வேலை தருவதாக பணம் பறிக்கும் ‘ஆன்லைன்’ மோசடிகள்!

-செழியன்.ஜா

வேலை இல்லா திண்டாட்டத்தையே கொண்டாட்டமாக்கி, வேலை தருவதாக ஆசைகாட்டி, பணம் பறித்து ஆன்லைன் மோசடிகளில் ஈடுபடுகிறது சில கும்பல்கள்! இவர்கள் எப்படியெப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள்? இளைஞர்கள் எப்படி தூண்டில் மீன் போல இவர்கள் வலையில் விழுந்து துடிக்கிறார்கள்..! தீர்வு என்ன?

மக்களிடம் இருந்து பணம் திருடுவது பல வகையில் நடைபெறுகிறது. நேரடியாக பணத்தை திருடுவது, ஆசை வார்த்தைகள் சொல்லி பணத்தை திருடுவது, ”வங்கியில் இருந்து பேசுகிறோம்” என்று கூறி பணம் திருடுவது, ”வெளிநாட்டில் வேலை வாங்கி தருகிறேன்” என்று பணம் திருடுவது, தொழில்நுட்ப உதவியுடன் நேருக்கு நேர் பார்க்காமல் வேலை தேடுபவர்களை குறி வைத்து, ”சிறு தொகை செலுத்துங்கள் சுலபமாக பல ஆயிரங்கள், லட்சங்கள் சம்பாதிக்கும் வேலை  தருகிறோம்” எனத் திருடுவது  சமீபமாக அதிகம் நடைபெறுகிறது.

பல சமூக வலைத்தளங்கள் பொழுது போக்கிற்கு இருந்தாலும், அதில் ஓர் முக்கிய சமூக வலைத்தளமான Linkind in  வேலை தேடுபவர்களின்  நண்பன் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு வேலை தருபவர்களையும், வேலை தேடுபவர்களையும் இணைக்கும் பாலமாக இந்த வலைத்தளம் செயல்படுகிறது.

ஒருவர் வேலை தேடுபவர் என்றால், அவருடைய சுய குறிப்புகள் உள்ளடக்கிய Biodata வைத்து இருப்பார். நாளிதழில் வரும் விளம்பரங்களை பார்த்து பல நிறுவனங்களுக்கு அதை அனுப்புவார் இது பழைய முறையாகும். இன்றைய காலகட்டத்தில் எளிமையாக Linkedin வலைத்தளத்தில் உங்களுடைய சுய குறிப்புகள் உள்ளடக்கிய Bio-Data உள்ளீடு செய்து விட்டால் போதும். பல நிறுவனங்கள் இப்படி Linkedin இணையத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ள Bio-Data களை சரி பார்த்து தங்களுக்கு தேவையான நபர்களை வேலைக்கு எடுக்கிறார்கள்.

இதனால் பல நிறுவனங்களுக்கு நாம் தனித் தனியாக Bio data அனுப்ப வேண்டி இருக்காது. மற்றும் சுலபமாக ஏராளமான நிறுவனங்கள் பார்வைக்கு நம் Biodata செல்லும்.

இப்படி பயனுள்ளதாக உள்ள Linked.in வலைத் தளத்தில் பல போலி நிறுவனங்கள், நபர்கள் செயல்பட்டு இத்தகையை Biodata களை தவறாக பயன்படுத்தி, வேலை தேடுபவர்களிடம் பணம் பறிக்கும் வேலையை செய்து கொண்டு இருக்கிறது.

சமீப ஆண்டுகளில் பல தொழில்நுட்ப (IT) நிறுவனங்கள் பல ஆயிரம் நபர்களை வேலையில் இருந்து நீக்குகிறது. அப்படி வெளியேறும் நபர்கள் உடனடியாக புதிய வேலை  தேட தொடங்குகிறார்கள். பல விதக் கடன் நெருக்கடியில் இருக்கும் இவர்கள் எப்படியாவது உடனே ஓர் வேலையில் சேர முயற்சிக்கிறார்கள்.

நீண்ட வருடங்களாக வேலை தேடி கொண்டு இருப்பவர்கள் எப்படியாவது ஒரு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்று Linkedin வலைத் தளத்தை தொடர்ந்து பயன்படுத்தி கொண்டு இருப்பார்கள் இத்தகைய நபர்கள்  மோசடி நபர்களிடம் எளிமையாக மாட்டி கொள்கிறார்கள்.

மோசடி நபர்கள் எப்படி செயல்படுகிறார்கள்?

