இனியொரு முறை ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா?

-ச.அருணாசலம்

பாஜக ஆட்சியில் பாரதம் பெற்றதென்ன? படுபாதக சட்டங்கள்! பதற வைக்கும் அடக்குமுறைகள்! பற்றியெருந்த போராட்டங்கள், அலட்சியப்படுத்தப்பட்ட மனித உரிமைகள்..! இதில் நாம் கற்றதென்ன? மீண்டும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு காணப் போகும் நிலை என்ன? பாஜகவின் எதிர்கால ஆட்சி யாருக்கானது? ஒரு அலசல்;

மக்களவை தேர்தலுக்கு வேட்பாளர்கள் பட்டியலை முதலில் வெளியிட்டு, ”போட்டிக்கு தயார்” என்று பறைசாற்றியுள்ளது பா ஜ க. ”நடக்கவிருக்கும் தேர்தலில் நாங்கள் நானூறுக்கும் அதிகமான இடங்களில் வெல்லுவோம்” என்று மார் தட்டுகிறார் பிரதமர் மோடி.

இத்தகைய அதிரடி பேச்சுக்கள் மற்றும் அறிவிப்புக்களுக்குப் பின்னால் பாஜகவின் பதற்றம் உள்ளதை நம்மால் உணரமுடிகிறது! பலத்த ஆரவாரங்களினூடும், படோடோபத்தோடும் திறக்கப்பட்ட ராமர் கோவில்  மக்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தணிந்து விட்டதா?

பின் எதற்கு எல்லா கட்சிகளில் இருந்தும் முக்கிய புள்ளிகளை வலை விரித்து தூக்குகின்றது பாஜ க? எல்லா தேர்தல்களிலும் அத்துமீறல்களை அரங்கேற்றி வென்று விட  பாஜக துடிப்பது ஏன்?

அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல – அரசு புலனாய்வு அமைப்புகளை ஏவி, சட்டங்களை வளைக்க – பாஜகவினர் தயாராயுள்ளதை நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் நாடு பார்த்தது.

தேர்தல்களில் வெற்றி பெறுவது பா ஜ கட்சி மட்டுந் தான் என காட்ட விரும்புகிறார்கள் போலும்.

எங்கள் கட்சியில் இணைந்தால் மட்டுமே வெற்றியின் பலனை எவரும் அனுபவிக்க இயலும் என எதிர்கட்சி தலைவர்களுக்கு உணர்த்துகின்ற மோடி கும்பல் நாட்டு மக்களுக்கு உணர்த்துவது என்ன?

எந்த தேர்தலிலும் பாஜகவே வெல்லும் என மூளைச் சலவை செய்ய முயலுகின்றனர் மோடியும், அமீத் ஷாவும்! இது மக்களிடம்  உளவியல் ரீதியாக ஒரு மாற்றத்தை – மோடி 3வது முறையாக பிரதமராவது தவிர்க்க இயலாது என்ற ஒரு பிம்பத்தை – நிலைநாட்ட முயலுவதைக் காட்டுகிறது.

வெறும் விளம்பரங்களாலும், திறப்பு விழாக்களாலும் அனைவரும் மோடி ஆட்சியில் சுகமாக உள்ளதைப் போன்ற மாயையை உருவாக்குகின்றனர்.

மக்கள் பழைய வாக்குறுதிகளை மறந்து விடுவார்கள் என்ற நப்பாசையில் ” மோடி காரண்டி” விளம்பரங்கள் தொலைக் காட்சிகளிலும், யூ ட்யூப் தளத்திலும் சகட்டு மேனிக்கு காட்டப்படுகிறது.

வரலாறு காணாத வேலையின்மையும், விலையேற்றமும் மக்களை சிந்திக்க தூண்டுகிறது. உத்தர பிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேசம் , பீகார் போன்ற மாநிலங்களில் சொற்ப அளவே உள்ள பணியிடங்களுக்கு பல லட்சக்கணக்கான இளைஞர்கள் விண்ணப்பித்து தேர்வு எழுதுவதும், ஆனால், அங்குள்ள பா ஜ க அரசுகள் வினாத் தாள்கள் ” லீக்காகி” விட்டன என்று கூறி தேர்வையே ரத்து செய்வதுமாகி  இளைஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதை மத உணர்வினாலோ, சிறுபான்மை வெறுப்பு உணர்வினாலோ திசை திருப்புவது கடினமென பா ஜ க விற்கு தற்போது புரியத் தொடங்கியுள்ளது.

