற்கு வராமல் காணாமற்போன நிலையில், இயந்திரங்களை தயாரிக்கும் பி.இ.எல் என்ற நிறுவனத்தின் நிர்வாகமே பாரதீய ஜனதா கட்சி ஆட்களால் நிரப்பபட்ட வேளையில், ஏதோ ரகசிய திட்டம் பாஜக விடம் இருக்கிறது என்று பலரும் நம்பவுவதில் வியப்பில்லை.
இதற்கு ஒத்து ஊதுவது போல் மோடி 400 இடங்களை பிடிப்போம் என்பதும் , கோடி மீடியாக்கள் “கருத்து கணிப்புகள்” மூலம் மோடியை தூக்கி நிறுத்துவதும் நடந்து வருகிறது.
இத்தகைய தில்லுமுல்லுகளை முறியடிக்க, முறைகேடுகளை களைய உச்சநீதி மன்றத்திடம் ஒரு வழி உள்ளது.
நிலுவையில் உள்ள வாக்குபதிவு இயந்திரங்களின் நம்பகத் தன்மை குறித்த வழக்கில் தலையிட்டு ஒரு தீர்ப்பை வழங்க வேண்டும். ஏனென்றால், சண்டிகர் மாநகர மேயர் தேர்தலில் தேர்தல் அதிகாரி செய்த தில்லுமுல்லுவை உச்ச நீதிமன்றமே உஷ்ணமாகி கண்டித்துள்ளது. இந்திய வரலாற்றில் ஒரு தேர்தல் அதிகாரி இந்த அளவுக்கு கோர்ட்டில் அவமானப்பட்டது இதுவே முதல்முறை! இந்த அவலத்திற்கு காரணம், பாஜகவின் அராஜகப் போக்குகளே!
Also read
ஆகவே, அனைத்து தொகுதிகளிலும் VVPAT எனப்பட்ட வாக்காளர்களை சரிபார்த்த காகித தணிக்கை அடையாளச்சீட்டை முற்றிலும் எண்ணி சரி பாரத்த பிறகே, முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும்’ என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் உச்ச நீதி மன்றம்.
இல்லையெனில், ‘வாக்குப் பதிவு இயந்திர முறையைக் கைவிட்டு பழைய வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்துமாறு’ தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். இதைச் செய்தால், ‘கோமா நிலையில்’ இருக்கும் இந்திய ஐனநாயகம் உயிர் பிழைக்கும்.
இதைச் செய்ய உச்சநீதி மன்றம் முன் வருமா? வர வேண்டும்!
கட்டுரையாளர்; ச.அருணாசலம்
அறம் இணைய இதழ்
Leave a Reply