‘பலான’ ஆதினத்தை காப்பாற்ற, பாஜகவை மிஞ்சிய திமுக!

-சாவித்திரி கண்ணன்

தருமபுர ஆதீனகர்த்தர் மாசிலாமணி ஆபாச வீடியோ, ஆடியோ விவகாரத்தில் சிக்கிக் கொண்டார்! உள்ளூர் பாஜகவினர் அவரை மிரட்டி பணம் பறிக்கத் துடித்த நிலையில், திமுக அரசு தலையிட்டு அவரது பாலியல் லீலைகளை மூடி மறைத்து, அவரை காப்பாற்றியது சர்ச்சையாகியுள்ளது! இதன் உண்மையான பின்னணி என்ன?

தற்போதைய தருமபுர ஆதினத்தை பொறுத்த வரை அவருக்கு சொந்த ஊரில் எந்த மதிப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த அளவுக்கு அவர் பெயர் கெட்டுப் போயுள்ளது. ஆதினத்துடன் நெருக்கமான தொடர்பில் இருப்பவர்கள், ”அவர் செக்ஸ் ஜோக்கை அதிகம் விரும்புவர் என்றும், பாலியல் கிசுகிசுக்களை சொல்பவர்களை பக்கத்தில் வைத்து போஷிப்பவர்” என்றும் சொல்கின்றனர்.

தருமபுர ஆதினத்திற்கும், முதலமைச்சர் குடும்பத்திற்கும் நெருங்கிய பிணைப்பு உள்ளது. அத்துடன் ‘இந்துத்துவாவை கட்டிக் காப்பதில், பாஜகவை விட தானே நம்பகமானவன்’ என்ற எண்ணத்தை மடாதிபதிகளிடம் உருவாக்கவும், இந்த சம்பவத்தை திமுக ஆட்சித் தலைமை பயன்படுத்திக் கொண்டதை விளக்குவதே இந்தக் கட்டுரையாகும்.

அதற்கு முன்பு சில அடிப்படை தகவல்களை புரிந்து கொள்வது கட்டுரையின் மையக் கருத்தை உள்வாங்க உதவும்.

மயிலாடுதுறை அருகே தருமபுரத்தில் 16 ஆம் நூற்றாண்டில் உருவான  தருமபுரம் ஆதீனம் உள்ளது. இந்த ஆதீனத்திற்கு சொந்தமாக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில், வைத்தீஸ்வரன் கோவில், திருபுவனம் சரபேஸ்வரர் கோவில், திருவையாறு ஐயாறப்பர் கோவில் உள்பட 27 பிரபல கோவில்களும், பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும், பணம் கொழிக்கும் பல கல்வி நிறுவனங்களும் உள்ளன. இந்த ஆதீன மடத்தின் குருமகா சன்னிதானம் எனப்படுபவர் ஒரு சிற்றரசர் போல வலம் வருபவர்!

இந்த ஆதீனத்தின் 27வது தலைமை மடாதிபதியாக உள்ள, ”ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள்….” என்றெல்லாம் நீட்டி முழக்கி அழைக்கப்படுவரின் யோக்கியதை தான் தற்போது சந்தி சிரிக்கிறது. இவரது சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறையினரிடம் அளித்த புகாரே இதற்கு சாட்சி!

அந்த புகாரில் தெரிவித்திருப்பதாவது, ஆடுதுறை வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் என்னை நேரில் சந்தித்து, ‘ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாகவும், அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக் காட்சியில் வெளியிடாமல் இருக்க, பணம் தர வேண்டும்’ என்றும் கூறி என்னை மிரட்டினர்.

இந்த சம்பவத்தில் செம்பனார் கோவிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க.வின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் புகாரின் உண்மைத் தன்மை குறித்து நாம் மயிலாடுதுறையைச் சார்ந்த மண்ணின் மைந்தர்கள் சிலரிடம் பேசினோம்.

எளிமையான முந்தைய ஆதினமும், பல்லக்கில் பவனி வந்த இன்றைய ஆதினமும்!