ஊழலையும், லஞ்சத்தையும் சட்டபூர்வமாக்கிய தேர்தல் பத்திர நன்கொடைத் திட்டத்தை உச்ச நீதி மன்றம் சட்டவிரோதமான திட்டம் என தீர்ப்பளித்தது. ராமர் கோவில் தீர்ப்பு, காஷ்மீர் பிரிவினை தீர்ப்பு போன்ற தனக்கு சாதகமான மீர்ப்புகளையெல்லாம் வரவேற்று எகிறிக் குதித்த பா ஜ கவும், மோடி அரசும் இந்த மோசடி திட்டத்தை உச்ச நீதி மன்றம் நிராகரித்த தீர்ப்பை பற்றி மூச்சு கூட விடவில்லை.

சண்டீகர் மேயர் தேர்தல் மோசடியும், ஹரியானா மாநிலங்களவை தேர்தலும் பாஜக வின் கோரமுகத்தை அனைவருக்கும் படம்பிடித்து காட்டியது. பாஜக வின் பக்தர்களைக் கூட இத்தகைய ஈனச் செயல்கள் வெட்கப்பட வைத்துள்ளன.

தெளிவு பெறும் மக்கள் ‘இந்துத்துவா’ என்ற இந்து மத அடையாள வெறி அரசியல்  நமக்கு சோறு போடாது, நிம்மதியும், அமைதியையும் தராது என்ற உண்மையை உணருவர். ஆனால் மத போதையிலிருந்து விடுபடுவது எளிதான காரியமல்ல, என்பதை காங்கிரசும் மற்ற எதிர்கட்சிகளும் அறியத் தலைப்பட்டுள்ளனர். ராகுல் காந்தியின் யாத்திரை இத்தகைய மடமையிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் உன்னத செயலாகும்.

ஆனால், மத வெறி மற்றும் இஸ்லாமிய வெறுப்பு அரசியல் இந்திய சமூகத்தை சுக்குதூறாக கிழித்து, சமூக அமைதியை தொலைப்ப தோடில்லாமல், நாட்டின் வளங்களை , வாழ்வாதாரங்களை மோடியின் நண்பர்களுக்கு தாரை வார்ப்பதில் போய் இன்று முடிந்துள்ளது.

ஏழை எளிய மக்கள் வாழ்க்கைத்தரம் உயர எந்த முயற்சியும் செய்யாமல், அவர்கள் வறுமையில், வேலையின்மையில் உழலுவதை தடுக்க முன்வராமல் ஒரு சில எலும்புத் துண்டுகள் போல் சில சலுகைகளை கொடுத்துவிட்டு மோடியின் நண்பர்களான அதானி – அம்பானிக்கு  துறைமுகங்களையும், விமான நிலையங்களையும், கனிம வள சுரங்கங்களையும், வளங்கள் நிறைந்த காடுகளையும் “தாரை வார்க்கும் ” நிகழ்வுகள் மோடியிடம் ” ஆட்சி அதிகாரம்” இருப்பதால் மட்டுமே நடைபெறுகிறது எனலாம்.

வேலையில்லா இளைஞர்கள் பல்கி பெருகி வருகின்ற நிலையில் மத்திய அரசு துறைகளில் 9,64,000 பணி இடங்களை நிரப்பாமல் வைத்துள்ளது பாஜக அரசு. அரசுத் துறைகளை படிப்படியாக தனியார்களுக்கு தாரை வார்ப்பதால் எதிர்காலத்தில் அரசு வேலைகள் என்பதே அரிது என்றாகலாம்.

