கிலி ஏற்படுத்தும் கீழ் பவானி பாசனக் கால்வாய் திட்டம்!

-சாவித்திரி கண்ணன்

நிலத்தடி நீர் பாசனமே அற்றுப் போகும்..

ஏரி, குளம், குட்டை, கிணறுகளுக்கு நீர் கிடைக்காது.

பயிர்கள் அழியும், பறவைகள் மடியும்!

குடி நீர் பஞ்சம் ஏற்படும்

கொங்கு மண்டலமே பாலைவனமாகும்

பல்லுயிர் பெருக்கமே சிதையும்.

சுற்றுச் சூழலே சூனியமாகும்..!

இவையெல்லாம் கீழ்பவானி கால்வாயை பலப்படுத்த தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிகழும் அசம்பாவிதங்கள்! ஆகவே, நாங்கள் இதை செயல்படுத்த அனுமதிக்கமட்டோம்’ என கொங்கு மண்டலமே போர்க்கோளம் பூண்டது போல உண்ணாவிதங்கள், போராட்டங்கள், பேரணிகள் நடத்தப்பட்டுக் கொண்டுள்ளன!

கீழ் பவானி பாசன சீரமைப்புக்கு எதிராக போராடுவோர்

இவ்வளவு பயத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த கீழ்பவானி பாசனத் திட்டம் என்ன..? என்பது பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்;

கொங்கு மண்ணின் செல்வச் செழிப்புக்கும், பசுமைக்கும் ஆதாரமாக விளங்குவது பவானி அணையாகும். சுதந்திர இந்தியாவின் முதன் முதலான மிகப் பெரிய பாசன திட்டம் பவானி கீழ் பாசனத் திட்டம் 1957 ல் நடைமுறைக்கு வந்த பிறகு தான், கொங்கு மண்டலத்தில் விவசாயம் செழித்தது! செல்வம் கொழித்தது!

அந்த வகையில் கீழ்பவானி வாய்க்கால் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் திருப்பூர்,ஈரோடு, கரூர் மாவட்டங்களில் பாசன வசதி பெற்று வருகின்றன.  இதன் மூலம்  நெல், மஞ்சள், கரும்பு, வாழை, நெல், கடலை, எள், மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்!

இந்தக் கால்வாயானது இரு புறமும் மண்ணை அரணாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதால் கடந்த 66 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட முறை கால்வாய் உடைந்துள்ளது!

மண் அணையை உடைத்து ஓடி வரும் பவானி ஆறு!

# ஒவ்வொரு முறையும் இப்படி உடைவதால் பல நூறு ஏக்கர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி பயிர்கள் அழிகின்றன! வாழை, நெல், கரும்பு , மஞ்சள் என பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சாய்கின்றன! வீடுகள், நூற்பாலைகள், கல்வி நிறுவனங்களுக்குள்ளும் வெள்ளம் பாய்கின்றது. சாலைகள் பழுதடைகின்றன…! மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று தங்க வைத்து அனுப்புகிறார்கள்!

கால்வாய் உடைப்பால் கவிழ்ந்த வாழை மரங்கள்!

# இந்தப் பேரழிவைக் கட்டுப்படுத்த, உடனே பாசனத் தண்ணீர் உடனே முற்றிலுமாக நிறுத்தப்பட்டு போர்க் கால கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெறும்.

# பல்லாயிரம் மணல் மூட்டைகள், லோடுலோடாக கான்கிரீட் கலவைகள் கொண்டு கரைகள் பலப்படுத்தப்படும்.

# இந்தப் பணிகள் முடிவடையும் வரை பாசனத் தண்ணீர் முற்றாக 20 நாட்களேனும் நிறுத்தப்படுவதால், மற்ற இடங்களில் அறுவடைக்கு தயாரான பயிர்கள் வாடி வதங்கிக் கொண்டிருக்கும்.

போர்க்கால அடிப்படையில் தற்காலிகமாக கால்வாய் சீரமைப்பு.

கால்வாயைப் பலப்படுத்த சில லட்சங்கள் அல்லது கோடிகள்! அழிந்த பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு லட்ச ரூபாய் கோரிக்கை! சிதைந்த சாலைகளைச் சீரமைக்க பல கோடிகள்.. என கடந்த 66 ஆண்டுகளாக கணக்கு வழக்கில்லாமல் பல்லாயிரம் கோடிகள் இழப்பேற்பட்டுள்ளது!

