மிகைபடுத்தப்படும் பாஜகவின் பொய்மை அரசியல்!

-செந்தில்

பாஜக வளர்ந்து விட்டதாம்…! மிகைப்படுத்தப்பட்ட ஊடகப் பிரச்சாரங்கள் நடக்கின்றன!ஆனால், யதார்த்தம் என்ன..? இந்தத் தேர்தலை பொறுத்த அளவில் உண்மையில் பாஜகவின் நோக்கம் வெற்றி பெறுவதல்ல..!  தன்னை வலுப்படுத்துவதே! இந்தத் தேர்தலில் ஜனநாயக சக்திகளின் கடமை என்ன..?

”கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, நீலகிரி தொகுதிகளில் பாரதிய சனதா கட்சி வெற்றி பெறும் என்பதை இப்போதே எழுதிக் கொடுத்து விடுகிறேன்” என்று பாசக தலைவர் அண்ணாமலை அடித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்.

இன்னொருபுறம் தன்னை ஒரு வலதுசாரி சிந்தனையாளராக அறிவித்துக் கொண்டு பேசும் நடிகை கஸ்தூரி, “திமுக கூட்டணிதான் வெற்றி பெறும். இந்த தேர்தல் திமுகவுக்கு எதிரான வலுவான எதிர்க்கட்சி யார்? என்பதை தீர்மானிக்கப் போகும் தேர்தல்” என்று ஒரு கருத்தை சொன்னார்.  இது கவனிக்கத் தக்க கூற்றாகும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலோடு ஒப்பிட்டால் திமுக கூட்டணி குத்துக்கல் போல் மாறாமல் இருக்கிறது. பாசக – அதிமுக கூட்டணி உடைந்து அக்கட்சிகள் தனித் தனியாக நிற்கின்றன. தமிழ்நாட்டில் பாஜக எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியாது என்பது பொதுவான மதிப்பீடாக இருக்கிறது. இது பாசகவுக்கும் தெரியும். அவர்களும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் வேலை செய்யவில்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாசகவின் இலக்கு அல்லது அண்ணாமலையின் குறி என்பது அதிமுக, நாம் தமிழர் கட்சியை பின்னுக்குத் தள்ளி ஒரு சில தொகுதிகளிலாவது தாங்கள் இரண்டாவது பெரிய கட்சி என்ற இடத்தைப் பிடிப்பதே ஆகும்.

இந்த இலக்கை குறிவைத்து தான் தேசிய புலனாய்வு முகமையைப் பயன்படுத்தி நாதக வை மிரட்டிப் பார்த்தார்கள். நாதகவிடம் இருந்து விவசாயி சின்னம் பறிக்கப்பட்டது. அதேபோல அதிமுகவின் சின்னமான இரட்டை இலைக்கும் குழப்பம் விளைவிக்க முயல்கிறது தேர்தல் ஆணையம்.

இன்னொருபுறம் கூட்டணிக்கு வரும் அனைவரையும் தாமரைச் சின்னத்தில் போட்டியிடச் சொல்கிறார் அண்ணாமலை. டி.டி.வி. யுடன் இழுபறியானதற்கு காரணமே தாமரை சின்னத்தில் போட்டியிடச் சொன்னது தான் என்று செய்திகள் வந்தன. ஒ.பி.எஸ்க்கும் இது தான் நிலை போலும். பாமகவுடனான கூட்டணி ஏற்பட்டு உள்ளது.

தமக்கு போட்டியாளர்களாக இருப்பவர்களின் சின்னத்திற்கு குழப்பம் ஏற்படுத்துவதும் தமது சின்னத்தில் எல்லோரையும் போட்டியிடச் சொல்வதும் ஒரே நோக்கத்தின் இருவேறு பக்கங்கள் ஆகும். மொத்தத்தில் பாசகவின் குறி என்பது தமது வாக்கு விழுக்காட்டை உயர்த்திக் காட்டுவது, தான் தமிழகத்தில் முக்கியமான இரண்டாவது அல்லது மூன்றாவது பெரிய கட்சி என்று காட்டுவது தான்.

