ஏழைகளின் கண்ணீரை பொருட்படுத்தாத அரசுகள்!

-பவா சமத்துவன் 

எனது ஊர் ஏகனாபுரம் .. பகுதி-2

(இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போகவுள்ள தமிழக கிராமம்)

இன்றோடு 600 நாட்களாக போராடி வரும் விவசாயிகளை பொருட்படுத்தாமல், புதிய விமான நிலையம் அமைக்க நில எடுப்புக்கான அதிரடி அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம், சிறுவள்ளூரில் 1, 75, 412 சதுர மீட்டர் நிலத்தை எடுக்கிறார்களாம்…! ஏழை, பாளைகளின் ஆற்றாது அழுத கண்ணீர்.. சும்மா விடுமா…?

நில உரிமையாளர்கள் தங்களின் கோரிக்கை, ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாமாம்…! ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 30ம் 30ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படுமாம்!

உண்மை என்னவென்றால், 2022 அக்டோபர் 2 மகாத்மா காந்தி பிறந்த நாளன்று புதிதாக அமைக்கப்பட உள்ள புதிய விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து  ஏகனாபுரம் கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போதே இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டாம் என அதிகாரிகள் நடத்திய சமாதான பேச்சுவார்த்தையை மக்கள் நிராகரித்து கிராம மக்கள் அம்பேத்கர் சிலையிடம் கோரிக்கை மனு அளித்து நடத்திய நூதன எதிர்ப்பு போராட்டங்களை நாடே அறியும்.

இன்றைய தினம் இந்தப் பகுதி மக்கள் அனைவரும் வயலில் இறங்கி பறிபோகவுள்ள நிலத்தில் புரண்டு கதறி அழுத காட்சி காண்போர் கண்களிலும் நீரை வரவழைத்தது..! இன்னும் சிலர் சாலை மறியலில் இறங்கினார்கள்!

காஞ்சிபுரம் மாவட்டத்தின் கிழக்கு எல்லையில் கடைசியாக இருக்கிற ஊர் ஏகனாபுரம் .

மூன்று புறமும் ஏரிகள் சூழப்பட்டு நிலப்பரப்பெங்கும் நீர் வழிந்தோடி  பசுமை பூத்து குலுங்கும் பச்சை வயல் எங்கும் பறவைகள் பறந்து திரிந்து ஆனந்த கூச்சலிடுகின்றன!

ஏகன் (சிவன் )உறையும் ஊர் என்ற நம்பிக்கையால்

“ஏகனாபுரம்” என்றழைக்கப்படும் இந்த ஊரானது இன்னும் சில தினங்களில் இல்லாமல் போகப் போகிறது என்பதை நினைத்தே பார்க்க முடியவில்லை!

வட மேற்கே “அக்காமபுரம் ” எனும் சிறிய கிராமத்துக்கு செல்லும் திசையில் கடப்பேரி  ஏரிக் கரைக்கு கீழே, தனித்து விடப்பட்ட ஒரு குளம்  உள்ளது. அங்கு ஒரு கோவில் இருந்ததற்கான எச்சங்கள் இன்றும் காணக் கிடைக்கின்றன .

அனேகமாக அதுவும் சிவன் கோவிலாக இருந்திருக்கலாம்.

ஏகனாபுரத்தில்  சதுர வடிவில் மிகச் சிறப்பான வடிவத்தோடு நான்கே தெருக்கள் இருக்கிறது. காஞ்சி மாவட்டத்திலேயே நூறாண்டு பழமையான பள்ளிக்கூடம் கொண்ட ஊர் என்ற பெருமையும் ஏகனாபுரத்திற்கு உண்டு.

அதனால் தானோ  என்னவோ,அந்த காலத்திலிருந்தே கல்வி கற்கும்  ஆர்வம் அதிகமாகி , காஞ்சி மாவட்டத்திற்கும் பிற மாவட்டங்களுக்கும் அதிகமான ஆசிரியர்களை வழங்கிய ஊர் என்ற சிறப்பும் ஏகனாபுரத்திற்கு உண்டு.

பேரறிஞர் அண்ணா ஓரளவு போக்குவரத்து வசதி கொண்ட இந்த ஊருக்கு வந்து தங்கி பிரச்சாரம் செய்ததோடு மட்டுமல்லாமல் , இங்கிருந்து வயல் வரப்புகளில் கால்நடையாகவே  நடந்து அருகிலுள்ள அக்காமபுரம் போன்ற கிராமங்களுக்கு சென்று வந்திருக்கிறார். நடிகவேள் எம் .ஆர். ராதா இங்கு வந்து மேடை நாடகங்கள் நடத்திய பெருமையும் இந்த ஊருக்கு உண்டு.

பல்லவர்கள் ஆண்ட  காலத்திற்கு முன்பாகவே இந்த மருத நில  பூமியில் விவசாயமும், கால் நடையும் தான் முக்கிய தொழிலாக இருந்திருக்கிறது.

