ஆளுநர் ரவியின் ஆத்திரத்திற்கு இத்தனை காரணங்களா..?

-சாவித்திரி கண்ணன்

தமிழகத்தின் மிக ஆபத்தான மனிதராக தமிழ் மக்களால் அறியப்படும் ஆர்.என்.ரவி” வாயைத் திறந்தால் வன்மம், வந்து விழும் வார்த்தைகள் அனைத்தும் ஆசிட்.. என செயல்படுவதன் பின்னணி என்ன?  கால்டுவெல்லையும், ஜியு.போப்பையும் காழ்ப்புணர்வுடன் பேசியது எதனால்? அவரை இயக்குவது யார்..?

அதிரடியாகப் பேசுவது.., அனைவரையும் திரும்பி தன்னை பார்க்க வைப்பது, கூசாமல் பொய்யுரைப்பது என தமிழகத்தில் நாளும், பொழுதுமாக இயங்கி கொண்டிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் அரியதொரு கண்டுபிடிப்பை பேசியுள்ளார்!

”பிஷப் போப், கால்டுவெல் போன்றவர்கள் நமது அடையாளத்தை அழிக்க வேண்டும் என நினைத்தவர்கள். ராபர்ட் கால்டுவெல், ஜி.யு. போப் போன்றவர்கள் மதமாற்றத்துக்காகவே பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்டவர்கள். கால்டுவெல் பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காதவர். அவர்கள் இருவரும் சென்னை மாகாணத்தில் மதமாற்றத்தைச் செய்தார்கள். திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது” என்றெல்லாம் பேசியுள்ளார்!

ஜி. யு. போப் அவர்கள் 1886 ஆம் ஆண்டே ‘தமிழ் மறை’ எனப் போற்றப்படும் திருக்குறளை ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்தார். இதன் மூலம் திருவள்ளுவரையும், திருக்குறளையும் உலகறியச் செய்தார்.

இதே போல தமிழின் ஆகச் சிறந்த நீதி நூலான நாலடியாரையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததன் மூலம் தமிழ்ச் சமூகத்தின் அறம் சார்ந்த பார்வையை உலகறியச் செய்தார். அத்துடன் சங்கத் தமிழ் நூலான புற நானூற்றையும் ஆங்கிலத்திற்கு கொண்டு சென்றதன் மூலம் தமிழின் தொன்மையை உலகிற்கு உணர்த்தினார்! நான்மணிக்கடிகையின் மிகச் சிறந்த இரு பாடல்களை மொழி பெயர்த்தார்! இவை தவிர தனிபாசுறதொகையையும் மொழி பெயர்த்துள்ளார்!

சைவத் திருமறையாம் திருவாசகத்தின் 656 செய்யுளை ஜி.யு.போப் ஆங்கிலத்திற்கு கொண்டு சென்றார் என்றால், அவரது கிறிஸ்த்துவ பற்றைக் காட்டிலும் தமிழ் பற்று மேலோங்கி இருந்தது என்றே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இதுமட்டுமின்றி தமிழகத்தின் தொன்மையானதும், உண்மையானதும் சிவநெறியே என்பதைத் உறுதிபட எடுத்துரைத்தார்! உலக மொழியான ஆங்கில மொழியில் திருவாசகத்தை மொழிபெயர்த்ததினால் ஜி.யூ. போப், நமது மாணிக்க வாசகரை மேலை நாடுகளில் உள்ள பன்மொழி அறிஞர்களுக்கு அறிமுகப்படுத்திய சேவையை குறைத்து மதிப்பிட முடியாது!

இது மட்டுமின்றி, மாணிக்க வாசகரின் திருவாசகத்தில் மனம் தோய்ந்த போப் அவர்கள் தன் நண்பர்களுக்குக் கடிதம் எழுதும்போதெல்லாம் முதலில் ஒரு திருவாசகப் பாடலை கடிதத்தின் தொடக்கத்தில் எழுதுவதை வழக்கமாகக் கொண்டு இருக்கிறார்!, அப்படி ஒரு முறை திருவாசகப்பாடலை எழுதும்போது உள்ளம் உருகிக் கண்ணீர் பெருகியதால், அக் கண்ணீர் கடிதத்தின் மீது விழுந்து எழுத்தை அழித்து விட்டதாம்! அது திருவாசகத்தால் வந்த கண்ணீர் ஆதலால், அக் கண்ணீர் பட்டு அழிந்த எழுத்தின் மீது மீண்டும் எழுதாமலேயே அக்கடிதத்தை அனுப்பியதாக அவரைப் பற்றி அறிஞர்கள் பலரும் தங்கள் சொற்பொழிவில் கூறுவதுண்டு.