இவருக்கு முன்பு இருந்த ஆதினம் மிக எளிமையானவர். 2019 ஆம் ஆண்டு இன்றைய மடாதிபதி மாசிலாமணி ஆதினகர்த்தராக பொறுப்பேற்றார்! அவர் பொறுப்பேற்றது தொடங்கி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய வண்ணம் உள்ளார்! பல்லாயிரம் கோடிகளுக்கு சொத்துக்கள் இருந்தாலும், மேன்மேலும் பணம் சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். முந்தைய காலத்தை போல தமிழ் தொண்டு செய்வதில்லை. நம் மரபு சார்ந்த குருகுலக் கல்வி, திருமுறை பாடசாலைகள் போன்றவற்றை நடத்துவதில்லை. தமிழகத்தில் இருக்கும் ஆதீனங்களிலேயே தமிழுக்கு மிகவும் எதிரான செயல்பாடுகளை கொண்ட ஆதினமாகவும், மடத்திற்கு சொந்தமான கோவில்களில் சமஸ்கிருதத்திற்கு மட்டுமே அதி முக்கியத்துவம் தரப்படும் ஆதீனமாகவும் இது உள்ளது. மத்திய ஆட்சியாளர்கள், தமிழக ஆளுநர், பாஜக தமிழக தலைவர்கள் போன்ற அதிகார மையங்களுடன் நெருக்கம் பாராட்டுவதில் ஆர்வம் உள்ளவர்.

இவர்கள் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு எட்டு லட்சம், பத்து லட்சம் லஞ்சம் கேட்கிறார்கள்! ‘அரசு புறம் போக்கு நிலம் 14,000 கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமித்து திருமண மண்டபம் கட்டிய புகாரும் உள்ளன! இவர் மீது மடத்தில் படிக்கும் ஒரு சிறுவனை வலியுறுத்தி ஒர் பாலின சேர்க்கையை நிர்பந்தித்தார் என்ற புகார் முன்பே இருந்தது.

முந்தைய ஆதினகர்த்தரே கார் போன்ற நவீன போக்குவரத்து சாதனங்களின் வருகையால் மனிதனை மனிதன் சுமக்கும் பல்லக்கு முறையை தவிர்த்து விட்டார்! ஆனால், இவரோ ஆதினப் பொறுப்பேற்றதும் 2020 ஆம் ஆண்டு தன்னை பல்லக்கில் சுமக்கும் ஏற்பாடுகளை செய்தார். ஆனால், அதற்கு திராவிடர் கழகம், நீலப்புலிகள் இயக்கம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து களம் கண்டவுடன், அதை நிறுத்தி விட்டார். இவருக்கு அன்றைய அதிமுக அரசு உதவ முன்வரவில்லை.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் தனது அந்த ஆசையை நிறைவேற்றத் துணிந்தார். காரணம், துர்கா ஸ்டாலின் குடும்பத்தினர் காலம்காலமாக இந்த ஆதினத்தர்களை தெய்வமாக போற்றுகின்றனர். அந்த வகையில் தான் இவர் ஸ்டாலினைத் தேடி வந்து சந்தித்ததும், உதயநிதி ஸ்டாலின் இவரைத் தேடி வந்து சந்தித்ததும் நடந்தன!

திமுக அரசு பொறுப்பேற்றதும் தனது பல்லக்கு பவனி ஆசைக்கு இவர் செயல் வடிவம் கொடுக்கத் துணிந்ததை அறிந்த திராவிடர் கழகம் வழக்கம் போல கோட்டாட்சியருக்கு, ‘பல்லக்கு பவனிக்கு அனுமதி தரக் கூடாது’ என மனு போட்டது. அதைத் தொடர்ந்து, ‘வீண் சர்ச்சைகளை உருவாகக் வேண்டாம். திறந்த வெளி காரில் பவனி வரலாம்’ என கோட்டாட்சியர் பல்லக்கு பவனியை மறுத்தார். ஆனால், ஆதினமோ பாஜக, இந்துத்துவ இயக்கங்களை தூண்டிவிட்டு, தனக்கு ஆதரவாக பேச வைத்தார்! அத்துடன் திமுக தலைமை குடும்பத்திற்கும் அழுத்தம் தந்தார்.

இதனால், முதலமைச்சர் ஸ்டாலினே நேரடியாகத் தலையிட்டு கோட்டாட்சியர் மறுப்பை உதாசீனப்படுத்தி, முதல்வர் அதிகாரத்தில் பல்லக்கு தூக்கலுக்கு அனுமதி கொடுத்தார்! இது அவர் பேசும் திராவிட மாடல் அரசுக்கே இழுக்காகும் என்பதை அவர் சிறிதளவேனும் உணர்ந்தாரா..? எனத் தெரியவில்லை. ‘பாஜகவினரை விடவும் நானே  இந்து மடாதிபதிகளுக்கு நெருக்கமானவன்’ என வெளிப்படுத்துவதில் தான் ஸ்டாலினுக்கு ஆர்வம்!

