மக்கள் மனம் கவர்ந்த மாபெரும் தலைவர் கே.ஆர். நாராயணன்

து.ராஜா - சிபிஐ பொதுச் செயலாளர்

திரு கே ஆர் நாராயணன் நூற்றாண்டு விழா நினைவேந்தல் கட்டுரை

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும்,சிறந்த கல்வியாளருமான மறைந்த திரு கே ஆர் நாராயணன் அவர்களின்  நூற்றாண்டு விழா தருணத்தில் தேசம் தனது தலை சிறந்த தலைவனை நன்றிப் பெருக்கோடு நினைவு கொள்கிறது.

தற்போது கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள உழவூரில் ஒரு தலித் குடும்பத்தில் 1920 அக்டோபர் திங்கள் 27ம் நாள் பிறந்தார் நாராயணன். தனது கல்வியின் மூலம் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் போல பெரும் கற்றறிந்த அறிஞராக அவர் உருவானார். கல்வியை முடித்த பின் 1943ல் தி இந்து நாளிதழிலும், 1944 –45 காலத்தில் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழிலும் ஒரு பத்திரிக்கையாளராகப் பணியாற்றினார். வெளிநாட்டு இதழ்கள் சிலவற்றிலும்கூட அவர் எழுதி இருக்கிறார். பின்னர் அவர் இந்தியாவின் வெளியுறவுத் துறை சேவையில் சேர்ந்து சீனா உட்பட பல நாடுகளில் இந்தியத் தூதராகச் சேவை புரிந்துள்ளார். வெளியுறவுத்துறை சேவையிலிருந்து 1978ல் ஓய்வு பெற்றதும், புகழ்பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் (ஜெஎன்யு) துணை வேந்தராக 1979 ஜனவரியில் நியமிக்கப்பட்டு, 1980 அக்டோபர் வரை பொறுப்பில் நீடித்தார். பின் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சராகப் பணியாற்றினார். 1992ல் பாரதத்தின் துணை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; இறுதியில் 1997ல்  இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்தார்.

வெறுப்புக் கலாச்சாரம், பிளவுபடுத்தும் அரசியல் நடத்தும் இந்துத்துவச் சக்திகளால் இன்று அரசியலமைப்புச் சட்டத்தின் ஜீவன் கடுமையாகப் பாதிப்படையும்போது, அதனைக் கட்டு குலையாமல் போற்றிப் பாதுகாத்து ஆதரித்திட திரு நாராயணன்  ஏற்படுத்திய முன்னுதாரணங்களைத் தற்போது நினைத்துப் பார்ப்பது அவசியமாகிறது.. நாட்டின் வேறு எந்தக் குடியரசுத் தலைவரும் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க அவர் சந்தித்தது போன்ற சவாலான சூழல்களைச் சந்தித்தது இல்லை; அத்தகைய நெருக்கடியான சூழல்களிலும் அரசியலமைப்பை உயர்த்திப் பிடிக்க அவர் ஆற்றிய வரலாற்றுப் புகழ்மிக்க பங்களிப்பு காலகாலத்திற்கும் நிலைக்கக்கூடிய பாரம்பரிய மதிப்புஉடையதாகவும், அதனை உதாரணமாகக் கொண்டு பின்பற்றத் தக்கனவாகவும் விளங்குகின்றன.