வேலை தேடும் இளைஞர்கள் கூட்டம்

எனவே, இந்த 2024 மக்களவை தேர்தல்  முக்கியத்துவம் பெறுகிறது. அண்ணல் காந்தியடிகள் கனவு கண்ட நல்லிணக்கமான, நியாயமான ஆட்சி நமது இலக்காக இருந்தாலும் அதை சாதிக்க நமக்கு ஆட்சி அதிகாரம் தேவைப்படுகிறது. . அந்த வகையில் ஆட்சி முறையில் ஏற்பட்டுள்ள அலங்கோலங்களை, அக்கிரமங்களை களைய ஜனநாயகத்தை கடித்துக் குதறுவதை தடுக்க , அனைத்து மக்களுக்கும் சாதி ,மத வேறுபாடின்றி நியாயங்களும், உரிமைகளும் கிடைக்க மோடியை ஆட்சியிலிருந்து அகற்றுவது அவசியமாகிறது.

இம்முயற்சியில் இந்தியா கூட்டணி கட்சிகள் மோடிக்கு எதிராக ஓரணியில் நிற்கின்றன.

ஆக இந்த திருப்புமுனையான யுத்தத்தில் நாம் தோற்றுவிட்டால், இன்னும் எதையெல்லாம் இழக்க நேரிடும் அல்லது என்னவெல்லாம் நடக்கும் என்று பார்ப்போம்.

ஒரே நாடு ஒரே தேர்தல்.

இந்த தேர்தலில் மோடி வெற்றிபெற்று மூன்றாவது முறையாக பிரதமரானால் மாநிலங்கள் சிறுமைப்படுத்தப்பட்டு ஒரே நாடு ஒரே தேர்தல் என மக்களவைக்கும், மாநில சட்டசபைகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சிகளுக்கும் தேர்தல் ஒரே சமயத்தில் நடக்கும்.

பல கட்சி ஜனநாயக முறை அழிக்கப்படும், மாநிலங்களின் தனித்தன்மை அழிக்கப்பட்டு, கூட்டத்தோடு கோவிந்தா போடும் நிலை உருவாகும். மாநில அரசுகளுக்கும், மாநகராட்சிகளுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கப் போவதில்லை. பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட மாநிலங்களும், மக்கள கூட்டமும் தத்தமது தனித் தன்மையை பறிகொடுக்க வேண்டியிருக்கும், மொழிகளும்,உணர்வுகளும், முன்னேற்றமும் ஒற்றை அடையாளத்தில் மூழ்கடிக்கப்படும்.பன்முகத்தன்மை பலிகடாவாக்கப்படும்.

குற்றவியல் சட்டங்கள் மூன்று

சமீபத்தில் விவாதங்களோ, கருத்துப்பரிமாற்றங்களோ இன்றி 142 நாடாளுமன்ற உறுப்பினர்களை அவையிலிருந்து நீக்கிவிட்டு நிறைவேற்றப்பட்ட மூன்று (பாரதீய நியாய சன்ஹிட்டா, பாரதீய நகரிக சுரக்‌ஷா, பாரதீய சாக்‌ஷிய சன்ஹிட்டா) சட்ட திருத்த மசோதாக்கள் வருகின்ற ஜூலை மாத்த்திலிருந்து நடைமுறைக்கு வரவிருக்கிறது.

 

காலனி ஆதிக்க மனப்பான்மையை மாற்றவதே இச்சட்டதிருத்தங்களின் குறிக்கோளாம்! உண்மையில் இச்சட்டங்கள் காலனிய மனப்போக்கை மேலும் வலுவடையச்செய்கிறது என்றே சட்ட வல்லுனர்களும் மூத்த வழக்கறிஞர்களும் கூறுகின்றனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் – சான்று மற்றும் தரவுகள் ஏதுமின்றி- யாரை வேண்டுமானாலும் கைது செய்யவும், அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை போலீஸ் காவலில் 90 நாட்கள் வரை வைத்திருக்கவும் இச் சட்டங்கள் அனுமதிக்கின்றன. இதன்மூலம்

அன்று வெள்ளை அரசு தன்னை எதிர்ப்பவர்கள் அனைவரையும் சந்தேகத்தினடிப்படையில் கைது செய்தது, இனி மோடி அரசு தனது எதிர்ப்பாளர்களை அல்லது எதிர்ப்பார்கள் என்ற சந்தேகத்தினடிப்படையில் நீங்களும், நானும் கைது செய்யப்படலாம் .

