வேளாண் பட்ஜெட்டா? வில்லங்க பட்ஜெட்டா?

-சாவித்திரி கண்ணன்

‘வேளாண்மைக்கான தனி பட்ஜெட் போட வேண்டிய தேவை என்பதே வேளாண் சார்ந்த உற்பத்தி நிறுவனங்களின் நிர்பந்தத்தின் விளைவே’ என இந்த பட்ஜெட்களே துல்லியமாக காட்டிக் கொடுத்து விடுகின்றன! பட்ஜெட்டின் ஒவ்வொரு நகர்வும், ஒவ்வொரு திட்டமும் வேளாண் துறையின் பெரு நிறுவனங்களை கருத்தில் கொண்டே உள்ளன..!

தமிழ்நாடு அரசு வேளாண்மைக்கான தனித்த பட்ஜெட் வெளியிடுவதற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவிக்கிறார்கள்! அதிலும், திமுக ஆட்சி தான் இதை அறிமுகப்படுத்தியது என்பதும், வேளாண்மைக்கென தனியாக 42,281.88 கோடிகள் ஒதுக்கி பட்ஜெட் போட்டுள்ளது விவசாயிகளின் மீதான அக்கறையைக் காட்டுவதாகவும் பரவலாக விமர்சனம் வைக்கப்படுகிறது.

திமுக அரசின் வேளாண்மைக்கான சமீபத்திய நான்கு பட்ஜெட்களையும் கவனமாகப் அவதானித்த வகையில், மேற்படியான விமர்சனங்கள் எவ்வளவு மேம்போக்கானவை என்ற கவலையே மேலோங்குகிறது.

அதே சமயம், ‘தாங்கள் முற்றிலும் அம்பலப்பட்டுவிடக் கூடாதே’ என்பதற்காகவும், பெருந்திரள் விவசாயிகளின் எண்ண ஓட்டத்திற்கு மதிப்பளித்தாக காட்டிக் கொள்ளவும், சில திட்டங்களும் உள்ளன!

எனவே, கடுமையான விமர்சனங்களை வைக்கும் முன்னர் சில பாராட்டத்தக்க அம்சங்களைச் சொல்லிவிடுவோம்.

# இயற்கை  வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது” வழங்க ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு,

# விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை கொள்முதல் செய்து விற்பனை செய்து தர 100 உழவர் அங்காடிகள் அமைத்தல்.

# இயற்கை விவசாயத்திற்கு என சில திட்டங்கள்! குறிப்பாக இயற்கை உரத் தயாரிப்பில் மண்புழு வளர்த்தல், பஞ்சகவ்யம் தயாரிக்கும் குழுக்கள் ஆகிய அம்சங்கள் வரவேற்புக்கு உரியன!

பட்ஜெட்டில் உள்ள சில வரிகளைப் படிக்கும் போது, ‘இன்னமும் அரசாங்கத்திற்கு விவசாயத்தை எப்படி பார்க்க வேண்டும் என்ற புரிதல் அறவே இல்லை’ என சொல்லி விடலாம். அதிக விளைச்சல், உயர் விளைச்சல், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி, இது இதற்கு இத்தனை கோடி ஒதுக்கீடு… என்ற சொல்லாடால்கள் சலிப்பை தருகின்றன.

சுதந்திரத்திற்கு முன்பு வரை, மன்னர்கள் ஆட்சி முதல் பிரிட்டிஷ் ஆட்சி வரையில் விவசாய விளை பொருட்களுக்கு வரி போட்டுத் தான் அரசாங்கங்களே இயங்கின! ஆனால், படித்த மேதாவி அதிகாரிகளால் இயக்கப்படுகின்ற தற்போதுள்ள அரசாங்கமோ, தன்னை விவசாயிகளுக்கு ஏதோ தானங்களும், சலுகைகளும் தந்து வாழவைக்கும் பரோபகாரி தோற்றத்தை உருவாக்கி ஏமாற்றுகின்றது!

ஒரு நேர்மையான அரசாங்கம் செய்ய வேண்டியது என்னவென்றால், விவசாயம் செய்வதற்கான உகந்த சூழலை உருவாக்கித் தருவது தானே அன்றி, வேறொன்றுமில்லை.

