ஊழல் அதிகாரிகள் யாரால் உருவாக்கப்படுகிறார்கள்….?

சாவித்திரி கண்ணன்

’’வாவ்… நீதிமன்றமே இப்படி கேட்டுவிட்டது!’’

’’சபாஷ் நீதிபதிகள்! மக்கள் மனதில் இருப்பதை அப்படியே பிரதிபலிச்சிருக்கார்ப்பா…’’

கூட்டத்தின் கைதட்டலுக்காக பேசும் மேடை பேச்சாளர்கள் குறிப்பாக தொழில்முறை பேச்சாளர்கள் பேசுவதைப் போல நீதிபதிகளும் சமீப காலமாகப் பேசிவருகின்றனரோ..என்ற சந்தேகம் சில நாட்களாக எனக்கிருந்தது! ஒரு முறை என் நண்பனிடம் சொன்னபோது, ’’அடச்சே..உனக்கு மட்டும் தான் இது போன்ற சந்தேகம் வரும்…’’ என்று என கிண்டலடித்தான்!

’’ஊழல் அதிகாரிகளை ஏன் தூக்கிலிடக் கூடாது?’’ என்று மதுரை ஹைகோர்ட் கேட்டவுடன் என் சந்தேகம் தீர்ந்துவிட்டது!

இந்த நீதிபதிகள் ஏதோ வானத்திலிருந்து இப்பத் தான் இறங்கி வந்தார்களா…?

தமிழகத்தில் நெல்கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூபாய் 40 லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதற்குத் தான் இவ்வாறு நீதிபதி எதிர்வினையாற்றியுள்ளார். இது இன்று, நேற்றல்ல, பல ஆண்டுகளாகவே நடக்கிறது. முதலில் ரூ ஐந்தில் ஆரம்பித்து பத்து, இருபது,முப்பது என நாற்பதில் வந்து நிற்கிறது!

தமிழகத்தில் எந்த துறையில் லஞ்சம் இல்லை?

ஆர்.டி.ஒ ஆபீஸ்,தாசில்தார் ஆபீஸ் சுவர்கள் கூட சொல்லுமே ஆயிரம் லஞ்சக் கதைகளை!

சமீபத்தில் ஒரு கேவலமான வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு வந்தது!

அது வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டுவது சம்பந்தப்பட்டது. இந்த ஸ்டிக்கரை வண்டியின் நாலாபுறமும் ஒட்டி ஒளிர்வதன் மூலம் விபத்துகளை தவிர்க்கலாம் என்பதாக 2013 முதல் அமலுக்கு வந்தது! இந்த வருடம் குறிப்பிட்ட இரு கம்பெனிகளின் ஸ்டிக்கரை மட்டுமே வாங்கி அந்த கம்பெனியின் பில்லை காட்டவேண்டும்.வேறு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால் ஏற்பில்லை என தமிழக அரசு உத்திரவிட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து மார்க்கெட்டில் அந்த இரு கம்பெனிகளின் ஸ்டிக்கரின் விலை தாறுமாறாக ஏற்றி வைத்து விற்கப்பட்டது. அதாவது ரூ1,500 ல் வாங்கமுடிந்த ஸ்டிக்கர் விலை ரூ5,000 ஆனது. ’’இதைத் தான் கண்டிப்பாக ஒட்டவேண்டும்’’  என ஆர்.டி.ஓ ஆபீஸ் வாகன ஓட்டிகளை அதட்டியது. பல லட்சம் வாகனங்களுக்கு இப்படி கூடுதல் விலை நிர்ணயித்து வாங்க நிர்பந்திப்பதை எதிர்த்து கோர்ட்டுக்கு போனார்கள் வாகன ஓட்டிகள்! இதைத் தொடர்ந்து, ’’அந்த குறிப்பிட்ட இரு நிறுவனங்களின் ஸ்டிக்கர் எந்த விதத்திலும் மற்றவற்றைக் காட்டிலும் தரத்தில் சிறந்தவையல்ல..,ஆகவே அரசின் இந்த அறிவிப்பை நிராகரிக்கிறோம்’’ என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதன் மூலம் அநீதி நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டது. ஆனால், அந்த மாதிரி ஆர்டர் போட்டு, அந்த இரு கம்பெனிகளிடம் வாங்கச் சொன்னதன் பின்னணியில் உள்ள ஊழலை நீதிமன்றம் கண்டிக்கவோ, தண்டிக்கவோ இல்லாமல் கடந்துவிட்டது.