பிணை கிடைப்பது எளிதாக இராது, மாறாக பிணை மறுப்பே நடைமுறையாகும் . இந்த நிலை இன்றுங்கூட இருக்கிறது , ஆனால் திருத்தங்கள் அமலுக்கு வந்தபின்னர் ஒருவர் சந்தேகத்தின அடிப்படையில் கைது செய்யப்பட்டால் அவர்மீது குற்றப்பத்திரிக்கை ஏதும் தாக்கல் செய்யாமலே 180 நாட்கள் வரை  காவலில் வைக்க முடியும். சட்டம் அப்படி!

தேசத் துரோகம் என்ற காலனிய சட்டங்கள் இந்த சட்டங்களில் மீண்டும் வலுவாக தொடர்கிறது. ஆனால் தேசத் துரோகம் என்ற பெயர் மட்டும் நீக்கப்பட்டு, அதன் தன்மைகளும் வீச்சும், தண்டனைகளும் கூட்டப்பட்டுள்ளன.

இவையெல்லாம் பாயப்போவது சாதாரண மக்கள் மீதுதான்! அநீதிக்கெதிராக குரல் கொடுப்பவர்கள் மீதுதான! அரசை கேள்வி கேட்பவர்கள் யாராயிருந்தாலும், விவசாயியோ, தொழிலாளியோ, மாணவனோ, பத்திரிக்கையாளனோ, எதிர்கட்சினரோ யாராக இருப்பினும் அவர்கள் மீது பாயப் போகிறது இந்த கருப்பு சட்டங்கள்.

பேச்சு சதந்திரம் , எழுத்து சுதந்திரம் என்று இனிமேல் யாரும் குரலெழுப்ப முடியாது.

பொது சிவில் சட்டம் (Uniform Civil Code)

பல்வேறு மொழி, மதம் மற்றும் பழக்க வழக்கங்களை கொண்ட பலதரப்பட்ட மக்கள் வாழும் இந்த நாட்டில் ஒற்றை அடையாளத்தை திணிக்க ஆட்சியாளர்கள் கையிலெடுக்கும் ஆயுதம் பொது சிவில் சட்டம் தான்.

கைவிரல் ஐந்தும் ஒன்றுபோல் இல்லாவிட்டாலும், வலிமை குன்றவில்லை என்ற அடிப்படை உண்மையை மறுக்கும் இந்த ஆதிக்கவாதிகள் ஒற்றை நடைமுறை என்ற கலாச்சார அடக்குமுறையை இதன்மூலம் திணிக்க முயல்கின்றனர். ஒரே நாடு, ஒரே கலாச்சாரம்

ஒரே சட்டம் என்று உளறும் இந்துத்துவ கும்பல் இன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தியதை நாளை -மோடி மீண்டும் ஆட்சியிலமர்ந்தால்- நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவர்.

பன்முகத்தன்மை அழிக்கப்படும், சுதந்திரம் மறுக்கப்படும் எல்லாம் காவி மயமாக்கப்படும்.

இவை ஆணாதிக்கத்தை முன்னிறுத்தி  பெண்கள் சுதந்திரத்தையும், உரிமைகளையும் மறுக்கும் நிலை வலுப்பெறும்.

குடியுரிமை திருத்த சட்டம்  (CAA) 

அடிப்படையிலேயே பாரபட்சம் காட்டும் இந்த சட்டம் மிகப் பெரிய எதிர்ப்பலைகளை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கூறான மதச்சார்பின்மையை கைவிட்டு சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கெதிரானதாக இச்சட்டம் இயற்றப்பட்டதை எதிர்த்து வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, ஆனால் இச்சட்டத்திற்கான நடைமுறை விதிகளை கடந்த ஐந்து ஆண்டுகளாக வெளியிட முன் வரவில்லை. வட கிழக்கு மாநிலங்களும், பழங்குடியினரும் இச்சட்டத்தையும் இது கிளப்பும் தேசீய குடிமக்கள் பதிவேட்டையும் எதிர்க்கின்றன.

