இந்தியாவின் முதல் மக்கள் புரட்சி ‘ திருநெல்வேலி எழுச்சி’!

-முத்துக்குமார் சங்கரன்

1908 ல் அகில இந்தியாவையும் அதிர வைத்தது திருநெல்வேலி எழுச்சி! அப்போது ரஷ்யாவில் புரட்சி நடக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி தோன்றவில்லை. ஆனால், தூத்துக்குடியில் மக்களைத் திரட்டித் தொழிலாளர்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். திருநெல்வேலியும், தூத்துக்குடியும் தீக் கொழுந்துவிட்டு எரிந்தன! இதன் பின்புலத்தில் இருந்த தலைவர்களின் அர்ப்பணிப்பு, தியாகம், மக்களின் ஆவேசத்தை நினைவு கூர்வோம்;

இன்று திருநெல்வேலி எழுச்சி தினமாகப் பெருமிதத்துடன் நினைவுகூரப்படும் நாள். 116 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டவுடன் திருநெல்வேலியிலும், தூத்துக்குடியிலும் நடைபெற்ற மக்கள் போராட்டங்களையே ஆங்கிலேயர் ‘திருநெல்வேலிக் கலகம்’ என்று முத்திரை குத்த, நாம் ‘திருநெல்வேலி எழுச்சி’ என்று பெருமிதம் கொள்கிறோம்

இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் அடிமைப்பட்டுக் கிடந்த நம் நாட்டில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே சுதேசி இயக்கம் வீறு கொண்டு எழ ஆரம்பித்தது. 1906 ஆம் ஆண்டில் சுதேசி கப்பல் நிறுவனம் தொடங்கப்பட்டது,  1908 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தூத்துக்குடி கோரல் ஆலைத் தொழிலாளரின் வேலை நிறுத்தம் போன்ற நிகழ்ச்சிகள் தூத்துக்குடியை  சுதேசி இயக்கத்தின் தளமாக அடையாளப்படுத்தின. அதன் நாயகனாக வ.உ.சி.யை தேசம் அடையாளம் கண்டு கொண்டது. ஏற்கெனவே 1907 ஆம் ஆண்டு சூரத் காங்கிரசில் திலகர் தலைமையிலான தீவிரவாத அணியின் கை ஓங்கியிருந்தது. வ.உ.சி. அந்த அணியின் தென்னிந்தியத் தளகர்த்தராக அறியப்பட்டார்.

சென்னை ஜன சங்கம் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் கிளைகள் தமிழ்நாடு எங்கும் ஆரம்பிக்கப்பட்டன. சுதேசி இயக்கப்  பேச்சாளர்கள் தமிழ்நாடு எங்கும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் நிகழ்த்தினார்கள். ஜி.சுப்பிரமணிய அய்யரின் சுற்றுப் பயணங்களும், சொற்பொழிவுகளும் ஆங்கிலேயர் நிர்வாகத்தை அதிர வைத்தன.

1908 ஜனவரியில் சுப்பிரமணிய சிவா திருநெல்வேலிக்கு வந்து பிரச்சாரம் செய்தார். அப்போது தூத்துக்குடியில் அன்னிய பொருட்கள் புறக்கணிப்பு பெரும் ஆவேசத்துடன் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்த நேரம்.  சிவாவையும், பத்மநாப அய்யங்கார் என்னும் இன்னொரு பேச்சாளரையும் வ.உ.சி. தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்று தன்னுடனேயே தங்க வைத்து அங்கு பிரச்சாரங்களை மேற்கொள்ள வைத்தார். தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தமும் அதே நேரத்தில் நடைபெற்றதால் தினமும் தூத்துக்குடிக் கடற்கரையில் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இக்கூட்டங்களில் வ. உ. சி. சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார், சோமசுந்தர பாரதியார் ஆகியோர் கலந்து கொண்டு உலக அரசியல் குறித்தும் அந்நியர்களை விரட்டியடித்து சுயராஜ்யம் அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மக்களிடம் எழுச்சி ஏற்படும் வகையில் பேசி வந்தனர். இதே நேரத்தில் தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர் வேலை நிறுத்தம் பொதுமக்கள் ஆதரவுடன் வெற்றியடைந்திருந்ததால் மக்கள் மேலும் உத்வேகம் பெற்று இந்தக் கூட்டங்களில் திரள் திரளாகப் பங்கேற்க ஆரம்பித்தனர்.

