அணுசக்தி விஞ்ஞானி ஜே.ராபர்ட் ஒப்பன்ஹெய்மரின் வாழ்க்கை திரைக் காவியமாகி உள்ளது. ஏழு ஆஸ்கர் விருதுகளை குவித்துள்ளது. அறிவியல் வளர்ச்சி அழிவுக்கு பயன்படுத்தப் பட்டதால் குற்ற உணர்வுக்கு ஆளான விஞ்ஞானிக்கும், ஆட்சியாளர்களுக்கும் உருவான முரண்களை விவரித்து, மனித நேயத்தை பேசுகிறது..!
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இந்தப் படம் கடந்த ஆண்டு ஜூலையில் திரையரங்குகளில் வெளியானது. இதில் அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமர் கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் சிலியன் மர்பி நடித்திருந்தார்.
கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இந்த மாதம் நடைபெற்றது. இந்த ஆண்டின் 96-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த உறுதுணை நடிகர், சிறந்த இசையமைப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதை நோலன் இயக்கிய ‘ஒப்பன்ஹெய்மர்’ படம் வென்றுள்ளது.
‘அயர்ன்மேன்’ புகழ் ராபர்ட் டவுனி ஜூனியர், எமிலி பிளன்ட், மேட் டேமன் உள்ளிட்ட பலர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ரூ.820 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகம் முழுவதும் கிட்டத் தட்ட ரூ.8 ஆயிரம் கோடியை வசூலித்தது.
ஆஸ்கருக்கு அடுத்தபடியாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுகளில் ஐந்து விருதுகளை வென்று ‘ஒப்பன்ஹெய்மர்’ ஆதிக்கம் செலுத்தியது. இதனையடுத்து ஆஸ்கர் விருதுகளில் அதிக விருதுகளை ‘ஒப்பன்ஹெய்மர்’ வெல்லும் என்று கணிக்கப்பட்டது. அது நிரூபணமாகியுள்ளது!
உலக சினிமாவின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இவரது திரைபடங்களுக்கு இந்தியாவில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது!
அறிவியல் வளர்ச்சியின் ஒரு பகுதி அழிவின் அடையாளம் என்பதற்கு உதாரணம் ஜப்பானின் ஹிரோஷிமா – நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டு வீசிய சம்பவம். இந்த கோர சம்பவத்தில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிர் இழந்தனர். மனித நாகரீக வளர்சிக்கு இழிவை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்துக்கு காரணமாக இருந்த அணுகுண்டை உருவாக்கியவர் ராபர்ட் ஜே.ஒப்பன்ஹைய்மர். அவரது வாழ்க்கைப் பின்னணியில் கிறிஸ்டோபர் நோலன் உருவாக்கியுள்ள வரலாற்று ஆவணம் தான் இந்த நான் லீனியர் கதைப் பாணி ‘ஓப்பன்ஹைய்மர்’ திரைப்படம்.
ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு என்பது ஒரு விஞ்ஞானியின் தனிப்பட்ட சாதனை. அந்த கண்டுபிடிப்பு எதற்காகவெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என அவனுக்கே தெரியாது. அது ஏற்படுத்தும் பின் விளைவு எல்லாவற்றிற்கும் அந்த விஞ்ஞானி பொறுப்பேற்க முடியாது. அந்த கண்டுபிடிப்பு ஒரு அழிவை ஏற்படுத்தும்போது மிக பெரிய குற்ற உணர்வை அந்த விஞ்ஞானிக்கு ஏற்படுத்துகிறது. அது தான் இந்த திரைபடத்தின் மூலக்கரு.
தம்மால் கண்டுபிடிக்கப்பட்ட அணுகுண்டு இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தி விட்டதே என்று மனம் கலங்கி போகிறார் ஓப்பன்ஹைமர் (சிலியன் மர்ஃபி).. ஹிரோஷிமா – நாகசாகி சம்பவத்துக்குப் பிறகு அமெரிக்காவின் அப்போதைய அதிபராக இருந்த ஹாரி ட்ரூமேன், ஒப்பன்ஹைமரை நேரில் பாராட்ட அழைக்கிறார். வெள்ளை மாளிகைக்குச் செல்லும் ஒப்பன்ஹைமர் அதிபரின் முகத்துக்கு நேரே, ‘மிஸ்டர் ப்ரெசிடென்ட், என் கைகளில் ரத்தக் கறை படிந்திருப்பதைப் போல உணர்கிறேன்’ என்று சொல்கிறார். இதுதான் ‘ஓப்பன்ஹைமர்’ படத்தின் உட்கரு. இது வெறுமனே அணுகுண்டு வெடிப்பை திரையில் பிரம்மாண்டமாக காட்டும் ஒரு திரைப்படமல்ல. அரசியல் சுழலில் அலைகழிக்கப்பட்டு குற்ற உணர்ச்சியில் தவிக்கும் ஒரு சூழ்நிலைக் கைதியின் கதை. ஹீரோவாக கொண்டாடப்பட்ட ஒருவன், தனி மனிதக் காழ்ப்புணர்சியால் பழிவாங்கப்பட்ட கதை.
