பாதயாத்திரை சாதனையா..? சறுக்கலா..?

-சாவித்திரி கண்ணன்

ஏழு மாதங்களாக, இடைவெளிவிட்டு ஐந்து கட்டங்களாக நடந்துள்ள பாதயாத்திரையால் பலன் என்ன? பாதகங்கள் என்ன? அண்ணாமலை சாதித்தாரா? அல்லது சரிவை சந்தித்தாரா? கட்சி வளர்ந்ததா? உறுப்பினர்கள் எண்ணிக்கை கூடியதா? புதியவர்கள் கட்சிக்கு ஈர்க்கப்பட்டார்களா..? விடை தருகிறது இந்தக் கட்டுரை;

பாதயாத்திரை என்பது ஒரு சக்தி வாய்ந்த அரசியல் நடவடிக்கையாகும். மக்களோடு தொடர்பு கொள்வது, அந்தந்த ஊர் முக்கியஸ்தர்களை அறிந்து கொள்வது, அந்தந்த ஊரின் சமகால பிரச்சினையை புரிந்து கொண்டு அதற்கான தீர்வைக் காண்பது, கட்சியின் பலதரப்பட்ட உள்ளூர் நிர்வாகிகளை, தொண்டர்களை சந்தித்து பழகும் வாய்ப்பு.., எல்லாவற்றும் மேலாக தொடர்ந்து ‘லைம் லைட்டில்’ இருக்கும் வாய்ப்பு போன்றவை பாதயாத்திரையை முறையாக மேற்கொண்டால் கிடைக்கும் பலன்களாகும்.

பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை ஐந்து கட்டங்களாக நடத்தி முடித்திருக்கும் பாத யாத்திரையால் இந்த பலன்கள் கிடைத்ததா..? எனப் பார்க்க வேண்டும்.

பாதயாத்திரை நடத்துவதற்கான முதல் பலமே கட்சியினரின் ஒருங்கிணைப்பாகும். இந்த யாத்திரைக்கு மாநிலப் பொறுப்பாளராக, தமிழக பாஜக துணைத் தலைவர் கே.எஸ்.நரேந்திரன், துணைப் பொறுப்பாளராக அமர்பிரசாத் ரெட்டி நியமிக்கப்பட்டனர். மேலும், 18 குழுக்களும் அமைக்கப்பட்டன. இதில் அமர்பிரசாத் ரெட்டி பல சர்ச்சைகளில் அடிப்பட்டு இடையில் தேடப்படும் குற்றவாளியாக தலைமறைவானார் என்பது அனைவரும் அறிந்ததே!

நரேந்திரனுக்கோ, ஒருங்கிணைப்பு அனுபவம் போதாமை! 18 குழுக்களுக்களுக்குள் ஒருங்கிணைப்பே இல்லை. கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு கூட ஆங்காங்கே முறையாக கேட்டு பெறப்படவில்லை. ஆகவே, கூட்டணி கட்சியினரின் ஒத்துழைப்பு கிடைக்காமலே இந்த யாத்திரை நடந்தேறியதும் ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அதே சமயம் அண்ணாமலையின் பாதயாத்திரை கட்டமைத்துள்ள விதத்தைப் பார்க்கும் போது, சாதிய கட்டமைப்புள்ள் சமூகங்களுக்கு இடையிலான ‘சோஸியல் என்ஜினியரிங்’கை ஒரளவு திறமையாகவே கையாண்டுள்ளனர் எனச் சொல்லலாம்!

கட்சிக்குள் ஒருங்கிணைப்பை முறையாக ஏற்படுத்தாமல் பலர் விலகி நிற்க, சிலர் எடுத்துச் செய்ய என்பதாக பாதயாத்திரை நடந்தேறியது என்கிறார்கள்! குறிப்பாக மூத்த தலைவர்களிடம் அண்ணாமலைக்கு சுமூகமான உறவு இல்லை என்பதால், பெரும் சொதப்பலே நடந்தன. எனினும், மூத்த தலைவர்கள் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டாம் என்பதற்காக ஒப்புக்கு சப்பாக தலை காட்டிச் சென்றனர். உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பை முன் கூட்டியே பேசி வைத்து பெறாமல், அண்ணாமலை ஆங்காங்கே அதிரடியாக தேவாலயங்களுக்கும், மசூதிகளுக்கும் செல்ல முயற்சித்ததில் மோதல்கள் வெடித்தன. இதனால், பல ஊர்களில் சண்டையும் சச்சரவும் ஏற்பட்டன. அண்ணாமலை மீது வழக்குகளும் பதிவாகின.

 குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட இடத்தில் என்பது பல நேரங்களில் தப்பிப் போனது. இது மட்டுமின்றி, குறிப்பிட்ட நேரம் என்பது பெரும்பாலான இடங்களில் நடக்கவில்லை. உதாரணமாக காலை 10 மணிக்கு தொடங்கும் என்றால், அது 12 மணியாகப் போகுமளவுக்கு அண்ணாமலையின் மனம் போன போக்கில் அவரது பிரசன்னம் இருந்தது. முதுகுளத்தூரில் பத்து மணிக்கு தொடங்குவதாகச் சொன்ன யாத்திரைக்கு கட்சியினர், ஊர்மக்கள் எல்லாம் முன்கூட்டியே வந்து காத்து நிற்க, அண்ணாமலையோ மதியம் 12 மணிக்கு யாத்திரை தொடங்கும் இடத்திற்கு வந்தார். ஒவ்வொரு நாளும் கிராமப் பகுதிகளில் 2 சட்டப் பேரவைத் தொகுதிகளையும், நகர்ப்புறங்களில் 4 தொகுதிகளையும் கடக்கும் வகையில் யாத்திரை நடக்கும் என்றதை போல நடக்கவில்லை என்பதே யதார்த்தம்.

இதே போல, ’இந்திந்த வழித்தடம் வழியாக வருவார்’ என அறிவிக்கப்பட்டு, அந்த வழித்தடங்களில் கட்சிக் கொடிகள்,பேனர்கள், பிளக்ஸ்கள் எல்லாம் வைத்து தொண்டர்களும், நிர்வாகிகளும் வழிமேல் விழி வைத்து வெயில் பாராமல், காத்துக் கொண்டிருக்க, அண்ணாமலையோ, சத்தமில்லாமல் அவர்களை நிராகரித்து, வேறு வழியில் அடுத்த ஊருக்கு பயணப்பட்ட சம்பவங்கள் ஏராளம் என்கிறார்கள்! இது ஏதோ சின்னஞ்சிறிய ஊர்களான ஆலங்குடி போன்றவற்றில் மட்டுமல்ல, சென்னையில் கட்சியின் முக்கிய நிர்வாகி கரு. நாகராஜன் தலைமையில் பெரம்பூரில் தொண்டர்கள் காத்து நிற்க, ரேட்டேரி வழியாக அண்ணாமலை கொளத்தூர் தொகுதிக்கு சென்றுவிட்டார் எனத் தகவல் தரப்பட்டது.

இது போல இந்த பாத யாத்திரை உட்கட்சி முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டு வராமல், கூர்மைப்படுத்திவிட்டதையே அண்ணாமலையின் இந்த நடவடிக்கைகள் உணர்த்துகின்றன!

சொகுசான சகல வசதி கொண்ட வேன் என்பது அவசியம் தான்! அதில் குறை காண ஒன்றுமில்லை. ஆனால், கூட்டம் போதுமானதாக இல்லை என்பதற்காக, ‘வேனை விட்டு இறங்கமாட்டேன்’ என பிடிவாதம் காட்டியது ஒரு புறம் என்றால், ‘சில ஊர்களில் கூட்டம் திரளவில்லை, அதற்கான ஆட்களின் வேகம் போதவில்லை’ என பாத யாத்திரை நிகழ்வுகளே ரத்து செய்யப்பட்டதும், ஒரு பெரும் அதிருப்தியாக பேசப்படுகிறது.

ஐந்து கட்ட பாதயாத்திரை என்பது ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது போல, அந்தந்த தேதிகளில் தொடங்கி, அந்தந்த தேதிகளில் முடியவில்லை. சம்பந்தா சம்பந்தமில்லாமல் தள்ளி வைக்கப்பட்டது. எப்போது மீண்டும் தொடங்கும் என்பது அதிரடியாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஒருங்கிணைப்பும், உற்சாகமும் குறைந்தது. இதனால் சென்ற ஆண்டு ஜுலை 28ல் தொடங்கிய தொடங்கிய யாத்திரை ஜனவரி முதல் வாரம் முடிக்க திட்டமிட்டது நடக்கவில்லை. பிப்ரவரி இறுதியில் முடியும் நிலைக்கு ஆளானது. 234 தொகுதிகளும் யாத்திரை நடக்கும் எனச் சொல்லப்பட்டது எனினும், பல தொகுதிகளுக்கு அண்ணாமலை செல்லவே இல்லை.

மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வது. ஆங்காங்கே உறுப்பினர் சேர்க்கை நடத்துவது என்பது குறிக்கோளாக சொல்லப்பட்டாலும், இவை முறையாக நடக்கவில்லை. கட்சியினர் ஒத்துழைப்பு சரியாக அமையவில்லை. அதே சமயம் திமுக ஆட்சியின் மீதான விமர்சனங்களை தூக்கலாக அண்ணாமலை வைத்தது கவனம் பெற்றது.

