புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களை தனியாரிடம் தரும் கொள்கையுடன் மத்திய, மாநில அரசுகள் படிப்படியாக சிதைத்து வருகின்றன! சென்னை, மதுரை பல்கலைக் கழகங்கள் அரசின் பல்கலைக் கழகங்களில்லையாம்! பல நூறு கோடி வரி விதிப்பார்களாம்..! பல மாதங்கள் சம்பள பாக்கி! தமிழக அரசு மெளனிக்கிறது! உண்மையான பின்னணி என்ன?
இது வெறும் நிதி பற்றாக் குறை பிரச்சினை மட்டுமா?
நேர்மை பற்றாக்குறையும், நிர்வாக திறனின்மையும் கூடத் தான்!
1990 தொடங்கி அடுத்தடுத்து வந்த தமிழக ஆட்சியாளர்களின் கறைபடிந்த செயல்பாடுகளும், அவர்களோடு கைகோர்த்த கல்வியாளர்களின் பேராசைகளும் காரணம்.
தாராளமயமாக்களால் உயர்கல்வித் துறைக்குள் நுழைந்த தனியார் நிறுவனங்கள் கற்றலின் நோக்கத்தையும், அதற்கான நெறிமுறைகளையும் துச்சமாக்கி, முழுக்க, முழுக்க கல்வியை வணிகப் பொருளாக்கியதும், அதற்கு மத்திய, மாநில அரசுகள் இசைந்து கொடுத்ததும் காரணம்.
சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் என்பது மட்டுமே என்ற நிலை மாறி இன்று கல்வி தாராளமயத்தின் வீச்சின் விளைவாக நிகர்நிலை பல்கலைகழகங்களும், தனியார் பல்கலைகழகங்களும் திசைக்கு ஒன்றாக பொது பல்கலைகழகங்களும் துறைக்கு ஏற்றார் போல் இணை பல்கலைகழகங்களும் பெருகி வளர்ந்துள்ள சூழலில், ‘அரசு ஏன் லாபமில்லாத பல்கலைக் கழகங்களை தூக்கிச் சுமக்க வேண்டும்..?’ என நினைப்பது ஒரு காரணம்.
1857 இல் பிரிட்டிஷ் அரசால் உருவாக்கப்பட்ட சென்னை பல்கலைக்கழகம் நோபல்பரிசு பெற்ற மேதைகள் மட்டுமின்றி உயர் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகள், ஐந்து குடியரசுத் தலைவர்கள்..போன்ற ஏராளமான பேராளுமைகளை நாட்டுக்கு தந்த கல்வி ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கல்வி நிறுவனத்தை இன்று புதிதாக, ”இது அரசு நிறுவனமல்ல” எனச் சொல்லி வருமான வரி போடுவது எப்படி? ”ஏழை, எளிய மாணவர்களிடம் குறைந்த கட்டணம் வாங்காதே, கொள்ளையடித்து வாழ்ந்து கொள்” என பட்டவர்த்தனமாக சொல்லாமல் உணர்த்துகிறார்கள்!
பொதுவாகவே அரசியல் தலையீடுகள், பணியிடங்களுக்கு பணம் வாங்குதல், தேர்வு முறைகேடுகள் போன்ற பல பிரச்சினைகள் சென்னை, மதுரை பல்கலைக் கழக நிர்வாகத்தில் உள்ளன. இந்தப் பிரச்சினைகள் எல்லாம் ஆட்சி மற்றும் அரசின் நிர்வாகத் தலைமை சரியாக இருக்குமானால் ஒரு முடிவுக்கு கொண்டு வரலாம். அது சில பத்தாண்டுகளாகவே சரியில்லை.
இந்த சூழலில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்தே (7th Pay Commission), ‘உயர் கல்வித் துறையை அரசு ஒட்டு மொத்தமாக கைகழுவ வேண்டும்’ என்ற அணுகுமுறையின் தொடக்கமாக அரசு பல்கலைக் கழகங்களுக்கான நிதியை குறைக்கத் தொடங்கினார்கள்! பாஜக அரசு பொறுப்பேற்றவுடன் உயர் கல்வி நிதியை அதிரடியாகக் குறைத்ததோடு’ அரசு பல்கலைக் கழங்களுக்கு மாநில அரசுகளும் நிதியைக் குறைக்கும்படி அறிவுறுத்தியதோடு, ‘பல்கலைக் கழகங்களுக்கு அரசு நிதி பாதிக்கு மேல் குறையுமானால், அவை வருமான வரி வரம்புக்குள் வரும்’ என்ற அக்கிரமமான சட்டத்தையும் கொண்டு வந்து விட்டனர்.