அதற்கு ஏற்றாற்போல் இந்தியா டுடே, புதிய தலைமுறை கருத்துக் கணிப்புகள் பாசக சுமார் 20% வரை வாக்குகள் பெறும் என்று காட்டுகின்றன. தமிழருவி மணியன், கஸ்தூரி போன்றவர்களும் பாசக சுமார் 20% வாக்குகள் பெறும் என்று ஆரூடம் சொல்கிறார்கள். மொத்தத்தில் பாசக 20% ஐ ஒட்டி வாக்குகள் பெறும் என்ற பாஜக பலத்தை மிகைப்படுத்தும் கருத்துருவாக்கம் நடந்து வருகிறது.

பாசக கூட்டணியில் இல்லாத தமிழக கட்சிகள் குறிப்பாக திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் போன்ற கட்சிகள் அவரவர் சக்திக்கு முழுமையாக பாடுபட்டு வெற்றியை இலக்காக கொண்டு செயல்படுவது சனநாயகத்திற்கு வலு சேர்க்கும். தமது வாக்கு வங்கியைப் பாசகவிடம் இழந்து விடாமல் தக்க வைத்துக் கொள்வதில் இந்த சனநாயக சக்திகள் முனைப்புக் காட்ட வேண்டும்.

தேர்தல் கட்சிகளுக்கு வெளியே செயல்படும் இயக்கங்கள், பொதுச் சமூக சமூக சக்திகள் பாசக தோற்கடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதே நேரத்தில் பாசக என்ன இலக்கை வைத்து தேர்தலை சந்திக்கிறதோ.., அந்த கெடு நோக்கை அம்பலப்படுத்த வேண்டும். பாசக கட்டுப் பணம்கூட திரும்பப் பெற முடியாத வகையில் தோற்கடிக்கப்பட வேண்டும்.

பாசக எப்படியும் தோற்று விடும் என்ற மெய்யான மதிப்பீடு ஒருபுறம். தமிழ்நாட்டில் என்ன நடந்தால் என்ன? வட இந்தியாவில் பெறும் வாக்குகளைக் கொண்டு பாசக வெற்றி பெற்றுவிடும் என்பது இன்னொரு புறம் நிலவும் தவறான மதிப்பீடு. இவ்விரண்டில் ஒன்றோ அல்லது இரண்டும் சேர்ந்தோ ஒருவித செயலின்மையை, ஊக்கமின்மையைத் தமிழ்நாட்டில் தோற்றுவித்துள்ளது.

பிரதமர் மோடி வேறெந்த மாநிலத்தை விடவும் தமிழகத்திற்கு அடிக்கடி வருவது ஏன்..? பாசக ஏன் வாக்கு விழுக்காட்டை அதிகரிக்க நினைக்கிறது? தான் ஒரு எதிர்க்கட்சி என்ற தகுதியைப் பெற விரும்புவதேன்? ஒரு மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பு முதலில் எதிர்க்கட்சியாக மாற வேண்டும். அதாவது, எதிர்க்கட்சி என்பது ஒரு படிநிலை, அடுத்த படி என்பது ஆளுங் கட்சியாவது. அந்த காரணத்திற்காகத் தான் பாஜக தமது வாக்கு விழுக்காட்டை உயர்த்தி எதிர் கட்சியாக திட்டமிடுகிறது.

