யாரோ பலனடைய இளம் பெண்களை பலிகடாவாக்குவதா?

-சாவித்திரி கண்ணன்

ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கும்  சூழ்ச்சி போல,  ‘கர்ப்பபை புற்று நோய்’  என பயமுறுத்தி, 9 வயதிலிருந்து 15 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசித் திட்டமாம்! இந்த  HPV தடுப்பூசியால் உயிரிழப்புகள், பக்க விளைவுகள் உறுதிபட்ட பிறகும், வலிந்து  திணிக்கும் மர்மம் என்ன?  யார், யார் பலனடைய..?

Human Papilloma என்ற Virus-ஆல் ஏற்படுவதே கர்ப்பப்பை வாய் புற்று நோய் எனப்படுகிறது. பொதுவாக பலருடன் பாலியல் உறவு கொள்வோருக்கு முன் எச்சரிக்கையாக இந்த தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.  கர்ப்பப்பை புற்று நோய் என்பது கருப்பை வாயை பாதிக்கும் ஒரு நோயாகும். இது யோனியுடன் இணையும் கருப்பையின் கீழ் பகுதியில் உருவாகக் கூடியது.  கர்ப்பப்பை வாயில் உள்ள செல்கள் பெரிதாக வளர்ந்து  கட்டிகளை உருவாக்குவதே இதன் அறிகுறியாகும்.

மிக, மிக அரிதாக வரக்கூடியது: 

உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கைபடி கருப்பை வாய் புற்று நோய் 55 முதல் 59 வயதுடைய இந்திய பெண்களிடையே 0.0147% நிகழ்வு விகிதமாகவும் மற்றும் இறப்பு விகிதம் 0.0092% ஆகவும் உள்ளது. ஆக, நிகழ்வு மற்றும் இறப்பு விகிதம் இவ்வளவு மிக,மிகக் குறைவாக இருக்கிற ஒரு நோய்க்கு ஏன் அனைத்து பெண் குழந்தைகளையும் பலிகடா ஆக்க வேண்டும்? தேவையில்லாமல் போடப்படும் ஒரு தடுப்பூசி எவ்வளவு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன!

முதலில் இந்த கர்ப்பபை புற்று நோய் என்பது அனைவருக்கும் வருவதல்ல, பெரும்பாலும் ஒன்றுக்கு மேற்பட்ட உடலுறவு கொள்ளும் பெண்களில், அதிலும் பலவீனமான மிகச் சிலருக்கே வர வாய்ப்புள்ளது. பாலியல் தொடர்புகளோடு கர்ப்ப தடை மாத்திரைகள் அதிகம் எடுப்போர், கர்ப்ப கலைப்பை தடுக்கும் மருந்துகள் எடுப்போர், அதிகமாக புகை பிடிக்கும் பழக்கம் உள்ளோர்.. ஆகியோருக்கு மட்டுமே வரும் வாய்ப்புகள் உள்ளது! கீழ் காணும் அட்டவணையை கவனமாக படித்தீர்கள் என்றால் தெளிவு கிடைக்கும்.

இந்த HPV கடந்த காலத்தில் ஏற்படுத்திய விளைவுகளை சற்று ஆராய்வோம்.

அமெரிக்கா மூன்று வகையான HPV தடுப்பூசியின் காப்புரிமையை வைத்துள்ளது. கார்டசில் மற்றும் செர்வாரிக்ஸ் ஆகியவை நிரூபிக்கப்படாதவை மட்டுமல்ல, அபாயகரமான HPV தடுப்பூசிகளாகும்.

# கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய், இந்தியாவில் MSD Pharmaceutical Pvt Limited மற்றும் GlaxoSmithKline Ltd. என்ற மிக செல்வாக்குள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள்  மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

உலகத்தில் மருந்து, மாத்திரை வியாபாரிகளை கொழுக்க வைக்க செயல்படும் அமைப்பு!

WHO எனப்படும் உலக சுகாதார அமைப்பின் மூலம் இத்தகைய நிர்பந்தங்கள் இந்தியா போன்ற நாடுகளுக்கு தரப்படுகிறது! உலக சுகாதார அமைப்பு என்பது அதற்கு நிதி உதவிகள் அளிக்கும் பெருமுதலாளிகள் பலனடைவதற்காக இது போன்ற நிர்பந்தங்களை தருகிறது என்பது சர்வதேச அளவில் தெரிய வந்துள்ளது.

HPV இந்தியாவில்  அறிமுகமானது எப்போது :

இந்தியாவை பொறுத்த வரை  Gardesil மற்றும் Cervarix எனும் இரண்டு வகையான HPV தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளன! முதன் முதலில்  2009 ஆம் ஆண்டு ஆந்திரா, குஜராத் மாநிலங்களில் HPV தடுப்பூசி அறிமுகபடுத்தப்பட்டது. பிறகு 2016 – 2020 காலகட்டத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கான பொது HPV தடுப்பூசி திட்டத்தைத் டெல்லி மாநகரம் தொடங்கியது.

