தமிழை புறக்கணிப்பார்! சமஸ்கிருதத்தை கொண்டாடுவார்!

-பொ.வேல்சாமி,

கூச்சமில்லாமல் பொய் பேசுவதில் ஜெயமோகனுக்கு நிகராக யாருமில்லை! சமஸ்கிருத தொல் நூல்களெல்லாம் 18 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் மொழியாக்கமானதாம்! ஜெயமோகனுக்கும் உண்மைக்கும் துளியாவது சம்பந்தமுண்டா..? தமிழில் தொல் நூல்களே இல்லையா? வெளி நாட்டாரால் அதிகம் கொண்டாடப்பட்ட மொழி எது..?

இன்றைய தமிழ்ச் சூழல், சிந்தனையாற்றல் நிறைந்த இளையவர்களை உருவாக்கும் அறிவுபூர்வமான கல்விச் செயல்பாடுகளில் பெரிதும் “நோஞ்சானாகவே” உள்ளது. இவ்வாறான அவலச் சூழ்நிலையையும் மீறி சிந்திக்கத் தொடங்கும் இளைஞர்களின் சிந்தையைக் குழப்பி விடுவதையே தொழிலாகக் கொண்டு செயல்பட்டு வருகின்ற, பல துறைகளைச் சேர்ந்த மனசாட்சியற்ற மனிதர்களும் உள்ளனர்.

இவர்கள் அறிஞர்களைப் போலவும், கலைஞர்களைப் போலவும் தத்துவவாதிகளைப் போலவும் இளையவர்களின் கண்களுக்குக் காட்சியளிப்பார்கள். இத்தகைய கூட்டத்தார்களில் இலக்கியத்தின் வழியாக இளைஞர்களை மயக்கி திசை திருப்பி அவர்களை, சரியான பாதையில் பயணித்து விடாமல் “தடுத்தாட்கொள்ளும்” தமிழ் எழுத்தாளர்களும் சிலர் உள்ளனர். அத்தகைய சிலரிலும் சிறந்த இருவரில் ஒருவர் தான் அபலை இளைஞர்களின் “ஆசா..சா…ன் ஜெயமோகன்.”

ஜெயமோகனைப் பற்றி நான் முன்பு ஒரு தடவை எழுதியுள்ள கட்டுரையில், “இவர் தப்பிலும் அடிப்பார், தவிலிலும் அடிப்பார், கிழிந்து விட்டால் தச்சுகிட்டும் அடிப்பார்” என்று இவருடைய குணத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

அண்மையில் ( பிப்.27, 2024 ) அபலையோகேஸ்வரன் என்ற இளையசீடப் பிள்ளைக்கு “உபதேசம்” வழங்குவதாக குருநாதர் ஜெயமோகன் அவர்கள் சில அரிய செய்திகளைச் சொல்லி ஆசீர்வாதம் வழங்கியிருக்கிறார்.

ஆசானுடைய அந்த அரிய ஆசீர்வாதப் பேரூரையில் இந்திய தொல் இலக்கியங்களைப் பற்றியும் ( தொல் இலக்கியங்கள் எவை என்பதை ஆசானிடம் கேட்டு விடாதீர்கள், அவருடைய சினம் பொல்லாதது.. தாங்கமாட்டீர்கள்…..) தமிழ் மொழியில் தத்துவச் சிந்தனைகள் போதுமானளவில் இல்லை என்றும், அப்படி ஒருசில வகையான தத்துவார்த்த சிந்தனைச் சிதறல்கள் சைவ சித்தாந்தத்திலும் வைணவக் கோட்பாடுகளிலும் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன என்றும் விசிறி விடுவார். (ஜெயமோகன் தொடர்ச்சியாக “தியாலஜி” எனப்படும் மதவாத உரையாடல்களை ”பிலாஷபி” எனப்படும் பகுத்தறிவை தத்துவத்துடன் போட்டு குழப்பி எழுதி வருகிறார்.)

இவ்வாறான உள்ளீடற்ற இவருடைய எழுத்துக்களை ஆழமானவை என்று நம்பிக் கொண்டிருக்கின்ற அப்பாவிகளான இளைஞர்களை தமிழகத்தில் உருவாக்கி வருகிறார். இவ்வாறு சுயசிந்தனையற்ற இளையவர்களுக்கு அப்பொழுத்துக்கு அப்பொழுது “அருளுரை” வழங்கி, அவர்கள் அறிவுபூர்வமாகச் சிந்தித்து விடாமல் பாதுகாத்தும் வருகிறார். அப்படி அவர் அண்மையில் கூறிய அருளுரை ஒன்றில்,

“இந்திய தொல்நூல்களெல்லாம் 18 ஆம் நூற்றாண்டில் ஜெர்மானிய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டன.”என்று உபதேசம் செய்துள்ளார்.

இந்த இடத்தில்தான் நம்மைப் போன்றவர்களுக்கு ஒரு சந்தேகம் வருகிறது. இன்று வரைக்கும் எழுதப்பட்டுள்ள எந்த மொழியிலுள்ள நூலிலும் இவ்வாறான செய்தி ஒன்று கூட இல்லை. அவர் குறிப்பிடப்படுகின்ற தொல்நூல்களில் ஒன்று  கூட 18 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் மொழியாக்கம் செய்யப்படவில்லை!இத்துறையில் ஈடுபட்டு எழுதி வருகின்ற உலக அறிஞர்கள் எவரும் 18ம் நூற்றாண்டில் ஜெர்மனி மொழியில் அவ்வாறான நூல்களை வெளியிட்டதில்லை.

