பிக்பாஸின் பின்னுள்ள அரசியல் என்ன?

சாவித்திரி கண்ணன்

பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது என்ன?

சினிமா,சீரியலுக்கும்,இதுக்கும் என்ன வேறுபாடு?

இது சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது

தனிமனிதர்கள் உளவியலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது..போன்ற கேள்விகளுக்கு நாம் சரியான விடையை கண்டுபிடித்துவிட்டால்…இந்த சமூகமும்,தனிமனிதர்களும் பல ஆபத்துகளில் இருந்து தப்பிக்கலாம்!

இந்த சமூகத்தை அதன் இயல்பிலிருந்து தடம்புரள வைத்து, தாங்கள் கட்டமைக்க விரும்பும் சமூக கலாச்சாரத்தை பரப்பும் கார்ப்பரேட்களின் நோக்கங்களில் ஒன்று தான் பிக்பாஸ்!

சினிமா,சீரியல் போன்றவை சில கற்பனை கதாபாத்திரங்களை உருவாக்கி,அதில் பொருந்தி  நடிக்கக் கூடிய நடிகர், நடிகர்களைக் தேர்வு செய்து உருவாக்கப்படும் கலை சார்ந்த ஒரு முயற்சியாகும். அதில் நல்ல கலைப்படைப்பு, நச்சுக் கலைப்படைப்பு என்ற பாகுபாட்டை நாம் உணர்ந்துள்ளோம்.

ஆனால், பிக்பாஸ் என்பது நிஜ மனிதர்களை நாடக மனிதர்களாக ஆக்குகிறது! அவர்களின் சொந்த வாழ்க்கையையே தன் சூதிற்கு விலைபேசிவிடுகிறது. இது தான் இருப்பதிலேயே ஆபத்தானதாகும்!

அவரவர் வாழ்க்கையிலிருந்தும்,அவரவர் அனுபவத்திலிருந்தும் பெறப்படும் அல்லது உணரப்படும் உள்ளார்ந்த ஞானத்தை,பாடத்தை ஒரு வர்த்தக சூதாட்டத்திற்காக செளகரியமாக திரித்து மாற்றி கட்டமைக்கும் கயமைத்தனம் கொண்டதாக இந்த நிகழ்ச்சி உள்ளது.

இந்த சமூகத்தில் எதையும் அதனதன் இயல்பான தன்மையில் யாரும் உணர்ந்துவிடாதபடிக்கு அதை திசைமாற்றிக் கொண்டு செல்லும் உத்தியோகமே ஊடக தர்மாக மாறிப்போன ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

இந்த சமூகத்தை அதன் மைய நீரோட்ட பிரச்சினைகளை உணரமுடியாதபடிக்கு ஒரு சில குறிப்பிட்ட நபர்களின் தனிப்பட்ட விருப்பு,வெறுப்பு சார்ந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த சமூகத்தின் மூக்கையும் நுழையச் செய்து, அடுத்தவர் அந்தரங்கங்களை அறிய எண்ணும் அற்ப அபிலாஷைகளுக்கு தீனிபோடும் கயமைத்தனமே பிக்பாஸ்!

இதற்குள் தன்னை பொருத்திக் கொள்ளக் கூடிய சீக்குப்படிந்த சிறுமையைச் செய்யும் கமலஹாசனை ’சிக்பாஸ்’ என்று அழைப்பதே பொருத்தமானதாகும்!

இந்த ’சிக்பாஸான’ கமலஹாசனின் அரசியல் நோக்கத்திற்கு விஜய் டிவிகாரர்கள் துணைபோக வேண்டிய அவசியம் என்ன? அப்படியானால், அயல் நாட்டு கார்ப்பரேட் முதலாளியான இதன் ஓனர் தமிழக அரசியலில் கமலை ஏன் நுழைக்க ஒத்துழைக்கிறார்? இதன் பின்னணியில் இருக்கும் திட்டங்கள் மற்றும் நபர்கள் யார்,யார்?

கமலஹாசன் என்பவர் அடிப்படையில் ஒரு வெளிப்படைத் தன்மையற்ற நபர். ரஜினிகாந்திடம் இருக்கும் குறைந்தபட்ச அறம் கூட அறவே இல்லாத ஒரு சுயநலவாதி! இவர் பொது வாழ்வுக்கு வரவேண்டும் யார் கேட்டார்கள்? சினிமா பிரபலம் என்பது அரசியலுக்கு தகுதியல்ல என்று சென்ற தேர்தலிலேயே இவருக்கு உணர்த்தப்பட்டுவிட்டது.

ஒற்றை மனிதனாக, தனக்கு அடுத்த நிலையில் கூட யாரும் அடையாளம் பெற்று விடமுடியாதபடிக்கு கட்சி நடத்தக்கூடிய ஒரே மனிதன் உலகத்திலேயே கமலஹாசனாக மட்டும் தான் இருக்க முடியும். எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா ஆகியோரிடம் கூட தான் என்ற அகங்காரம் இருந்தது என்பதை நாம் அறிவோம்.ஆனால்,அதெல்லாம் கமலஹாசனோடு ஒப்பிடும் போது கால்தூசுக்குச் சமானமாகும்! எம்.ஜி.ஆரிடம் கூட ஓரளவு ஜனநாயகப் பண்பு இருந்தது.அவர் கட்சியில் மூத்த தலைவர்களை மதித்தார், கலந்தாலோசித்தார்.தனக்கு அணுக்கமாக அவர்களை உணரவைத்தார். இது அண்ணாவின் தலைமையின் கீழ் இருந்தபோது அவர் ஒரளவேனும் பெற வாய்ப்பிருந்ததால் சாத்தியமானது.

கமலஹாசன், தான் நேர்மையான அரசியலை தர உள்ளதாக வெளித் தளத்தில் பேசுகிறார். ஆனால்,சென்ற தேர்தலின் போது டிடிவி தினகரன் கட்சியோடு கூட்டணி சேர பேரம் பேசினார்! அதே போல எஸ்.ஆர்.எம் முதலாளி பச்சைமுத்து கட்சிக்கு சீட்டு கொடுக்க நூறுகோடி கேட்டார். அப்படியானால் அவரது அரசியல் என்பது தான் என்ன? இப்போதும் தன்னை முதல்வராக ஏற்கும்படி ரஜினிகாந்திடமும்,சகாயத்திடமும் கேட்டு வருகிறார். ரஜினியும் சகாயமும் இது வரை தாங்கள் மக்களிடம் பெற்ற நற்பெயரை முற்றிலும் துறக்க விரும்பும் பட்சத்தில் தான் அது சாத்தியம்! கமலஹாசனோடு கைகோர்ப்பது தற்கொலைக்குச் சமம் என்று அவரை நன்கறிந்தவர்கள் அனைவருக்கும் என்னைவிட நன்றாகத் தெரியும் என்றாலும், கமலஹாசன் என்ற ஆபத்தை தொடர்ந்து எழுதிவர என்னைத் தவிர மற்றவர்கள் முன்வருவதில்லை என்பது தான் துரதிர்ஷடமாகும்! உண்மைகள் பெரும்பாலும் ஊமையாகவே அடைகாக்கப்படும் சமூகத்தில் உன்மத்தர்கள் உத்தமர் வேஷம் போடத்தான் செய்வார்கள்…!

கமலஹாசனின் அரசியல் கபட நாடகத்திற்கு கைகொடுக்க பிக்பாஸ் உதவுவதன் பின்னுள்ள உள்நோக்கங்களை அம்பலப்படுத்த வேண்டும்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time