பத்தாண்டு சிறைவாசம், பயங்கொள்ளா நெஞ்சுரம்!

-ச.அருணாசலம்

கால்கள் செயல் திறனற்ற ஊனமுற்ற பேராசிரியரைக் கண்டு இவ்வளவு பயப்படுவானேன்..? உரிய காரணங்களின்றி பத்தாண்டுகள் சிறைவாசம்! அவ்வளவு பயங்கரவாதியா இவர்? செய்த குற்றமென்ன..? மனித உரிமை செயற்பாட்டாளராக இருப்பது மன்னிக்க முடியாத குற்றமா? அரசின் பதற்றத்திற்கு காரணமென்ன..?

பேராசிரியர் ஜி.என். சாய்பாபா மும்பை உயர்நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். 5 வயதில் இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டது முதல் சக்கர நாற்காலியே கதியாக வளர்ந்த சாய்பாபா தனது விடா முயற்சியாலும், தளராத நம்பிக்கையினாலும் படித்து  தில்லி பல்கலைக்கழக பேராசிரியரானவர்.

ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஒரு ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து, உடல் ஊனத்தோடு வளர்ந்த இந்த சிறுவன் தனது இன்னல்களுக்கு மத்தியிலும், தன்னைச்சுற்றி நிகழும் சம்பவங்களையும், அதில் உழன்று தவித்த சக மனிதர்களின் வாழ்க்கை போராட்டத்தையும் கவலையுடன் பார்த்தான்.

1990களில் தனது கல்லூரிக் காலங்களில்  பண்ணையார்களின் அடகுமுறைக்கெதிராகவும், சாதிக்கொடுமைக்கெதிராகவும் ஏழை விவசாயிகள்,கிளர்ந்தெழுந்து போராடிய போது புரட்சிக் கவிஞன் கத்தார்  அகில இந்திய மக்கள் எதிர்ப்பு முன்னணி ( All India People Resistance Forum) என்ற அமைப்பை ஏற்படுத்தி போராடும் மக்களை அணிசேர்த்த போது அதில் தன்னையும் இணைத்துக் கொண்டார் சாய்பாபா.

1992ல் இவ்வமைப்பின் ஆந்திர மாநில செயலாளரானார். போராட்டங்கள் குறித்து  எழுதுவது, கூட்டங்களை ஏற்பாடு செய்வது,  நிகழ்வை ஒருங்கிணைப்பது ஆகியவற்றில் மும்முரமாக இருந்த சாய்பாபா தில்லி தலைநகரிலும் கருத்தரங்குகள் நடத்தினார் .

ஏழை விவசாயிகள் மற்றும் ஆதிவாசிகள் கோரிக்கைகளை முன்னிறுத்தி. அவர்களை ஒருங்கிணைத்து ஏகாதிபத்திய உலகமயமாக்க எதிர்ப்பு மாநாட்டை 2002ம் ஆண்டு மே மாதம் புது தில்லி ராம் லீலா மைதானத்தில் நடத்தினார் . அங்கு லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்தில் தில்லி போலீஸ் வன்முறையில் நூற்றுக்கணக்கானோர் மண்டை உடைக்கப்பட்டது, ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

இந்த காலகட்டத்தில் தான் தாராளமயமாக்கல் இந்தியாவில் வாஜ்பாய் அரசால் முன்னெடுக்கப்பட்டது . பாதிக்கப்பட்ட தொழிலாளர்களும், விவசாயிகளும் போராட்டங்களை காவல்துறையால் ஒடுக்கப்பட்டனர். இந்த அடக்குமுறையை எதிர்ப்போரை பொடா ( Prevention Of Terrorist Act) சட்டத்தில் வாஜ்பாய் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.

அரசின் கொள்கையால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்காக குரல் கொடுப்போரை ‘பயங்கரவாதிகள்’ என முத்திரை குத்தி விசாரணையின்றி, சிறையில் தள்ளியது வாஜ்பாய் அரசு!

பேராசிரியர் சாய்பாபா கைதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்.

