உலகப் பணக்காரர்களில் ஒருவரான அம்பானியின் மகனின் திருமண முன் வைபவ நிகழ்ச்சி குஜராத் ஜாம் நகரில் 400 ஏக்கரில் புதிய நகரத்தையும், 3,000 ஏக்கரில் புதிய வனத்தையும் அம்பானி குழுமம் உருவாக்கி, அனைத்து பிரபலங்களையும் அழைத்து பந்தாவுடன் நடந்துள்ளது. இந்த நிகழ்வுகள் குறித்த சில பார்வைகள்:
அம்பானி ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட்க்கும் திருமணத்திற்கு முந்தைய ஒன்று கூடல் நிகழ்ச்சி மார்ச் 1,2,3 தேதிகளில் நடைபெற்றது. (ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது).
இந்த திருமணத்தை வெகு விமரிசையான எக்கச்சக்கமான விதவிதமான ஆடம்பர உணவு வகைகள் சிறப்பு சமையலர்களைக் கொண்டு செய்யப்பட்டு வி.வி.ஐ.பிக்களுக்கு பரிமாறப்பட்டுள்ளன! அதே சமயம் திருமணம் நடந்த இடத்தின் சுற்று வட்டார மக்கள் 50,000 க்கும் மேற்பட்டோருக்கு மூன்று நாட்களும் அன்ன சேவா என்ற பெயரில் உணவு பரிமாறப்பட்டதாம்!
இந்த பிரமாண்டமான நிகழ்ச்சிக்கு 1,250 கோடி ரூபாய் செலவாம்! 1-ந்தேதி முதல் நாள் நிகழ்ச்சியில் அமெரிக்க பாப் பாடகியும் நடிகையுமான ரிஹானாவின் இசைக் கச்சேரி நடைபெற்றது. இந்த இசை கச்சேரிக்காக மட்டும் ரூ.75 கோடி செலவு செய்துள்ளனர். 2-ம் நாளில் விருந்தினர்கள் அனைவரும் ஜாம்நகரில் உள்ள 3,000 ஏக்கர் வனத்திற்குள் நுழைந்து சுற்றி பார்த்தனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், இசைக்கச்சேரி, ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், முகநூல் ஜூக்கர் பெர்க், கிரிக்கெட் தோனி நடைபெற்றன. இதில் நடிகர் ரஜினிகாந்த், மனைவி லதா, மகள் ஜஸ்வர்யாவுடன் பங்கேற்றார். நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், சஞ்சய் தத், அபிஷேக் பச்சன், ராம் சரண், சயீப் அலிகான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், ரித்தேஷ், நடிகைகள் ஐஸ்வர்யா ராய்.. உட்பட தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள், திரையுலகினர்.. என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆனால், அரசியல் தொடர்பானவர்கள் அழைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
திருமணம் ஜூலை ஒன்றாம் தேதி நடைபெறகிறது. அப்போது அரசியல் தலைவர்கள் பலரும் அழைக்கப்படலாம். அதற்கு இன்னும் பல மடங்கு செலவாகும் என நம்பப்படுகிறது.
