வசந்த காலத்தை அள்ளி வரும் வள்ளியாறு..!

-தமிழ்தாசன்

ஆறுகளைத் தேடி – 6

பச்சை நிற மலைகளுக்கும், நீல நிறக் கடலுக்கும் இடையில் ரத்த நாளங்களை போல வெள்ளி நிற நீரோடைகள் பாய்ந்தோடும் ஒரு அழகிய நிலப்பரப்பு குமரி மாவட்டம்! மலைகள், அருவிகள், ஓடைகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், வயல் வெளிகள், பாக்கு, தென்னந் தோப்புகள், நீரோடும் வாய்க்கால்கள், கடற்கரையோர பொழிமுக பகுதிகள், அலையாத்திக் காடுகள் என ஒட்டு மொத்தமாக இயற்கையின் அழகை ஒரே இடத்தில் காண முடியும்.

என்றும் இளமையாக இருக்கும் ஓர் நிலப் பரப்புக்கு குமரி என்று பெயர் வைத்தவர்கள், ‘வள்ளி’ என ஒரு  குமரியின் பெயரை ஆற்றுக்கு சூட்டி இருக்கிறார்கள். வள்ளியாறு தோன்றும் வேளிமலை பூதமடை பகுதிக்கு போகும் முன் வள்ளியாற்றுக்கு வலு சேர்க்கும் மாம்பழத்துறையாறு தோன்றும் மருத்தூர் மலைக்கு போய் வருவோம்.

மாம்பழத்துறையாறு / தூவலாறு:
மருத்தூர் மலையில் தோன்றுகிறது மாம்பழத்துறையாறு. குமரி மாவட்டத்தின் கல்குளம் தாலுகாவில் வில்லுக்குறி அருகே ஆனைக்கிடங்கு என்னுமிடத்தில் மாம்பழத்துறையாற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. மருத்தூர் மலையில் இருந்து ஆணைக்கிடங்கு ஓடை,  கருப்புவிளை ஓடை ஆகிய ஓடைகள் மாம்பழத்துறையாறு அணையில் வந்து சேர்க்கிறது. அணை கடந்து பாறையடி,  தக்கலை, பருத்தியறை கடந்து வரும் மாம்பழத்துரையாறு வள்ளியாற்றுடன் இணைகிறது. ஏறக்குறைய 6.5 கி.மீ நீளமுடைய  மாம்பழத்துறையாறு, வள்ளியாற்றுடன் கலப்பதற்கு சுமார் 2 கி.மீ முன்பாக உள்ள ஊர்களில் எல்லாம்  தூவலாறு என்றே மக்களால் அழைக்கப்படுகிறது.

1893 ஆம் ஆண்டிலேயே மாம்பழத்துரையாறு குறுக்கே அணைகட்டும் முதல் வரைவை பொறியாளர் ஸ்டீபன் கர்ஸ்லி அவர்கள் திருவிதாங்கூர் அரசுக்கு பரிந்துரை செய்தார். அது ஏனோ சாத்தியப்படவில்லை. மீண்டும் 1925 ஆண்டில் நாகர்கோயில் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் நோக்கில் அணை கட்டும்  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு, குடிநீர் மற்றும் பாசன தேவைகளை நிறைவு செய்யும் நோக்கில் 2007 ஆம் ஆண்டு முதல்வர் கருணாநிதி அவர்கள் ஆட்சி காலத்தில் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு 2010 ஆண்டு இறுதியில் கட்டி முடிக்கப்பட்டது. அது வரை வள்ளியாற்றை வருடந்தோறும் முத்தமிட்டு வந்த மாம்பழத்துரையாறு, இனி அணை நிறைந்தால் அல்லது  அதிகாரிகள் நினைத்தால் மட்டுமே வள்ளியை சந்திக்க முடியும் என்ற நிலை உருவானது. அணைகள் கட்டப்பட்ட பிறகு அனைத்து ஆறுகளின் நிலையும் இது தான்.

வள்ளியாறு:
குமரி மாவட்டம் முட்டைக்காடு அருகே வேளிமலையில் குரங்கேற்றி பகுதியில் இருந்து தோன்றுகிறது வள்ளியாறு. வேளிமலையின் மேற்கு சரிவில் பல்வேறு ஓடைகள், காட்டாறுகள் குழிவிளை வழியாக பூதமடையில் வந்து ஒன்று சேர்கிறது. பூதமடையில் உருப்பெறும் வள்ளியாறு கொக்கோட்டு மூலையில் பாய்கிறது. அங்கிருந்து முட்டைக்காடு, பன்னிப்பாகம், கோதநல்லூர், செம்பருத்திவிளை, வழிக்கலம்பாடு, பெய்லிஸ்புரம், பத்மனாபபுரம், வழவிளை, தக்கலை, குமாரக்கோயில், கொல்லன்விளை, பருத்தியறை தோட்டம், சடையமங்கலம், தெக்கன்த்திருவிளை, மேல்கரை, தலக்குளம், கோட்டவிளை, பள்ளிக்கரை, திருநயினார் குறிச்சி, வெள்ளிமலை கடந்து கடியப்பட்டினம் அருகில் அரபிக்கடலில் கலக்கிறது. ஏறக்குறைய 20 கி.மீ நீளம் கொண்டது வள்ளியாறு. பூதமடை கடந்து முட்டைக்காடு நோக்கி போகும் வழியில் புத்தனாறு கால்வாய் வள்ளியாறு நீர்பாதையில் குறுக்கிடுகிறது. வள்ளியாறு நீரோடை புத்தனாறு கால்வாய்க்கு மேல் செல்ல ஒரு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