அந்நியர்களை அடித்து விரட்ட வேண்டும் என்று அறைகூவல் விடுத்ததோடு நிற்காமல், சுதேசி இயக்கத்தையே ஒரு மாற்றுப் பொருளாதார மற்றும் தொழில் அமைப்பாக உருவெடுக்க வைப்பதில் வ.உ.சி. தீவிரமாக முன் முயற்சிகளை எடுக்க ஆரம்பித்தார். சுதேசி ஆலை அமைப்பது, சுதேசி வங்கிக் கிளை அமைப்பது என்று அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டார். நீதி மற்றும் காவல் அமைப்புகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார். நிலைமை தன் கைவிட்டுப் போவதை உணர்ந்த ஆங்கில அரசாங்கம் சுதேசி இயக்கத்தின் மீது கெடுபிடிகளை அதிகரித்தது. பொதுமக்களோ ‘வந்தே மாதரம்’ என்கிற முழக்கத்தில் உணர்ச்சி வயப்பட்டு ஐரோப்பியர்களை வம்பிழுத்துக் கேலி செய்யலாயினர்.

அப்போது சிறையிலிருந்த தேசியத் தலைவர் விபின் சந்திர பாலரின் விடுதலை நாளான மார்ச் ஒன்பதாம் நாளன்று தூத்துக்குடியில் சிறப்பாகக் கொண்டாட வ.உ.சி. ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். அந்தக் கொண்டாட்டத்தை வ.உ.சி. நடத்தி விடக்கூடாது என்பதற்காக தூத்துக்குடி சப் கலெக்டரும் திருநெல்வேலி கலெக்டரும் அடுத்தடுத்து சம்மன் அனுப்பி, அவரையும், சுப்பிரமணிய சிவாவையும்,  பத்மநாப அய்யங்காரையும் காவல் நிலையத்துக்கும் நீதிமன்றத்துக்கும் அலைய விட்டனர். கூட்டங்களுக்குத் தடை விதித்தனர்.

மார்ச் ஒன்பதாம் நாள் மூவரையும் தூத்துக்குடியில் இருக்க விடாமல் திருநெல்வேலி வரவழைத்தனர். மாலை வரை அவர்களை விசாரித்து விட்டு, தூத்துக்குடி செல்லாமல் திருநெல்வேலியிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார்.

ஆனால், என்ன நடந்தது தெரியுமா? அன்று மாலை திருநெல்வேலியில் விபின் சந்திர பாலர் உருவப் படத்தை வைத்து ஊர்வலம் நடைபெற்றது. தாமிரபரணி ஆற்றின் கரையில் தைப்பூச மண்டபத்தில் திரண்டு இருந்த மக்கள் முன்பு வ. உ. சி. எழுச்சி உரையாற்றினார்.

மறுநாள் பத்தாம் தேதி காலை தூத்துக்குடி சென்ற மூவரையும் வரவேற்க ரயில் நிலையத்திலேயே மக்கள் குவிந்திருந்தனர். விபின் சந்திரபாலரின் உருவப்படம் வைத்து அங்கும் ஊர்வலம் நடைபெற்றது. வ.உ.சி. பிறந்த ஊரான ஓட்டப்பிடாரத்திலும் ஊர்வலம் நடைபெற்றது. ஆக  விபின் விடுதலைக் கொண்டாட்டம் ஓரிடத்தில் நடப்பதைத் தடுக்கப் பார்த்த ஆங்கில அரசு மூன்று இடங்களில் நடந்த கொண்டாட்டங்களை வேடிக்கை பார்க்க நேர்ந்தது. விளைவு மிகக் கடுமையானதாக இருந்தது.

மார்ச் 12 ஆம் நாள் மூவரும் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப் பட்டனர். தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இரு நகரங்களிலும் மக்கள் ஆவேசமடைந்தார்கள். ஏற்கெனவே

தூத்துக்குடி நகரில் சுதேசி வெப்பம் உச்சம் தொட்டிருந்தது. ஐரோப்பியர்களுக்கும், அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட உள்ளூர் பரதேசிகளுக்கும் தூத்துக்குடி மக்கள் மரண பயத்தைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். ஒட்டு மொத்தப் புறக்கணிப்பு தான். சவரம் செய்யக்கூட வழியில்லாத ஊரில் எப்படி வசிப்பது என்று சிலர் இரயிலேறி தஞ்சை, மாயவரம் என்று ஓடிவிட்டார்கள். ஐரோப்பியர்களுக்குக் கறிக்கடைகளில் கறி விற்பனை செய்யக்கூட மறுத்து விட்டார்கள். ஐரோப்பியர் செல்லும் வாகனங்களை வழிமறித்துக் கூச்சலிட்டு எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். இரவு நேரங்களில் ஐரோப்பியர்கள் படகில் ஏறி நடுக்கடலில் இருந்த கப்பல்களில் சென்று தங்கி விட்டு,  மறுநாள் திரும்பி வந்தார்கள். அரசு அலுவலகங்கள் இயங்கிய கட்டிடச் சுவர்களில் கூட வந்தே மாதரம் என்று எழுதப்பட்டது.

