யார் இந்த அர்னாப் கோஸ்வாமி?

சாவித்திரி கண்ணன் 

பத்திரிகையாளர் போர்வையில் பஞ்சமா பாதகங்களை மனித நேயமின்றி அரங்கேற்றிய ரிபப்ளிக் சேனல் முதலாளி அர்னாப் கோஸ்வாமி கைதாகியுள்ளார்.

ஒன்றா, இரண்டா..? ஒவ்வொரு நாளும் ஒரு புரளி, ஒவ்வொரு விவகாரத்தையும் திசைதிருப்பும் குயுக்தி…என அவர் செய்த அநீதிகளை பட்டியலிட்டால், பல அத்தியாயங்கள் எழுதலாம்!

பத்திரிகையாளர் பணி என்பது உரிமை மறுக்கப்படும் எளிய மக்களுக்கான நீதியின் குரலாக ஒலிப்பதாகும்! ஆனால், அர்னாபோ அதை அநீதியை செய்பவர்களை நியாயவான்களாக்கும் பணியாக மாற்றிக் கொண்டவர். ஒவ்வொரு பத்திரிகையாளருக்கும் ஒரு அரசியல்பார்வை இருக்கலாம் தவறில்லை. ஆனால், மாற்று அரசியல் கருத்துள்ளவர்களையும்,மதித்து விவாதித்து உரிய தீர்வுகளை தேடுவது தான் ஊடக தர்மமாகும்!

ஆனால்,அர்னாபோ, தனக்கு பிடிக்காதவர்கள் என்று ஒரு பட்டியலிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா தொடங்கி ராகுல், அரவிந்த் கேஜ்ரிவால்,மம்தா பானர்ஜி என பலரையும் கேரக்டர் அஸாசினேஷன் செய்தார்.இது கொலை செய்வதைவிடக் கொடுமையானதாகும். அர்னாபின் தொலைகாட்சி விவாதங்கள் அவரது சகிப்புதன்மையற்ற ஊடக சர்வாதிகார மனப்போக்கை தெளிவாக படம்பிடித்துக் காட்டியுள்ளன! அர்னாப் ஒருவரை குற்றவாளி என்று முடிவெடுத்துவிட்டால், அவருக்கு தன் தரப்பு நியாயத்தை சொல்லக் கூட வாய்ப்பளிக்காமல்,தான் விரும்பிய முத்திரையை அவர் மீது அராஜகமாக குத்திவிடுவார்.

குறிப்பாக உபா சட்டத்தில் தெலுங்கு கவிஞர் வரவரராவ், சமூக செயற்பாட்டளர் சுதாபரத்வாஜ், முதிய பாதிரியாரும் எளியவிளிம்பு நிலை மக்களுக்காக பாடுபட்டவருமான ஸ்டேன் சாமி.. உள்ளிtட பல மனித உரிமை போராளிகள் கைது செய்யப்பட்டு எந்த விசாரணையின்றி சிறையில் வைக்கப்பட்ட போது, அவர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து, வரிந்துகட்டிக் கொண்டு பேசினார் அர்னாப்!

அலிகார் முஸ்லீம் பல்கலைகழகத்தை தீவிரவாதிகளின் கூடாரமாகச் சித்தரிக்கும் கெடு நோக்கத்துடன் அங்கு தன்னுடைய சேனல் ஆட்களை குண்டர்களுடன் களத்தில் இறக்கி, அந்த மாணவர்களை தாக்கி படுகாயப்படுத்திவிட்டு, அவர்கள் மீதே பொய்புகார் தந்து 14 மாணவர்களை தேசவிரோத வழக்கில் சிறைக்குள் தள்ளியவர் அர்னாப்! அதாவது எந்த ஒரு பஞ்சமா பாதகத்தையும் பாஜகவின் மதவெறி அரசியல் அஜெந்தாவிற்காக தொடர்ந்து செய்தவர் தான் அர்னாப்! இது அங்கு படிக்கின்ற இளம் மாணவர்களை எவ்வளவு கொந்தளிப்புக்கு உள்ளாக்கியிருக்கும்..!

ஆனால், அப்படிப்பட்ட அர்னாப் கோஸ்வாமி கைதை நாட்டையே அதிரவைக்கும் ஒரு நிகழ்வாக மாற்ற பாஜக தலைவர்கள் துடிக்கிறார்கள்…!

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “பத்திரிகைச் சுதந்திரம் பற்றி பேசுபவர்கள் இன்று அர்னாப் கைதுக்கு எதிராக எழுந்து நிற்க வேண்டும். அப்படி நிற்கவில்லை எனில் நீங்கள் தந்திரோபாயமாக பாசிசத்தை ஆதரிப்பவர்களே.உங்களுக்கு அர்னாபை பிடிக்காமல் இருக்கலாம், அவரை நீங்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம், அவரது இருப்பையே நீங்கள் அருவருப்பாக உணரலாம் ஆனால் அமைதி காத்தீர்கள் என்றால், அது  அடக்கு முறைக்குத் துணை போகிறீர்கள் என்றே அர்த்தம் என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

மத்திய அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டரில், ‘காங்கிரசும் அதன் கூட்டணிகளும் மீண்டும் ஒரு முறை  ஜனநாயகத்தை வெட்கப்படுத்தியுள்ளன. ரிபப்ளிக் தொலைக்காட்சி மற்றும் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக அரச அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது தனிநபர் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் 4வது தூண் மீதான தாக்குதல்கள் ஆகும்.இந்த சம்பவம் அவசர நிலை அமலில் இருந்த தருணத்தை நினைவுப்படுத்துகிறது’ என பதிவிட்டுள்ளார்.