பெரிய நிறுவன அதிபர் பெயரில்  சமூக வலை தளத்தில் கணக்கு தொடங்கி உங்களை தொடர்பு கொள்வது மற்றும் மிகப் பெரிய நிறுவனம் அல்லது தொழில் அதிபருடன் தனக்கு தொடர்பு உண்டு என்பது போல் காட்டி, உங்களுக்கு வேலை வாங்கி  தருவதாக ஆசைகாட்டி பணம் கேட்பது.

போலியாக  ஒரு நிறுவனத்தை தொடங்கி, அதில் வேலை தருவதாகச் சொல்லி உங்கள் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் – ஆதார் எண் , வங்கி விவரங்கள் போன்றவை – பெற்று மோசடி செய்வது, பிளாக் மெயில் செய்வது!

போலியாக  ஒரு இணைப்பை கிளிக் செய்யச் சொல்வார்கள். அந்த இணைப்பு வழியாக சென்றால் வேலை, தொடர்பான தகவல் தரப்படும் என்று சொல்லி நம்மை அவர்கள் வலையில் விழ வைப்பார்கள்.

இன்னும் சில மோசடி நபர்கள் வீட்டில் இருந்து செய்ய கூடிய வேலையே கொடுத்து அதற்கு தருவதாக சொல்ல பட்ட பணத்தை கொடுக்காமல் ஏமாற்றுவார்கள். பண நெருக்கடியில் வேலையை செய்து கொடுத்துவிட்டு செய்த வேலைக்கு பணம் கிடைக்காது எனத் தெரிந்த உடன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். ஏமாற்றியவர்களை தொடர்பு கொள்ளவும் முடியாது. அதற்குள் வேறு மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் மாற்றி இருப்பார்கள்.

உண்மையாக வேலைக்கு ஆட்களை தேடும் நிறுவனங்கள் எந்த காரணத்தை கொண்டும் பணம் கேட்க மாட்டார்கள்.  அவர்கள் அனுப்பும் மின்னஞ்சலில் அப்படி எந்த தகவலும் இருக்காது. மற்றும் அவர்களுடைய நிறுவனம் பெயர் கொண்ட மின்னஞ்சலில் இருந்து தான் நம்மை தொடர்பு கொள்வார்கள். பொது மின்னஞ்சலான ஜிமெயில் போன்றவற்றில் இருந்து தொடர்பு கொள்ள மாட்டார்கள்.

இதை உணர்ந்த மோசடி கும்பல் இதே போல் போலியாக நிறுவனத்தை உருவாக்கி அதன் பெயரில் மின்னஞ்சல் தொடங்கி நம்மை தொடர்பு கொள்வார்கள். அதனால் ஒரு நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்தால் ஒரு முறைக்கு பல முறை அந்த நிறுவனத்தை குறித்து ஆய்வு செய்து முடிவெடுத்தல் சிறந்தது.

நண்பர் கார்த்திகாயினி வேலை செய்து கொண்டு இருந்த நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்திற்கு மாற ஆன்லைன் வழியாக பதிவு செய்து இருந்தார். Capgemini என்ற நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக சொன்ன ஒரு நபரிடம்  தொடர்ந்து ஒரு வாரம் பேசினார். அடுத்த வாரம் வேலை உறுதி அதற்கு 30 ஆயிரம் ரூபாய் முன் பணமாக செலுத்த வேண்டும் என்று சொன்னார். உடனே கார்த்தி தன்னிடம் இருந்த கிரெடிட் கார்டு தேய்த்து 30 ஆயிரம் அந்த நபர் குறிப்பிட்டு இருந்த வங்கி கணக்கில் செலுத்தி விட்டார். மறுநாள் முதல் அந்த நபரின் மொபைல் எண் ஸ்விட்ச் ஆப்பில் இருந்தது கார்த்திகாயினிக்கு அச்சம் உண்டானது.

வேலை இல்லை என்றாலும் பரவாயில்லை கிரெடிட் கார்டு வழியாக பணம் எடுத்துக் கொடுத்தது கோபத்தை வர வைத்தது. எந்த பயனும் இல்லை. அடுத்த ஒரு வாரம் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். அடுத்த மாதம் வந்த சம்பளத்தை எடுத்து கிரெடிட் கார்டு தொகையை கட்டி, இந்த பிரச்சனையில் இருந்து வெளியே வந்தார்.