இன்று வரை இந்த ஊரில் உள்ளவர்களுக்கு இவை இரண்டையும் தவிர வேறு எதுவும் தெரியாது. ஏகனாபுரம் கிராமத்தில் இன்று

2,700 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இவர்களில் 1700 பேர் வாக்காளர் அட்டை வைத்திருக்கிறார்கள்.

மொத்தம்  600 வீடுகள் உள்ளன. இதில் 550 வீடுகளுக்கு பொது விநியோக அட்டை உள்ளது.

இந்த ஊரின் வீடுகள் -நன்செய்- புன்செய் நிலங்கள் மற்றும் நீர்நிலைகளையும் சேர்த்தால் , ஊரின் மொத்த பரப்பளவு   910 ஏக்கர்.

ஏகனாபுரத்தின் இந்த 910 ஏக்கர் நிலப்பரப்பும் விமான விமான நிலைய வரைபடத்துக்கு உள்ளேயே வருவதால்,  ஒட்டு மொத்த கிராமமும் அரசால் கையகப்படுத்தப்பட உள்ளது.

இதனால், இந்திய வரைபடத்தில் இருந்து இன்னும் சில நாட்களில் இந்த ஊரே காணாமல் போகும் அபாயம் இருக்கிறது.

புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்க்கும் மற்ற கிராமங்களை விட ஏகனாபுரம் எப்போதும் ஒரு “கொதி நிலை”யிலேயே  இருப்பதற்கு இதுதான் காரணம்,

இந்திய அரசியல் சாசன சட்டத்தின்படி ,

இந்திய ஆட்சி பரப்பின் எல்லைக்குள் உள்ள நிலத்தில் ஒரு சதுர அடி நிலத்தை கூட சேர்க்கவோ நீக்கவோ வேண்டுமானால், இந்திய பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் அனுமதி பெற வேண்டும்.

ஒரு மாநில எல்லைக்குள் உள்ள ஒரு ஊரை -கிராமத்தை -நிலப்பரப்பை முழுவதுமாக ஒரு மாநில அரசு கையகப்படுத்த நினைத்தால் ,

அம் மாநில சட்டமன்றத்தில் இசைவை பெற வேண்டும் என்ற  ஒரு கோரிக்கையை  நாம் முன்வைத்தால் அதற்கான நியாயம் இருக்கத் தானே செய்கிறது.

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் திட்டத்தினால் ஏற்படும்,

சமூக தாக்க மதிப்பீடு (Social Impact Assessment) மற்றும்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு  (Environment Impact Assessment)

ஆகிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களின் கருத்தரிந்து அவர்களின் அனுமதி பெற்ற பின்பே நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும்..!”

என நிலம் கையகப்படுத்தும் சட்டம் – 2013 கூறுகிறது!

ஒரு ஊரே காணாமல் போகும் அபாயம் உள்ள ஏகனாபுரத்தில் ,

அரசு  எத்தனை பேரின் கருத்தை கேட்டது?

அதில் எத்தனை பேர் நிலத்தை கையகப்படுத்த இசைவளித்தார்கள் என்பதை தமிழக அரசால் கூற முடியுமா?

தேர்தல் காலங்களில் ஓட்டை பெறுவதற்கு ஒரு நூறு முறை வந்து செல்கிற , தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினரும் எத்தனை முறை இந்த மக்களை வந்து சந்தித்திருக்கிறார்கள் என்பதற்கு விடை காணப்போனால் ஏமாற்றமே மஞ்சுகிறது.

இன்னும் சில வாரங்களில் பாராளுமன்ற தேர்தல் வருகிறது.

அவர்கள் எந்த முகத்தோடு இந்த ஊருக்குள் வருவார்கள் .

அப்போது,  இந்த ஊர் மக்களின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதை நினைக்கும் போது ஒருவித பயம் கலந்த அச்சம் தான் நமக்கு மேலிடுகிறது.

ஏகனாபுரம் மக்களின் போராட்டக் களமாக இருக்கும் நாகாத்தம்மன் கோவில் இருந்து ஊரின் கடைசியாக இருக்கிற குளத்துக்குச் செல்லும் கிழக்கு தெருவில் இருக்கிறது, அஞ்சலை சித்தியின் வீடு .அவருக்கு 65 -வயது. அவரது கணவருக்கு -72 .

ஊரில் யாரும்  யார் பெயரையும் சொல்லி அழைப்பது கிடையாது.

ஏதேனும் உறவு முறையில் அண்ணன்- அக்கா -சித்தி- சித்தப்பா- மாமி – மாமா- தாத்தா- பாட்டி பெரியம்மா -பெரியப்பா என  வயதுக்கு ஏற்ப ஒரு உறவு முறையை சொல்லித்தான் அழைப்பார்கள்.

இந்த ஊரிலேயே ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து அடுத்த தெருவில் இருக்கும் இன்னொரு விவசாய குடும்பத்திற்கு மனம் முடிக்கப்பட்டவர் இவர்.

ஊரிலேயே சற்று அதிகமான நிலபுலன்களைக் கொண்ட குடும்பமாக அவரது மாமனார் குடும்பம் இருந்தது. அஞ்சலை சித்திக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள்.

