பசுமை வயல்வெளிகள் பூத்துக் குலுங்கும் கிராமங்கள்!
நாற்று நடும் பெண்கள், மாடு பூட்டி ஏர் உழும் உழவன், ஏரிகள், குளம், குட்டைகள். ஆடு, மாடு, கோழிகள் குறுக்கும், நெடுக்குமாக ஓடும் தெருக்கள், கண்ணாம் பூச்சி, சடுகுடு விளையாடும் சிறுவர்கள்..இன்னும் எத்தனை நாள் இந்த அமைதியான வாழ்க்கை அனுமதிக்கப்படுமோ..? எப்போது புல்டோசர்களின் அணிவகுப்பு நடக்குமோ..அப்படி ஒரு சம்பவம் நடந்தால்.., அதற்கு பிறகு நம் வாழ்க்கை என்னாகுமோ..?
இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போகும் கிராமம்!
பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்தை எதிர்த்து ஏகனாபுரம் மற்றும் சுற்று வட்டார மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம்
சாலை மறியல்
கருப்பு கொடி ஏற்றம்
பட்டினி போராட்டம்
மாணவர்கள் பள்ளி புறக்கணிப்பு
கோட்டை நோக்கி நடைப்பயணம்
என ஏகனாபுரம் மக்கள் நடத்தி வரும் போராட்டம் 600 -வது நாளை எட்ட இருக்கிறது..
மத்திய மாநில அரசுகளால் திட்டமிடப்பட்டுள்ள பரந்தூர் பசுமை விமான நிலையம் சென்னையில் இருந்து 65 ஆவது கிலோமீட்டர் இருக்கிறது.
சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பெருமதூரில் இருந்து 26 -வது கிலோமீட்டரிலும் ,
சுங்குவார் சத்திரத்தில் இருந்து 12 – வது கிலோமீட்டரிலும் இருக்கிறது பரந்தூர் .
இந்த புதிய விமான நிலைய திட்டத்திற்கு பரந்தூர் விமான நிலைய திட்டம் என்று பெயரிடப்பட்டாலும் ,
புதிய விமான நிலைய திட்ட வரைபடங்கள் படி, பரந்தூர் விமான நிலையத்தின் மேற்கு எல்லை மட்டுமே!
முதலில் இத்திட்டத்திற்காக 13 கிராமங்கள் கையகப்படுத்தப்படும் என அரசு அறிவித்தது.
அந்த 13 கிராமங்கள் இவை தாம். இவை அனைத்தும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் திருப்பெரும்பதூர் வட்டத்தில் உள்ள,எடையார் பாக்கம், குணகரம்பாக்கம், மகாதேவி மங்கலம், ஏகனாபுரம், அக்மாபுரம், சிங்கிலி பாடி. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் வட்டத்திலேயே உள்ள வளத்தூர், பரந்தூர், நெல்வாய், தண்டலம், பிடவூர், மடப்புரம் ஆகிய கிராமங்களாகும் .
இந்த கிராமங்களில் உள்ள 4,563 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என அரசு அறிவித்தது .
பரந்தூர் விமான நிலைய திட்டம் பற்றி அரசு அறிவித்த நாளிலிருந்து 13 கிராமங்களும் தங்களது வாழ்வாதாரம் பறிபோகும் என்ற அச்சத்துடன் நாளும், பொழுதும் போராடி வருகின்றன.
இதில் மிகவும் கொந்தளிப்பாக உள்ள கிராமம் ஏகனாபுரம் ஆகும். மற்ற கிராமங்களில் வீடுகளும், விளை நிலங்களும் பகுதி பகுதியாக இத் திட்டத்திற்கு பலியாகும் நிலையில், ஏகனாபுரம் கிராமம் மட்டும் இந்திய வரைபடத்தில் இருந்து துடைத்தெரியப்படும் அபாயத்தில் இருக்கிறது. காரணம் உத்தேச விமான நிலைய வரைபடத்தில் முழுமையாக உள் வருகிற கிராமமாக ஏகனாபுரம் இருக்கிறது.
அதனால் இந்த ஊரின் அனைத்து வீடுகளும் நீர் நிலைகளும் வயல்வெளிகளும் கையகப்படுத்தப்படும் நிலையில் இருக்கின்றன.
இந்த நிலையில் எப்படியான நிலையில் இருக்கிறது ஏகனாபுரம்..? என்று அறிய புறப்பட்டோம்.
சுங்குவார்சத்திரத்தில் இருந்த எட்டாவது கிலோ மீட்டர் இருக்கும் மதுரமங்கலத்தை தாண்டி கண்ணன் தாங்கள் பாலத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் காவல் துறையின் முதல் கண்காணிப்பு இருக்கிறது.
சிங்கிலிபாடி ஏடையார்பாக்கம் கூட்டு ரோட்டில் வருகிறது காவல்துறையின் இரண்டாவது சோதனை சாவடி.