நவம்பர் 7, 2016  முதல் மார்ச் 2017 வரை மொத்தம் 1,200 டோஸ்கள் 11 முதல் 13 வயதுடைய பெண்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன! 2018 ஆம் ஆண்டில், சிக்கிம் மாநிலம் 9-13 வயதுடையவர்களுக்கு HPV தடுப்பூசியை அறிமுகப்படுத்தியது. தோராயமாக 25,000 பெண்களை இலக்காகக் வைத்து இந்த தடுப்பூசிகள் செலுத்தபட்டன!

2023 ஆம் ஆண்டு தேசிய மருந்து கட்டுப்பாடு  ஆணையம் கர்ப்பபை புற்றுநோய் தடுப்பூசியான ‘Cervavac’ தயாரிக்க, பாஜக அரசின் செல்லப் பிள்ளையான Serum Institute of India எனும் நிறுவனத்திற்கு சந்தை அங்கீகாரத்தை கையளிக்கிறது.

இந்த சீரம் நிறுவனம் தான் கொரானா காலகட்டத்திலும் மிகப் பெரிய அளவில் கல்லா கட்டிய நிறுவனமாகும். அறிவியலின் பெயரால் மனித உயிர்களை விழுங்கி செறித்து மரணங்களுடன் விளையாடும் இந்த நிறுவனத் தயாரிப்புகள் குறித்த பக்க விளைவுகளை மறைத்து, மர்மங்களோடு மருத்துவத்தை அணுகும் மத்திய அரசு நிர்வாகம் நமக்கான சாபக் கேடாகும்!

இதனை தொடர்ந்து ஜூன் 2023 இல் ஆறு மாநிலங்களில் [கர்நாடகா, தமிழ்நாடு, மிசோரம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசம்] ஒன்பது முதல் 14 வயது  சிறுமிகளுக்கு. தடுப்பூசி பிரச்சாரத்தின் முதல் கட்டத்தில், 2.55 கோடி சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டை பொறுத்த வரை எத்தனை சிறுமிகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தபட்டது என்று அறிவிக்கவில்லை.

HPV தடுப்பூசியின் பக்க விளைவுகள்:

தடுப்பூசியின் பக்க விளைவுகளை பட்டியலிடும் உலக சுகாதார அமைப்பின் https://www.vigiaccess.org/ எனும் இணையத்தில் Gardesil 9 மற்றும் Cervarix தடுப்பூசியின் பக்க விளைவுகள் பட்டியலில் மரணம் உட்பட பல ஆபத்தான நோய்களை பார்க்க முடிகிறது

பக்க விளைவுகளால் HPV தடுப்பூசியை தடை செய்த நாடுகள்;

 # ஆஸ்திரேலியாவில் நியூ தென் வேல்ஸ் மாகாணத்தில் HPV தடுப்பூசி செலுத்தப்பட்டதை தொடர்ந்து நான்கு இளம் பெண்களுக்கு  கருப்பைச் செயலிழப்பு ஏற்பட்டது.

# அமெரிக்காவில் HPV தடுப்பூசி செலுத்தப்பட்டபின் 3 பெண்களுக்கு மாரடைப்பு  ஏற்பட்டது. இது மட்டுமில்லாமல், அமெரிக்காவின் தடுப்பூசி பக்க விளைவு பட்டியலில் குழந்தை பிறப்பில் குறைபாடுகள், மார்பகத்தில் கட்டி முதலான பிரெச்சனைகள் பார்க்க முடிகிறது.

# ஜப்பானிய சுகாதார அமைச்சகம் 2013 இல் 12 முதல் 16 வயதுடைய பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படக்கூடாது என நாடு தழுவிய அறிவிப்பையே பகிரங்கமாக வெளியிட்டு உள்ளது.

# கொலம்பியாவில் 200 பெண்கள் hpv தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர்!

# சுவீடன் நாட்டில் இந்த தடுப்பூசி செலுத்திய பின் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் நிகழ்வு 20-49 வயதுடைய பெண்களிடையே அதிகரித்தது! இதனால், அந்த நாட்டில் HPV vaccines போடுவது நிறுத்தப்பட்டது

# மெக்ஸிகோவில் 2015 இல் hpv தடுப்பூசிகளைப் பெற்ற பிறகு பெண்கள் மயக்கம் அடைந்தனர். இதனால், உடனே நிறுத்தப்பட்டது.

# நோர்வே நாட்டை சேர்ந்த கரலின் எனும் கால்பந்தாட்ட வீராங்கனையான இளம் பெண்ணுக்கு hpv தடுப்பூசி செல்லுத்தப்பட்ட பின் பக்கவாதம் ஏற்பட்டது! இந்த நிலைக்கு காரணம் gardesil எனும் HPV தடுப்பூசி என்று பதிவு செய்துள்ளனர்.