இவர்கள் மட்டுமல்ல, கிட்டதட்ட மோடியை தவிர்த்த அனைத்து பாஜக அமைச்சர்களும், முக்கியஸ்தர்களும் அர்னாப் கைதுக்கு எதிர்வினையாற்றியுள்ளனர்.இதிலிருந்து அர்னாப் யாருக்காக இவ்வளவு நாள் வேலை செய்துள்ளார் என்பது தெளிவாகிறது!

ஆனபோதிலும் அர்னாப் முறைதவறி கைது செய்யப்பட்டிருந்தால் அதை கண்டிக்க நாம் ஒரு போதும் தயக்கப்படமாட்டோம்! முதலில் அவர் எதற்காக கைதாகியுள்ளார் என நாம் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.

அன்வே நாயக் என்பவர் ஒரு மும்பையைச் சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர். இவர் கான்கார்ட் டிசைன் என்கிற கம்பெனியின் நிர்வாக இயக்குநராக இருந்தார். இந்த கம்பெனி தான், அர்னாப் கோஸ்வாமியின் சேனலுக்கு நவீன ஸ்டூடியோ அரங்கை கட்டிக் கொடுத்தது.

இவர் கடந்த மே 2018 அன்று, மகாராஷ்டிராவில் இருக்கும் அலிபாகில், ஒரு வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அதே வீட்டில், அவரது தாயார் குமுத் நாயக்கும் இறந்து கிடந்தார். இவருடைய தற்கொலை கடிதத்தில், தன்னுடைய மரணத்துக்கு அர்னாப் கோஸ்வாமி தான் காரணம் என்றும், அர்னாப், தன் வேலைக்கு தரவேண்டிய 83 லட்ச ரூபாய் கட்டணத்தைச் தராமல் இழுத்தடித்தார் என்றும், பல முறை கேட்டும், கெஞ்சி பார்த்தும் தரமறுத்துவிட்டாதால் கடும் நிதி நெருக்கடியில் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

அன்வே நாயக் இறந்து  இரண்டு ஆண்டுகள் ஆகியும் அர்னாப்பிற்கு மத்திய ஆட்சியாளர்களிடம் இருக்கும் செல்வாக்கு காரணமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் தான் அன்வே நாயக்கின் மனைவி அக்‌ஷதா, சமூக வலைதளத்தில் தன் கணவரின் பிரச்சனை தொடர்பாக ஒரு உருக்கமான வீடியோ பதிவை வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி அனைத்து மக்களும், ’’அர்னாப் என்ன சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா?’’ என கேள்வி எழுப்பினர். இதை தொடர்ந்து கடந்த 26 மே 2020, மகாராஷ்டிராவின் உள் துறை அமைச்சர், இந்த விவகாரத்தைக் மாநில சிஐடி-யிடம் ஒப்படைத்த நிலையில்,அவர்கள் விசாரித்து, மிகவும் தாமதமாகவே அர்னாபை கைது செய்துள்ளனர். ஆகவே அர்னாப் கைதாகியுள்ளது இரு நபர்களை தற்கொலை செய்யத் தூண்டிய கிரிமினல் குற்றத்திற்காகத் தானேயன்றி, பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்கவல்ல!

முன்னதாக டி.ஆர்.பிரேட்டிங்கில் முறைகேடு செய்த விவகாரத்தில் அர்னாப் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு பதிவாகி, மற்ற இருவரும் கைதானார்கள்.ஆனால்.அர்னாப் கைதாகவில்லை! அதே போல நடிகர் சுஷாந்த் தற்கொலை விவகாரத்தை பாஜகவின் அரசியல் எதிரிகளை பழிவாங்கும் நோக்கில் கையாண்டார் அர்னாப்! இதனால் அர்னாபை இந்த தேசமும், ஒட்டுமொத்த மக்களுமே அறுவெறுப்புடன் பார்க்க நேர்ந்தது என்பதை மறுக்கமுடியாது.

இப்படியாக, அர்னாபின் ஒவ்வொரு ஊடகச் செயல்பாடும் ஊடக தர்மத்திற்கு எதிராக இருந்தது மட்டுமின்றி, நாட்டில் கலவரத்தையும்,வன்முறையையும்,தூண்டுவதாகவும் இருந்தது! அத்துடன் வெறுப்பையும், துவேஷத்தையும் மக்களிடையே விதைப்பதாக இருந்தது. ஒரு அர்னாப், ஆயிரம் தீவிரவாதிகளுக்கு சமமானவர் என்பதைவிடவும், அவர்களையெல்லாம் விட பேராபத்தானவர்!

பொய், புரட்டு, புரளி, மக்களை பிளவுபடுத்தும் உள்நோக்கம், அரசியல் தரகுவேலை இவற்றின் ஒட்டுமொத்த பிம்பமே அர்னாப்! இவரது பேராபத்து கருதி இவர் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மாகாராஷ்டிர அரசு எடுக்க வேண்டும். மத்திய அரசின் நிர்பந்தங்களுக்கு பணிந்து, அர்னாபை தப்பிக்கவிடுவதானது இந்த சமூகத்திற்கும், மனிதகுலத்திற்கும் ஆபத்தானதாகிவிடும்!

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time