இவ்வாறு உலக அறிஞர்களே துளி கூட அறியாத இத்தகைய உலக “பேரூண்மையைக்” கண்டுபிடித்த ஜெயமோகன் தன்னுடைய அரிய கண்டு பிடிப்பின் வாயிலாகத் தெரிந்த “ஜெர்மானிய நூல்கள்” சிலவற்றின் பெயர்களையாவது வெளியிட வேண்டும்.

உண்மையில் 18 ஆம் நூற்றாண்டில் நடந்தது என்ன?

கி.பி.1785 இல் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட வாரன் ஹேஸ்டிங்கின் முயற்சியால் அவருடைய நண்பர்கள் சர் வில்லியம் ஜோன்ஸ், சார்லஸ் வில்கின்ஸ், ஆகிய இருவரும் முறையே பகவத்கீதை, மனுதருமம், காளிதாசனின் சாகுந்தலம்   ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர். நன்றாக கவனியுங்கள், ஆங்கில மொழியில் தான் மொழி பெயர்த்தார்கள். இந்த மொழி பெயர்ப்புகள் வெளிவந்த காலம் என்பது கி.பி.1785 லிருந்து கி.பி.1798 வரை என்பது குறிப்பிடத்தக்கது.

வாரன் ஹேஸ்டிங்ஸ், சர்.வில்லியம் ஜோன்ஸ், சார்லஸ் வில்கின்ஸ்

இதன் பின்னர் 19ம் நூற்றாண்டில் தான் ஆங்கிலத்திலும், ஜெர்மனி உள்ளிட்ட மற்ற ஐரோப்பிய மொழிகளிலும் சமஸ்கிருத நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டன. ஜெயமோகன் சொல்வதைப் போல இந்தக் காலக்கட்டத்தில் கூட எல்லா வகையான வடமொழி நூல்களும் ஐரோப்பிய மொழிகளில் முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை.

ஜெயமோகனை பொறுத்த வரை இந்திய தொல்நூல்கள் என்றாலே அவை சமஸ்கிருத நூல்கள் மட்டுமே! அவரே குறிப்பிடுகின்ற தத்துவ தகுதியற்ற தமிழ் மொழியை என்றும் அவர் தொல்நூல்கள் என்று குறிப்பிடமாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

ஜெயமோகன் ஒப்புக் கொள்ளவிட்டாலும், பல வெளிநாட்டு அறிஞர்கள் தமிழ்மொழியில் உள்ள மகத்தான சில நூல்களை தொல் நூல்களாக அறிவித்து, மொழி பெயர்த்தும் உள்ளனர் என்பதை இங்கே கவனப்படுத்துகிறேன்.

தழுக்கு தொண்டாற்றிய வீரமாமுனிவர்.

1730 –  ல் இத்தாலி நாட்டு வீரமாமுனிவர்  நம் வாழ்வியல் ஆசான திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை இலத்தீன் மொழிக்கு கொண்டு சென்றார்!

1854 – ல் அமெரிக்கா நாட்டு ஹீசிங்டன் சிவஞானபோதம், சிவப்பிரகாசம், தத்துவக்கட்டளை ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்

1854 – ல் ஜெர்மனி நாட்டின் சார்லஸ் கிரால் என்பவர் சிவஞானசித்தியாரை ஜெர்மன் மொழிக்கு கொண்டு சென்றார்!

1855 – சார்லஸ் கிரால் கைவல்யநவநீதத்தை ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தவர்

1865 – ல் இதே சார்லஸ் கிரால் திருக்குறளை இலத்தீனிலும் மொழி பெயர்த்தார்!

1885 ல் பாதிரியாரான ஜியு.போப் திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்!

1840, 1852 துரு பாதிரியார் அவர்கள் திருக்குறள் மூலத்தையும், அதற்கான பரிமேலழகர் உரையையும் தமிழில் வெளியிட்டார்.   கூடுதலாக பரிமேலழகர் உரையை விளங்கிக் கொள்வதற்கு அக்காலத்தில் வாழ்ந்த பெரும் புலவரான இராமானுஜ கவிராயரின் விளக்கத்தையும் சேர்த்தார். பின்னர் தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த திருக்குறளையும் இணைத்து பதிப்பித்தார்.   650 குறள்களை மட்டுமே மொழிபெயர்த்த நிலையில் காலன் அவரை அணைத்துக் கொண்டான்!

கிடைக்கக் கூடிய சான்றுகள் இப்படியான உண்மைகளைத் தான் சொல்கிறது. இவ்வாறு இருக்கும்போது 18ம் நூற்றாண்டிலேயே ( கி.பி.1701 – கி.பி.1800 ) ஜெர்மன் மொழியில் சமஸ்கிருத தொல் நூல்கள் எல்லாம் வந்து விட்டன என்று ஜெயமோகன் கூறுவதை அப்பாவி இளைஞர்கள் வேண்டுமானால் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். உண்மையில் தமிழின் முக்கியத்துவத்தை குறைக்கவே ஜெயமோகன் சூசகமாக இவ்வாறு பேசி வருகிறார். சிந்திக்கத் தெரிந்த சிலராவது இத்தகைய அபத்தக் கூற்றுகளை எதிர்த்து கேள்விகளை எழுப்புவது இயல்பு தானே.

கட்டுரையாளர்; பொ.வேல்சாமி,

கரந்தை தமிழ் கல்லூரி புலவர், தமிழ் மற்றும் சமூக வரலாற்று ஆய்வாளர். வரலாற்றுத் தரவுகளை சமூக கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்வதும், சமகாலத்திற்கான மாற்று அரசியலுக்கான தேடலும் இவரது எழுத்தின் நோக்கங்களாகும்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time