வ.உ.சி.யும் பிறரும் கைது செய்யப்பட்ட அன்று இரவு, மக்கள் பலர் தூங்காமல் தெருக்களில் வந்தே மாதரம் என முழக்கமிட்டுத் திரிந்தார்கள். வ.உ.சி.யின் நண்பரான குருநாதய்யர்  மறுநாள் தூத்துக்குடியில் எந்தக் கடையையும் திறக்கக் கூடாது என்று எச்சரித்தார்.

மறுநாள்  காலை தூத்துக்குடி நகரெங்கும்  குழப்பம் நிலவியது. சந்தையிலிருந்த கடைகள் மூடப்பட்டன. அப்போதுதான் மில் வேலை நிறுத்தம் முடிந்திருந்த சமயம். சிவகாசியில் இருந்து  பாதுகாப்புப் பணிக்காக வந்திருந்த முப்பது  போலீசார் திரும்பிப் போகாமல் தூத்துக்குடியிலேயே இருந்ததால் நிலைமையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம் என்று நிர்வாகம் நம்பி இருந்தது. ஆனால், அந்தப் போலீசாருக்குச் சாப்பிட உணவுப் பொருட்களே கிடைக்காமல் போராட்டக்காரர்கள் பார்த்துக் கொண்டார்கள்.

கோரல் ஆலைத் தொழிலாளர்களும் பெஸ்டு அண்டு கம்பெனியின் தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்தனர். நகர்மன்றத் துப்புரவுத் தொழிலாளர்கள் எவரும் வேலைக்குப் போகாமல் புறக்கணித்தனர்.  தம் பணி நிலைமைக் கோரிக்கை அல்லாமல், தங்கள் தலைவரின் விடுதலைக்காகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து சரித்திரம் படைத்தார்கள். இந்தியாவின் முதல் அரசியல் வேலை நிறுத்தம் இது என்று பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.

தெருக்களில் கூடிய மக்கள் தெருவிளக்குகளை உடைத்தனர். கடைகளை மூடிய வர்த்தகர்கள் தங்களுக்குள் பணம் திரட்டி வ.உ.சி.யை ஜாமினில் எடுப்பதற்காகக் காலையிலேயே  திருநெல்வேலி நோக்கி விரைந்தார்கள்.

திருநெல்வேலி வர்த்தகர்களிடமும் கடைகளை அடைக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்தார்கள். திருநெல்வேலி நகரமும் ஸ்தம்பித்தது.  குருநாத அய்யர் திருநெல்வேலியில் மாணவர்களைத் திரட்டிக் கல்வி நிலையங்களை மூடவைக்குமாறு போராடத் தூண்டினார்.

திருநெல்வேலி ரயில் நிலையம் அருகில் உள்ள பாலம் பகுதியில் கடைகள் மூடப்பட்டன காலை 10 மணி அளவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு அருகில் இருந்த இந்து கல்லூரிக்குள் நுழைந்தார்கள் மாணவர்களும் வெளியே வந்து போராட்டக்காரர்களுடன் சேர்ந்து கொள்ள கல்லூரி மூடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் தாக்குதலில் இருந்து தப்பி, அருகில் உள்ள பாரி கம்பெனி அலுவலகத்துக்குள் நுழைந்து கொண்டார். அங்கும் கல்வீச்சு  நடந்தது.

கும்பல் அங்கிருந்து நகர்ந்து சர்ச் மிஷன் சொசைட்டி நடத்திய கல்லூரிக்குள் நுழைந்து கல்லூரிச் சொத்துகளை அடித்து நொறுக்கியது.. அடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்று அஞ்சலகத்தை சேதப்படுத்தித் தீயிட்டார்கள். தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டன.  பிறகு நகராட்சிக்கு சொந்தமான மண்ணெண்ணெய்க் கிடங்குக்கு தீ வைக்கப்பட்டது (அந்தத் தீ மூன்று நாட்களுக்கு எரிந்து கொண்டே இருந்ததாம்).