அரசாங்கமானது பல கோடி செலவில் ஜாம் நகர் விமான நிலையத்தை, இந்த நிகழ்ச்சிக்காக பத்து நாட்கள் சர்வதேச விமான நிலையமாக மாற்றியது. இவ்வளவு ஆடம்பரமாக செலவழிக்கும் அம்பானி தான், வங்கிகளுக்கு கட்ட வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் கடன்களை கட்டாதவர். பலநூறு கோடிகள் வரி ஏய்ப்பில் சம்பந்தப்பட்டவர். வறுமை, வேலையில்லா திண்டாட்டம் போன்றவை கோலோச்சும் இந்தியாவில் இந்த திருமணம் வியப்புடன் விமர்சிக்கப்பட்டது. இங்கு சில விமர்சனங்கள்:
இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது X பக்கத்தில் துணிச்சலாக விமர்சித்துள்ளார். அதில், “அம்பானி குடும்பத்தின் திருமண விழா, செல்வம் மற்றும் அதிகாரத்தின் அருவருப்பான வெளிப்பாடு. நம் பிரபலங்களும் அங்கு போய் வெட்கமில்லாமல் பங்கேற்பது மிகவும் கீழ்த்தரமாக இருக்கிறது. வெகுஜன ஊடகமும் இந்த நிகழ்ச்சிக்கு ஓடியாடி உழைப்பது, எந்தளவுக்கு ஊடகங்கள் விலை போயிருக்கின்றன என்பதை காட்டுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
பத்திரிகையாளர் கே.ஆர்.அதியமான்;
இந்தியாவின் பெரிய பணக்காரர் டாடா வீட்டு திருமணங்கள் நெருங்கியவர்களுக்கு உள்ளாகவே முடிந்து விடும். இப்போது சாதாரண நடுத்தர குடும்பங்களே திருமணத்திற்கு இலட்சங்களில் செலவு செய்கின்றன. சில கோடிகள் செலவழிக்கும் குடும்பங்களும் உண்டு. இதனால் சில குடும்பங்கள் கடனில் வீழ்ந்து போகின்றன. அம்பானி தனது சொத்தில் 0.01 % மட்டுமே இதற்காக செலவழித்து உள்ளார். இதனால் பந்தல்காரர், சமையல்காரர், பூக்கடைகாரர் என பல பேருடைய பிழைப்பு நடக்கும். அரசாங்கத்திற்கு ஜிஎஸ்டி வரி கிடைக்கும். முதலாளித்துவ பொருளாதாரத்தில் இது நடப்பது தானே ! ஆனால், நான் இவ்வளவு செலவு செய்து திருமணத்தை நடத்த மாட்டேன்.
தொழிற்சங்கத் தலைவர் தி.ம.மூர்த்தி;
இதில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் அம்பானியோடு எந்தத் தொடர்பும் கொண்டவர்களல்ல. தங்கள் பகட்டை காட்டுவதற்காகவே கலந்து கொண்டிருக்கிறார்கள். முப்பது சத மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர். பத்து பேர் பட்டினியாக இருக்கும்போது ஒருவர் மட்டும் சாப்பிடுவது பாவம் இல்லையா ? அம்பானி வீட்டு நிகழ்ச்சி, இந்தியாவின் ‘ஆன்மாவை’ கேவலப்படுத்துகிறது” என்று கடுமையாகக் கூறினார்.
அம்பானி ஒரு தொழில் ஆரம்பிக்க அறிவிப்பு கொடுத்த உடனேயே மக்கள் பணத்தை கொட்டுகிறார்கள். சாதாரண பொதுமக்கள் பணத்தில்தான் அவர் பணக்காரராகி இருக்கிறார். இப்படிப்பட்ட பெரிய பணக்காரர்கள், ஐம்பது காசு ஊறுகாய் பொட்டல வியாபாரத்தில் கூட ஈடுபடுகிறார்கள். இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் அழிவதற்கே அம்பானி போன்றவர்கள் தான் காரணம். இராமர் கோவில் நிகழ்ச்சியில், அதோடு சம்மந்தமில்லாதவர்களை எல்லாம் ஒன்று திரட்டி, நான்தான் பெரியவன் என்று மோடி எப்படி காட்டினாரோ, அதேபோலத்தான் அம்பானியும் தனது பகட்டைக் காட்டுகிறார்.
திருமணச் செலவுக்கு உச்சவரம்பு விதிக்கக் கோரி தனிநபர் மசோதாக்கள் கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அரிசிப்பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் இத்தனை பேர் வரைதான் ஒரு திருமணத்திற்கு அழைக்கப்பட வேண்டும் என்ற உச்சவரம்பு விதிக்கப்பட்டிருக்கிறது. பண மதிப்பிழப்பு ஏற்பட்ட காலத்தில், திருமணத்திறகாக இத்தனை ரூபாய் வரை தான் வங்கியில் இருந்து எடுக்கலாம் என்ற வரையறையையும் இருந்தது. ஜெயலலிதா தனது வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்திற்கு ஆடம்பரமாக செலவழித்ததை சாதாரண மக்கள் ஏற்காததால் ஜெயலலிதாவின் வீழ்ச்சிக்கு அந்தத் திருமணம் காரணமாகிவிட்டது.