# விவசாய உற்பத்திக்கான தகுந்த நீர்மேலாண்மை நிர்வாகத்தை தருதலும்,

# விவசாய நிலப்பரப்பை பாதுகாத்தலும்,

# உற்பத்தியான தானியங்களை இயற்கை சீற்றங்களில் இருந்து காப்பாற்றித் தருவதும்,

# விவசாய உற்பத்தி பொருள்களுக்கு உரிய லாபத்தை விவசாயிகள் பெறுவதற்கு உத்திரவாதம் அளித்தலுமே,

ஒரு மக்கள் நல அரசின் தலையாய கடமையாகும். ஆனால், இந்த நான்கு அம்சங்களிலுமே மத்திய, மாநில அரசுகள் இரண்டும் படுதோல்வி அடைந்துள்ளன!

விவசாயத்தையும், விவசாயிகளையும் பெரு நிறுவனங்களைச் சார்ந்து இயங்கும்படி செய்வதற்கே இவர்களின் ஆட்சியும், பட்ஜெட்டுகளும் அமைந்துள்ளன! அதிகார வர்க்கம் என்பதே அதற்காகத் தான் இயங்குகிறது.

விவசாய வேலைகளுக்கு இயந்திரமயமாக்கலை ஊக்கப்படுத்துதல் என்பதும், அதற்கான ஏஜெண்டாக அரசே செயல்படுவதும் நல்லதல்ல. பெருந்திரளான விவசாயக் கூலிகளைக் கொண்ட தமிழ்  நாட்டில் விவசாய வேலைகளுக்கு  ஆள் கிடைக்கவில்லை என்ற சூழல் குறித்த மனம் திறந்த பரீசிலனைக்கு அரசு நிர்வாகம் தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும். மறுபுறம் 100 நாள் வேலை திட்டத்தை அதிகப்படுத்தக் கேட்பதும் இந்த கூலி விவசாயிகளே! ஆக, மனித உழைப்பை எப்படி விவசாய வளர்ச்சிக்கும், அவர்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்கும் எப்படி முறையாக கையாள்வது என்ற சவாலை ஏற்க மறுத்து, இயந்திரமயமாதலை வேகப்படுத்துவது நல்லதல்ல. இதுவும் கூட விவசாய இயந்திரங்களை உற்பத்தி செய்யும் பெரு நிறுவனங்களுக்கு உதவும் திட்டமே!

கரும்பு விவசாயத்தை எடுத்துக் கொள்வோம். எப்போது கரும்பு சக்கையில் இருந்து பெறப்படும் மொலாசிஸ் மூலம் மதுபானம் தயாரிப்பது அறியப்பட்டதோ, அப்போது தொடங்கி கரும்பு பயிரிட விவசாயிகள் நிர்பந்திக்கப்பட்டனர். கரும்பிலிருந்து கிடைக்கும் வெள்ளைச் சக்கரையின் பயன்பாட்டை அதிகப்படுத்த, சர்க்கரை ஆலைகளை ஏற்படுத்த மானியங்கள் வழங்கி வியாபாரிகள் ஊக்குவிக்கப்பட்டனர்.

பனை வெல்லப் பயன்பாட்டை மட்டுப்படுத்தவும், அதில் இருந்து கிடைக்கும் கள், பெரு நிறுவனங்கள் தயாரிக்கும் மதுவிற்கு போட்டியாக இருக்கக் கூடாது என்பதால் கள்ளுக்கு தடை போட்டனர். பனை மரத்தில் ஏறுவதற்கே லைசென்ஸ் வாங்க வேண்டும். அதையும் சுலபத்தில் பெற முடியாது. ‘அனுமதி இன்றி சொந்த பனை மரத்தில் ஒருவர் ஏறி, கள் எடுப்பது குற்றச் செயல்’ போன்ற சட்டங்கள் எல்லாம் எதற்காக? யாரை திருப்திபடுத்த..?