இதையடுத்து கடந்த பல்லாண்டுகளாக ஆயக்கட்டு விவசாயிகள் அனைவரும் வைத்த கோரிக்கையே, ”பாசனக் கால்வாயை நிரந்தரமாகப் பலப்படுத்தி பேரழிவுகளில் இருந்து முழுமையான பாதுகாப்பை உத்திரவாதப்படுத்துங்கள்” என்பதாகும்.

இதையடுத்து 2009 ஆம் ஆண்டு கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்த காலகட்டத்தில் கீழ்பவானி பாசனத் திட்டத்தை பலப்படுத்த நீர் மேலாண்மை அறிஞர் மோகன கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து ஆலோசனை கேட்டார். அந்தக் குழுவானது ஆறு மாதங்கள் கள ஆய்வு செய்து, விவசாயிகள் பலரையும் சந்தித்துப் பேசி, பரிந்துரைத்த வகையில், ”இருபுறமும் கான்கிரீட் அரணை ஏற்படுத்திவிட்டால், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு உண்டாகும்” என்பதே!

இதை செயல்படுத்த அடுத்து வந்த ஜெயலலிதா 2013 ஆம் ஆண்டு முயன்றார். இதற்காக 2,100 கோடி திட்டமும் முன் மொழியப்பட்டது. அப்போது எதிர்ப்புகள் கிளம்பின. எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் அளவுக்கு அன்றைக்கு அவரை அவரது சூழல் அனுமதிக்கவில்லை. அவரது வழக்குகள் தொடர்பாக கோர்டு, கேஸு, உடல் பலவீனம் என அவரது காலம் முடிந்தது. அவருக்கு பிறகு கொங்கு மண்டலத்தின் விவசாயப் பின்னணியில் இருந்து வந்த எடப்பாடி பழனிச்சாமி இந்த திட்டத்தை மீண்டும் கைலெடுத்தார்.

”திட்டத்தை செயல்படுத்தியே ஆக வேண்டும்” என்ற ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கத்தினர் மாநாடுகள், போராட்டங்கள் நடத்தினார்கள் என்றால், ”இந்த திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயிகளுக்கு பாதிப்பு” என மற்றொரு தரப்பினரும் போராட்டங்கள் நடத்தினர். என்ற போதிலும் 2020 ஆண்டு இந்த திட்டத்தில் விவசாயிகளின் அச்சத்தை கணக்கிலெடுத்து சில மாற்றங்கள் செய்து, நிலத்தடி கசிவு நீர் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக வீணாவதை சற்று குறைக்கும் வகையில் ரூ710 கோடியில் ஒரு திட்டம் ( govt.order.no; 276) நடைமுறைக்கு வந்தது. இந்தத் திட்டத்தை அன்றைய அதிமுக ஆட்சியில் பிரதமர் நரேந்திரமோடி தான் துவக்கி வைத்தார்.

தற்போது இதற்கும் ஏதிர்ப்புகள் கிளம்பியுள்ளன! இதில் வினோதம் என்னவென்றால், பிரதமர் தொடங்கி வைத்த திட்டத்தை அவரது கட்சியான பாஜகவினரே எதிர்த்து வருகின்றனர். திமுக, அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்புகள் இல்லை. பாஜக, கொமதேக, நாம் தமிழர், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் இந்த பாசன சீரமைப்பு திட்டத்தை எதிர்க்கின்றனர்.

ஆகவே, கீழ்பவானி பாசனத் திட்டம் தொடர்பான அச்சங்கள் குறித்து விளக்கம் பெற, கோவை மண்டல நீர்பாசனத் துறை தலைமைப் பொறியாளரும், அத்திக் கடவு-அவினாசி திட்டத்தை செயல்படுத்தி கொங்கு மண்டல மக்களின் அன்பை பெற்றவருமான திரு.சிவலிங்கம் அவர்களை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டேன்.

இரு புறமும் கான்கிரீட் அரண்கள் எழுப்பினால், நிலத்தடி நீர் வளம் பாதிக்கும் என மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. 200 கீ.மீட்டர் தூரம் முழுக்க இரு புறமும் கான்கிரீட் அரண் எழுப்ப திட்டமா?

இல்லை. நாங்கள் முதலில் அப்படித் தான் திட்டமிட்டோம். ஆனால், மக்களின் அச்சத்தை கருத்தில் கொண்டு திட்டத்தை பெரிதும் மாற்றி, அடிக்கடி கால்வாய் உடையும் இடங்களாக 66 இடங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அங்கே மட்டும் கால்வாய் உடையாமல் இருக்க கான்கிரீட் அரண் எழுப்ப போகிறோம். இது வரை வெறும் 16 கீ.மீ அளவுக்கு தான் அங்குமிங்குமாக ஒருகீ.மீ அல்லது ஒன்றரை கீ,மீ தூரத்திற்கு மட்டும் கான்கிரீட் அரண் எழுப்புகிறோம். இன்னும் சில இடங்கள் பாக்கி. இதை செய்யாவிட்டால் தொடர்ந்து கால்வாய் உடைப்பையும், சேதாரங்களையும் விவசாயிகள் சந்திக்க நேரும்.

