பாஜகவிற்கு மாற்றான ஆட்சிக்கு காங்கிரஸ் தகுதியானதா?

-சாவித்திரி கண்ணன்

காங்கிரஸ் கட்சி முதலில் தன்னை தகவமைத்துக் கொள்ளுமா? ஊழல் பெருச்சாலிகள், சுயநலவாதிகள் களை எடுக்கப்படுவார்களா? பாஜக கொண்டு வந்த ஆபத்தான சட்டங்களை வாபஸ் வாங்குமா..? மாநில உரிமைகள் மறுபடியும் மீட்கப்படுமா? சில குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்திற்கு காங்கிரஸ் உடன்படுமா..?

பாஜகவின் மதவெறி அரசியல் காங்கிரஸ் கட்சியிடம் கிடையாது! சிறுபான்மை வெறுப்பு கிடையாது! கடவுள் பெயரால் மக்களை மயக்கும் அரசியல் இல்லை. வன்முறை, வெறுப்பு மூலம் மக்கள் ஆதரவை பெறும் அரசியல் குயுக்தியும் இல்லை. எனவே, பாஜகவிற்கு மாற்றாக ஜனநாயக சக்திகள் காங்கிரசை தூக்கி பிடிக்கிறார்கள்!

ஆனால், என்னென்ன தவறுகளால் காங்கிரஸ் பலவீனப்பட்டதோ.., அந்த தவறுகளில் இருந்து காங்கிரஸ் தற்போது மீண்டுள்ளதா..? என்பதையும் பரிசீலிக்க வேண்டும். ஏனென்றால், அந்தத் தவறுகளால் தான் பாஜக பலம் பெற்றது. ஆகவே, தவறுகள் களையப்பட வேண்டும்.

கட்சிக்குள் உள்கட்சி தேர்தல் நடத்தி, தொண்டர்கள் மற்றும் மக்கள் செல்வாக்குள்ளவர்கள் பதவிக்கு வருவது இன்னும் அனுமதிக்கபடவில்லை.

திறமையற்ற, வாரிசு அரசியலை பேணுகின்ற, மேல்தட்டு அரசியலை மட்டுமே செய்கிற பேர்வழிகளே காங்கிரசில் நிறைந்து உள்ளனர்! கட்சியில் இருந்து தான் ஆட்சி அதிகாரத்திற்கு ஆட்கள் வருகிறார்கள் என்பதால், கட்சியில் உள்கட்சி ஜனநாயகம், நிர்வாகக் கட்டமைப்பு ஆகியவை பலப்படுத்த வேண்டும். நேர்மையான அரசியலுக்கானவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும்.

உதாரணத்திற்கு மக்களை பாதிக்கின்ற எத்தனை பிரச்சினைகளுக்கு காங்கிரஸ் குரல் கொடுத்துள்ளது.? களம் கண்டுள்ளது என்று பார்க்க வேண்டும். பல மக்கள் பிரச்சினைகளை பேசுவதே இல்லை.

‘குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) எனப்படும் மத அடிப்படையில் மக்களை பாகுபடுத்திப் பார்க்கும் குடியுரிமை திருத்த மசோதாவையும், இந்தியாவில் பல தலைமுறையாக வாழும் ஒருவர் தன்னை இந்தியராக நிரூபிக்க வேண்டியது அவசியம் எனக் கூறும் தேசிய குடிமக்கள் பதிவேட்டையும்  (என்.ஆர்.சி) முற்றாக வாபஸ் வாங்குவோம்’ என அறிவிக்க வேண்டும்.

மருத்துவக் கல்வியை மனித நேயமற்ற வணிக நோக்கத்தில் அணுகும் நீட் தேர்வை அறிமுகப்படுத்தியதே காங்கிரஸ் தான். ஆகவே தான், இன்று வரை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை நிராகரிப்போம் என சொல்ல மறுக்கிறார்கள்! இதைச் சொல்லாமல் எதிர்காலத்திற்கு விடிவு இல்லை.

”ஜி.எஸ்.டி வரி என்பது மாநிலங்களின் வரி வசூல் உரிமையை பறிக்கிறது. கூட்டாட்சி தத்துவத்திற்கே எதிரானது. இந்த ஜி.எஸ்டி வரி விதிப்பை காங்கிரஸ் கைவிடும். பழையபடியே மாநில அரசுகள் வரி வசூலித்துக் கொள்ள அனுமதிப்போம்” என காங்கிரஸ் வாக்குறுதி தர வேண்டும்.

தேசியக் கல்விக் கொள்கை என்பது அந்தந்த மண் சார்ந்த தனித்துவ கல்வியை மறுக்கிறது. கல்வித் திட்டத்தில் சனாதனப் பார்வையைத் திணிக்கிறது. பொதுக் கல்வியை பொசுக்கி, தனியார் கல்வி வணிகத்தை ஆதரிக்கிறது. ஆகவே, காங்கிரஸ் தேசிய கல்விக் கொள்கையை நிராகரிக்க வேண்டும்.

‘பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது, தேசிய வளங்களை தனியாருக்கு தூக்கித் தருவது ஆகியவற்றை ஒரு போதும் செய்ய மாட்டோம்’ என காங்கிரஸ் வாக்குறுதி தர வேண்டும்.