பொடாவிற்கெதிரான பெரும் போராட்டம் வெடித்தது. 2004ல் வாஜ்பாய் அரசு தோற்ற பிறகே! இந்த ‘கருப்பு பொடா சட்டம்’ ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் ரத்து செய்யப்பட்டது.

இந்தச் சுழலில் தில்லி பல்கலைக் கழகத்தில் போராசிரியரான சாய்பாபா. பொடா சட்டம், ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் போன்றவற்றுக்கு எதிராக தொடர்ந்து எழுதி வந்தார். இந்தச் சூழலில் மக்கள் போராட்டத்திற்கான ‘அகில உலக லீக்’ என்ற அமைப்புடன் (International League of People’s Struggle- ILPS) தன்னை  இணைத்துக் கொண்டார். ஆதிவாசிகள் மீது சத்தீஸ்கரிலும் மற்ற பகுதிகளிலும் அரசே முன்னின்று ‘ சல்வா ஜுடும் ‘ என்ற ஆயுதக் கும்பல் மூலம் நடத்திய பயங்கரவாத செயல்களை எதிர்த்து தொடர்ந்து பத்திரிக்கைகளில் எழுதினார்.

ஆதிவாசிகளுக்கு எதிரான அரசின் தாக்குதல்களையும், ஆதிவாசிகளை அப்புறம்படுத்தும் அரசின் செயலையும் கண்டித்து பல கூட்டங்களை புரட்சிகர ஜனநாயக முன்னணி ( Revolutionary Democratic Front) என்ற

அமைப்பின் சார்பில் நடத்தினார். இவற்றிற்கு மத்தியிலும் கல்வி கற்கும் செயற்பாடுகளிலும் தளராது ஈடுபட்டு முனைவர் (P. hd) பட்டமும் பெற்றார். மாணவர்கள், பல்கலை ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வை சாய்பாபா தட்டியெழுப்பினார். தில்லி பல்கலைக்கழகத்தின் ‘நான்காண்டு பட்டப்படிப்பு’ என்ற அரைவேக்காட்டு திட்டத்தை மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஓரணியில் திரட்டி எதிர்த்தார்.

ஆந்திர அரசு 2012ல் RDF  என அழைக்கப்படும் புரட்சிகர ஜனநாயக முன்னணியை தடை செய்தது. ஆந்திராவில் சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேச ஆட்சி ஆபரேஷன் கிரின் ஹன்ட் -operation green hunt- என்ற போலீஸ் அடக்குமுறையை மாவோயிஸ்டுகள் மீது கட்டவிழ்த்தது. இந்த தாக்குதலில் ஏராளமான மாணவர்களும். இளைஞர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இக்கொடுமைகளுக்கெதிரான பிரதான குரலாக சாய்பாபாவின் குரல் அமைந்தது. அவரது எழுத்துக்கள் உண்மைகளை உலகிற்கு படம் பிடித்து காட்டின.

ஆட்சியாளர்களின் கழுகுப் பார்வை ஆட்சியின் கோர முகத்தை அம்பலப்படுத்தும் சாய்பாபாவின் மீது பாய்ந்தது. 2013 செப்டம்பர் 7ல் திருட்டு பொருள்கள் உள்ளதா..? என தில்லியில் உள்ள சாய்பாபாவின் வீட்டை சோதனையிட மாஜிஸ்டிரேட் அனுமதி கொடுக்கிறார்.

செப்டம்பர் 12ல் ரெய்டு நடத்தப்பட்டது. இரண்டு மடிக்கணினிகளையும், தொலைபேசிகளையும் பிடுங்கி சென்றனர் காவல்துறையினர்.

2013 செப்டம்பர் 17ல் சாய்பாபாவிற்கு மகாராஷ்டிரா மாநில காவல்துறை விசாரணைக்கு அழைக்கும்போது வர வேண்டும் என ‘சம்மன்’ அனுப்புகிறது.

2013 அக்டோபர் மாதத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் இந்த சம்மனை எதிர்த்து மகாராஷ்டிர காவல்துறைக்கும், தில்லி காவல் துறைக்கும் நோட்டீஸ் அனுப்பியது. 2014ம் ஆண்டு மே மாதம் 9 அன்று சாய்பாபா காவல் துறையால் அவரது வீட்டிலிருந்து கடத்தப்படுகிறார்.