கால்வாய் பாசனத்தின் கசிவு நீர் முற்றிலும் அடைக்கப்பட்டுவிட்டால் கசிவு நீர் பாசனத்தின் மூலம் சாகுபடி நடக்கும் 34 கசிவு நீர் திட்டங்கள் பாதிக்கப்படுமே..?

நாங்கள் கசிவு நீரை முற்றிலுமாக அடைக்கும் திட்டத்தை செயல்படுத்தவில்லை. கசிவு நீர் இழப்பு 33 சதவிகதம் என்பதில் இருந்து சுமார் 55 சதவிகிதம் உயர்ந்த நிலையில் கடைமடை விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவதை தடுக்க அதிகபட்சம் 20 சதவிகித கசிவை கட்டுப்படுத்தப் போகிறோம். வழக்கம் போல அந்த 34 திட்டங்களில் கசிவு நீர் கிடைப்பதில் தடை இருக்காது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் பலன்களே தவிர, எந்த பாதிப்பும் இல்லை.

இவ்வாறாக திரு.சிவலிங்கம் விளக்கம் அளித்தார்.

நாம் விசாரித்த வகையில், ‘சில சட்ட விரோத தண்ணீர் திருட்டுகள் இந்த திட்டத்தால் முடிவுக்கு வரலாம்’ எனத் தெரிகிறது. ‘இதனால் சட்டவிரோதமாக கால்வாய்க்கு அருகில் பெரும் கிணறுகள் வெட்டி அங்கிருந்து தங்கள் தொழிற்சாலைகளுக்கும், மினரல் வாட்டர் தயாரிப்புக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் தண்ணீர் உறிஞ்சி பயன் பெற்று வரும் கோடீஸ்வர்கள் பாதிப்புக்கு உள்ளாகலாம்’ எனத் தெரிகிறது. இவர்கள் தாம் சிறு விவசாயிகளை தூண்டிவிட்டு, ‘அவர்கள் பாதிக்கக் கூடும்’ என்ற அச்சத்தை விதைத்திருக்க வாய்ப்புள்ளது எனத் தெரிகிறது. இந்த பெரிய மனிதர்களிடம் யாரேனும் பெரிய அரசியல் ஆளுமைகள் பேச்சுவார்த்தை நடத்தி புரிய வைத்தால், பொது நலன் கருதி நிச்சயம் அவர்களும் விட்டுத் தர முன்வரக் கூடும் என்றே தோன்றுகிறது.

அடிக்கடி உடைப்பு ஏற்படும் பகுதிகளைக் கண்டடைந்து அங்கே மட்டுமே கரையை பலப்படுத்த சிறிய கான்கிரீட் அரண்!

ஆயக்கட்டு விவசாயிகள் பலர் கசிவு நீரால் பலன் அடைந்து பழகிவிட்டனர். அனேக இடங்களில் மதகு நீரை மறந்தே விட்டனர்! கசிவு நீரை நம்பி விவசாயம் செய்வது இயல்பாகி விட்டதால்,  தங்களுக்கான இந்த உரிமை பறிபோய் விடுமோ என அச்சப்படும் மனநிலை பெற்று விட்டனர்.  ஆயக்கட்டு உரிமை என்பது கடைக் கோடி விவசாயிகளும் பயனடைய வேண்டும். எல்லோருக்கும் தண்ணீரை உத்திரவாதப்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கம் உள்ளதாகும்.

கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தால் தடைபட்டுள்ள பாசன கால்வாய் சீரமைப்பை நடைமுறைப்படுத்தக் கோரி, உயர் நீதிமன்றத்தில் கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டதில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு, ‘சீரமைப்பு வேலைகளை கடந்த ஆண்டு மே மாதம் முதல் தொடங்க வேண்டும்’ என்று ஆணையிட்டது.
மேலும், ”சீரமைப்பு வேலைகள் செய்கிற வாகனங்களுக்கும், ஆட்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்” என்று என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி சதீஷ்குமார் அவர்கள் தீர்ப்பு வழங்கினார் . இத்துடன் கீழ் பவானி பாசன கால்வாயில் உள்ள தண்ணீர் திருட்டுக்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று கீழ் பவானி ஆயகட்டு நில உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.
சென்ற ஆண்டு மே மாதம் முதல் தேதி தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின்
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு வேலைகளை நடத்துவதற்கான அரசு அதிகாரிகளின் கூட்டத்தில், ‘விரைவில் கீழ் பவானி கால்வாய் சீரமைப்பு வேலைகள் நடைபெற வேண்டும்’ என்று முடிவு எடுக்கப்பட்டது.