வாஜ்பாய் அரசு அரசியலமைப்பை மறுபரிசீலனை செய்யும் ஒரு யோசனையைத் திட்டமாக வெளிப்படுத்தியபோது, அன்றைய குடியரசுத் தலைவரான திரு கே ஆர் நாராயணன் சிகப்புக் கொடியைக் குறுக்கே நீட்டினார்; மேலும் மிகக் கூர்மையாக ஒரு கேள்வியை முன்வைத்தார், “அரசியலமைப்பு நம்மைத் தோல்வியடையச் செய்ததா, அல்லது நாம் அரசியலமைப்பைத் தோல்வியடையச் செய்தோமா என்பதை நாம் பரிசீலனை செய்யலாம்.” நெறிசார்ந்த அவருடைய தார்மீக அந்தஸ்தும் அவர் முன்வைத்த கேள்வியுமாகச் சேர்ந்து அரசியலமைப்புக்கு ஆதரவாக வலு சேர்த்தது. இதனால் வாஜ்பாய் அரசு அரசியலமைப்பைப் பரிசீலனைக்கு உட்படுத்துவதற்கு மாறாக, அரசியலமைப்பு செயல்படுத்தப்படும் முறை பற்றிப் பரிசீலிக்கக் குழு அமைத்தார். அரசியலமைப்பைப் பாதுகாக்க அவரது பங்களிப்பு என்றென்றும் நீடித்து நிலைத்து உற்சாகம் அளிப்பதாகும். அரசமைப்புகளைப் பாதையிலிருந்து தடம் புறளச் செய்யும் – அரசியலமைப்பையும் அரசியலமைப்பு தார்மீக நேர்மை உணர்வையும் கடுமையாகத் தாக்கிச் சீர்குலைக்கும் – இன்றைய நெருக்கடி மிகுந்த தருணங்களில் நாராயணனின் உற்சாகமளிக்கும் ஆளுமையை நாம் நினைவு கூர்வோம்.

உண்மையில் திரு நாராயணன் இருந்திருந்தால், 2020 செப்டம்பர் மாநிலங்கள் அவையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட முறையை – அவை சபையில் நிறைவேறியதாகக் கூறியது, அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அவை விதிகளை ஆக்கிரமித்து எல்லைமீறி செய்யப்பட்டது என்று எடுத்துக்கூறி — மசோதாக்களை மறுபரிசீலனை செய்யும்படி அவர் திரும்ப அனுப்பி இருப்பார்.

கருணையும், அருள் நிரம்பிய உணர்வாலும் இயக்கப்படும் மனிதர் அவர். அதனால்தான் 2002 குஜராத் கலவரத்தில் சொந்தபந்தங்களை, உயிர் உடமைகளை இழந்து பரிதவித்து வந்த குஜராத் மக்களைக் குரயரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்து, ஒளிவீசும் உதாரணத்தைப் படைத்து உதாரண புருஷனாக அவர் விளங்குகிறார். தேசத்தை உலுக்கிய குஜராத் கலவரத்தில் அதிர்ச்சியில் உறைந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் வாஜ்பாய் அவர்களைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. அந்த கையறுநிலையில் அம்மக்கள் குடியரசுத் தலைவர் நாராயணனைச் சந்தித்தது பெரும் ஆறுதல் அளித்தது; குடியரசின் மிக உயர்ந்த மட்டத்தில் ஒருவரைச் சந்திக்கவும், குறைகளைக் கொட்டவும், குறைந்த பட்சம் ஒரு மனிதராவது காது கொடுத்து கேட்டு அவர்களோடு ஒருமைப்பாடு ஆதரவை வெளிப்படுத்தினாரே என்ற ஓர் ஆறுதல் அவர்களுக்கு! அருளாளர்களால் தான் இளைப்பாறுதல் வழங்க முடியும்.

வரலாறு மற்றும் வரலாற்று ஆளுமைகளைப் புரிந்து கொள்வதிலும்; கடந்த காலத்திற்கு விளக்கமளிப்பது மற்றும் நிகழ்காலச் சமூக இயக்கவியலைப் புரிந்து கொள்வதிலும் திரு நாராயணன் ஆறுகள் சங்கமிப்பது போன்ற சங்கமிக்கும் அணுகுமுறையை மேற்கொண்டார். இந்திய எதிர்காலத்தை வடிவமைப்பது, விடுதலை உணர்வை வரவேற்பது மற்றும் மக்களுக்கு அதிகாரமளித்து முற்போக்கான சமூக மாற்றத்திற்கு வித்திடுவது என்பதில் மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு மற்றும் அண்ணல் அம்பேத்கரின் நீடிக்கும் முக்கியத்துவத்தை அவர் புரிந்து கொண்டதில் அந்த  அணுகுமுறை நன்கு வெளிப்படுகிறது.