இதை வன்மையாக கண்டித்து 2014 மே 14ல் தில்லிவாழ் அறிஞர்களும், தில்லி பல்கலைக்கழக ஆசிரியர்களும் ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சிந்தர் சச்சார் தலைமையில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினர், சாய்பாபா கடத்தப்பட்டு பின் கைவிடப்பட்டதை கண்டித்தனர்.

2014 மே 15ல் அதாவது கடத்தலைக் கண்டித்து நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு அடுத்த நாளே சாய்பாபா மாவோயிஸ்டுகளுக்கு உதவி செய்ததாக கூறி கைது செய்யப்பட்டார்.

இதனை வன்மையாக கண்டித்து மே 22ல் தில்லி பல்கலைகழக ஆசிரியர் கூட்டமைப்பு மிகப் பெரிய ஆர்ப்பாட்டமும், கண்டனமும் நடத்தினர்.

2017 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சாய்பாபா மாவோயிஸ்டுகளுக்கு உதவியதாக கூறி உபா சட்டம் (UAPA)  பிரிவுகள் 13,18,20,38,&39 கீழும்,  மாவோயிஸ்டு மற்றும் புரட்சிகர ஜனநாயக முன்னணி ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டி இந்திய தண்டனை சட்டம் IPC பிரிவு 120ன் கீழும் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

இந்த தீர்ப்பை கண்டித்து, ஏராளமான கண்டனங்கள் எழுந்தன. இந்தியத் தலை நகர் தில்லியிலும், மகாராஷ்டிராவிலும், ஆந்திராவிலும், சத்தீஸ்கர், ஒரிசா மற்றும் மத்திய பிரதேசத்திலும் மாணவர்கள்,வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

இந்தியாவிற்கு வெளியில் உள்ள மற்ற நாடுகளின்  மனித உரிமை மற்றும் சமூக அமைப்புகளும் கண்டனம் எழுப்பி, சாய்பாபாவை விடுதலைக்கான கோரிக்கை வைத்தன. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பும் (UN OHCHR) இந்திய அரசிடம சாய்பாபாவை விடுதலை செய்ய கோரியது .

கிட்டத்தட்ட 90 சதவிகிதம் உடல் ஊனமான சாய்பாபாவின் உடல்நிலை மிகுந்த மோசமடைந்த நிலையிலும் அவருக்கு உரிய மருத்துவ வசதியோ, சேவையோ கிடைக்க அரசு அனுமதிக்கவில்லை. அவருடைய தாயார் இறந்த பொழுதும் அவர் ஈமச்சடங்குகள் செய்ய அரசு அனுமதி தரவில்லை.

2020ல் மும்பை உயர்நீதி மன்றம் சாய்பாபாவின் மருத்துவ பிணை மனுவைக் கூட நிராகரித்தது. சிறையில் ஒரு தண்டனைக் கைதிக்கு கிடைக்க வேண்டிய சிறுசிறு உரிமைகள் கூட சாய்பாபா ” சாகும்வரை உண்ணாவிரதம்” இருந்த பின்னரே கொடுக்கப்பட்டது.

அரசின் கோபம் இத்துடன் நிற்கவில்லை, ஏப்ரல்2021ல் தில்லி பல்கலைக்கழக பணியிலிருந்தும் சாய்பாபா நீக்கப்பட்டார்.அவரது பேராசிரியர் பட்டமும ஜூலையில் பிடுங்கப்பட்டது.