அதிகாரிகள் செய்யும் ஒவ்வொரு ஊழலுக்கு பின்னாலும், ஆளும் அரசியல்வாதிகள் உள்ளனர். அவர்களின் கவனத்திற்கு போகாமல் எதுவும் நடக்கமுடியாது. அதாவது பெரிய திருடர்களின் ’கன்சர்ன்’ இல்லாமல் இந்த சிறிய திருடர்கள் பிழைக்க இயலாது!

அரசு ஊழியர்களை,அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும் அமைப்பான டி.என்.பி.எஸ்.சியில் ஊழலை ஒழிக்கமுடிந்தாலே முக்கால்வாசி ஊழல்களை கட்டுப்படுத்திவிடலாம். ஊழலின் ஊற்றுக்கண்ணே இங்கு தான் ஆரம்பமாகிறது. நேர்மையாக பல நாட்கள் இரவு,பகலாக படித்து தேர்வு எழுதுபவன் வெற்றிபெற முடியாது காசு கொடுப்பவனுக்குத் தான் அரசுப்பணி என்பது எழுதபடாத நீதியாகத் தொடர்ந்தால் நேர்மையான பணியாளர்கள்,அதிகாரிகள் நாட்டுக்கு எப்படி கிடைப்பார்கள்? அரசு பணிக்கே அமைச்சர்களுக்கு லஞ்சம் கொடுத்து வருவதை தடுக்க முடியாமல்,தண்டிக்க முடியாமல் கையறு நிலையில் ஒரு சில ஊழியர்களை மட்டும் கைது செய்து தண்டித்துவிடும் போக்கு தான் நிலவுகிறது!

நமது சுதந்திர இந்தியாவில் ஊழலில் ஊறித்திளைக்கும் அரசியல்வாதிகளில் ஒரு பத்து சதமானவர்களேனும் இது வரை தண்டிக்கப்பட்டிருந்தால் கூட, ஊழல் ஓரளவு மட்டுப்பட அந்த உதாரணங்கள் பயன்பட்டிருக்கும்! ஆனால்,அதிகாரிகள் தண்டிக்கப்பட்ட அளவுக்கு அரசியல்வாதிகள் தண்டிக்கப்படுவதில்லை என்பதே கசப்பான உண்மை!

நீதிமன்றத்தால் ஊழல்வாதி என்று தண்டிக்கப்பட்டுவிட்ட ஜெயலலிதா, பிறகு குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டது யாரால்? பிறகு மீண்டும் அவர் ஊழல்வாதி தான் என்று நிருபிக்கப்பட்ட நிலையில் ஜெயலலிதாவை தண்டனையில் இருந்து விடுவித்த நீதிபதியை தண்டித்திருக்க வேண்டாமா?

1991 -96ல் நடந்த ஊழல்களுக்கு அவர் ஐந்தாண்டுகளுக்குள் தண்டிக்கப்பட்டிருந்தால் அடுத்து மூன்றுமுறை அவர் முதல்வராகியிருக்கமுடியுமா?

இதையெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால், நெல் மூட்டை ஒன்றுக்கு நாற்பது ரூபாய் கையூட்டு கேட்ட ஊழியரை தூக்கில் தொங்கவிட வேண்டும் என்று சொல்லிய கனம் நீதிபதியவர்கள், ஆளும் அரசியல்வாதிகள் தங்கள் ஆட்சி காலத்தில் நானூறு கோடிகள், நாலாயிரம் கோடிகள் என ஊரறிய கொள்ளையடிப்பதை தடுக்க இன்னும், இதைவிடக் கடுமையாக தண்டிக்கப்பட வழிவகை செய்ய வேண்டுகிறோம்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time