இந்த சடங்கை பல முற்போக்கு இயக்கங்கள் எதிர்த்ததன் காரணம், மனிதனை மனிதன் தூக்கிச் செல்லும் ஆணவத்தை முடிவுக்கு கொண்டு வருதல் மட்டுமல்ல, ‘இந்த பல்லக்கு பவனியின் பின்னணியில் ஆதீனத்தின் அதிகாரத்தையும், செல்வச் செழிப்பை மேலும் அபிவிருத்தி செய்து கொள்ளும் நோக்கம் இருந்ததும், மேன்மேலும் குத்தகை பணத்தை உயர்த்தி விவசாயிகளை பிழிந்து எடுப்பது, அரசு நிலங்களை ஆக்கிரமிப்பது, அடாவடி வசூல் செய்யும் கல்வி நிறுவனங்களை தோற்றுவிப்பது.. போன்ற சட்டவிரோத செயல்பாடுகளுக்கு கிடைத்த அங்கீகாரமாகவும் இந்த பல்லக்கு பவனி ஆகக் கூடாது’ என்பதுமேயாகும்.

ஆதின கல்லூரியின் விழாவுக்கு ஸ்டாலின் சென்றதும், ஆதினக் கோவிலில் துர்கா ஸ்டாலின் செய்த பூஜைகளும்!

திமுக அரசே பல்லக்கு பவனிக்கு துணை போனதால் வழக்கம் போல இதை எதிர்த்து போராட்டம் நடத்தும்  திகவும், கம்யூனிஸ்டுகளும் அறிக்கை மட்டும் தந்துவிட்டு பின்வாங்கிக் கொண்டனர். பல்லக்கு வீதி உலாவுக்கு தடை விதிக்கக் கோரி மயிலாடுதுறையில் மக்கள் அதிகாரம், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், விடுதலை சிறுத்தைகள் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது  20 பெண்கள் உள்பட 97 பேரை போலீசார் கைது செய்தது திமுக அரசு.

அதே பாணியைத் தான் தற்போதும் செய்துள்ளது. தருமை ஆதீனம் சுமார் 15 முதல் 20 பெண்களின் வாழ்க்கையில் விளையாடி உள்ளார். ஆதீன கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் பெண்களை மடத்தின் சமையல் வேலையை செய்யும்படி நிர்பந்தித்து, அதில் அழகான பெண்களை தன் இச்சைக்கு நிர்பந்திப்பது என்பதும், ‘இதை வெளியில் சொன்னால் அந்த பெண்களுக்கும். அவர்கள் குடும்பத்திற்கும் பாதுகாப்பில்லை’ என்றும் மிரட்டி உள்ளார். இந்த விவகாரத்தைத் தான் ஆதினகர்த்தரின் உதவியாளராக இருந்த செந்தில் மூலமாக முழுவதும் அறிந்து,  மடாதிபதியின் பாலியல் லீலைகளை வீடியோவாக எடுத்து தர வைத்து பாஜக பிரமுகர்கள் ஆதினத்தை மிரட்டி உள்ளனர்.

இதையடுத்து ஆதினத்திற்கு ஆபத்து என்றவுடன் அவர்கள் மிகுந்த உரிமையோடு முதல்வர் குடும்பத்தை தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். தருமபுர ஆதினத்திற்கும், தங்கள் குடும்பத்திற்கும் உள்ள நெருக்கம் குறித்து ஆதின விழாவிலேயே கலந்து கொண்டு ஸ்டாலினே ஒரு குட்டிக் கதை மூலம் பகிரங்கமாக அறிவித்தது யாவரும் அறிந்ததே! தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ள அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் தான் முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் அடிக்கடி செல்லும் கோவிலாகும்.

கணவர் ஸ்டாலினின் நீண்ட ஆயுளை வேண்டி நடத்தப்பட்ட பீமரத சாந்தி யாகம்!