எப்போதும்  ஆரோக்கியமாக இருந்த அஞ்சலி சித்தி இப்போதெல்லாம்   படுத்த படுக்கையாக இருக்கிறார்.

சமீபத்தில் தான் சில சொத்துக்களை விற்றும் நகைநட்டுகளை அடமானம் வைத்தும், அந்த வீட்டை இடித்து இளையமகன் வீடு கட்டிக் கொள்ளவும், மூத்த மகன் கிழக்குத் தெருவில் இருக்கிற தனது தாயாரின் பூர்வீக நிலத்தில் ,அவர் பாகத்தில் வீடு கட்டிக் கொள்ளவும் வழி வகை செய்தார்.

வீடு கட்டியதற்கான கடன்கள் இன்னும் தீரவில்லை .

இதில் பசங்களின் படிப்பு செலவு வேறு இருக்கிறது.

“….நாங்க தான் காரை  பெயர்ந்த வூட்ல  கூரை ஒழுகிற வூட்ல இருந்து கஷ்டப்பட்டோமே ..?

நம்மா பசங்க அப்படி இருக்க கூடாதுன்னு கஷ்ட நஷ்டப்பட்டு, கடன் வாங்கி வீடுகளை கட்டிக் கொடுத்தோம் .

பசங்களும் அதுங்க பங்குக்கு  உழைச்சி சேர்த்த பணத்தை போட்டு வீட்டை நிறைவேத்திச்சுங்கப்பா.. அதுங்க நிம்மதியா இருக்குதுன்னு  இப்ப சந்தோசப்பட முடியுதா ..? இல்ல,  நாங்களாவது நிம்மதியாக இருக்க  முடியுதாப்பா ..?

என்ன வாழ்க்கைப்பா இது. எங்க கடைசி காலம் இப்படியா ஆகணும் ..?

எந்த நேரத்துல யார் வந்து வூட்டை இடிப்பாங்க ..?

நிலத்த புடுங்குவாங்க..! என்ற நெனைப்பிலேயே சோறு தண்ணி கூட இறங்க மாட்டேங்குதுப்பா..!”

அமைதியாக அவர் பேசிக் கொண்டிருக்கும் போது அவரை அறியாமல் கண்களில் நீர் வடிகிறது.

“… உடம்பு சரொயில்லப்பா…,ரெண்டு அடி நடந்தாலே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குது. எந்நேரமும் மாத்திரை -மருந்து- ஆஸ்பத்திரி- டாக்டர்னு ,

வருமானம் இல்லாத பசங்கள நான் தொந்தரவு பண்ண முடியுமாப்பா..?”

அஞ்சலை சித்தியால் இப்போது உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை. முந்தானையால் முகத்தை பொத்தி அழுகிறார்.

அப்பாவி கிராம மக்களின் வாழ்வில் நிலவும் வெம்மையும், காலத்தின் கடுமையும் நமக்கு உரைக்கிறது.

இவரது மூத்த மருமகள் போராட்டங்களில் முன்னணியில் நிற்கும் பொதுமக்களில் ஒருவராக இருக்கிறார். இளைய மகன் பசுமை விமான நிலைய எதிர்ப்பு கூட்டியக்கத்தின் பொறுப்பாளர்களில் ஒருவராக நிற்கிறார்..!

ஒரு ஜனநாயக நாட்டில் அரசு என்பது மக்களுக்கானது. மக்கள் நலனுக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் அரசு திட்டங்களை தீட்டித் தான் ஆக வேண்டும்.

ஆனால் –

மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து ஒரு திட்டம் செயல்படுத்தப்பட வேண்டுமானால், அதற்கான விரிவான திட்ட அறிக்கையை அரசு மக்கள் முன் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் –

ஒரு திட்டத்திற்காக மக்களின் வாழ்வாதாரங்களாக இருக்கிற நிலம் உள்ளிட்டவற்றை கையகப்படுத்த வேண்டுமானால் ,

அதற்கான காரணங்கள் கொண்ட ஆய்வு அறிக்கையை மக்கள் முன்வைத்து, அதற்கான தேவையையும் நியாயங்களையும்  மக்களுக்கு கூற வேண்டும்.

எனது அரசு மக்களுக்கான அரசு என மூச்சுக்கு முந்நூறுமுறை மார்தட்டி பேசுகிற, தமிழக முதல்வரும் அவரது அரசும்  என்றைக்காவது இதைச் செய்திருக்கிறதா..?

இந்த கட்டுரை தொடர் வெளி வருகின்ற இன்றைய நாளில் ஏகனாபுரத்தில் போராட்டம் 600 -வது நாளை எட்டி இருக்கிறது.

தமிழக முதல்வரே –

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே

செல்வத்தை தேய்க்கும் படை (குறள் எண்;555)

இதற்கான விளக்கம் உங்கள் தந்தையார் கலைஞர் எழுதிய, குறளோவியத்தில்

‘’கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக் கருவியாகும்’’ எனத் தரப்பட்டுள்ளது.

தொடரும்….

கட்டுரையாளர்; பவா சமத்துவன்

மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time