மாவட்ட முன்சீப் நீதிமன்றம் தாக்கப்பட்டு அங்கிருந்த கோப்புகள் எரிக்கப்பட்டன. அதனால் நீதிமன்றம் மூன்று நாட்கள் மூடிக் கிடந்தது.

போராட்டக்காரர்கள் அடுத்து காவல் நிலையத்தை நோக்கி முன்னேறினார்கள். அவர்கள் அங்கு சென்றபோது போலீஸ்காரர் ஒருவர் மட்டுமே இருந்தார் அங்கிருந்து ஆவணங்கள் அழிக்கப்பட்டன. கத்திகளும், துப்பாக்கிக் குண்டுகளும் பறிக்கப்பட்டன காவல் நிலையத்தில் சிறையில் வைக்கப்பட்டிருந்த மூன்று கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள்.

மொத்தக் கூட்டத்தினரும் எழுப்பிய வந்தே மாதரம் கோஷம் திருநெல்வேலி நகரையே அதிர வைத்தது. இங்கிருந்து அப்படியே கிளம்பிப் போய் பாளையங்கோட்டைச் சிறையில் இருந்து வ. உ. சி. யை விடுவிப்போம் என்று எல்லோரும் கோஷமிட்டார்கள்.

அடுத்து காவல் நிலையத்துக்கு எதிரில் இருந்த மருத்துவ நிலையம் ஒன்றுக்குத் தீயிட முயன்ற போது துப்பாக்கிச் சூடு நடத்த கலெக்டர் உத்தரவிட்டார். அதேபோல்  கோயிலுக்குச் செல்லும் வழியில் திரண்டிருந்த கும்பல் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. நேஷனல் எம்போரியம் இன்னும் ஜவுளி கடையில் விபின் சந்திர பால் விடுதலையை ஒட்டி அலங்காரிக்கப்பட்டிருந்ததால் மாவட்ட ஆட்சியரே கையில் சவுக்குடன் அங்கு சென்று தாக்கினார். அங்கும் துப்பாக்கி சூடு நடந்தது. வெற்றுத் தோட்டாவைக் கொண்டே இந்தத் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் நான்கு பேர் பலியாகினர். இந்த துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்ட போது துப்பாக்கி ஏந்திய போலீசாரைப் பார்த்து நீங்களும் சுதேசிகள் தானே எங்களை ஏன் சுடுகிறீர்கள்? வெள்ளையரைப் பார்த்துச் சுடுங்கள் என்று மக்கள் ஆவேசக் குரல் எழுப்பினார்கள்.

இதே போல் தூத்துக்குடியிலும் அன்று மாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அங்கே பொதுக்கூட்டங்கள் நடத்தத் தடை இருந்த போதிலும் வண்டிப் பேட்டையில் பொதுமக்கள் திரண்டு இருக்க வ. உ. சி. யின் விடுதலை கோரி உணர்ச்சிகரமான உரைகள்,  யார் என்றே தெரியாதவர்களால் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தன.

உள் நுழையவும் வெளியேறவும் ஒரே வழியைக் கொண்ட அந்தப் பேட்டைக்குள் உதவி கலெக்டர் ஆஷும் துணை போலிஸ் சூப்பரின்டென்ட்டும்  போலீஸ் படையுடன் நுழைந்தார்கள். ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்த்தப்படுவதற்குப் பதினொரு ஆண்டுகளுக்கு முன்பே தூத்துக்குடியில் கிட்டத்தட்ட அதே போன்று ஒரு சம்பவம் அன்று நிகழ்ந்தது. ஆனால், இது தூத்துக்குடியல்லவா! அதனால் பாதிக்கப்பட்டது மக்கள் அல்ல. காவல்துறையினர் தான். சுற்றியிருந்த கட்டிடங்களின் மேலிருந்து காவல்துறையினர் மீது கற்கள் வீசப்பட்டன.  ஆனால் அவை கருஙகற்கள் அல்ல.  கடற்கரையில் காணப்படும்  நுரை கற்கள் என்பதால் காவலர்கள் அதிகக் காயமடையவில்லை.