அந்த முப்பெரும் ஆளுமைகளின் பங்களிப்பைக் கவித்துவமாக நாராயணன் பின்வருமாறு கூறினார்: “மகாத்மா காந்தி இந்திய தேசிய இயக்கத்திற்கு ஆன்மிக நோக்கப் பயன்பாட்டை — அதை ஒருவர் ஆன்மிக ஆன்மா என்றும் கூறலாம்—மற்றும் பெருந்திரள் பேருருவை வழங்கினார் என்றால்; ஜவகர்லால் நேரு சமூக மற்றும் பொருளாதார வடிவையும் உலகப் பார்வையையும் அறிமுகப்படுத்தினார்; டாக்டர் அம்பேத்கர் அவர்களோ அதில் தத்துவ ஆழம் மிக்கச் சமூக உள்ளடக்கத்தையும், சமூகச் சமத்துவமின்மை மற்றும் ஒடுக்குதலுக்கு எதிரான உணர்ச்சிபூர்வமான மறுப்பையும் கொண்டு வந்து சேர்த்தார்.”  ஒரு வகையில், நவீன இந்தியாவின் ஆகச் சிறந்த மூன்று தலைவர்களை இணைத்துப் புரிந்து கொண்ட வகையில் திரு நாராயணன் தனக்கான உலகப் பார்வையை உருவாக்கிக் கொண்டார். அத்தலைவர்களின் பொதுவான கண்ணோட்டம் மற்றும் துன்புறும் மனித குலத்தின் பால் காட்டிய பொதுவான பரிவு இவற்றால் திரு நாராயணன் தூண்டப்பட்டு செயல்பட்டார்.

தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் “சீர்திருத்தம், செயலாக்கம் மற்றும் மாற்றம்” என்று பேசுகிறார்கள். ஆனால் திரு நாராயணன் எவ்வளவு தீர்க்கதரிசனத்தோடு எச்சரித்துள்ளார், “நாம் நமது இல்லங்களில் நிம்மதியாக வாழ்கிறோம் என்றால், அதற்கு இரவும் பகலும் உழைக்கும் ஷெட்யூல்டு சாதி மற்றும் ஷெட்யூல்டு பழங்குடியினர், பெண்கள் என்ற நலிந்த பிரிவு பெரும்பான்மை எளிய மக்களே காரணம்; தாராளமயம் உலகமயம் மூலமாக பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்போது அந்த எளிய பெரும்பான்மை மக்களைப் புறக்கணித்து விடலாகாது” – எவ்வளவு பொருள் பொதிந்த எச்சரிக்கை.

சாதிய முறையும், ஷெட்யூல்டு சாதி மற்றும் ஷெட்யூல்டு பழங்குடியினர் பிரச்சனையும் சமூகத்தில் வெடிமருந்தாக நீடிப்பதாக எத்துணை வலியும், வேதனையும் இருந்தால் நாராயணன் பின்வருமாறு தீர்க்கதரிசனத்தோடு குறிப்பிட்டிருப்பார்: ”மிகப்பெரிய சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளைச் சாத்தியமாகும் வகையில் விரைவாகத் தீர்க்காவிட்டால், மோதல் அதிர்வுகள் ஏற்பட்டு இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நிலைத்தன்மையை அவை பாதிக்கும்.”

அரசமைப்புச் சட்டப்படியான மிகப் பெரிய பொறுப்பு வகிப்பவர்களே மதச்சார்பின்மையை எள்ளி நகையாடுவது மிகவும் துயரகரமானது. அப்படிச் செய்வதன் மூலம் அவர்கள் அரசமைப்புச் சட்டத்தைக் கேலி செய்கிறார்கள்; விடுதலைப் போராட்ட மரபின் பண்பாட்டு உணர்வைப் பகடி செய்கிறார்கள்; “ஸர்வ தர்மா, ஸமபா’வ” எனும் மகாத்மா முதலில் பயன்படுத்திய ‘அனைத்துச் சமய நம்பிக்கைகளும் இணைந்து வாழ்தல்’ என்பதை அல்லவா கிண்டல் செய்கிறார்கள்.

