தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தின் பின்னணியில் மக்களை திசை திருப்பும் நோக்கம் உள்ளது. உண்மையில் தேர்தல் பத்திரங்கள் வழியே அரசியல் கட்சிகள் பெற்றுள்ள பணம் குறைவே! ஆட்சியாளர்களுக்கு மிக நெருக்கமான நிறுவனங்கள் இந்த பட்டியலில் இல்லாததே வேறு வழிமுறைகளில் பணம் பெறுகிறார்கள் என்பதற்கு சாட்சியாகும்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு மிக அதிக நன்கொடை தந்த நிறுவனங்களை வரிசைப்படுத்தி பார்ப்போம்;
ஃப்யூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்-ரூ.1,368 கோடி
‘மேகா என்ஜீனியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் -ரூ.966 கோடி
‘க்விக் சப்ளை செயின் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம்’ -ரூ. 410 கோடி
வேதாந்தா ( ஸ்டெர்லைட்நிறுவனம்) -ரூ.400 கோடி
ஹால்டியா எனர்ஜி லிமிட்டெட் -ரூ.377
தேர்தல் இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்தியாவின் டாப் மோஸ்ட் நிறுவனங்களான அம்பானியின் ரிலையன்ஸ், அதானியின் பல தரப்பட்ட நிறுவனங்கள், டாடா, பிர்லா, பஜாஜ், நுஸ்லி வாடியா, பதஞ்சலி நிறுவனத்தின் பாபா ராம்தேவ், டி.வி.எஸ். வேணுசீனிவாசன், சாப்ட்வேர் சக்கரவர்த்தி அஸிம்பிரேம்ஜி.. இப்படி எத்தனையோ பெயர்கள் இதில் விடுபட்டுள்ளன!
இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையில் மிகப் பெரும் கோடிஸ்வர நிறுவனங்கள் சுமார் நூறாவது தேறும். அவங்களுக்கெல்லாம் அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் உதவி இல்லாமல் எந்த நகர்வும் இல்லை. இதே போல பைனான்ஸ் துறையில், புட் இண்டஸ்டிரி எனச் சொல்லக் கூடிய உணவுத் துறையில், ஜவுளித் துறையில்.. என ஒவ்வொரு துறையில் பற்பல கோடீஸ்வர நிறுவனங்களின் பெயர்கள் இதில் இல்லை.
இவர்களை எல்லாம் விட்டு வைக்கும் அளவுக்கு அவ்வளவு நல்லவர்கள் அல்ல நமது அரசியல்வாதிகள்! அவர்களுக்கும் தனது போட்டி நிறுவனத்தை முந்தவோ அல்லது வீழ்த்தவோ அரசியல்வாதிகள் தயவு தேவை! ஏனென்றால், அப்படியான சமூகச் சூழல் தான் இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. நேர்மை நாணயம், திறமை.. அடிப்படையில் வாய்ப்புகளை தரும் சமூகமல்ல இது!
பார்மா இண்டஸ்டிரியில் பூனே வாலா என்பவர் தான் நம்பர் ஒன்! கொரனா காலகட்டத்தில் தடுப்பூசி மருந்தை இவரைக் கொண்டு தான், இந்தியா முழுமைக்கும் மாத்திரமல்ல, வெளி நாடுகளுக்கும் அனுப்பியது பாஜக அரசு. இதுமட்டுமின்றி தற்போது கர்ப்பபை புற்று நோய் தடுப்பு மருந்தும் இவருக்கே தரப்பட்டுள்ளது. சுமார் 90,000 கோடிகள் பெறுமான இண்டஸ்டிரி நடத்தும் பூனே வாலா வெறும் 50 கோடிகள் தான் தந்திருப்பாரா..?
சரி, மேற்படி தேர்தல் பத்திரங்கள் நன்கொடை பட்டியலில் முதல் ஐந்து இடத்தில் உள்ளவர்கள் ஏன் நன்கொடை தந்தார்கள் என்று பார்த்தால், நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் லாட்டரி மார்ட்டின் சட்ட விரோத போலி லாட்டரி சீட்டுகளை விற்பவர்! பொய், பித்தலாட்டத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டு பல கம்பெனிகளை நடத்துபவர். தமிழ் நாட்டை சேர்ந்த அவர் திமுகவிற்கு அதிக நன்கொடை தருபவர். இதனால், இவர் நிறுவனங்கள் மீது பல கட்ட ரெய்டு நடவடிக்கைகளை எடுத்து, வங்கி கணக்குகளை முடக்கி பணிய வைத்து நன்கொடைகள் பெற்றுள்ளனர் மத்திய ஆட்சியாளர்களின் கட்சியினர்!
