பகவத் கீதை மூலம் பாஜகவிற்கு தூது விடுகிறாரா..?

-சாவித்திரி கண்ணன்

தனித்துமான பேச்சாற்றல், தகதகக்கும் எழுத்தாற்றல் ஆகியவற்றை ஒருங்கே பெற்ற சிறந்த தமிழ் ஆளுமை பழ.கருப்பையாவிடம் இந்தச் சார்பு நிலையையும், உண்மை மறைப்பையும் நாம் எதிர்பார்க்கவில்லை! அரசியல் தோல்விகள் தந்த விரக்தியா..? என்ன கட்டாயம் வந்தது அவருக்கு..?

பழ.கருப்பையாவின் பேச்சிலும், எழுத்திலும் எப்போதும் எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு!

‘பதவியை உதறுவது எளிதில்லை’ என்ற அவரது இன்றைய தினமணி நடுப்பக்க கட்டுரையை அதி ஆர்வத்துடன் வாசித்தேன்.

‘கடந்த ஆயிரம் ஆண்டுகால இந்தியவில் பொற்காலம் என்று சொல்லத்தக்கது, காந்தியின் தலைமையில் நாடு நடந்த காலம் தான்.. ‘ என்று அற்புதமான தொடக்கம்..!

அவரது சொல்லாட்சி, அதை சொல்லும் வேகம், அதில் இருக்கும் ஒரு ரிதம் எல்லாம் சொக்க வைத்தது! தீடீரென பகவத் கீதையை ஆகா, ஒகோவென புகழ்கிறார்..!

வாழ்வாங்கு வாழ்ந்த பல அறிவார்ந்த தலைவர்கள் அந்த நூலுக்கு உரை எழுதிக் குவித்தார்கள்!..காந்தி, திலகர், இராசாசி, வினோபா..என பட்டியலிடுகிறார்..!

காந்தியை கீதை உருவாக்கியதாம்!

காந்தி, இந்தியாவை உருவாக்கினாராம்!

கீதை, விடுதலை போராட்டத்தை வழி நடத்திய நூலாம்!

அதன் வருணாசிரம தருமம் போன்றவை விமர்சனத்திற்கு உரியவை என்றாலும், கீதையின் மூலக் கூறு, ‘’வினை புரி செயல்படு’’ என்பது தானாம்!

ஆக, இன்றைய இந்தியாவை வழி நடத்த கீதையை பரிந்துரைக்கிறாரா பழ.கருப்பையா..?

சனாதனக் கருத்துக்கள், பார்ப்பனியத்தை மறைமுகமாக தூக்கி பிடிக்கும் கட்டுரைகளே அதிகம் பிரசுரம் ஆகும் தினமணியின் நடுப்பக்கத்தில் பழ. கருப்பையா தன்னிலை வழுவாமல் எழுதுவார் என எதிர்பார்த்த எனக்கு பெருத்த ஏமாற்றமாயிற்று!

# கீதை தான் ஆர்.எஸ்.எஸ்சையும் இன்று வரை வழி நடத்துகிறது!

# சாவார்க்கரை உருவாக்கியதும் கீதை தான்!

# கோட்சே தன் நீதிமன்ற வாக்குமூலத்தில், ”பகவத் கீதை சொல்லும் வழியில் தான் காந்தியைக் கொன்றேன். காந்தியை கொல்லும் மன திடத்தை எனக்கு வழங்கியது பகவத் கீதையே” எனச் சொல்லி உள்ளது இன்றும் ஆவணங்களில் உள்ளது..

# இந்திய சமூக வரலாற்றில் வருணாசிரம தர்மத்தை ஆழ ஊன்றியதற்கு காரணமான நூலும் பகவத் கீதை தான்!

இவை எல்லாம் தெரியாதவரா பழ.கருப்பையா..?

கீதை என்பது நன்மை, தீமை என்ற இரு பக்கத்தையும் வீரியப்படுத்தும் கூர்மையுடைய ஒரு கத்தி! அதை ஏந்தும் பக்குவமில்லாமல் ஏந்தினால், ஏந்துவோரையே அது பதம் பார்த்துவிடும்! அப்படித் தான் இந்திய வரலாறெங்கும் நடந்து பற்பல வன்முறைகளையும், ரத்தச் சிதறல்களையும் கண்டுள்ளது!

எனில், இன்றைய சூழலில் இது போன்ற நூலை மக்களுக்கு தூக்கிப் பிடித்து பரிந்துரைப்பது.., இந்துத்துவ சித்தாந்ததையும், வர்ணாசிரமத்தையும் வழிமொழிவதற்கு ஒப்பாகாதா..? இது யாருக்கு பலனளிக்கும்..?

கீதை தான் இந்திய விடுதலைப் போராட்டத்தை வழி நடத்தியதா..?

