விசிக பிடிவாதத்தின் பின்னணி என்ன..?

-அஜிதகேச கம்பளன்
Thirumavalavan
Stalin
”நான்கு கேட்டோம் மூன்று தொகுதிகளில் உறுதியாக நிற்கிறோம்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் பிடிவாதம் காட்டி வருகிறது! ‘இந்துத்துவா எதிர்ப்பில்’ தீவிரம் காட்டிய கட்சி என்ற வகையில் விசிகவை இழப்பது கூட்டணி இமேஜை பாதிக்கும் என திமுக கருதினாலும் இந்த நிர்பந்தத்தில் கூட்டணி பிளவுபடுமா..?

விசிகவிற்கு மூன்று கொடுத்தால் காங்கிரசும் தொகுதியை அதிகம் கேட்டு நிர்பந்திக்கும். ஆனால், காங்கிரசுக்கு தொகுதியை குறைக்கலாமா எனத் திமுக திட்டமிட்ட நிலையில் விசிக மூலம் பல புதுப் பிரச்சினைகள் கூட்டணியில் உருவாகி உள்ளது. திருமாவுக்கு மூன்று கொடுத்தால் காங்கிரசுக்கு எட்டு தொகுதிகளை கொடுக்க திட்டமிட்ட திமுகவிடம் காங்கிரசுக்கு 12க்கு குறையாமல் செல்வ பெருந்தகை நிர்பந்திப்பார்!

ஏற்கனவே மதிமுக ஒன்று வேண்டாம் இரண்டு வேண்டும் என பிடிவாதம் பிடித்துக் கொண்டு இருக்கிறது! லெட்டர் பேடு கட்சியான கமலஹாசன் கட்சி கூட இரண்டு தொகுதி கேட்கும் அளவு துணிந்துவிட்டது.! இந்த சூழல் திமுக சென்ற தேர்தலில் நின்ற தொகுதிகளைக் காட்டிலும் சற்று குறைவாக நின்றால் மட்டுமே சாத்தியமாகும்.

அப்படி தன் தொகுதியைக் குறைத்துக் கொள்வது திமுகவின் இமேஜை கண்டிப்பாக பாதிக்கும். ஆகவே, அந்த நிலையை திமுக ஒருபோதும் எடுக்காது.

சென்ற தேர்தலில் பெற்ற தொகுதிகளைக் காட்டிலும் அதிகத் தொகுதியை விசிக ஏன் நிர்பந்திக்கிறது என்பதன் பின்னணியை விசாரித்தால், கட்சியின் அடிமட்ட அமைப்புகள்

# தற்போதைய திமுக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி தூக்கலாக இருப்பது,

# ஒரு டஜனுக்கு மேற்பட்ட சம்பவங்களில் தமிழக காவல்துறை தலித் மக்களுக்கு எதிராக நடந்து கொண்டது..

போன்றவற்றை பட்டியலிட்டு, ”திமுக நமது கூட்டணியை விரும்பினால் மூன்றில் உறுதியாக நில்லுங்க. இல்லையென்றால் மாற்றை பரிசீலிப்போம்” எனச் சொல்லி உள்ளனராம்! குறிப்பாக கள்ளக்குறிச்சி சம்பவத்தில் தேவையின்றி அப்பாவி தலித் இளைஞர்கள் குறி வைத்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வில் திமுக அரசு நியாயமாக நடக்கவில்லை. பலமுறை வேண்டுகோள் வைத்தும், முதல்வர் நியாயம் செய்யவில்லை. வேங்கைவயல் சம்பவத்தில் திமுக அரசு இன்று வரை குற்றவாளியை காப்பாற்றி பிரச்சினையை திசை திருப்பி வருகிறது.

ஆக, ”தமிழகத்தில் உள்ள தலித் மக்களின் மனநிலை திமுக ஆட்சிக்கு எதிராக உள்ளதால் திமுக கூட்டணியை மறு பரிசீலனை செய்வோம்” என கூறி உள்ளார்களாம். கணிசமாக இந்த கருத்து கட்சியின் பல மட்டத்தில் இருப்பதால் ”பார்க்கலாம், நாமாக விலக வேண்டாம். திமுக மூன்று தொகுதிகள் தர மறுத்தால், அதையே நமக்கான நிராகரிப்பாக கருதி வெளியேறலாம்” என நினைக்கிறார்களாம்!

இது ஒருபுறம் இருக்க, ”விசிக கூட்டணி வேண்டாம்” என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி வருகிறாராம். ”அதற்கு மாற்றாக பாட்டாளி மக்கள் கட்சியை கொண்டு வரலாம்” என அவர் சொல்லி வருகிறார். எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட வன்னிய அமைச்சர்களும், நிர்வாகிகளும் இதையே விரும்புவதாகத் தெரிகிறது. அன்பு மணியும் ‘திமுக கூட்டணி அமைந்தால் அதற்கு முன்னுரிமை தரலாம். அதிமுகவை தவிர்க்கலாம்’ என நினைக்கிறாராம்!

என்ன நடக்கப் போகிறது? எனப் பார்ப்போம். விசிக துணிந்து விலகினால்.. அது, திமுக கூட்டணிக்குள் இருக்கும் வேறு சில கட்சியிகளிலும் அதிர்வுகளை தரும்.

-அஜிதகேச கம்பளன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time