ஆஷ் துரை ஒய்யாரமாக அமர்ந்து வந்த குதிரை மக்களால் சீண்டப் பட்டதால் குதிரை அவரைக் கீழே தள்ளி விட , மக்களின் ஆவேசத்தில் இருந்து அவரைக் காப்பாற்றப் போலீசாருக்குப் பெரும்பாடாகிப் போனது. கூட்டத்துக்குள் சிக்கிய ஒரு சப் இன்ஸ்பெக்டர் படுகாயம் அடைந்தார். போலீசார் முதல் சுற்றில் பதினைந்து வெற்றுத் தோட்டாக்கள் கொண்டும் பின்னர் வெடிக்கும் தோட்டாக்கள் கொண்டும் துப்பாக்கிச் சூடடு நடத்தினர். ஆனால் உயிர்ச்சேதம் ஏதுமில்லை என்று அறிவிக்கப்பட்டது..  படுகாயம் அடைந்த சப் இன்ஸ்பெக்டரிடம் இருந்து ஒரு சுழல் துப்பாக்கியும் குண்டுகளும் மக்களால் பறிக்கப் பட்டன.

இந்த எழுச்சி போராட்டங்களின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளும் கடுமையாகத் தான் இருந்தது சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பலரில் ஏட்டு  குருநாதய்யருக்கு ஏழாண்டுகளும் கல்லூரி ஆசிரியர் லோகநாதருக்கு ஐந்து ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தைப் பாதுகாக்கத் தவறியதாக இரண்டு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். விளைவிக்கப்பட்ட சேதங்களுக்கு நஷ்ட ஈடு பெறுவதற்காகவும் போலீஸ் செலவுகளைக் சரிக்கட்டவும்  திருநெல்வேலியிலும், தூத்துக்குடியிலும் வசித்த மக்களிடம் கூடுதல் தண்டல் வசூலிக்கப் பட்டது. கலவரம் நடைபெற்ற பகுதிகளில் அமைதியை நிலை நாட்ட தண்ட காவல் படை நிறுத்தப்பட்டு அதற்கு ஆன செலவும் பொதுமக்கள் தலையிலேயே விடிந்தது. இந்தத் தண்ட போலீஸ் முறை ஆறு மாதங்கள் நீடித்தால், பொதுமக்கள் மேலும் இன்னலுக்கு உள்ளானார்கள். இனிமேல் கலகம் செய்ய ஒருபோதும் துணியாத மனநிலைக்கு அவர்கள் கொண்டு வரப்பட்டார்கள்.

வ .உ. சி,  சிவா ஆகியோர் பேச்சைக் குறிப்படுத்துக் கொடுத்த காவல் அதிகாரிகளும், மக்கள்  எழுச்சியின் போது சிறப்பாகப் பணியாற்றிய போலீசாரும் பரிசுகளும், பதவி உயர்வும் அளித்துக் கௌரவிக்கப்பட்டார்கள்.

இந்த மாபெரும் மக்கள் எழுச்சியை அடுத்து வ.உ.சியையும், சிவாவையும் சிறைக்கு அனுப்பிய பிறகு, இந்த எழுச்சியில் பங்கு பெற்ற எராளமான அடித்தள மக்கள் பிரிட்டிஸ் அரசாங்கத்தால் வேட்டையாடப்பட்டனர். இதனால் தேசத்தைவிட்டே பர்மா, மலேசியா போன்ற நாட்டில் தஞ்சம் அடைந்தனர். போதாக் குறைக்கு காங்கிரஸ் கட்சியே சிதம்பரனாரையும், சிவாவையும் கட்சியில் இருந்து நீக்கி, ’இவர்களோடு யாரும் தொடர்பு  வைத்துக் கொள்ள வேண்டாம்’ என அறிவுறுத்தியது.

பட்டாபி சீதாராமையர் எழுதிய காங்கிரஸ் வரலாற்றிலும், 1972ல் வெளியான தமிழ்நாடு அரசின் பாட நூல் கழகம் வெளியிட்ட விடுதலை போராட்ட வரலாறு குறித்த 578 பக்க நூலிலும் இந்த ’மாபெரும் திருநெல்வேலி எழுச்சி’ பற்றி எந்தப் பதிவும் இல்லை என்பது கவனத்திற்கு உரியது.  சிறைவாசத்தின் முடிவில் நான்கரை ஆண்டுகள் கழித்து வ.உ.சி. விடுதலையடைந்த போது விரல் விட்டு எண்ணும்படியானவர்களே வரவேற்க வந்திருந்தார்கள் என்பதன் பின்புலத்தில் மேற்படி தகவல்களையும் இணைத்தே நாம் கவனம் கொள்ள வேண்டும்.

( கட்டுரைக்கான ஆதார நூல் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய ‘திருநெல்வேலி எழுச்சியும்,வ.உ.சி.யும் 1908’)

கட்டுரையாளர்; முத்துக்குமார் சங்கரன்

[email protected]

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time