‘கீதை இந்திய விடுதலை போராடத்தை வழி நடத்திய நூல்’ என்பது பெரும் பிழையாகும். ஜவகர்லால் நேரு, ராம் மனோகர் லோகியா, ஜெயப் பிரகாஷ் நாராயணன் தொடங்கி தமிழகத்தில் வேலு நாச்சியார், மருது சகோதர்கள், வ.உ.சிதம்பரம், காமராஜர், ஜீவா,வரதராஜுலு நாயுடு, ஒ.பிராசாமி  போன்ற எண்ணற்ற மாபெரும் ஆளுமைகளையும், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட  இஸ்லாமிய ஆளுமைகளான அலி சகோதரகள், மவுலானா அப்தில்கலாம், ஜாகீர் உசேன் போன்ற எண்ணற்ற இஸ்லாமிய தியாகிகளையும், ஜேசி.குமரப்பா, ஜார்ஜ் ஜோசப்..போன்ற எண்ணற்ற கிறிஸ்துவ ஆளுமைகளையும், விடுதலை இயக்கத்தில் வீரம் செறிந்த போராட்டங்களை  செய்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட், எம்.என்.ராய், ஏ.கே.கோபாலன், சங்கரய்யா போன்ற எண்ணற்ற கம்யூனிஸ்டுகளையும், பகவத் கீதை என்றால் என்னவென்றே தெரியாமல் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்த் தியாகம், சிறை வாசம் அடைந்த லட்சோப லட்சம் தியாகிகளையும் அவமதிக்கும் செயலாகும்.

கீதையைப் போலவே ஏசுவின் மலை பிரசங்கமும் தன்னை ஆழமாக பாதித்த நூல் என்றும், தன்னை வழி நடத்திய நூல் என்றும் காந்தி பல இடங்களில் குறிப்பட்டு உள்ளார்.

இந்தக் கட்டுரையில் பழ.கருப்பையா கடவுள் நம்பிக்கையை தூக்கி பிடிக்கிறார்! வள்ளுவர் கடவுள் நம்பிக்கையாளர் என்று வள்ளுவரை துணைக்கழைக்கிறார்! கடவுள் நம்பிக்கையை வலியுறுத்தி தான் மக்கள் தீவினை செய்யும் மக்களை வள்ளுவர் ஒழுங்குபடுத்த முயன்றாராம்!

ஆனால், வள்ளுவனின் இந்த கொள்கையை எதிர்க்கவும் முடியாமல், இது பிழை என்று சொல்லவும் நெஞ்சில் துணிவில்லாமல் வள்ளுவனுக்கு கறுப்பு சட்டை மாட்டி அவரைத் திராவிடர் கழகத்தில் சேர்த்துவிடுகின்றனவாம் கருணாநிதியும், நெடுஞ்செழியனும், புலவர் குழந்தையும் எழுதிய உரைகளாம்!

இந்தக் கட்டுரைக்குள் இப்படியான ஒரு விமர்சனம் ஏன் வருகிறது எனப் புரியவில்லை..! வள்ளுவரை நாத்திகராக காட்டும் முயற்சியை கருணாநிதி தன் ஆட்சியில் கருணாநிதி என்றுமே முன்னெடுத்ததில்லை! கருணாநிதியோடு கடுமையாக வேறுபடுவோரும் கூட அவர் வள்ளுவர் தோற்றத்தை கறுப்பு ஆடையோடு வரைய வைக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்வர். மாறாக, இன்றைய பாஜக ஆட்சியாளர்களே வள்ளுவருக்கு காவி சட்டை மாட்டியுள்ளனர். இது தான் நிகழ்கால நடப்பு..! ஆனால், இந்த காவிச் செய்கை குறித்த விமர்சனத்தை தவிர்த்து விடுகிறார் பழ.கருப்பையா!

‘பதவியை உதறுவது எளிதில்லை’ என்பதற்கு மாற்றாக வாழ்ந்த ஒரே அரசியல்வாதி ஒ.பி.ராமசாமி அவர்கள் தாம்! ஆனால், இந்தக் கட்டுரையில் பதவியே குறியாக வாழ்ந்த இராசாசியைத் தான் பழ. கருப்பையா அதிகம் புகழ்கிறார். ஒ.பி.ராமசாமியை ஒற்றை வரியோடு கடந்து போகிறார்..!

எழுதக் கூடிய பத்திரிகைக்கும், அதன் ஆசிரியருக்கும் பிடித்த விதத்தில் எழுதி தர வேண்டிய கட்டாயம் உள்ள அளவுக்கு சராசரி ஆளுமையா பழ.கருப்பையா..? தமிழருவியார் போன பாதையை தானும் பின்பற்றித் தொடர ஒத்திகை பார்க்கிறாரா பழ.கருப்பையா..? பழ.கருப்பையாவின் தினமணி கட்டுரை அவருக்கு மிகப் பெரிய சறுக்கலையே தந்துள்ளது.

யோக்கியமான மனிதனுக்கு ஒரே ஒரு அளவுகோல் போதுமானது! அவன் தன் சுயசாதி பற்றில் இருந்து விலகி நிற்பதும், பார்ப்பனியத்துடன் கைகோர்க்க மறுப்பதுமே! (அதே சமயம் பார்ப்பனியத்தில் இருந்து உண்மையாகவே விலகி, மானுட விழுமியங் கொண்ட பார்ப்பன குடி பிறப்பாளர்களை நாம் புறந்தள்ளக் கூடாது.) ஐயா, பழ.கருப்பையா? எது உங்கள் உண்மையான முகம்..?

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time