ஆயக்கட்டு விவசாயிகளில் சிலர் கசிவு நீரால் பயன் பெற்றுக் கொண்டிருப்பதால் பாசன சீரமைப்புக்கும், ஒழுங்குபடுத்தலுக்கும் எதிர்ப்பு தெரிவிப்போர்களுடன் கை கோர்த்துள்ளனர்.  இது நோயாளியாக இருக்கும் ஒருவரிடம் மருத்துவர் பரிவோடு நடந்து கொள்வதை முன்னிட்டு, எப்போதும் அந்த மருத்துவரிடம் நிரந்தர நோயாளியாகவே இருக்க ஆசைப்படும் மனநிலைக்கு ஒப்பானது. ஆரோக்கியமான உடல் நிலையை பெறுவதற்கே மறுப்பு தெரிவிக்கும் அளவுக்கு நோயாளி மாற்றப்பட்டிருப்பது தான் இன்றைய அச்சத்திற்கு காரணமாகும்.

”36‌ ‌டி‌ ‌எம்.சி‌ ‌தண்ணீரைக்‌ ‌கொண்டே‌ ‌கீழ்பவானி‌ ‌பாசன‌ ‌நிலங்கள்‌ ‌முழுமைக்கும்‌ ‌பாசன‌ ‌வசதி‌ ‌கொடுக்க‌ ‌முடியாத‌ ‌நிலை‌யில், காவிரி நீர் தீர்ப்பில் தற்போது வெறும் 28 டி.எம்.சியே கிடைக்கிறது. இதை வீணாக்காமல் புத்திசாலித்தனமாக அனைவருக்குமாக பகிர்ந்து தருவதே சிறந்த நீர் மேலாண்மையாகும். தன்னல‌ ‌நோக்கோடு‌ ஆங்காங்கே‌ ‌சிலர்‌ ‌ கீழ்பவானி ஆயக்கட்டில் இல்லாத இடங்களுக்கு கொண்டு செல்லப்படும் முறைகேடான நீரேற்று பாசனங்களை  தடை செய்ய வேண்டும்.‌ ‌ கீழ்பவானி வாய்க்கால் பாசன நோக்கத்துக்காக அமைக்கப்பட்டது என்பதால் பாசனத்திற்கு தான் முன்னுரிமை தர வேண்டும்…” எனக் கூறும் ஆயக்கட்டு விவசாயிகள் குரல் கவனத்திற்கு உரியதே!

66 ஆண்டுகளுக்கு முன்பு கீழ்பவானி பாசனத் திட்டம் உருவக்கப்பட்ட போது, அன்றைய அரசு நிதி பற்றாக்குறை காரணமாக நிலத்தின் இடையிடையே சுமார் இருபத்தி இரண்டாயிரம் ஏக்கர் நிலத்திற்கான பாசனத்துக்குக் கால்வாய்கள் அமைக்காமல் தவிர்த்ததை தாராபுரம் ‘கட்’ என்கிறார்கள். ‘கடந்த அறுபது ஆண்டுகாலமாக, மேற்படி தவிர்க்கப்பட்ட இருபத்தி இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பிற்கும் கால்வாய்கள் அமைத்து பாசன வசதி செய்து தரும் எண்ணம் தற்போதைய சீரமைப்பால் கைகூடும்’ என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன! இத்துடன் ’34 கசிவுநீர் திட்டத்தின் கீழ் உள்ள 17 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கீழ்பவானி ஆயக்கட்டில் இணைக்க வேண்டும்’ என்ற எதிர்பார்ப்பையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

விவசாயத்தைக் கைவிட்டு நகர வாழ்வுக்கு நகர்ந்து விட்ட பாசனம் பெறாத சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களை ஆயக்கட்டில் இருந்து நீக்கம் செய்வதும் முறையாக நடந்தால், பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

இந்தப் பாசனக் கால்வாய் மட்டுமே இங்கு வாழும் அனைத்து மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. பல பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகள் இந்த கால்வாயை நகர்புற மற்றும் ஊரக குடிநீர் விநியோகத்திற்கு நம்பியுள்ளன. இவர்களின் அச்சத்தை போக்கினால், இந்த திட்டம் நிறைவேற ஒட்டு மொத்த மக்களின் ஆதரவும் கிடைக்க வாய்ப்புள்ளது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time