வேலை இல்லாமல் தேடுபவர்கள், கடன் அதிகமாகி எதாவது ஒரு வேலைக்கு செல்லாம் என்று தேடுபவர்கள் இந்த மோசடி நபர்கள் கேட்கும் பணத்தை கொடுத்தால் ஏற்கனவே வேலை இல்லை என்ற ஒரு மன உளைச்சல் அடுத்து பணம் இழந்தது ஒரு மன உளைச்சல். இதனால், வீட்டிலும், வெளியிலும் சந்திக்கும் அனைவரிடமும் எரிச்சலாக பேசுவார்கள். வாழ்க்கை மீது பிடிப்பு இல்லாமல் நடந்து கொள்வார்கள்.

வேலை தேடுபவர்களின் முக்கிய சமூக வலைத்தளமான Linkedin வலைத்தளத்தில் அப்துல் ஹமீது என்பவர் வேலை தேடிய போது அதற்காக 98 லட்சம் ரூபாய் வரை மோசடி கும்பலுக்கு செலுத்தி கடைசியில் வேலையும் கிடைக்காமல், கொடுத்த பணம் கிடைக்காமல் கடன் அதிகமாகி  போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளார்.

அப்துல் ஹமீதின் அவருடைய நேரடி வாக்குமூலம்; 

நான் என்னுடைய வேலை வாய்ப்புக்காக Naukri & Linkedin என்ற இணைய தளத்தில் பதிவு செய்து வைத்திருந்தேன். அதன் பேரில் மார்ச்-29,.2023 அன்று Verve Group என்ற நிறுவனத்தில் இருந்து Evelyn என்பவர் வாட்ஸ் அப் மூலமாக என்னை தொடர்பு கொண்டு, ஆன்லைன் வேலையை அறிமுகம் செய்ததாக தெரிவித்து, ”என்னிடம் சில கேள்விகள் கேட்கப்படும்” என்று தெரிவித்தார்

அதற்கு நான் சரியாக பதில் சொன்னால், எனக்கு பணம் தருவதாகவும் அது தான் வேலை என்றும் சொன்னார்கள். அவர்கள் சொன்ன விஷயங்களை நம்பி நான் வேலை செய்து வந்தேன். அதன்படி ‘எனக்கு ட்ரேட்  (Trade) மூலமாக VIP Task’ என்று சொல்லி, ‘அவர்கள் சொல்லும் வங்கிக் கணக்கிற்கு உடனடியாக பணம் செலுத்தினால், நான் செலுத்திய பணத்திற்கு மேல் 30 சதவீதம் கூடுதல் பணம் எனக்கு தரப்படும்’ என்று தெரிவித்தார்கள்.

மார்ச்-29,2023 தொடங்கி மே மாதம் தொடக்கம் வரை பல்வேறு கட்டங்களாக அவர்கள் குறிப்பிட்ட வெவ்வேறு வங்கிகளின் (Yes Bank, ICICI) வெவ்வேறு கிளைகளில் சில ஆயிரங்கள், லட்சங்கள் என்பதாக நான் என்னுடைய ஐசிஐசிஐ வங்கி  மறைமலை நகர் கிளையில் இருந்து ரூபாய் 98,16,985 தொகையை பகுதி பகுதியாக  அனுப்பினேன். எந்த சந்தேகமும் தோன்றாத வகையில் மிகவும் நேர்த்தியாகவும், கனிவாகவும் ஆங்கிலத்தில் பேசினார்கள்! அந்தப் பேச்சை நம்பி, கேட்கும் பணத்தை எல்லாம் அனுப்பி வைத்து புதிய எதிர்காலத்திற்காக காத்திருந்தேன்.

அப்துல் ஹமீது

ஆனால், ஒரு கட்டத்தில் அவர்கள் என்னை பிளாக் செய்து விட்டார்கள்! நான் இது தொடர்பாக என்னுடைய வழக்கறிஞரை அணுகி, கமிஷனர் ஆபீசில் புகார் கொடுத்தேன் மே-15, 2023 அன்று நான் நடந்ததை கமிஷனர் அமல்ராஜ் சாரிடம் நான் ஏமாற்றப்பட்ட விஷயத்தை சொன்னேன். அப்போது அமல்ராஜ் சார், ”சைபர் கிரைம் மூணாவது தளத்தில் உள்ளது நீங்கள் டிசி சுப்புலட்சுமி என்பவரை அணுகுங்கள்” என்று கூறினார் நான் அவர்களை சந்தித்தபோது எனக்கு சிஎஸ்ஆர் காப்பி மட்டும் போட்டு கொடுத்தார்கள் மே-22, 2023.  பிறகு ஜூன்1,.2023 அன்று எனக்கு FIR காப்பி போட்டு கொடுத்தார்கள்.