‘பொங்குபல சமயமெனும் நதிகளெல்லாம்

  புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கி ஓங்கும்

 கங்குகரை காணாத கடலே’

என்று இராமலிங்க வள்ளலார் கூறியதைப் போல அனைத்து சமய நம்பிக்கைகளையும் சமமாகப் பாவித்து – வேறுபட்ட அனைத்து மத நம்பிக்கையாளர்களை ஒன்றுபடுத்தினார் மகாத்மா.

திரு கே ஆர் நாராயணன் மிகுந்த உள்ளுணர்வோடு கூறுவதை அறிவுறுத்தும் பெரும் உதவியாக நாம் மனதில் கொள்ள வேண்டும்: “பல மதங்கள் செயல்படும் சமூகமாக விளங்குகின்ற இந்தியச் சூழலில், மதச் சார்பின்மை என்ற தத்துவம் சரித்திரத்தின் விளைபொருள் மட்டுமல்ல, இணக்கமாக வாழ்தல் மற்றும் தேசம் தப்பிப் பிழைப்பதற்கான நடைமுறைப் பயன்பாடுடைய அவசியத் தேவையும் ஆகும்.” எனவே சமூக நவீனமயமாக்கல் மற்றும் மதச்சார்பின்மை உணர்வை வளர்ப்பது ஆகியவற்றில் ஆக்கபூர்வமான கடமைகளை –சமயம், சமுதாயம், அரசியல், பண்பாடு மற்றும் அன்றாட வாழ்வின் சகல மட்டங்களிலும்– ஒருங்கிணைந்த வகையில் ஆற்ற வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார் எனலாம்.

சமூக நவீனமயமாக்கல் என்ற அந்த நிகழ்முறை இன்று, பெரும்பான்மையிசம், இந்துத்துவா மற்றும் குறுகிய அடையாளங்கள் என்ற பெயரால் வழிமறித்து ஸ்தம்பிக்க வைக்கப்படுகிறது; இதனால் நாட்டு மக்கள் இருத்தலியல் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். 21ம் நூற்றாண்டில் நமது குடியரசு சந்திக்கும் சவால்களுக்கான தீர்வு நமது மேனாள் குடியரசுத் தலைவர் மறைந்த மேதகு கே ஆர் நாராயணன் அவர்கள் விட்டுச் சென்ற பாரம்பரியங்களில் உள்ளது – அவர் வழங்கிய போற்றுதலுக்குரிய பாரம்பரியச் செல்வம், அரசமைப்புச் சட்டத்தை, அரசமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளை உயர்த்திப் பிடிப்பது; பன்மைத்துவத்தை, மதச்சார்பற்ற பெருமிதங்களை உறுதிப்படுத்துவது என்ற இவற்றில் வேர்கொண்ட அணுகுமுறையில் அடங்கி உள்ளது.

இந்த நூற்றாண்டு விழா நாளில்

திரு கே ஆர் நாராயணன் புகழ் ஓங்குக என வாழ்த்துவோம்!

அவர் போற்றிப் பாதுகாத்தக் கொள்கைகளை உயர்த்துவோம்!

கட்டுரையாளர்; துரைசாமி ராஜா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தற்போதைய தேசிய பொதுச் செயலாளர். தமிழகத்தின் வேலூர் மாவட்ட குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர். இளவயதிலேயே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தில் இணைந்து அதன் தமிழக செயலாளராகவும்,தேசிய செயலாளராகவும் செயல்பட்டவர்.இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளராக பதினைந்து ஆண்டுகள் செயலாற்றியவர். மாநிலங்களவை எம்.பியாகவும் இருந்துள்ளார்.

–நன்றி : நியூஏஜ் நவ.01 – 07 இதழ்

–தமிழில்: நீலகண்டன், கடலூர்

தொலைத்தொடர்பு தொழிற்சங்கச் செயற்பாட்டாளர்

தொடர்புக்கு 94879 22786      

             

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time