கரும்பு விவசாயிகளுக்கு பல ஆயிரம் கோடி பாக்கி வைத்துள்ள ஆலைகளிடம் பணபாக்கியைக் கேட்டு போராடும் விவசாயிகள்

ஆனால், இப்படி நிர்பந்திக்கப்பட்டு கரும்பு பயிரிட்ட விவசாயிகளிடம் நேர்மையாக நடந்து கொண்டீர்களா? வாங்கிய கரும்புக்கான பணத்தை தராமல் இழுத்தடித்தும், ஏமாற்றியும் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளை வஞ்சித்த போது, அரசாங்கங்கள் காப்பாற்றவில்லையே! கரும்புக் கழிவில் இருந்து மிக லாபகரமான மது தயாரிக்கும் எந்தப் பெரு நிறுவனமும், அதற்கு மூலப் பொருளை உற்பத்தி செய்து தந்த விவசாயிகளுக்கு தற்போது வரை ஒரு தம்பிடி காசு கூடத் தந்ததில்லையே!

அதன் விளைவாகத் தானே, தமிழகத்தில் மூன்று லட்சம் ஹெக்டேக்கராக இருந்த கரும்பு உற்பத்தி 1.5 லட்சம் ஹெக்டேராக சுருங்கி விட்டது.

தற்போது இந்த பட்ஜெட்டில் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத் தொகை  வழங்க ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடாம்..!

ஆலைகளுக்கு கரும்பை கொடுத்த விவசாயிகளுக்கு இரண்டாயிரம் கோடிகளுக்கு மேல் நிலுவைத் தொகை வைத்து ஏமாற்றிய நிறுவனங்களிடம் இருந்து உரிய தொகையை அரசங்கம் வாங்கித் தந்தால், இந்த 250 கோடிகளை விவசாயிகளே அரசுக்கு தருவார்களே!

இந்த பட்ஜெட்டில் பனை சாகுபடியினை ஊக்குவிக்க, 10 இலட்சம் பனை விதைகள் தோட்டக் கலைத் துறையின் மூலம் நடப்படுமாம்;

இதே போலத் தான் சென்ற ஆண்டும் அறிவித்து இதற்கு சில கோடிகள் ஒதுக்கினீர்கள்! இப்படி ஆண்டுதோறும் பனை விதைகள் நட பட்ஜெட்டில் பல கோடிகள் பணம் ஒதுக்குவது யாரை திருப்திபடுத்த? யார் பயனடைய? நிச்சயம் விவசாயிகள் கிடையாது.

பனை விவசாயத்தை வளர்க்க நினைத்தால், அரசாங்கம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்! பனை மரத்தை பயன்மரமாக்கிக் கொள்ள விவசாயிகளுக்கு எந்தத் தடையும் இல்லை. பனங் கள் இறக்கி பயன்படுத்தி கொள்ளலாம் என்ற ஒற்றை அறிவிப்பு போதுமே! தமிழ் நாட்டில் அரசு பைசா காசு கூட செலவுச் செய்யத் தேவையின்றி, பார்க்கும் இடம் தோறும் பனைமரங்கள் செழித்துக் குலுங்குமே! பயன்மரத்தை வளர்க்க விவசாயிகளுக்கு பணம் எதற்கு? வேண்டுமானால் அதற்கு வரி போட்டு அரசுக்கு பணம் தர விவசாயிகளே முன் வருவார்களே! ஆக, பிரச்சினையின் மூலத்தை மூடி மறைத்து, ஏன் இந்த பம்மாத்து திட்டங்கள்..! இதைப் போலத் தான் அனைத்துமே உள்ளன;

இங்கே ஒருசிலவற்றை மட்டும் சொல்கிறேன்;

தேவைக்கேற்ற உற்பத்தியை எட்ட வேளாண் பயிர்களில் பரப்பு விரிவாக்கம் செய்திட ரூ.108 கோடி நிதி ஒதுக்கீடாம்!

இருக்கிற விவசாய நிலங்களை எல்லாம் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு என்று நாளும், பொழுதும் அபகரித்த வண்ணம் இருக்கும் அரசு,

பரந்தூரில் பசுமையான விளை நிலங்கள் 5,000 ஏக்கரும்,

மேல்மாவில் முப்போகம் விளையும் 3000 சொச்சம் ஏக்கரும்,

கடலூரில் காலங்காலமாக பயிரிட்டு வந்த 91,000 ஏக்கரும்..,

விவசாயிகளின் கண்ணீரும், செந்நீரும் சிந்திய போராட்டத்தை பொருட்படுத்தாமல் காவல்துறை அராஜகத்தை பயன்படுத்தி அபகரிக்கும் அரசு வேளாண் பரப்பை விரிவாக்கம் செய்ய 108 கோடி ஒதுக்குகிறார்களாம்! யார் இதை ஒதுக்கிக் கொள்ளப் போகிறார்களோ…!