நமது தமிழ் அறிஞர் மறைமலை அடிகளார் ஜி.யு.போப் மீது  பேரன்பையும், பெரும் மதிப்பையும் வெளிப்படுத்தி உள்ளார்! இப்படிப்பட்ட போப்பை இழிவாக பேசுகிறார் என்றால், இந்த ஆளுநரின் யோக்கியதையை நாம் என்ன சொல்வது?

வள்ளலாரையும், வைகுண்டரையும் சனாதனத்தை காப்பாற்ற வந்தவர்கள் என்று ஆளுநர் சொல்கிறார் என்றால், அவருக்கு பின்னால் இருந்து அவரை இப்படி பேச வைத்து இயக்கிக் கொண்டிருக்கும் சனாதனக் கும்பல் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. தங்களால் பேச முடியாததை அதிகாரமிக்க ஒரு பதவியில் ஒரு முட்டாளை உட்கார வைத்து உளற வைக்கும் சனாதனக் கும்பலின் சதிச் செயலே ஆளுநரின் பேச்சாகும்!

வள்ளலாரும், வைகுண்டரும் சனாதனத்தின் தீமையை நமக்கு எடுத்துரைத்து, அதன் அழிவில் இருந்து தமிழ்ச் சமூகத்தை மீட்டவர்கள் என்பதை நாம் யாவரும் அறிவோம். ஆனால், அவர்களையே சனாதனத்தை காத்தவர்கள் என்கிறார் என்றால், அதுவும் சனாதனத்தால் பாதிக்கப்பட்டு துயருற்ற சமூகத்தினரையே அழைத்து தன் மாளிகையில் வைத்து சொல்கிறார் என்றால்.., இந்த பேச்சை ஆர்.என்.ரவியின் அறியாமை என்பதா? ஆணவம் என்பதா? அல்லது அச்சத்தின் வெளிப்பாடா?

கால்டுவெல் குறித்து ஆளுநருக்கு அதீத காழ்ப்புணர்ச்சி இருக்கிறது என்றால், அதில் மிகவும் நியாயம் இருக்கிறது! ஏனென்றால் தன்னைத் தானே அறிந்திராது இருந்த தமிழ்ச் சமூகத்திற்கு சுய புரிதலை உருவாக்கி தமிழை உலகச் செம்மொழிகளில் ஒன்றாக உலகத்தாரை ஏற்கச் செய்த பெருமைக்கு உரியவர் அல்லவா கால்டுவெல்!

கால்டுவெல் கண்டெடுத்த திராவிடம் ஒரு அரசியல் ஆயுதமாகி, அது தமிழ் நாட்டை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செய்கிறது!  கால்டுவெல் கட்டமைத்த அடித்தளத்தில் கட்டி எழுப்பப்பட்டதே இன்றைய தமிழ்ச் சமூகம் பெற்ற அனைத்து மேன்மைகளுக்கும் காரணமாகும்.

அயர்லாந்து தேசத்தவரான கால்டுவெல் தமிழ்நாட்டிற்கு வந்து 42 ஆண்டுகள் திருநெல்வேலியில் உள்ள இடையான்குடியில் தங்கி, காடு, மலைகள், சமவெளிகள் பல ஆயிரம் கி.மீ நடந்தே அலைந்து சுற்றித் திரிந்து பல்லாண்டுகள் ஆய்வில் உருவாக்கிய  ஆய்வு நூலே திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ஆகும்!

இன்றைக்கு நாம் பேசுவதற்கான திராவிடம் குறித்த தெளிவையும், திடத்தையும் நமக்கு அடையாளம் காட்டியவரே ஆய்வாளர் கால்டுவெல் தான்! திராவிட சித்தாந்தம் தோன்ற காரணமான பேரறிஞர் கால்டுவெல் எழுதிய திராவிட மொழி ஆராய்ச்சி நூல் (1875) தற்போது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தால்  முழுமையாக, பிழையின்றி மொழியாக்கம் செய்யப்பட்டு தமிழ் வடிவம் கண்டுள்ளது என்பது கவனத்திற்கு உரியது.