குட்டக் கரை

மணலிக்குளம், படப்பகுளம் மிகைநீர் ஓடை கோதைநல்லூர் அருகே வள்ளியாற்றில் கலக்கிறது. குட்டக் கரையில் இருந்து வரும்  ஒரு மலையோடை பத்மனாபபுரம் பிள்ளையார்த் திடல் அருகே வள்ளியாற்றில் கலக்கிறது. குமாரக்கோயில் வள்ளிச்சுனை மற்றும் மலையோடைகள் சேர்ந்து குமாரக்கோயில் அருகே வள்ளியாற்றில் கலக்கிறது. மாம்பழத்துறையாறு பருத்தியறை அருகே வள்ளியாற்றில் கலக்கிறது. தெக்கன்த்திருவிளை அருகே மாம்பழத்துறையாறு அணையில் இருந்து வரும் பேயன்குழி கிளைக் கால்வாய் தண்ணீர் வள்ளியாற்றுடன் கலக்கிறது. பல்வேறு மலையோடைகள், ஏரி, குளம் மிகைநீர் வள்ளியாற்றில் கலக்கிறது.

குமாரக் கோயில் வள்ளிச் சுனை நீர் கலப்பதால் இந்த ஆற்றுக்கு வள்ளியாறு என பெயர் வந்திருக்கலாம் என மக்கள் கூறுகின்றனர். மேற்குத் திசை நோக்கி பாயும் வள்ளியாறு முட்டைக்காடு கடந்து பன்னிப்பாகம் என்னும் ஊரை கடக்கிறது. வள்ளியாற்றின் தெற்கு கரையில் பன்னிப்பாகம் ஊரில் 9ஆம் நூற்றாண்டை சேர்ந்த மகாதேவர் கோயில் உள்ளது. இக்கோவிலில் 9ஆம் நூற்றாண்டு துவங்கி 15ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகள் கிடைக்கின்றன. மகாதேவர் கோயிலின் 9ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ‘மகாதேவர்க்கு திருப்பனைக்குளம்’ என்று குறிக்கிறது. பன்னிப்பாகம் ஊரின் முந்தையப் பெயர் பனைக்குளம் என்று இருந்திருக்கலாம். கி.பி. 14-ஆம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் கல்வெட்டின் சிதைந்த பகுதி நந்தி மண்டபத்தின் வடக்கு சுவரில் உள்ளது. கல்வெட்டில் நிபந்தம் அளிக்கப்பட்ட இடம் குசத்தியறை அருகே ‘வள்ளி ஆறில் நீருண்டு நெல்விளையும் துண்டம்’ என வருகிறது.

குசத்தியறை இப்போது அழகியபாண்டியபுரம் அருகே உள்ள குறத்தியறை என்னும் கிராமத்தை குறிக்கிறது. கி.பி. 1559-ஆம் ஆண்டு நிபந்த கல்வெட்டு (T.A.S. Vol. III p.67) நந்தி மண்டபத்தின் வடக்கு சுவரில் உள்ளது. இக்கல்வெட்டில் நயினான் அழகன் அய்யாக்குட்டி என்பவனுக்கு குழல் வாசிக்க வள்ளியாற்றின் கரையில் நிலம் கொடுக்கப்பட்ட செய்தி உள்ளது.

வள்ளியாற்றின் கிழக்கு கரையில் கல்குளம் வட்டத்தில் திருநயினார் குறிச்சி அமைந்துள்ளது. இங்குள்ள சிவன்கோயில் பழமையானது. கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் இக்கோயில் எழுப்பப்பட்டு இருக்கலாம். கல்வெட்டுகள் இவ்வூரை இராஜராஜத் தென்னாட்டுக் குறுநாட்டுக் கடிகைப்பட்டினம் எனவும் இங்குள்ள இறைவனைக் கரைகண்டேஸ்வரமுடைய மகாதேவர் எனவும் குறிக்கின்றன. கடிகைப்பட்டனம் என கல்வெட்டு குறிக்கும் ஊர் வள்ளியாறு கடலில் கலக்குமிடத்தில் அமைந்துள்ள கடியப்பட்டினம் ஆகும்.