# நியூ சிலண்ட் நாட்டில் HPV தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் 3 பெண்கள் இறந்தனர்!

# அயர்லாந்தில் கிட்டத்தட்ட 650 சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி செலுத்திய பின் மருத்துவ  சிகிச்சை தந்து காப்பாற்ற வேண்டிய இக்கட்டுக்கு தள்ளப்பட்டனர்.

பழங்குடி பெண்களை பலிகடாவாக்கிய இந்திய அரசு;

2009 இல், அன்றைய ஆந்திராவில் உள்ள கம்மம் மாவட்டத்தில் சுமார் 16,000 பழங்குடியின சிறுமிகளுக்கு  இந்த தடுப்பூசி செலுத்தபட்டது. இதனால் சில மாதங்களிலேயே பலரும்  நோய்வாய்ப்படத் தொடங்கினர், அடுத்த ஆண்டே இந்தப் பெண்களில் ஐவர் இறந்தனர்.

குஜராத்தின் வதோதராவில்  14,000 பழங்குடியின குழந்தைகளுக்கு  Glaxo smith நிறுவனம் தயாரித்த  Cervarix  தடுப்பூசி போடப்பட்டதில் 7 சிறுமிகள் இறந்தனர். இதைத் தவிர, 120 க்கும் மேற்பட்ட சிறுமிகள் கடுமையான பக்க விளைவுகளை அனுபவித்தனர்  2 வருடத்திற்கு  பிறகு பல பெண்களுக்கு  தொடர்ந்து வயிற்றுவலி, தலைவலி, மயக்கம், மற்றும் சோர்வு. மாதவிடாயின் போது, அதிக இரத்தப் போக்கு  மற்றும் தீவிர மனநிலை மாற்றங்கள் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆந்திராவைச் சேர்ந்த 4 சிறுமிகளும், குஜராத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளுமாக மேன்மேலும் உயிரிழந்தனர்!

Jan Swasthya Abhiyan and Anthra எனும் அமைப்புகள் ஆந்திராவில் உள்ள பகுதிகளில் ஒன்றான HPV தடுப்பூசி செலுத்தபட்ட பத்ராசலத்தில் மார்ச் 2010 இல் மத்திய அரசி நாடாளுமன்ற ஆய்வுக் குழு ஒரு ஆய்வு நடத்தி ஆகஸ்ட் மாதம்  வெளியிட்ட அறிக்கையில் PATH, பில் கேட்ஸ் மற்றும் ICMR ஆகியவற்றின் மேல் கடுமையான குற்றசாட்டை வைத்துள்ளது.  ICMR பிரதிநிதிகளின் ஆய்வுகள், மானுட நலன்களில் ஆர்வமின்றி PATH என்ற நிறுவன  நலன்களை மேம்படுத்துவதில் செயல்பட்டதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது! உலக மனிதகுலத்தை உறிஞ்சி உலக பணக்காரன் என்ற உச்சத்தை தொட்ட பில்கேட்ஸ் மீது நோய்களை பரப்பி தடுப்பூசிகளை விற்பவர் என்ற விமர்சனம் உலக அளவில் வைக்கப்படுகிறது.

ஆக, PATH, BMGF, ICMR, CDSCO மற்றும் DCGI ஆகியவை செய்த தவறுகள் அப்பட்டமாக ஆதாரங்களுடன் வெளிப்பட்டும்,

8 சிறுமிகளின் அநியாய மரணங்கள் அறியப்பட்டும்,

ஏராளமான பெண்கள் பக்க விளைவுகளால் பாதிக்கபட்டிருப்பது கண் கூடாகத் தெரிந்த பிறகும்,

இந்த தடுப்பூசி எதற்கு?

இதோ இந்த அட்டவணை HPV ஊசி போடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளை வரிசையாக பட்டியல் போட்டுக் காட்டியுள்ளது! இப்படி இருக்க இதை திணிப்பது ஏன்?

11 ஆண்டுகள் கடந்த நிலையில் எல்லாம் மறக்கப்பட்டிருக்கும் என்ற எண்ணமா? அந்த மரணங்களுக்கும், பக்க விளைவுகளுக்கும் இது வரை நடவடிக்கை எடுக்காமல் இருந்தது, மீண்டும் இந்த அட்டூழியத்தை நிகழ்த்தவா? எனப் பல கேள்விகள் எழுகின்றன!

