தமிழ் நீதிமன்ற மொழியாக ஏன் இத்தனை தடைகள்..?

-வ. மணிமாறன்

நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தும் நமது தாய்மொழி தமிழுக்கு  கிடைக்கவில்லை. நீதிமன்றத்திற்குள் நுழைய முடியாத மொழியாகவே இன்னும் மாநில மொழிகள் உள்ளன! மக்களுக்காகத் தான் சட்டமும், நீதியும் அதனை உறுதி செய்ய வேண்டிய நீதிமன்றங்களும் இருக்கின்றன. அவை மக்கள் மொழியில் இயங்க மறுப்பது ஏன்..?

தமிழ்நாட்டில் உள்ள உயர்நீதிமன்றத்தில் நீதியைப் பெற முதலில் ஆங்கிலம் படிக்க வேண்டும். பின்னர் தான் நீதி. இதற்கு எதிராக எத்தனை போராட்டங்கள் நடந்துள்ளன. எதற்கும்  ஒன்றிய அரசு அசைந்து கொடுக்கவில்லை. ஆங்கிலம் தெரியாத காரணத்தால், ‘தன் வழக்கில் என்ன நடக்கிறது?’ என்பதே தெரியாதவர்களாக மக்கள் திணறுகிறார்கள்! அந்தந்த மாநிலத் தாய் மொழிகளில் வழக்கு நடந்தால் தான் அந்த மக்களால் நீதியைப் பெற முடியும்.

இதனால், “தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கு” என்ற கோரிக்கை நிறைவேறும் வரையிலான  உண்ணாநிலைப் போராட்டத்தை, ‘உயர்நீதிமன்றத்தில் தமிழ் – வழக்குரைஞர் செயற்பாட்டுக் குழு’ தொடங்கியுள்ளது.

வழக்கறிஞர்கள், சட்ட மாணவர்கள், தமிழ்ச் சான்றோர் என 24 பேர் பங்கேற்றுள்ள இந்த உண்ணாநிலைப் போராட்டம், சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கியது. விடுதலைப் போராட்ட வீரரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான இரா.நல்லகண்ணு உண்ணாநிலையை தொடங்கி வைத்தார். இன்று (மார்ச் – 4) ஆறாவது நாளாக உண்ணாநிலைப் போராட்டம் தொடர்கிறது.

தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்போர்;

வழக்கறிஞர்கள் கு.ஞா.பகவத்சிங், ஈ.மெய்யப்பன், மு.வேல்முருகன், திசை இயந்திரன், சி.கா.தெய்வம்மாள், பாரதி, கலைச்செல்வன், யாசர்கான், அருண்குமார், செல்வகுமார், புகழ்வேந்தன், சங்கர், புளியந்தோப்பு மோகன், இராமு(எ) மருது. (  மருது அவர்கள் மயங்கி விழுந்து மருத்துவ சிகிச்சை பெறுகிறார்) சட்டக் கல்லூரி மாணவர்கள் நிறைமதி, வணங்காமுடி, வளர்மதி. இவர்களுடன் தமிழ்ச் சான்றோர்கள் சின்னப்பா தமிழர், குருசாமி, பாவலர் கீர்த்தி, தமிழ்பித்தன், சிவகாளிதாசன், இரமேஷ், தொல்காப்பியன் ஆகிய 24 பேர் ஆறாவது நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்திற்குத் தலைமை தாங்கி வரும் வழக்கறிஞர் பகத்சிங்கின் தந்தை குருசாமியும் உண்ணா நிலையில் பங்கேற்றுள்ளார். இவர் 90 வயதிலும் போராட்டக் களத்தில் எடுத்துக் காட்டாக இருந்து வருகிறார்.

உண்ணாவிரதத்தில் 90 வயது குருசாமி!