கரைகண்டேஷ்வரம் மேற்கு பக்கச்சுவரில் உள்ள கல்வெட்டு கி.பி.1432 ஆம் ஆண்டு சித்திரை திங்கள் 26 ஆம் நாள் இக்கோவில் திருப்பணி செய்து பெரு நீராடி நடக்கப் பெற்றது என்பதை குறிக்கிறது. வள்ளியாற்றில் நீராடிய செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது. கி.பி. 1513 ஆம் ஆண்டு மாத்தாண்டவர்மர்‌ சிறவாய்‌ மூத்த திருவடி மன்னர் திருவிதாங்கோட்டு சாத்தமங்கலதிற்கு நிலம் கொடையாக வழங்கிய செய்தி இடப்பெற்ற கல்வெட்டில் வள்ளியாற்றின் மேற்கில் உள்ள சாத்தமங்கலம் என எல்லைகளை குறிப்பிடுகிறது. கல்வெட்டுகளிலும் வள்ளியாறு என்ற பெயர் நமக்கு காண கிடக்கிறது.

வள்ளியாறு தோன்றும் வேளிமலையின் மலைகுன்றுகள் உட்பட பல இடங்களில் கல்குவாரிகள் மலைகளை உடைத்து கொண்டு இருக்கிறது. வெள்ளியாறு என்று அழைக்கும் வண்ணம் தூய்மையான வெண்ணிறத்தில் நீரோடிய வள்ளியாற்றில் இன்று பல இடங்களில் குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைக் கழிவு நீர் கலக்கிறது. பல இடங்களில் ஆற்றின் கரைகள் ஆக்கிரமிக்கப்பட்டு ஓடையை போல சுருங்கி போய் உள்ளது. கரையோரம் கொட்டப்படும் குப்பைகள், இறைச்சி கழிவுகள் துர்நாற்றம் வீசும் சாக்கடையாக வள்ளியாற்றை மாற்றிவிட்டது. 10-20 வருடங்களுக்கு முன்பு இருந்த ஆற்று மீன்களை இப்போது பார்க்க முடியவில்லை என்கின்றனர் கடியபட்டினம் பகுதி மக்கள்.

மண்வாளக் குறிச்சியில் மக்கள் எதிர்ப்பை மீறி இயங்கும் மணல் ஆலையின் செயல்பாடுகள்!

மணலில் உள்ள உலோகங்கள் மற்றும் தாதுக்களை பிரித்தெடுக்கும் பொதுத்துறை நிறுவனம் ஒன்று வள்ளியாறு கடலில் கலக்கும் இடமான மணவாளக் குறிச்சியில் இயங்கி வருகிறது. மணலில் இருந்து ஆண்டுக்கு 91,200 டன் கனிமங்களை மணவாளக்குறிச்சியில் உள்ள இந் நிறுவனம் உற்பத்தி செய்கிறது.  அப்படியானால், ஆண்டுக்கு அந்நிறுவனம் எவ்வளவு டன் கழிவுகளை வெளியேற்ற வேண்டி வரும் என்று எண்ணி பாருங்கள். மணல் ஆலையின் கழிவு மணலை கடியபட்டினம் வள்ளியாற்றிற்கு அருகில் கொட்டி வைத்திருக்கிறார்கள். இந்த ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டங்களால் சில காலம் மூடப்பட்டது. பின்னர் அதிகார அழுத்தங்களால் திறந்து விட்டனர்.

மணல் ஆலையினர் மிகப்பெரிய குழாய் ஒன்றை ஆற்றுப்படுகையில் புதைத்து வைத்து இருக்கின்றனர். அது வள்ளியாற்றில் தண்ணீரை உறிஞ்சுகிறதா? கழிவை கொட்டுகிறதா? என்று அப்பகுதி மக்களுக்கே தெரியவில்லை.


வள்ளியாற்று நீரில் இயல்பாக குளித்து விளையாடியவர்கள் இன்று அதில் கால் நனைக்க அச்சப்படும் அளவுக்கு ஆற்று நீர் மாசடைந்துள்ளது. நிலத்தடி நீர் குடிக்க தகுதியற்றதாக போய்விட்டது. கடியப் பட்டினம் பெண்கள் குடிநீருக்காக அலையும் நிலை அதிகரித்து கொண்டே இருக்கிறது.  பச்சை நிறத்து மலைக்கும், நீல நிறத்து கடலுக்கும் இடையில் இருந்த ரத்த நாளம் ஒன்று கருப்பு நிறத்து கால்வாயாக மாற்றமடைந்து வருகிறது. வள்ளியாறு மீண்டும் வெள்ளியாறு போல மாறுவது எப்போது?

சேர மன்னர்கள் ஆண்ட நாஞ்சில் மண்ணின் குமரி மாவட்ட மக்களே! பழையாறு பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்.

கட்டுரையாக்கம்; தமிழ்தாசன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time