பல மாநிலங்களுக்கிடையே ஓடுகின்ற ஆறுகளை தேசியமயப்படுத்தி, – மாநில உணர்வு சார்ந்த உணர்ச்சி அரசியலைக் கடந்து – பாரபட்சமற்ற தண்ணீர் பகிர்வை சாத்தியப்படுத்தும் நேர்மையையும், நெஞ்சுரத்தையும் வெளிப்படுத்த வேண்டும்.

இந்தியாவின் ஒவ்வொரு மாநில மக்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவை அழிந்திடாமல் தொடர ஆவண செய்ய வேண்டும்.

காஷ்மீர் மக்களின் பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் மீட்டுத் தருவீர்களா..? காஷ்மீர் பிரச்சினை தொடர்ந்து நீடிக்க காங்கிரஸ் கடந்த காலத்தில் செய்த தவறுகளே காரணம். அந்த தவறுகளை சுய விமர்சனத்திற்கு உள்ளாக்குவதன் வழியே மட்டுமே அங்கு நிரந்தர சமுக அமைதியை மீட்டெடுக்க முடியும்.

இராணுவத்தின் பிடியில் காஷ்மீர்

‘நீதித்துறை அரசியல் தலையீடு இன்றி சுயாதினத்துடன் இயங்க அனுமதிப்போம். குறிப்பாக பாஜக அரசு நீதித் துறைக்கு தந்த அழுத்தங்களை காங்கிரஸ் ஒரு போதும் செய்யாது’ எனத் தெரிவிக்க வேண்டும்.

மாநிலங்களின் சுயாட்சி உரிமையையும், அதிகாரத்தையும் பறிப்பதற்கு கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் அனைத்தும் வாபஸ் பெற வேண்டும்.

சி.பி.ஐ, வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, என்.ஐ.ஏ போன்றவற்றை உண்மையான வகையில் சுயாதீனமாக செயல்பட வைப்போம். அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்த மாட்டோம்’ எனச் சொல்ல வேண்டும்.

இந்திய தண்டனைச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம், மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம், ஆகியவற்றுக்குப் பதிலாக, பாஜக அரசு கொண்டு வந்த மூன்று புதிய ஆபத்தான மசோதாக்களை வாபஸ் பெறுவோம் எனச் சொல்ல வேண்டும்.

விவசாய நிலங்களை அபகரித்து கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கும் சட்ட திருத்ததையும், விவசாயிகளுக்கு எதிராக பாஜக கொண்டு வந்துள்ள அனைத்து சட்டங்களையும் வாபஸ் பெறுவோம் என வாக்குறுதி தர வேண்டும்.

பாஜக அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் விரோத – தொழிற்சங்க உரிமை மறுப்பு – சட்டங்களை வாபஸ் பெறுவோம்.

அரசு பணியிடங்களை அவுட் சோர்ஸ் முறையில் நிரப்புவது, ஒப்பந்த நிறுவனங்களிடம் தருவது ஆகியவற்றைக் கைவிட்டு முறையாக அரசு பணி வழங்குவோம்.

மாநில மக்களுக்கோ, மாநில நலன்களுக்கோ கடுகளவும் பயனற்ற ஆளுனர் பதவியை ரத்து செய்வோம்.

குறிப்பாக இந்திய கூட்டாட்சி தத்துவத்தை மதிக்கும் வகையில் அனைத்து பகுதி மக்களையும் சமமாக மதிப்போம்.

இந்திய அரசியலிலும், நிர்வாகத்திலும் இருக்கும் சாதிய மேலாதிக்கத்தை மட்டுப்படுத்த வேண்டும்.

இந்திய பொருளாதாரத்தையே கட்டுப்படுத்தும் அம்பானி, அதானி போன்ற குறிப்பிட்ட சில கார்ப்பரேட் நிறுவனங்களின் மேலாதிக்கத்தை மட்டுப்படுத்த வேண்டும்.

இதையெல்லாம் செய்வோம் என பொதுத் தளத்தில் மக்களிடையே காங்கிரஸ் கட்சி வாக்குறுதி தர வேண்டும். அப்படி தரும்பட்சத்தில் தான் மக்களுக்கு மாற்றத்திற்கான நம்பிக்கை துளிர்க்கும்.

பாகிஸ்தானை பகை நாடாக பாவிப்பது முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, விழிப்புணர்வுடன் நட்பு பேண வேண்டும்.

வரலாறு காணாத வகையில் அணு ஆயுதங்களுக்கும், இராணுவத் தளவாடங்களுக்கும் மிக அதிக நிதியை செலவழிக்கும் பாஜகவின் அணுகுமுறை மாற வேண்டும். மாறாக மக்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை தரும் பொது மருத்துவமனைகளை பலப்படுத்த வேண்டும்.

விவசாயம் நச்சுமயமாக்கப்படுவதை முடிவுக்கு கொண்டு வர படிப்படியாக இயற்கை விவசாயம் மீட்டெடுக்கப்பட வேண்டும்.

நூறு நாள் வேலை திட்டத்தை பயனுள்ள முறையில் அமல்படுத்த வேண்டும்.

இலவசங்கள் தேவையின்றி மக்கள் பொருளாதார தற்சார்பு நிலையை எட்ட சிறு, குறுந்தொழில்களின் நலன் பேணப்பட வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ளவை தவிர்த்து, மக்களிடம் கருத்தறிந்து மேலும் சிலவற்றைச் சேர்த்து ஒரு பொது செயல் திட்டத்தை இந்தியா கூட்டணி அறிவித்து மக்கள் நம்பிக்கைஅயி பெற வேண்டும்.

-சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time