கல்விப் புலத்தில் களவாணிகளின் ஆதிக்கம்..!

-அஜிதகேச கம்பளன்

சீக்கிய சமூகத்தின் வழிகாட்டியான குரு நானக் அவர்களின் பெயரால் சென்னை வேளச்சேரியில் நடத்தப்படும் குருநானக் கல்லூரி நிர்வாகி மஞ்சித் சிங் நையரும், உயர்கல்வித் துறை அதிகாரி ராவணனும் கூட்டு சேர்ந்து பேராசியர்களிடமும், ஏழை மாணவர்களிடமும் நடத்தும் வசூல் வேட்டைக்கு ஒரு அளவில்லையா…?

ஏழை, எளிய குடும்பத்தின் பிள்ளைகள் கல்வி கற்று வாழ்க்கையில் உயர்வதற்காக சீக்கிய மதத்தினரால் சென்னையில் குரு நானக் கல்லூரி உருவாக்கப்பட்டது.  குருநானக் அவர்களின் உயர்ந்த லட்சியங்களை பின்பற்றி, சீக்கிய பெரியோர்களால் உருவாக்கப்பட்ட குருநானக் கல்லூரி தற்பொழுது எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தில் இருந்து பிறழ்ந்து, ஒரு பெரும் வியாபார கண்ணோட்டத்துடன் செயல்படுவது  சர்ச்சையாகி உள்ளது.

அரசு உதவி பெறும் கல்லூரி என்பதால், குரு நானக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு தமிழக அரசு தான் சம்பளம் தருகிறது! ஆகவே, இங்கு பணியாற்றும் பேராசிரியர்களுக்கு நல்ல அரசு சம்பளம் கிடைப்பதால், கல்லூரி நிர்வாகம் அந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பேராசிரியர்களிடம் பல லட்ச ரூபாய் கையூட்டைக் காட்டாயப்படுத்தி வாங்குகிறது. இந்த வகையில் கடந்த மார்ச் 2022 ஆம் ஆண்டு  நிரப்பட்ட பல்வேறு பாட பிரிவுகளுக்கான பணியிடங்களில் பல குளறுபடிகள் நடைபெற்றன.

மஞ்சித் சிங் நையர், ராவணன்

அதிலும், கல்லூரி செயலாளர் மஞ்சித் சிங் நையர்  சென்னை கல்லூரி கல்வி இணை இயக்குனர்  ராவணன் ஆகியோர் கூட்டணி அமைத்து  பல்கலைக்கழக மானிய  குழுவின் விதிகளை துச்சமாக தூக்கி எறிந்தும், பல்கலைக்கழக விதிகளுக்கு முரணாகவும், குறிப்பாக தமிழக அரசின் இட ஒதுக்கீட்டை கடாசி எறிந்தும் உதவி பேராசிரியர் நியமனங்களை நடத்தி உள்ளனர். இதில் பல லட்சங்கள் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது.

குறிப்பாக பொருளியல் துறை, தாவரவியல் துறை, ஆங்கில துறை, வணிகவியல் துறை, தாவரவியல் மற்றும் தொழில் நுட்பவியல் துறை மற்றும் வணிகவியல் துறைகளில் பணி அமர்த்தபட்ட உதவி பேராசிரியர்கள் தகுதியற்றவர்கள். இவர்கள் பட்டப் படிப்புகளை முறையாக பெறாதவர்கள். தொலை தூர கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள். இன்று வரை இவர்களால் சரியாக பாடம் நடத்த இயலாமல் உள்ளதால் மாணவர்கள் கல்வித் தரம் பாதிப்புக்கு உள்ளாகிறது.

இதைக் குறித்து பல்வேறு புகார்கள் கல்லூரி கல்வி இயக்குனர் மற்றும் உயர் கல்வித்துறை செயலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. சென்னை கல்லூரி கல்வி இணை இயக்குனர் மற்றும் கல்லூரி செயலாளர் இருவரும் மறைமுகக் கூட்டாளிகள் என்ற வகையில் கமுக்கமாக இருந்து தங்களை காப்பாற்றி வருகின்றனர்.

பணி நியமனத்தில் உள்ள முறைகேடுகள் தொடர்பான புகார் மனுக்களின் மீது கல்லூரி கல்வி இணை இயக்குனர் ராவணன் எவ்வித விசாரணையும் நேரிடையாக மேற்கொள்ளவில்லை. அதே சமயம், ”கல்லூரி நிர்வாகம் எவ்வித முறைகேடுகளையும் செயல்படுத்தவில்லை. வெளிப்படைத் தன்மையாகவும், நேர்மையாகவும் பல்கலைக்கழக விதிகளுக்கு உட்பட்டு உதவி பேராசிரியர் நியமனங்கள் நடைபெற்றுள்ளது” என உண்மைக்கு புறம்பாக விளக்கம் அளித்துள்ளார்.

தற்பொழுது பல்வேறு காரணங்களுக்காக இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் கல்லூரி கல்வி இயக்குனர் கீதா அவர்கள்,  இணை இயக்குனர்  ராவணன் அளித்த விவரங்களின் உண்மைத் தன்மையை சரி பார்க்காமல், நேரடியாகவும் விசாரிக்காமல், குரு நானக் கல்லூரி  நிர்வாகம் செய்த குற்ற செயல்களை மூடி மறைக்கின்ற செயல்களை செய்து வருகின்றார். கல்லூரி கல்வி இணை இயக்குனர்  இராவணன்  இது போன்று அரசு உதவி பெறும் கல்லூரிகளை முறைகேடாக செயல்படத் தூண்டி, வசூல் வேட்டைக்கு துணை போவதால் நல்ல பேராசிரியர்கள் மாணவர்களுக்கு கிடைக்காமல் போகிறது.