அடுத்து ஹைட்ரஜன் வெடிகுண்டு செய்யலாம் என்பதற்கு மறுப்பு தெரிவிக்கிறார், இந்த விஞ்ஞானி. அதோடு மட்டுமல்லாது இவருக்கு அணு ஆயுத எதிர்ப்பு குழுவினரோடு தொடர்பும் ஏற்படுகிறது. அவரது மனைவி ஒரு கம்யுனிஸ்ட் என்பதால், இவரின் மீது சந்தேகம் எழுகிறது. அணு ஆயுதத்தை எதிர்த்த இவரது குரல் வேறு விதமாக எடுத் துகொள்ளபட்டு நீதி மன்றத்தின் முன் நிறுத்தப்படுகிறார். திரைப்படம் இந்த விசாரணை யிலிருந்து ஆரம்பமாகிறது. இவரின் குற்ற உணர்வு என்பது திசை திருப்பப்பட்டு இவர் ரஷ்ய கம்யூனிஸ்ட்களுக்கு உதவினாரா..? என்ற விசாரணையின் பின்னணியில்தான் முழுப் படமும் சொல்லப்படுகிறது.
1920-களில் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் தனது மேற்படிப்பை தொடரும் இளம் வயது ஓப்பன்ஹைமர் நமக்கு காட்டப்படுகிறார். தொடர்ந்து கம்யூனிஸ்ட்களுடனான அவரது நட்பு, ஜீன் டேட்லாக் (ஃப்ளோரன்ஸ் பக்) உடனாக காதல், ஹிட்லரின் நாஜிப் படையினருக்கு எதிரான போரில் ஒப்பன்ஹைமரின் பங்கு என அடுத்தடுத்து காட்சிகள் நகர்கின்றன.
சொந்த நாடு திரும்பும் அவர், அமெரிக்க அரசின் ‘புராஜெக்ட் மன்ஹாட்டான்’ என்ற ஒரு திட்டத்துக்குள் கொண்டு வரப்படுகிறார். இந்தத் திட்டத்தின் நோக்கம் என்ன? அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பது குறித்த எந்த பிரக்ஞையும் அவருக்கு இல்லை. இந்த திட்டத்துக்காக அமெரிக்காவின் லாஸ் அலமாஸ் என்ற செவ்விந்தியர்களுக்கு சொந்தமான இடத்தில் ஒரு தனி நகரமே உருவாக்கப்படுகிறது. அங்குதான் உலகையே புரட்டிப் போடும் அந்தக் கண்டுபிடிப்பை தனது சகாக்களுடன் நிகழ்த்துகிறார். சுயநலம் கொண்ட ஒரு மனிதனின் ஈகோவால் பொய்க் குற்றச்சாட்டுக்கு ஆளாகி குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படுகிறார். தன் மீதான புகார்களை ஒப்பன்ஹைமர் எப்படி எதிர்கொண்டார் என்பது தான் கதை!
3 மணி நேரங்களுக்கு மேலாக ஓடக் கூடிய படத்தில் ஏராளமான நெடிய காட்சிகள் கொஞ்சம் அல்ல, ரொம்பவே பொறுமையை பலருக்கும் சோதிக்கலாம். அதே போல படத்தின் தொடக்கத்தில் வரும் ஆழமான அறிவியல் வசனங்களையும், ஏராளமான கதாபாத்திரங்களையும் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. படத்தில் வசனங்களையும், கதாபாத்திரங்களையும் பின்தொடர்வது சற்றே கடினமாக இருக்கிறது.
இந்த படத்தில் ஒரு காட்சியில் நாயகனும், நாயகியும் நெருக்கமாக இருக்கும் காட்சியில் ‘உலகை அழிக்கும் மரணமாக மாறிவிட்டேன்’ என்ற பகவத் கீதையின் வரிகளை படிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் இந்த நிகழ்வு இணையத்தில் பேசு பொருளாக மாறியது. மேலும் இது குறித்து கண்டனங்களும் எழுந்தது.
அந்த காட்சி குறித்து பல இந்து மத அமைப்பினர் படத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்றும் இது போன்ற காட்சிகளை தணிக்கை குழுவினர் ஏன் நீக்கவில்லை என்றும் பல கேள்விகளை எழுப்பி வந்தனர்.
ஐன்ஸ்டீனுக்கும், ஓப்பன்ஹைமருக்கும் இடையிலான நட்பை மிக அழகாக படத்தில் காட்டிய விதம் சிறப்பு. லுட்விக் கோரன்ஸனின் பின்னணி இசை படத்துக்கும் பெரும் பலம். படப்பிடிப்பு தொடங்கியது முதலே பெரும் பில்டப் கொடுக்கப்பட்ட அந்த ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பு காட்சிக்கான முக்கியத்துவத்தை குறைத்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தரலாம். காரணம், படத்தின் ஆரம்பம் முதலே அதை நோக்கித்தான் காட்சிகள் நகர்கின்றன. அந்தக் காட்சியை எதிர்பார்த்து, எதிர்பார்த்து கடைசியில் படமே முடிந்து விடுகிறது. எனினும், அணுகுண்டு சோதனையை காட்சியப்படுத்திய விதம் பிரம்மாண்டம்.
Also read
மனித குலத்தின் கரங்களில் இன்று வரை படிந்திருக்கும் ரத்தக் கறைக்கு காரணமான ஒரு பேரழிவின் சாட்சியாய் இப் படம் ஒரு வரலாற்று ஆவணமாக நிலைத்திருக்கும். ஆட்சியாளர்கள் தம்மை நிலை நிறுத்தி கொள்ள, எப்படி அறிவு ஜீவிகளை பயன்படுத்தி கொள்கிறார்கள். அவர்கள் தம் விருப்பப்படி வளைந்து கொடுத்து முன்வராத போது, அவர்கள் தேசத்துரோகியாக்கப்பட்டு விடுகிறார்கள்.. என்ற ஆட்சியாளர்கள் மன நிலையையும் இந்த படம் மிகைப்படுத்தாமல் காட்சிப்படுத்தி உள்ளது.
கட்டுரையாளர்; வசந்த் பாரதி
திரைப்பட விமர்சகர்
Leave a Reply