திராவிடம் என்றால் என்ன? அந்த மொழிக் குடும்பத்தில் இருந்து உருவானவையே தெலுங்கு,கன்னடம்,மலையாளம், துளு உள்ளிட்ட 37 மொழிகள் என்ற உண்மை அவர் ஆய்வு செய்யாவிட்டால், நமக்கு தெரிந்திருக்காது. இந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்தின் கலப்பில் இயங்கக் கூடிய நிலை உருவாக்கப்பட்ட நிலையில் தமிழ் மட்டுமே சமஸ்கிருதத்தை விலக்கி தனித் தன்மையுடன் பிரகாசித்த மொழி என கால்டுவெல் தான் தமிழர்களுக்கு புரிய வைத்தார்! குறிப்பாக தமிழ் எப்படி சமஸ்கிருதத்திற்கு ஈடானது மட்டுமின்றி, அதைக் காட்டிலும் நுட்பமானது என்றெல்லாம் மொழி குறித்த ஆராய்ச்சியை முதன்முதல் மேற்கொண்டு அதை மிக விரிவாக ஆங்கிலத்தில் எழுதி, அகிலத்திற்கே அறிவித்தவர் கால்டுவெல்!

இராபர்ட் கால்டுவெல் தமிழில் எழுதிய மற்றொரு முக்கிய நூல் ‘பரதகண்ட புராதனம்’ (1871). இதில் வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் பற்றிய அறிவுபூர்வமான விமர்சனங்களையும், ஆய்வுகளையும் செய்துள்ளார். வேதங்களையும், இதிகாசங்களையும், புராணங்களையும் மூன்று பாகங்களாக்கி அவைகளை ஒப்பீடு செய்கிறார் கால்டுவெல். இதன் மூலம்’ ‘சனாதனத்திற்கும், தமிழர்களுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை’என்பதை அழகாக நிறுவியுள்ளார்.

தமிழுக்கு அயலக அறிஞர்கள் ஆற்றிய தொண்டு நிகரற்றது. ஒரு கால்டுவெல் திருநெல்வேலிக்கு வந்திருக்காவிட்டால் தமிழ்ச் சமூகம் இன்று அடைந்திருக்கும் உச்சத்தை தொட்டு இருக்க முடியாது. ஏனென்றால், கால்டுவெல்லுக்கு பிறகான தமிழ் அறிஞர்கள் அனைவருக்கும் அவரே உந்து சக்தியாக திகழ்ந்தார். இதனால் தான் தமிழறிஞர் ராபி.சேதுப்பிள்ளை கால்டுவெல் வரலாற்றை எழுதி ஆவணப்படுத்தி உள்ளார்.

தமிழர்களையும், அவர்களின் மொழியையும், பண்பாட்டையும் ஆரியம் விழுங்கி செறிக்க முடியாதவாறு காத்த பெருமைக்கு உரியவர் கால்டுவெல். ஆகவே தான், ஆரியப் பகைவர்கள் அவரை தூற்றுகின்றனர். கால்டுவெல்லின் தாக்கத்தால் உருவானதே திராவிட இயக்கங்கள் மற்றும் தமிழ்த் தேசிய இயக்கங்கள் அனைத்தும்!

சிந்துவெளி நாகரீகத்தை ஆரியம் விழுங்க துடித்த போது இல்லையில்லை, அது தமிழ் சமூகத்தின் தொன்மைக்கானது என நாம் உணர்வதற்கு காரணமானவர்கள்! எனவே, ஆரிய ஆளுநரின் ஆத்திரம் நியாயமானது! தமிழ்ச் சமூதாயத்தின் தொன்மம், சிறப்பு, பெருமைகள் அனைத்தையும் திரித்தும் அழித்தும் ஆரியத்தை நிலை நாட்ட ஒரு  படைத் தளபதியாக இங்கு ஆர்.என்.ரவி செயல்படுகிறார்! ஆகவே கார்டுவெல், ஜி.யு.போப் ஆகியோர் அவருக்கு எரிச்சலை தருகின்றனர்.

ஆயினும், தமிழ்ச் சமூகத்தில் இந்த அயலக தமிழ்ச் சான்றோர்களின் புகழை பரப்பும் வாய்ப்பை தன் உளறல்கள் மூலம் நமக்களித்த வகையில், நம் பகைவனும் சமயத்தில் நமக்கு நன்மையே செய்கிறார் நாம் விழிப்போடு இருக்கும் பட்சத்தில்!

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time