ஆனால், மோடி மீண்டும் பதவியில் அமர்ந்தால் இந்தக் கருப்பு சட்டம் நிறைவேற்றப்படும். இஸ்லாமியர்கள் இரண்டாந்தர குடிமக்களாக அறியப்படுவர், மதச்சார்பும், மதவெறியும் அரசு நிர்வாகங்களில் ,நடைமுறையில் தலைவிரித்தாடும். சமூக நல்லிணக்கமும், அமைதியும் ஒற்றுமையும் கானல் நீராக மாறும் அபாயம் உள்ளது.

பெரும்பான்மை ஆதிக்கம் (Majaritarianism) 

மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்து, அதன்மூலம் தனது உயர்சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டும் இந்துத்துவ அரசியல் இந்திய சமூக மற்றும் அரசியலரங்கில் பாரதூர விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் யாருக்கும் ஐயம் வேண்டியதில்லை.

இந்திய விடுதலை போராட்டமும், எண்ணற்ற மக்களின் தியாகமும் எந்த ஒரு உயரிய லட்சியத்தை தூக்கிப் பிடித்ததோ அவற்றை – ஜனநாயகம், சம உரிமை, சம நீதி, அரசியலில் மதங்கலவாமை- ஒதுக்கிவிட்டு ஒருசிறு கும்பலின் எதேச்சதிகாரத்தை மோடி ஆட்சி நிலைநாட்டும். அதற்கு அவர்கள் இடும் பெயர் இந்து ராஷ்டிரம்.

ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல்கள் மட்டுமல்ல , ஜனநாயகம் என்பது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலும், தேர்ந்தெடுக்கப்பட்டோர் மக்களுக்கு பதில் கூறுவதும், அரசியல் சட்ட நெறிகளுக்குட்பட்டு ஆட்சி நடத்துவதும், சுய அதிகார அமைப்புகளின் கண்காணிப்பில் ஆட்சிமுறையை கொண்டு செல்வதுமே ஜனநாயகமாகும்.

பாஜக ஆட்சியால் பலனடைந்த பண முதலைகள்!

திருப்பி எடுக்கப்பட்ட மூன்று விவசாய சட்டங்கள் மீண்டும் சட்டங்களாகி விவசாயிகளின் வாழ்விம் மண்ணை அள்ளிப் போடும், அதானி , அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் அடிக்க வழிவிடப்படும்.

இவற்றை கடந்த பத்தாண்டுகளில் கபளீகரம் செய்த மோடி ஆட்சி மீண்டும் வந்தால் எஞ்சியுள்ள உரிமைகளும், பெயரளவிற்குள்ள பாராளுமன்றம், நீதி மன்றம் போன்ற அமைப்புகள் சாரமிழந்து தட்டி கேட்கும் சக்தியற்ற அமைப்புகளாக மாறும் அபாயம் உள்ளது.

உச்சநீதி மன்றத்தால் நிராகரிக்கப்பட்ட  தேர்தல் பத்திரங்கள் புதுவடிவில்  மீண்டும் வரும்!

மாநிலங்களின் மிச்ச சொச்ச உரிமைகளும் பறிக்கப்படும், ஒன்றியத்தில் ஆளுவோரின் ஆசைக்கேற்ப சிறு சிறு பிரதேசங்களாக மாநிலங்கள் துண்டாடப்படும்.

கூட்டாட்சி என்ற முறைமை குழிதோண்டி புதைக்கப்படும்.

பன்முகத்தன்மை நிராகரிக்கப்படும், எதிர்ப்போர்கள் அடக்கப்படுவர்.

ஒரே கல்வி, ஒரே மொழி, ஒரே அடையாளம் என்ற ஒற்றை ஆதிக்கம் திணிக்கப்படும்.

இந்துக்களின் இதய சிம்மாசனத்து சக்கரவர்த்தியாக தன்னை எண்ணிக்கொள்ளும் மோடி, இந்தியாவின் முடிசூடா மன்னனாக தன்னை எண்ணிக் கொள்வார்.

இதனால் சிறுமைகள் பெருகும், இறுதியில் இந்தியா சிதறுண்டும் போகும்!

அத்தகைய இருண்ட காலத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டுமா என்பதை வாக்காளர்கள் எண்ணிப் பார்த்து புதிய அரசை தேர்ந்தெடுக்க வேண்டும்.

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time