விளை நிலங்களை அழித்து விரிவாக்கம் செய்யப்படும் என்.எல்.சி

மானாவாரியான மூன்று லட்சம் ஏக்கரில் சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட விதைகள் உள்ளிட்ட இடுபொருட்களுக்கு ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடாம்! உணவு எண்ணெய் உற்பத்தியை உயர்த்த, எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை 2.50 லட்சம் ஏக்கரில் பரவலாக்கம் செய்திட, ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடாம்!

இந்த நிதி ஒதுக்கீடுகளை யார் கேட்டது..? உற்பத்தியாகும் சிறுதானியங்களை தமிழக அரசுக்கு ரேஷன் கடைகளில் கொள்முதல் செய்யும் ஆர்வம் இருந்தால், விவசாயிகளே சிறுதானிய உற்பத்தியை பெருக்கி விடுவார்களே! மேலும் எண்ணெய் வித்துக்கள் அனைத்தையும் பெருமளவு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு, வெளிநாட்டில் இருந்து கச்சா எண்ணெய் கழிவில் இருந்து பெறப்ப்படும் ரீபைண்ட் ஆயிளை வாங்கி இந்திய சமையல் எண்ணெய் தேவையின் மூன்றில், இரண்டு பங்கை நிறைவேற்றி வருகின்ற அரசுகள் மேன்மேலும் வெளிநாட்டு ஏற்றுமதிக்கு தானே எண்ணெய் வித்து உற்பத்தியை ஊக்குவிக்கிறீர்கள்!

அதாவது, நமது நாட்டின் முதல் தர எண்ணெய் வித்துக்களான நிலக் கடலையையும், எள்ளையும் வெளிநாட்டுக்கு தாறுமாறாக ஏற்றுமதி செய்துவிட்டு, தரமற்ற ரீபைண்ட் ஆயிளையும், பாமாயிலையும் பொது விநியோகத் திட்டத்தில் மக்களிடம் திணிக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கொண்ட அடிமை இந்தியாவில் என்ன சொல்வது?

ஓவ்வொராண்டும் ஒரு கோடியே ஐம்பது லட்சம் டன்கள் அளவுக்கு மிக அதிகமாக சமையல் எண்ணெய்யை இறக்குமதி செய்யும் ஒரே நாடு உலகிலேயே நாம் தான் என்பது அவமானமில்லையா? ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளமே தரமான சமையல் எண்ணெய் தான்! அதுவே மறுக்கப்படுகிறதே நம் நாட்டில்!

தென்னாட்டு மா ரகங்கள், ஏற்றுமதிக்கு உகந்த மா ரகங்கள் பரப்பினை அதிகரிக்க ரூ. 27. 48 கோடி நிதி ஒதுக்கீடாம்.

ருசியான, முதல் தரமான மாம்பழங்களை எல்லாம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு சொந்த நாட்டு மக்களை சுவைக்கவிடாமல் செய்கின்ற சூழ்ச்சியை எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்? இது போலத் தானே நம் நாட்டின் முதல் தரத் தேயிலை தொடங்கி முந்திரி பருப்பு, மிளகு, ஏலக்காய், கிராம்பு..என அனைத்தும் வெளிநாட்டு ஏற்றுமதிக்கு பறிபோகின்றன. எந்த மண்ணில் ஒரு உயர்ந்த தரமான விளை பொருள் உற்பத்தியாகிறதோ, அது அந்த மண்ணின் மக்களுக்கே மறுக்கப்பட்டு வெளி நாட்டுக்கு ஏற்றுமதியாகிறது என்றால், விவசாயம் எந்த அளவுக்கு ஆட்சியாளர்களால் வில்லங்கத்திற்கு உள்ளாகிவிட்டது என நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்படி விரிவாக விவரித்துக் கொண்டே போகலாம். ஆனால், இது போல ஒவ்வொன்றையும் விவசாயிகளே, ஊகித்து உணர்ந்து கொள்ளக் கூடிய ஒரு விழிப்புணர்வு கண்ணோட்டத்தை உருவாக்குவதே இந்த கட்டுரையின் மைய நோக்கமாகும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time