பாசக அப்படியொரு வலுவான கட்சியாக நிலைப் பெறும் இடத்து அவர்கள் பல்வேறு பயனற்ற பிரச்சனைகளை அரசியல் களத்திற்கு கொண்டு வந்து காலத்தை வீணடிப்பர். மதவெறியைத் தூண்டுவது, எளிய தலித்துகள், பழங்குடிகளை ஒடுக்குதல், சாதி மேலாதிக்கத்தை நிறுவுதல், அறநிலையத்துறையை ஒழித்து கோவில்களை தனியார் மயமாக்கி இறை சொத்துக்களை சூறையாடுதல், இந்தி மொழித் திணிப்பு, வட இந்தியர்கள் குடியேற்றம், தமிழர்களின் தொன்மையை, பண்பாட்டை சிதைப்பது, சிறுபான்மையினர் எதிர்ப்பு, கோவை மாவட்டத்தை பிற மாவட்டங்களுக்கு எதிராக நிறுத்துதல், ஆன்மீகத்தில் சனாதனக் கருத்தை நுழைப்பது, பெரியார் எதிர்ப்பு, கலவரத்தை தூண்டுவது, வெறுப்பு அரசியல், பொய்களைப் பரப்புதல் என தமிழ்நாட்டின் அரசியலைக் குழப்பி நிம்மதியை கெடுப்பார்கள்; நாமும் அதற்குப் பின்னால் ஒடி அவர்களுக்குப்  பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

பல்வேறு வகைப்பட்ட உரிமைப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு பாசகவின் இருப்பே பெரும் தடையாக இருக்கிறது. ‘பாசக தமிழ் நாட்டில் ஒரு சக்தியே இல்லை’ என்ற நிலையை உருவாக்கினால், நம்முடைய மெய்யான சனநாயக கோரிக்கைகளுக்கான இயக்கங்கள் முன்னுக்கு செல்ல முடியும்.

‘தேர்தலில் பாசகவுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது’ என்ற பரப்புரையை முக்கியமான சில தொகுதிகளிலேனும் முன்னெடுக்க வேண்டும். பண பலம், அதிகார பலம், ஊடகப் பலத்துடன் தமிழ்நாட்டில் கால் பதிக்கத் துடிக்கும் பாசகவுக்கு நல்லதொரு பாடம் புகட்டும் களமாக தேர்தல் களம் அமையும். அத்தனை பலங்களையும் மக்களுடைய நலனை முன்னிறுத்தி சனநாயகத்தின் பெயரால் நாம் முன்னெடுக்கும் பரப்புரை எதிர்கொள்ள முடியும்.

தேர்தல் களத்தில் போட்டியிடும் அதிமுகவையும், நாதகவையும், பாசக தனக்குப் போட்டியாக நினைக்கிறது. ஆனால், இவர்களைப் போலன்றி பதவி அரசியலுக்கு வெளியே நின்று கொண்டு பாசக ஒரு பேராபத்து என நினைக்கக் கூடிய ஏராளமான மக்கள் அமைப்புகளும், இயக்கங்களும், சிந்தனையாளர்களும், செயல்பாட்டாளர்களும் தமிழகத்தில் நிறையவே உள்ளனர்.

பல்வேறு காரணங்களால் சிதறிக் கிடக்கும் இயக்க, சிவில் சமூக ஆற்றல்கள் ஒருங்கு குவிக்கப்பட்டால் பாசக வளர்ச்சியை தடுக்க முடியும்.

காசு கொடுத்து கட்சிக்கு ஆளெடுத்து, கூட்டங்களுக்கு ஆள்திரட்டி ஊடகங்களை மிரட்டி, உருட்டி, ஐ.டி. அணி வழியாக மிகைப்படுத்தப்பட்ட பரப்புரைகளைச் செய்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களின் உண்மையான வலு என்ன என்பது விரைவில் வெளிப்படும்.

இந்த தேர்தலில் பாசிச எதிர்ப்பு ஆற்றல்களின் இலக்கு என்பது தமிழ்நாடு – புதுச்சேரி இணைந்த 40 தொகுதிகளிலும் பாசக கூட்டணியைத் தோற்கடிப்பதாக இருக்க வேண்டும்.

இளைதாக முள்மரம் கொள்க களையுநர்

கைகொல்லும் காழ்த்த இடத்து. ( குறள் 879 )

முள் மரத்தை இளையதாக இருக்கும் போதே வெட்ட வேண்டும். காழ்ப்பு ஏறி முதிர்ந்த போது வெட்டுகின்றவரின் கையை அது வருத்தும். தொடக்க நிலையிலேயே பகையை வேரறுக்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்கிறார்.

கட்டுரையாளர்; செந்தில்

அரசியல், சமூக செயற்பாட்டாளர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time