வழக்கறிஞர் பகத்சிங் – வழக்கறிஞர் பாரதி இணையரின் மகன், சட்டக் கல்லூரி மாணவர் வணங்காமுடியும் உண்ணா நிலையில் ஈடுபட்டுள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை போராட்டக் களத்தில் பங்கேற்றுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 348(2), குடியரசுத்தலைவரின் ஒப்புதலுடன், மாநிலத்தின் அலுவல் மொழியை, ஆங்கிலத்துடன் சேர்த்து, அம்மாநில உயர்நீதிமன்றத்தின் கூடுதல் அலுவல் மொழியாக்க முடியும். இதன் அடிப்படையில்,  அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த 18 நாட்களிலேயே ராஜஸ்தான் மாநில அலுவல் மொழியான இந்தி, அம்மாநில உயர்நீதிமன்ற மொழியாக்கப்பட்டது. அதற்குப் பிறகு 1969 ல் உத்தரப் பிரதேசத்திலும், 1971 ல் மத்தியப் பிரதேசத்திலும், 1972 ல் பீகாரிலும் உயர்நீதிமன்ற மொழியாக இந்தி ஆக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் அலுவல் மொழியான தமிழை, சென்னை உயர்நீதிமன்ற மொழியாக்க வலியுறுத்தி டிசம்பர் –6, 2006 அன்று சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு அன்றைய தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளிக்க, அடுத்த நாளே குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதேபோன்று, 1997 ஆம் ஆண்டே மேற்குவங்க மாநிலம் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்தது. 2012ல் குஜராத் மாநிலமும், 2014ல் கர்நாடகா மாநிலமும் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தன.

இது குறித்து குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்திடம் கருத்துக் கேட்டு தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்ததாகவும், அதனை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டதாகவும் கூறி, ஒன்றிய அரசு கைவிரித்து விட்டது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றமும் அரசும் நிறைவேற்றி அனுப்பும் தீர்மானங்களை கிடப்பில் போடுவது என்ன நியாயம்?

“அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 348(2)ன் படி நீதித்துறையிடம் கலந்து லோசனை செய்யத் தேவையில்லை என சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்திற்கான நிலைக்குழு  நாடாளுமன்றத்தில் பலமுறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கை ஏனோ பொருட்படுத்தப்படவில்லை. உச்சநீதிமன்ற நீதிபதிகளும், ஒன்றிய அரசும் தாய் மொழி மறுப்பில் மட்டும் கைகோர்த்துக் கொண்டனர் போலும்!

உச்சநீதிமன்றத்திடம் கருத்துக் கேட்க வேண்டும் என்ற உள்துறை அமைச்சகத்தின் 1965 ஆம் ஆண்டு தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு உள்துறை அமைச்சருக்கு 11.06.2015 அன்று சட்ட அமைச்சரும் கடிதம் எழுதியுள்ளார். இதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் நிலைக்குழுவும் தெரிவித்துள்ளது. ஆனால், இது குறித்து எட்டு ஆண்டுகளாக எந்த முடிவும்  எடுக்காமல் உள்துறை அமைச்சகம் மவுனம் காப்பது ஏன்? இதில் இருந்து பாஜக அரசுக்கு அந்தந்த தாய் மொழியில் வழக்காடல், நீதி வழங்கல் என்பதில் விருப்பமில்லை என அறியலாம்.

 

நான்கு மாநில உயர்நீதிமன்றங்களில் இந்திக்கு அனுமதி அளித்துள்ள ஒன்றிய அரசும், உச்சநீதிமன்றமும்,  தமிழ்நாட்டுக்கு மறுப்பது அரசியலமைப்பு சட்ட உரிமைக்கு எதிரானது. பாகுபாடானது.