பாதயாத்திரையில் ஒருசில மணி நேரங்களுக்கு அண்ணாமலை நடக்கையில் பின் தொடர்வதற்கு என திரட்டப்பட்டவர்களுக்கு ருபாய் 200 முதல் 500 வரை அந்தந்த ஊருக்குதக்க கொடுக்கப்பட்டதானது, ”மிகக் குறைவானதாக உள்ளது போதுமானதில்லை” என்ற பேச்சு தொடர்ந்து இருந்தது. சில இடங்களில் லோக்கல் நிர்வாகி பொறுப்பெடுத்து கூடுதல் தொகை செலவு செய்து ஆட்கள் திரட்டினார். எனினும் சாப்பாடு, பலகாரங்கள் தருவதில் சொதப்பிவிட்டார்கள்! குடிதண்ணீர் ஏற்பாடு கூட பல ஊர்களில் முறையாக செய்யவில்லை என்கிறார்கள்!

மற்றொரு புறம் பாதயாத்திரை பெயரைச் சொல்லி, வசூல் வேட்டை என்பது சகட்டுமேனிக்கு நடந்துள்ளது. அதுவும் அமித்ஷா, மோடி, பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன் போன்ற பெரிய அதிகார ஆளுமைகள் தொடங்கி வைப்பதும், முடித்து வைப்பதுமாக இருந்தது என்பது வசூல் வேட்டைக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது. இதில் தமிழ் நாட்டில் பொருளாதாரக் குற்றத்தில் ஈடுபட்டுள்ள தொழில் அதிபர்களாகத் தேடி கண்ட்டைந்து வசூல் வேட்டை நடந்துள்ளது. இந்த வசூல் வேட்டையில் அண்ணாமலையும், அமர்பிரசாத் ரெட்டியும் தான் பிரதானமாக ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது! ‘அருத்ரா கோல்டு ஹவுஸ்’ ஹரிஸ், ‘லைவ் லைன்’ ஹாஸ்பிட்டல்ஸ் ராஜ்குமார், திருச்சியின் ‘ஹூண்டாய்’ டீலர்.. இப்படியாக பலரிடம் வசுல் வேட்டை பல கோடிகளில் நடந்துள்ளதாம்! இவை தவிர ஆயிரங்கள், லட்சங்களில் நடந்தவை தனியாகும்.

காலுக்கு ஷு அணிந்திருந்த போதிலுமே கூட, தூத்துக்குடியில் அண்ணாமலை பாதயாத்திரை தொடங்கிய இடம் முதல், பாதயாத்திரையை முடித்த இடம் வரை 2.5 கிலோமீட்டர் தூரம் வரை கர்நாடக பதிவெண் கொண்ட டேங்கர் லாரிகளில் இருந்து 80 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சாலையில் ஊற்றப்பட்டது. அண்ணாமலையின் கால் சுட்டு விடக் கூடாது என்பதற்காக 80,000 லிட்டர் தண்ணீர் சாலையில்  ஊற்றப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் பெரும் பேசுபொருளானது.

மொத்தத்தில் எந்த நோக்கத்திற்காக பாதயாத்திரை நடந்ததோ.., அது ஈடேறவில்லை. ஊடக வெளிச்சமும், ஆங்காங்கே அண்ணாமலை அதிரடியாகப் பேசிச் சென்றதும் தான் நடந்தேறியுள்ளது. இந்த பாத யாத்திரையால் பாஜக பலம் பெற்று உள்ளதா..? என்றால், பல நிர்வாகிகளும், தொண்டர்களும் மன உளைச்சலுக்கு ஆளானது தான் கண் கூடான உண்மையாகும்.

‘பாத யாத்திரையை நடத்துவதற்கான பக்குவமோ, ‘கட்சியை பலப்படுத்த வேண்டும்’என்ற அக்கறையோ அண்ணாமலைக்கு இல்லை’ என்பது தெளிவு. அவர், ‘தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்ற ஒற்றை குறிக்கோளை மட்டுமே கொண்டு இயங்கிக் கொண்டுள்ளார். அது சிறப்பாகவே நடந்தேறி உள்ளது. மாநில கட்சிக்குள் பல திறமைசாலிகள் இருக்க, தமிழ்நாட்டிற்கு அண்ணாமலை போன்ற அரைவேக்காட்டுத் தலைவர் போதுமானது என பாஜகவின் டெல்லித் தலைமை நினைக்கிறதோ, என்னவோ!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time