அதிலிருந்து இரண்டு மாதம் எனக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்னுடைய புகாருக்கு பிறகு நான் டிஜிபி ஆபீசில் சங்கர் திவால் சாரிடம் ஜூலை-19, 2023 அன்று அவரிடம்  ”எனக்கு இரண்டு மாதம் ஆகிவிட்டது.  இன்னும் என்னுடைய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை. தயவு செய்து எனக்கு உதவுங்கள்” என்று மன்றாடினேன். அவரும் பதிலுக்கு, ”நான் இங்க இருந்து லெட்டர் போஸ்ட் பண்ணுகிறேன். உங்களுக்கு போன் பண்ணும் போது நீங்கள் வந்து கமிஷனர் ஆபீசில் அந்த துறை அதிகாரியிடம் நீங்கள் சந்தியுங்கள்” என்று கூறினார். நானும் இரண்டு வாரம் காத்திருந்தேன் எனக்கு கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்த தகவலும் வரவில்லை.

பிறகு மீண்டும் இரண்டு மாதம் கழித்து முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு  அக்டோபர்-10,2023 அன்றும் அக்டோபர்-31,2023 அன்றும் சேர்த்து இரண்டு முறை புகார் கொடுத்தேன். அதற்கும் எனக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. தற்போது வரைக்கும் நான் கமிஷனர் ஆபீசுக்கு சென்று வந்து கொண்டிருக்கிறேன். தற்போது வரை எனக்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை கிட்டத்தட்ட இந்த எட்டரை மாதங்களாக நான் 90 முறை மேல் கமிஷனர் ஆபீசுக்கு சென்று விட்டேன். எனக்கு இன்னும் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை’’என்கிறார்.

இவ்வாறாக அப்துல் கொஞ்சம் கொஞ்சமாக மோசடி நபர்கள் சொல்லும் வங்கி கணக்கில் 98 லட்சத்து சொச்சம் ரூபாய் செலுத்தி உள்ள விவகாரத்தில், காவல்துறையில் கடுகளவு முன்னேற்றமும் இல்லை. ஆக, காவல்துறையே கூட இதில் கையாலாகாத நிலையில் தான் உள்ளதோ.. என்ற முடிவுக்கு தான் நாம் வர வேண்டியுள்ளது..! எனவே, நாம் சுதாரித்துக் கொண்டு விழிப்புணர்வுடன் இருப்பது ஒன்றே வழியாகும்.

படித்த நபர்களே இது போல் ஏமாறும் போது, கிராமத்தில் உள்ள நபர்களை தொடர்பு கொண்டு உங்களுடைய ATM எண் சொல்லுங்க என்று கேட்கும் போது உடனே அவர்களும் வங்கியில் இருந்து கேட்பதாக நினைத்து சொல்லி விடுகிறார்கள்.

பணம் இல்லை என்று தானே வேலை தேடுகிறோம் நம்மிடமே பணம் கேட்கிறார்களே என்று  நாம் யோசிப்பதில்லை.

இன்னும் சில பெண்களிடம் மிரட்டி பணம் பறிப்பதும் நடக்கிறது. ”நாங்கள் கேட்ட தொகையை அனுப்பாவிட்டால் உங்களால் ஏழு ஆண்டுகளுக்கு எங்குமே வேலைக்கு அப்ளிகேஷன் போட முடியாது. உங்களை பிளாக் செய்துவிடுவோம்” என்ற மிரட்டல்களும் நடந்துள்ளன!

பிரபலங்களுமே கூட ஆன்லைன் மோசடியில் மாட்டி பணத்தை இழப்பது நடைபெறுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மனைவியிடம் ஆன்லைன் மோசடி நபர்கள் பேசி அவர் வங்கி கணக்கில் இருந்து 1 லட்சம் ரூபாயை திருடியது சமீபத்தில் நடந்தது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மகளும் ஆன்லைன் மோசடியில் பணம் இழந்துள்ளார்.

ஆன்லைன் வலைத் தளத்தில் அனைவரிடமும் நம்முடைய தகவல்களை தராதீர்கள். முன்பணமாக 1 ரூபாய் செலுத்த சொன்னாலும் செலுத்தாதீர்கள். நிச்சயம் மோசடி நபர் தான். 1 ரூபாயில் ஆரம்பித்து லட்சம் வரை செல்லலாம். செலுத்த தொடங்கி விட்டால் அதில் இருந்து  மீள்வது எளிதல்ல.

கட்டுரையாளர்; செழியன்.ஜா

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time