அக்டோபர் திங்கள் 2022ல் மகாராஷ்டிர உயர்நீதி மன்றம் சாய்பாபா மற்றும் ஐந்து பேரை நிரபராதிகள் என கூறி, தண்டனையை ரத்து செய்து விடுவித்தது. உபா சட்டத்தின் கீழ் உரிய அனுமதிகள் பெறாமலேயே குற்ற விசாரணை செய்து தண்டிக்கப்பட்டதால் அது செல்லாது என உயர்நீதி மன்றம் சாய்பாபா மற்றும் ஐவரை அக்டோபர 22,2022 வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. நீதிபதி தியோ தனது தீர்ப்பில், ‘ தேசீய பாதுகாப்பிற்கு குந்தகம் வந்துவிடுமே என்ற   நினைப்பில் உரிய  சட்ட  நடைமுறைகளை முறையாக கடைப்பிடிக்காமல் வழக்குகள் நடத்தி, தண்டனைகள் வழங்கமுடியாது ‘ என்று குறிப்பிட்டார்.

ஆனால் மகாராஷ்டிர அரசோ ‘குய்யோ முறையோ ‘ என அலறிக் கொண்டு அன்றிரவே – தீர்ப்பு நகல் வெளிவருமுன்னரே- இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும், சாய்பாபாவை விடுதலை செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை இரவோடிரவாக தட்டியது.

உச்ச நீதி மன்றமும் அனைத்து இயற்கை நீதி முறைகளையும் காற்றில் பறக்கவிட்டு, விடுமுறை நாளான  சனிக்கிழமை காலையிலேயே விசாரணைக்கு எடுத்துக் கொண்டது!  .

‘’உயர்நீதிமன்றம் குற்றத்தின் தீவிரத்தை கணக்கில் எடுக்காமல், தடயங்களை சரியாக கணிக்காமல் , குற்றவாளிகளை விடுதலை செய்தது தவறு’’ என்று நீதிபதிகள்  பாலா எம். திரிவேதி மற்றும் எம்ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்து.

மேலேகான் குண்டுவெடிப்பில் குற்றவாளியான பிரகஞா தாக்கூர் வழக்கிலிருந்து விடுபடுவதும், சி.பி ஐ மேல் முறையீடு எதுவும் செய்யாததும். சொராபுதீன் என்கவுண்டர்வழக்கில் அமீத் ஷா நீதிபதி லோயா மரணத்திற்குப் பின் குற்றத்திலிருந்து விடுவிக்கப்படுவதும் இந்திய நீதி பரிபாலனத்தின் செயல்பாடு தான்! ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதும் மற்றொருவர் உள் துறை அமைச்சராவதும் இந்தியாவில் நரேந்திர மோடி ஆட்சியில் தான் நடைபெற்றுள்ளது.

உடல் ஊனமுற்ற பேராசிரியர் சாய்பாபா விடுதலையானால், இந்தியாவிற்கே ஆபத்து என்பதும் ‘நீதியின்’ குரல் தான் போலும்.

இப்பொழுது 2024 மார்ச் 5ல் மும்பை உயர்நீதி மன்றத்தின் நாக்பூர் அமர்வு , சாய்பாபா உள்ளிட்ட மற்றுவர்களையும்( ஒருவர் சிறையில் மாண்டு போனார்) குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி அரசு தரப்பால் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி மீண்டும் விடுதலை செய்துள்ளது, தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு தரப்பு மொக்கையான சாட்சியங்களையும், முறையற்ற சட்ட நடைமுறையையும் சார்ந்து வழக்கை நடத்தியுள்ளது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது, நீதிபதிகள் வினய் ஜோஷி, வால்மீகி மற்றும் மெனீசஸ் அடங்கிய அமர்வு!

குற்றவாளிகளின் மீது உபா சட்டத்தின் கீழ்  வழக்கு தொடர கொடுக்கப்பட்ட அனுமதி(sanction for prosecution under UAPA)  செல்லாது எனவும், தகுந்த சாட்சியங்கள் இல்லை என்றும் கூறி தண்டனையை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்துள்ளனர்.

இப்பொழுதும் மகாராஷ்டிர அரசு தீர்ப்பு நகல் கையில் கிடைக்கும் முன்னரே உச்ச நீதி மன்றத்தின் கதவுகளை தட்டியுள்ளது.

ஆனால், இந்த நேரம் வரை உச்சநீதி மன்றம் விசாரணைக்கு இம் முறையீட்டை எடுத்துக் கொள்ளவில்லை!

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time