இரண்டே கிலோ மீட்டரில் இரண்டு சோதனை சாவடிகள். அனைத்து வாகனங்களின் பதிவு எண்களையும் எழுதிக் கொள்கிறார்கள். புதியவர்கள் போல தெரிந்தால் விசாரிக்கிறார்கள் அடையாள ஆவணங்களை கேட்கிறார்கள். அனைவரையும் நோட்டமிடுகிறார்கள். சந்தேகப்படுபவர்களை விசாரிக்கிறார்கள். இதையும் தாண்டிச் சென்றால் வருகிறது ஏகனாபுரம் பேருந்து நிறுத்தம் .
நாம் செல்வது உள் அனுமதி சீட்டு (Inner Line Permit)) அமலில் இருக்கிற அருணாச்சலப் பிரதேசமா..? அல்லது – ஜம்மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் 100 அடிக்கு ஒரு தடவை துணை இராணுவம் நம்மை பரிசோதிக்கிற காஷ்மீரா..? என்ற வியப்பு ஏற்படுகிறது.

அருகில் அம்பேத்கர் திடலில் ஏதோ ஒன்றை கை காட்டியபடியே சிலையாக நின்று கொண்டிருக்கிறார் அம்பேத்கர்.
இந்த திடலில் தான் தங்கள் வாழ்வாதாரத்தை காக்க போராடி வரும் ஏகனாபுரம் மற்றும் 13 கிராம மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, திமுக – அதிமுக தவிர தமிழகத்தின் மற்ற தலைவர்கள் எல்லாம் வந்து போய் இருக்கிறார்கள் .
சீமான்- வேல்முருகன் -திருமாவளவன், பி .ஆர் .பாண்டியன் என அவர்கள் எல்லாம் மக்களோடு மக்களாக நின்று போராடி இருக்கிறார்கள் அதற்கு பின்பு இந்த கிராமத்தில் போராடும் மக்களுக்கு ஆதரவாக வர முயற்சித்த STPI கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட பல தலைவர்களை ஊருக்குள் நுழையவிடாமல் கைது செய்துவிட்டனர் காவல்துறையினர்.
அம்பேத்கர் திடலுக்கு மிக அருகில் வலது பக்கம் செல்லும் மண் பாதையில் சென்றால் பெரிய ஏரியின் கரையில் இருக்கிறது நாகாத்தம்மன் கோவில். ஏகனாபுரத்தின் இந்த பெரிய ஏரி தான்,புதிய விமான நிலையத்தின் இரண்டு ஓடு பாதைகளில் ஒன்றாக அரசு திட்டமிடுகிறது.
நிலப்பரப்பு அதிகம் இல்லாத தீவு நாடுகளில் கடலின் மேலே ஓடுபாதை அமைக்கிற அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் , ஒரு பெரும் நீர் நிலையை மூடி ஓடுபாதை அமைக்க துணியும் தமிழக ஆட்சியாளர்களின் தொலைநோக்கு பற்றி என்ன சொல்ல..?
நண்பகல் நேரத்தில் வேப்ப -அரச மரங்களுக்கு அடியில் இருக்கும் நாகத்தம்மன் கோவில் ஆள் அரவமற்று இருக்கிறது.
நாம் இருக்கும் இடத்தை கூட காப்பாற்ற முடியாமல் போகுமோ என்ற கவலையில் அந்த தெய்வமே திகைத்து போயுள்ளதோ, என்னவோ இந்த இடமே “வெறுமை’ சூழ்ந்திருக்கிறது.
கோவிலுக்கு வெளியில் உள்ள அறிவிப்பு பலகையில்,
” வேண்டாம்- வேண்டாம்
விமான நிலையம் வேண்டாம்..!
காப்போம்- காப்போம்
விவசாயம் காப்போம் ..!
போராட்டம் இன்று 590 வது நாள் என்று எழுதி இருக்கிறது.
அதன் அடியில் ஒரு நாய் கிராமத்தை பார்த்தபடியே அசைவற்று படுத்து கிடக்கிறது.
எதிரில் நடந்து வருகின்றவர்களின் முகமெல்லாம் வாட்டத்துடன் உள்ளது. எவர் முகத்திலும் மகிழ்ச்சியின் ரேகை துளியும் இல்லை. நாலாபுறமும் எதிரிகள் சுற்றி வளைத்து உள்ள நிலையில், இன்றோ, நாளையோ எதிரிகளால் சூறையாட படவுள்ள நிலப்பரப்பின் கோட்டைக்குள் சிக்கிய மக்களின் மன நிலையை ஒத்தவர்களாக அவர்கள் தெரிந்தார்கள்! பிடரிட்டிஷ் பேரரசு ஆண்ட காலத்திலோ, அதற்கும் முன்பு முகலாயப் பேரரசுகள் ஆண்ட காலத்திலோ கூட இந்தப் பகுதியில் இத்தகு அச்சம் மிக்க ஒரு சூழல் நிலவியிருக்குமா தெரியவில்லை. பல தலைமுறைகளாக தாங்க்கள் வாழும் பூமி தங்களிடம் இருந்து பறிக்கப்படுமோ என கதிகலங்க்கிய வகையிலேயே அவர்கள் நாட்கள் கழிந்து கொண்டுள்ளன!
தொடரும்….
–பவா சமத்துவன் (மூத்த பத்திரிகையாளர்)
Leave a Reply