மனநல ஆலோசகர் காயத்திரி மஹதி;
“தம்பதிகளுக்கு இடையேயான உடலுறவும், காதலும் திருமணத்திற்கு ஆதாரமானது. இந்தக் குணங்கள்தான் திருமண வாழ்க்கை நீடிக்க உதவுகிறது. ஆடம்பரமாக நடக்கும் திருமணங்கள் மணமக்களுக்கு அழுத்தத்தையே கொடுக்கின்றன. பெரும் செலவில் நடக்கும் திருமணம் சரியில்லாத போது, அதிலிருந்து மீண்டு வர மணமக்கள் சிரமப்படுவார்கள். ஆடம்பரமாக நடக்கும்போது, திருமணம் என்ற சடங்கைத் தாண்டி, பழைய காலத்து ராஜா போல, தனது வியாபாரத்தை, அதிகாரத்தை விரிவுபடுத்துவதாக மாறும். உடையலங்காரம், உணவு, சிகையலங்காரம் போன்றவைகளுக்கு செலவு செய்வதை அதிகரிக்கச் செய்யும். ஆடம்பர திருமணங்களை நடத்தி வைக்கும் நிறுவனங்கள் மேலும் பெருகும். திருமணங்களை வெளிநாட்டில் நடத்தலாம் என்றோ, வெளிநாட்டில் இருந்து விருந்தினர்களை வரவழைக்கலாம் என்றோ மாறும்.
மக்களின் சேமிப்புப் பழக்கம் சில ஆண்டுகளாக குறைந்து, நுகர்வு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. பணம் இருந்தால் ஜி பே மூலம், பொருட்களை வரவழைக்கும் கலாச்சாரம் வந்து விட்டது. ஒரு நாள் நடந்த திருமணங்கள் இப்போது இரண்டு நாள், மூன்று நாள் என அதிகரிக்கின்றன. இவையெல்லாம் சாதாரண மக்களுக்கு நல்லதல்ல” என்றார் மேல்மட்ட திருமணங்களை நடத்தி வைப்பதில் உள்ள போலித்தனங்களை ‘மேட் இன் ஹெவன்’ என்ற இந்தித் தொடரானது நன்றாக சித்தரிக்கிறது.
” குடும்பத்தில் மாமா, பெரியப்பா, சித்தப்பா என உறவினர்களை வைத்து திருமணம் செய்யும் போது கணவன் – மனைவிக்குள் பிரச்சினை ஏற்படுகையில் ஒருவிதத்தில் அவர்கள் அதிர்ச்சியைத் தாங்குபவர்களாக (Shock absorber) இருப்பார்கள். ஆனால் உலகமய சூழலில், தனிப்பட்ட வாழ்க்கையில் பெற்றோர்களுக்கு மட்டுமே பொறுப்பு என்று வருவதால் சிக்கல்கள் அதிகரிக்கின்றன. அம்பானியைப் பார்த்து, சாதாரண சாதாரண தொழிலதிபர்களும் ஆடம்பரமாக செலவு செய்யத் தொடங்குவார்கள்.”
ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி.அமுதன்;
ஒரு காலத்தில் ராஜா ரொம்ப ஆடம்பரமாக இருப்பார். குடிமக்கள் அடிமை வேலை செய்ய வேண்டும் என்று இருந்தது. சுதந்திரம் அடைந்த பிறகு பணக்காரர்களுக்கும், ஏழை மக்களுக்கும் உள்ள இடைவெளியை குறைக்கும் முயற்சிகள் நடந்தன. உலகமயமாக்கலுக்குப் பிறகு மீண்டும் இராஜா காலத்திற்கே போகும் நிலை தான் நடக்கிறது.
இராஜாவைப் போல அம்பானியை காட்டுவது தான் இதன் பொருள்.
”நீயும் ராஜா போல வாழ்! மற்றவர்களைப் பற்றி கவலைப்படாதே. அவர்கள் பட்டினியாக இருந்தாலும், நீ செலவு செய்” என்ற அறிவுரை நடக்கிறது. ‘என்னிடம் செல்வம் இருக்கிறது. நான் காட்டுகிறேன்’ என்ற ஆணவத்தின் வெளிப்பாடுதான் (maglomaniac) அம்பானியின் நிகழ்ச்சி.
தொகுப்பு; பீட்டர்துரைராஜ்
Leave a Reply