தமிழில் சட்ட ஆணைய கலைச் சொல் அகராதி அனந்த நாராயணன் தலைமையிலான குழுவின் முயற்சியில் பல தொகுதிகள் எப்போதோ வெளியிடப்பட்டுவிட்டது. 1970 களின் மத்தியில் திமுக ஆட்சியில் இருந்த போது, மா.சுப்பிரமணியன் அவர்களைக் கொண்டு அரசியலமைப்பு சட்டம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுவிட்டது. அது நீதிபதி மகராஜன் கமிட்டியால் மீண்டும் மொழி பெயர்க்கப்பட்டது. ஆனால், இவை எல்லாம் உயர் நீதிமன்ற புழக்கத்திற்கு வராமல் போய்விட்டது துரதிர்ஷ்டமே!

கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக நீதிமனத்தில் தமிழை ஒலிக்கச் செய்வதற்கு கருத்தரங்கம், தொடர் முழக்கக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், டெல்லியில் மாநாடு என்று பற்பல அமைப்புகள் பல்வேறு வகைகளில் போராடியும் எதுவும் நடக்கவில்லை. 27 ஆண்டுகளாக இந்தி பேசாத மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கும் முடிவில்லை. இதனால் தான் கோரிக்கை நிறைவேறும் வரையிலான உண்ணா நிலை போராட்டத்தைத் தொடங்கினோம்” என்கிறார் வழக்கறிஞர் பகத்சிங்.

கோரிக்கை நிறைவேறும் வரையிலான இந்த உண்ணாநிலைப் போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

“ஏற்கனவே தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனாரின் உயிர் பறிக்கப்பட்டது. மீண்டும் அது போன்ற நிலை ஏற்படாத வகையில், தமிழை வழக்காடு மொழியாக காலதாமதம் இன்றி அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் சார்பாக ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்.

வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவைத் தெரிவிக்கிறோம். உரிய விரைவான நடவடிக்கை எடுக்காவிட்டால் தொழிலாளர்களும் இணைந்து போராட நேரிடும் என்பதைத் தெரிவிக்கிறோம்” என்று மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தக் கூட்டமைப்பில் தொமுச, ஏஐடியூசி, சிஐடியு, எச்எம்எஸ், ஐஎன்டியுசி, ஏஐயுடியுசி, ஏஐசிசிடியு உட்பட 12 மத்திய தொழிற்சங்கங்கள் இடம் பெற்றுள்ளன. ஏஐடியுசி தேசிய செயலாளர் டி.எம்.மூர்த்தி நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

போராட்டக் களத்திற்கு நேரில் சென்று பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கு.செல்வப் பெருந்தகை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், சமூக செயல்பாட்டாளர் மேதா பட்கர், தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன்,  தமிழ் தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், புதிய பாதை உ.சகாயம் ஐஏஎஸ், புதிய குரல் ஓவியா, வழக்கறிஞர் ப.பா.மோகன், திரைப்பட இயக்குநர் வ.கௌதமன் உள்ளிட்டோர் நேரில் ஆதரவு தெரிவித்தனர்.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் கோரிக்கை நிறைவேற ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கூடுதல் அழுத்தம் தர வேண்டும்.

தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும் ஏற்பட்டுள்ள அநீதிக்கு எதிராகப் போராட அனைத்துத் தரப்பு மக்களும் முன்வர வேண்டும். ஜல்லிக்கட்டு உட்பட அனைத்து உரிமைகளையும் பெற்று தந்தது மக்கள் போராட்டம் தான். ஆங்கிலம் தெரியாமல் அல்ல; அரசியல் சட்ட உரிமை காக்க வழக்கறிஞர்கள் போராட்டக்  களத்திற்கு வந்துள்ளனர்.  அவர்களுக்கு துணை நிற்பதும் முன்னெடுத்துச் செல்வதும் தமிழ் மக்களின் கடமை.

நீதிமன்றங்களில் தாய் மொழி மறுக்கப்படுவது என்பது அம்மாநில மக்களுக்கு நீதி மறுக்கபடுவதாகவே அர்த்தமாகும்.

கட்டுரையாளர் வ. மணிமாறன்

மூத்த பத்திரிகையாளர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time