இந்தக் கருப்பைப் புற்றுநோய்த் தடுப்பூசித் திட்டத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில், இடைக்காலத் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் நாடாளுமன்ற ஆய்வுக்குழு அரசுக்கு அளித்த அறிக்கையை அடிப்படையான ஆவணமாகக் கொள்ளலாம் என 2018 இல் தீர்ப்பு வழங்கியதை மறக்கலாமா?

இந்த நிலையில் நம் பெண் குழந்தைகளின் உடல் நலன் குறித்து சற்றும் கவலைப்படாமல் மீண்டும் அதே தடுப்பூசித் திட்டத்தை திணிப்பது யாருக்கு உதவ? யார் பலனடைய..? இந்த அப்பட்டமான சட்ட மீறலை அரசே செய்யத் துணிவது தான் வேதனை!

2009 இல் ஏற்பட்ட உயிர் சேதங்களுக்கு பிறகும் நம் நாட்டில் தடுப்பூசி தொடர்பான விடயத்தில் வெளிப்படை தன்மை என்பது துளியும் கடைபிடிக்க படுவதில்லை..!

 பெற்றோர்களுக்கு இந்த உண்மைகளை மறைத்து பள்ளிகள் வாயிலாக திணிக்கிறீர்கள்!

நாட்டில் ஆங்காங்கே நடக்கும் திடீர் இறப்புகளுக்கு பின்னணியில் சமீபத்திய தடுப்பூசி காரணமா இல்லையா என்று கண்டறியப்பட வேண்டும்.

உயிரோடு இருந்து கொண்டே கர்ப்பபை புற்று நோயால் தான் இறந்து விட்டதாக நாடகமாடிய பூனம் பாண்டே எனும் நடிகை கர்ப்பபை புற்று நோயால் இறந்தது போன்ற செய்தியை ஒரு நாளெல்லாம் காட்டி, அந்த நோய்க்கான தீர்வு HPV தடுப்பூசி ஒன்றே என்று விளம்பரம் செய்து, மக்களை கலவரப்படுத்தி, தடுப்பூசியை திணிப்பது எந்த வகையில் அறம்..? அயோக்கியத்தனமல்லவா?

Insurance, Informed consent, AEFI, Patient Information Sheet , VAERS, Autopsy இந்த விதிமுறைகள் கடைபிடிக்கபட்டால் மட்டும் தான் இந்தியாவில் தடுப்பூசிகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் முதலில் வெளிவரும். தடுப்பூசி விடயத்தில் தொடர்ந்து Insurance, Informed consent, AEFI, Patient Information Sheet , VAERS போன்ற முக்கிய விவரங்கள்  இருட்டடிப்பு செய்யப்படுகின்றன! தடுப்பூசி போட்டு பாதிக்கப்பட்டவர்கள் பட்டியல் தனி நபர்களின் முயற்சியாலும், Awaken India Movement போன்ற அமைப்புகளாலும் சேகரிக்க பட்டுள்ளதை தவிர இந்தியாவில் அதிகார பூர்வ AEFI ரிப்போர்ட் மிக மிக குறைவு.

உலக சுகாதார அமைப்பின் மூலம் இத்தகைய நிர்பந்தங்கள் இந்தியா போன்ற நாடுகளுக்கு தரப்படுகிறது! உலக சுகாதார அமைப்பு என்பது அதற்கு நிதி உதவிகள் அளிக்கும் பெருமுதலாளிகள் பலனடைவதற்காக இது போன்ற நிர்பந்தங்களை தருகிறது என்பது சர்வதேச அளவில் தெரிய வந்துள்ளது.

HPV தடுப்பூசியின் விளைவுகளை தொகுத்து மருத்துவ வல்லுனர்களைக் கொண்ட Awaken India Movement எனும் சமூக நலன் அமைப்பு, வெள்ளை அறிக்கை மூலம் பல துறை அதிகாரிகளுக்கு இந்த தடுப்பூசி போடுவது மிக மோசமான விளைவை நாட்டிற்கு கொண்டு வரும் என்று பல கடிதங்கள் எழுதியும் அரசிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை!

ஏதோ சில கார்ப்பரேட் நிறுவனங்கள் பலனடைய விவசாயத்தில் ரசாயன உரங்கள், பூச்சி கொல்லி, களைக் கொல்லி மருந்துகள், செறிவூட்டப்பட்ட அரிசி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், ஆபத்தான தடுப்பூசிகள்..என அடுத்தடுத்து மக்களை பலிகடாவாக்கும் நம் மத்திய, மாநில அரசுகள் என்று தான் திருந்துமோ..? இல்லாவிட்டால், அவற்றை திருந்த வைப்பது நம் கடமையாகும்.

மேற்படி விவகாரங்கள் குறித்து மேலும் தெளிவு பெற;

https://awakenindiamovement.com/legal-letter-for-hpv-vaccines/

-சாவித்திரி கண்ணன்

(தகவல்கள் உதவி ஹேமா)

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time