இது ஒரு புறம் இருக்க, இந்த கல்லூரிக்கு படிக்க வரும் ஏழை,எளிய மாணவர்களிடம் சட்டத்திற்கு புறம்பாக அதிக கட்டணத்தை வசூலிப்பதால், மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு நிலவுகிறது. இது தொடர்பாக மாணவர்கள் பல பெரிய போராட்டங்களை தொடந்து நடத்தி வருகின்றனர். ‘அரசு உதவி பெறும் கல்லூரி என்ற வகையில், மாணவர்களிடம் கல்வி கட்டணம் ரூபாய் 800 முதல் 1,250 வரை மட்டுமே பெற வேண்டும்’ என்பது அரசு வகுத்துள்ள விதியாகும். ஆனால், கல்லூரி நிர்வாகமோ நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மாணவர்களிடம் 30 ஆயிரம் தொடங்கி 40 ஆயிரம் வரை நிர்பந்தித்து பெறுகிறது!

கல்வி கொள்ளைக்கு எதிராக களம் கண்ட மாணவர்கள்

அரசு உதவி பெறும் கல்லூரி. ஆகவே தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து விடலாம் என நம்பி வரும் ஏழை, எளிய பெற்றோர்களிடம் கறாராகப் பேசி அதிக கட்டணத்தை கறந்து விடுகிறார்கள்! தர முடியாத ஏழைக் குடும்பங்களின் மாணவர்களுக்கு இங்கு இடமில்லை. இதனால் பல ஏழை, எளிய கூலி தொழிலாளிகள் கடனை, உடனை வாங்கி பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர். இப்படி ஏழைக் குடும்பங்களின் வயிற்றில் அடித்துப் பறித்தும், பேராசிரியர்களின் நியமனத்திற்கு பணம் பறித்தும் அரசின் மானியங்களை பெற்று சுகித்தும், பெரிய மனிதர்கள் போர்வையில் வலம் வரும் இந்த நபர்களின் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கல்விச் சூழலின் ஆரோக்கியம் காப்பாற்றப்படும்.

சிறுபான்மையினரான சீக்கியர்களின் கல்வித் தொண்டை அங்கீகரித்து  1971 –இல்  இக் கல்லூரிக்கான நிலத்தை அப்போதைய கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு, கிண்டி ராஜ்பவன் அமைந்துள்ள வனப் பரப்பிலிருந்து இருபத்தைந்து ஏக்கர் நிலத்தை பிரித்து அளித்துள்ளது என்பது கவனத்திற்கு உரியது. மாலை நேர கல்லூரி 1981 -இல் தொடங்கப்பட்டது. அரசு உதவியுடன் இயங்கும் கல்லூரி காலை கல்லூரியாகவும், சுயநிதி கல்லூரியாக இயங்கும் கல்லூரி மாலை நேரக் கல்லூரியாகவும் இயங்கி வருகின்றன. ஆரம்ப காலங்களில் நியாயமான கல்விக் கட்டணத்துடன் சிறப்பாக செயல்பட்டுள்ளது இந்தக் கல்லூரி!

சுயநிதி கல்லூரியில் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு அதில் காசு, பணத்தை ருசி பார்த்த வகையில் மனம் மாறி அரசு உதவி பெறும் கல்லூரியிலும் அடாவடி வசூலை செய்கின்றனர். அந்த வகையில் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பக் கட்டணத்தையே கூட ஆறு மடங்கிற்கும் அதிகமாக விலை வைத்தே தந்தனர். இது சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்று நீதிபதி கடுமையாக கண்டித்தவுடன் பணத்தை திருப்பித் தருவதாகச் சொல்லி அவமானப்பட்டனர். தற்போது கல்வி கொள்ளை தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்தக் கல்லூரியின் செயலாளர் மஞ்சித் சிங் நையர் , முன்னாள் முதல்வரும், தற்போதைய ஆலோசகருமான  மெர்லின் மொரைஸ், ஹிந்தி கற்பித்தல் துறையின் தலைவர் சுவாதி பாலிவால் ( இவரது கணவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சுனில் பாலிவால்) ஆகியோர் தான் அனைத்து அக்கிரமங்களுக்கும் மூல காரணமான மும்மூர்த்திகள் எனச் சொல்லப்படுகிறது. சீக்கிய சமூகத்தில் உள்ள நல்லவர்கள், சான்றோர்கள் தலையிட்டு மேற்படி அத்துமீறல்களை ஒழுங்குபடுத்தினால் தமிழ்ச் சமூகம் அவர்களுக்கு என்னென்றும் நன்றி காட்டும்.

கல்வி வியாபாரிகள், உயர் கல்வித் துறை அதிகாரிகள், அமைச்சர், அமைச்சரை இயக்கும் ஆட்சித் தலைமை எல்லாமே கறைபடிந்த கரங்களுடன் இருப்பது தான் இது போன்ற கல்விக் கொள்ளைகள் தடையின்றி தொடர்வதற்கு வசதியாகி விடுகிறது. தற்போதைக்குள்ள ஒரே ஆறுதல் நீதிமன்றத் தலையீடுகள் தாம்!

கட்டுரையாளர்; அஜிதகேச கம்பளன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time