 

இங்கு இவர் செல்லும் போதெல்லாம் தருமபுரம் ஆதீன கோவில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி மற்றும் சிவாச்சாரியார்கள் மாலை மரியாதை செய்து வரவேற்பது வழக்கமாகும். சென்ற ஆண்டு  முதல்வர் ஸ்டாலினுக்கு 70 வயது பூர்த்தி அடைந்ததை அடுத்து, துர்கா ஸ்டாலின் இங்கு வந்து கஜ பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜைகளை செய்தார். பின்னர் அவர் நூற்றுக்கால் மண்டபத்தில்  ஸ்டாலின் பெயரில் பீமரத சாந்தி யாகத்தினை  நடத்தினார்.

இந்த வகையில் ஆதினத்தை மிரட்டிய புகாரில் தமிழக போலீசார் உடனே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, வினோத்,விக்னேஷ், குடியரசு, ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோரை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் தள்ளியுள்ளனர். மற்ற பாஜக முக்கிய புள்ளியான அகோரம், வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் போன்ற சிலரை வலைவீசி தேடுகின்றனர். இந்நிலையில் போலி ஆபாச வீடியோ விவகாரத்தில் பாஜக நிர்வாகிகள் மீது மிகத் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், காவல்துறைக்கும் தருமபுரம் ஆதீனம் சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர்.

தலைமறைவான பாஜக பிரமுகர் அகோரமும், கைதான நால்வரும்!

இது குறித்து நாம் மயிலாடுதுறை மாவட்ட நீர், நிலம் பாதுகாப்பு இயக்கத் தலைவரான விஷ்ணு குமாரிடம் பேசிய போது, ”இந்த ஆதினம், ஆன்மிக ஒழுக்கதிற்கே எதிரானவர். இந்த வயதிலும் பாலியல் இச்சைகளை விட முடியாத அளவுக்கு சுக போகத்தில் திளைப்பவர்! உண்ணும் உணவுகளும், நட்பு சேர்க்கைகளும், அளவில்லா செல்வச் செழிப்பும் அவரை சும்மா இருக்க அனுமதிப்பதில்லை. மடத்தில் சினிமா படங்கள், ஆபாச வீடொயோக்களை இவர் போட்டு பார்த்து ரசிப்பதாக கேள்விப்பட்டுள்ளோம்.

மூன்று வாழை இலைகள்! தங்க டம்பளர்கள், கூஜா வெள்ளி கூஜா, ஆடம்பரமான உணவு!

இவரை முறையாக விசாரித்தால் இவர் இன்னொரு நித்தியானந்தாவாக வெளிப்படுவார். ஆனால், திமுக அரசு மிகத் துரிதமாக இவரைக் காப்பாற்றி இவரை வெளியூர் அனுப்பி வைத்துவிட்டு, சகலத்தையும் மூடி மறைத்து விட்டது! இதன் மூலம் தமிழக ஆளுநரோடும், தமிழக பாஜக தலைவர்களோடும், டெல்லி தலைமையோடும் நெருக்கம் பாராட்டிய ஆதினத்திற்கு தாங்களே உண்மையான ‘ஆபத்பாந்தன்’ என்பதை திமுக தலைமை நிருபித்துவிட்டது” என்றார்.

ஆதினத்தை மிரட்டி பிளாக் மெயில் செய்தவர்களை சிறையில் தள்ள வேண்டியது தான். ஆனால், இப்படி பிளாக் மெயில் செய்யுமளவுக்கு பலவீனமான ஒழுக்கம் கெட்ட சாமியார்களின் ஆபாச செயல்களை, பேச்சுக்களை மூடி மறைத்து காப்பாற்றி, அவரை பக்தர்கள் வணங்கக் கூடிய துறவியாக தொடர அனுமதிப்பது இந்து மதத்திற்கும் உதவாது. ஆரோக்கியமான சமூகச் சூழலுக்கும் உதவாது.

போலிச் சாமியார்கள் பற்றி அன்று வள்ளுவர் சொல்லியது என்றும் பொருந்தக் கூடியது;

நெஞ்சில் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து

வாழ்வாரின் வன்கணார் இல்.

பொருள்; நெஞ்சிற்குள் எல்லா பேராசையையும், தீய நோக்கங்களையும் வைத்துக் கொண்டு, துறந்தவர் போல வஞ்சனை செய்து வாழ்கின்றவர் போல கொடியவர்கள் வேறு எவருமில்லை.

ஆம்! ஆன்மீகத்தில் கபட வேடம் தரித்தவரும், அரசியலில் கபட வேடம் தரித்தவரும் கைகோர்த்துக் கொண்டதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது! மக்கள் உணர்ந்தால் சரி!

-சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time