சென்னை பல்கலைக் கழகத்தை பொறுத்த வரை நடைமுறை செலவுகளுக்கே பணம் இல்லாமல் தடுமாறி வருகிறது. இந்தச் சூழலில் 2017-18 முதல் 2021-22ம் ஆண்டு வரை 424 கோடி ரூபாயை வருமான வரியாக செலுத்த வேண்டி நிர்பந்திக்கப்படுகிறது. அரசிடம் இருந்து 50 சதவீதத்துக்கு மேல் நிதி கிடைக்காததால், பல்கலைக் கழகத்தின் கணக்குகளை வருமான வரித்துறை சமீபத்தில் முடக்கியதோடு, ‘இதை அரசு பல்கலைக்கழகமாக கருத முடியாது’ என அறிவித்துள்ளது. இதை எப்படி தமிழக அரசு அமைதியாக வேடிக்கை பார்க்கிறது..?
பல்கலைக்கழகத்தின் மாதச் செலவு ரூ.20 கோடி. இதில் ரூ.15-16 கோடி சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துக்காகச் செல்கிறது! பல்கலைக்கழகத்தின் செலவுகள் சுமார் ரூ.240 கோடியாகவும், கட்டணம் மற்றும் பிறவற்றின் மூலம் வருவாய் ரூ.100 கோடியாகவும் இருக்கும் நிலையில், மாநில அரசு தணிக்கை ஆட்சேபனைகளைக் காரணம் காட்டி 2015-16ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.25-30 கோடி மட்டுமே வழங்கி வருகிறது.
”நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த நிலைமை மாறும்” எனச் சொல்லி பதவி ஏற்ற திமுக அரசு, பல்கலையின் நிதி நெருக்கடிக்கு எந்த பங்களிப்பும் செய்யவில்லை. உயர் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட பொன்முடிக்கு, தான் சொந்தமாக நடத்தும் பெரிய,பெரிய கல்வி நிறுவனங்களை பார்ப்பதற்கும், உயர் கல்வி நிறுவனங்களில் வசூல் வேட்டை நடத்தவுமே நேரம் சரியாக இருந்தது. அடுத்து வந்துள்ள உயர்கல்வி அமைச்சர் கண்ணப்பனும் பொன் முடியைவிட வேகமாக வசூல் வேட்டைக்களமாக உயர்கல்வித் துறையை பாவிக்கிறார். அதற்கு தோதாக ஊழல் அதிகாரிகளையும் உடன் வைத்துள்ளார்.
திமுக ஆட்சியின் தொடக்கத்தில் நிதி அமைச்சராக இருந்த பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனோ மேல் நாட்டில் உயர் கல்வி பெற்று அங்கேயே வேலையும் செய்தவர் என்ற வகையில் அரசு நிறுவனங்களையும், அரசு பணியிடங்கள் நிரப்பலையும் வெகு அலட்சியமாகக் கருதி புறக்கணித்தார்!
சென்ற ஆண்டு ஜனவரியில் சென்னை பல்கலையில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சியில் அப்போதைய பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கௌரி உரையாற்றிய போது, ”நிதி நெருக்கடியில் இருந்து பல்கலைக் கழகம் மீள்வதற்கு நிதிஅமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார். அதற்கு அந்த மேடையிலேயே நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், ”நிதி தொடர்பான கோரிக்கைகள் வந்தால், பல வகையான கேள்விகள் கேட்கப்படும். அதற்கு சரியான விளக்கங்கள் இருந்தால், மட்டுமே நிதி கிடைக்கும்” என முகத்தில் அறைந்தாற் போல பதிலளித்தார்.
தற்போது இப் பல்கலைக்கழகம் தற்போது நான்கு பேர் கொண்ட கன்வீனர் கமிட்டியின் தலைமையில் – துணைவேந்தர் இல்லாத நிலையில் – உயர் கல்வி செயலாளர் ஏ கார்த்திக் தலைமையில் நடக்கும் அளவுக்கு நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.
பலகலைக் கழகம் என்பது ஒரு தாய் அமைப்பு. அந்தத் தாயை பட்டினி போட்டால், அதன் சேய்களும் சேர்ந்து தான் வாடும். அந்த வகையில் பல்கலையின் உறுப்பு கல்லூரிகளும், நிதி பற்றாக்குறையால் உருக்குலைந்து வருகின்றன!
ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் ஏழ்மையினால் உயர்கல்வி படிப்பை தொடர முடியாத மாணவர்களுக்கு உதவி செய்யும் விதமாக சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச கல்வித் திட்டம் 2010-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் தேர்வாகும் மாணவர்கள், சென்னை பல்கலைக் கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் இலவசமாக இளநிலை பட்டப்படிப்பு படிக்கலாம். ஆண்டு தோறும் சுமார் 250 மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுகின்றனர். அந்தத் திட்டம் தற்போது தள்ளாடுகிறது. மூன்று மாதங்களாக மிகக் குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் தற்காலிக பேராசிரியர்களுக்கு கூட சம்பளம் தர முடியவில்லை. மின் கட்டணம் செலுத்த முடியவில்லை. விடைத்தாள் திருத்தும் பணி தடைபட்டுள்ளது.
இதே போல தென் தமிழகத்தின் கல்விக்கான கலங்கரை விளக்காக ஒளி வீசிப் புகழ் பரப்பும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இன்று இறுதி சுவாசத்தை சந்திக்க நேர்ந்த நோயாளி போல தடுமாறிக் கொண்டுள்ளது வேதனை!
சென்னை பல்கலைக் கழகத்திற்கு நிகராக மதுரையில் தென்தமிழகத்தில் 1965ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட மதுரை பல்கலை கழகம் பின்னாட்களில் மதுரை காமராஜர் பல்கலை கழகமாக வளர்ந்தது!
தற்போது பேராசிரியர்கள் சுமார் 500 பேர், நிர்வாகப் பணிகளில் 650 பேர், மற்றும் ஓய்வூதியம் பெறக் கூடியவர்கள் என மாதத்திற்கு கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
கல்விக் கட்டணங்கள் வழியாக வரும் மதுரை பல்கலையின் ஆண்டு வருமானம் சுமார் 60 கோடியாகவும் ஆண்டு செலவு 144 கோடியாகவும் உள்ளது!
2004-2005 ல் வெறும் 471 ஆக இருந்த ஓய்வூதியர்களின் எண்ணிக்கை தற்போது சுமார் 1,200 ஆக அதிகரித்துள்ளதானது மிகப் பெரும் சுமையாகிவிட்டது.
மானிய வெட்டு, தொலைதூரக் கல்வி மூலம் வரும் வருமானம் மிகவும் குறைந்து போனது, ஓய்வூதியச் சுமை ஆகிய மூன்று பிரதான பிரச்சினைகள் மதுரை பல்கலைகழகத்தை நிலைகுலைய வைத்துள்ளது.
அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டுவிட்டது. சுமார் 580 கோடி ரூபாய்கள் நிர்வாக சீர்கேடுகள், ஊழியர்களின் முறைகேடுகள் என்ற காரணத்தால் தணிக்கை ஆட்சேபனைக்குள்ளாகி, பயன்படுத்தப்பட முடியாமல் நிறுத்தப்பட்டுள்ளது.
Also read
காமராசர் பல்கலைக் கழகத்தின் அவசரத் தேவைகளுக்காக வைக்கப்பட்டிருந்த மூலதன நிதி ரூ.300 கோடி ஏற்கெனவே செலவு செய்யப்பட்டு விட்ட நிலையில், பல்கலைக்கழக நிதி ஆதாரங்கள் அனைத்தும் சுருங்கிவிட்ட நிலையில். அரசின் நிதியுதவி வழங்கப்பட்டால் தான் பல்கலையை காப்பாற்ற முடியும். ஆனால், பலமுறைக் கதறியும் திமுக அரசு கமுக்கமாக உள்ளது. இங்கு கடந்த சில ஆண்டுகளாகவே தட்டுத் தடுமாறி தான் ஏதோ அரை குறையாக ஊதியம் வழங்கி வருகிறார்கள்! தற்போதோ மூன்று மாதங்களாக ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக முதல்வரின் கனத்த மெளனம் என்பது அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் என யாவும் படிப்படியாக தனியாருக்கு தாரை வார்க்க ஒத்தாசை செய்வதாகவே முடிந்துவிடும்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
Those who are responsible for this sorry state of affairs are very much concern only in looting the public money. Loud mouth speeches but nothing in action. Tax payers money is being wasted in useless projects. Example: Kilambakkam bus stand. Tamil Nadu is in the hands a few families who ruled the roost and destroying the dreams of the future generation.