தேர்தல் பத்திர நன்கொடையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் மேகா எஞ்சினீயரிங் நிறுவனம். ரூ.966 கோடியை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக அளித்துள்ளது. இந்த நிறுவனம் தெலுங்கானாவில் ஊழல் முறைகேடுகளுக்கு பெயர் போன கல்லேஸ்வரம் இறவைப் பாசன திட்டத்தின் முக்கிய பகுதி இந்த நிறுவனத்தால் கட்டப்பட்டதற்கும், மகாராஷ்டிர மாநிலத்தில் சுமார் ரூ.14,000 கோடி மதிப்பிலான தானே-போரிவலி இரட்டை சுரங்கப்பாதை திட்டத்தின் ஒப்பந்தம் வழங்கப்பட்டதற்கும் பிரதியுபகாரமாகவே இந்த தேர்தல் பத்திர நன்கொடைகளை தந்துள்ளது!
ரூ 400 கோடிகள் நன்கொடை அளித்துள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்தின் வேதாந்தா இந்த நிறுவனத்தை மீண்டும் திறக்கும் முகமாகவே மேற்படி நன்கொடைகளை வழங்கியுள்ளார் என்பதை நாம் யூகிக்கலாம். ஆக, லாட்டரி மார்ட்டின், வேதாந்தா போன்ற சமூக விரோத, மனிதகுல எதிரிகளான தொழில் அதிபர்கள் பணத்தை அள்ளி வீசினால் என்ன வேண்டுமானாலும் இந்த நாட்டில் செய்ய முடியும் என்பதற்கு உதாரணங்களாகும்.
அவ்வளவு ஏன் மோடியோடு கொஞ்சிக் குலவும் அதானி, அம்பானி போன்றோர்கள் எல்லாம் ஐந்தாறு லட்சம் கோடிகளுக்கு அதிபர்கள்! இவர்களின் சொத்துக்கள் அவ்வளவும் அதிகார துஷ்பிரயோகம் செய்து அவர்களுக்கு வழிவிட்டு ஆட்சியாளர்கள் செய்த சேவையால் பெற்ற செல்வங்கள் தானே! இவர்களின் உழைப்பும், திறமையும் 10 சதவிகிதம் என்றால், 90 சதவிகித முறைகேடான அத்துமீறல்களே இவர்களின் செல்வச் செழிப்ப்புக்கு காரணமாகும்! ஆகவே, இவர்கள் எல்லாம் கேவலம் ஒரு கோடி பெறுமான தேர்தல் பத்திரங்களையா ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு தருவார்கள்! பல்லாயிரம் கோடிகள் அள்ளித் தந்து இருப்பார்கள்! ஏனென்றால், இந்த ஆட்சியே இவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது தானே!
நமது ஆட்சியாளர்கள் மக்களின் ரத்தத்தை உறிஞ்சும், உயிரைக் குடிக்கும் பல தீமைகளுக்கு இந்தியாவில் இடம் அளித்துள்ளனர். உதாரணத்திற்கு விவசாயத்தில் தடை செய்யப்பட்ட பல ஆபத்தான பூச்சிக் கொல்லி மருந்துகள், களைக் கொல்லி மருந்துகள் ஆகியவற்றை தங்கு தடையின்றி இங்கு புழங்க அனுமதித்து உள்ளனர். விவசாயமும், உணவும் நஞ்சாவது குறித்து அவர்களுக்கு கவலை இல்லை. அதே போல உலகில் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஆபத்தை விளைவிக்கும் மருந்து, மாத்திரைகளையும் புழக்கத்தில் அனுமதித்துள்ளனர். இவற்றை சாப்பீட்டு மக்கள் சிறுகச் சிறுக செத்தால் நமக்கென்ன? நமக்கு பண வரவு வந்தால் போதும் என்பதே இவர்களின் நடைமுறையாக உள்ளது.
பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு லட்சத்திற்கும் அதிகமான முழு நேரத் தன்னார்வ தொண்டர் படையைக் கொண்டது. இவர்களுக்கு இந்தியாவின் பெரு நகரங்கள் தொடங்கி சிறு நகரங்கள் வரை அலுவலகங்கள் உள்ளன! இவர்களின் சாப்பாடு, உணவு மற்றும் அன்றாடச் செலவுகள், நடவடிக்கைகள்.. எப்படி நடக்கின்றன…!
பாஜக பல மாநிலங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி எம்.எல்.ஏக்களை பல நூறு கோடிகள் தந்து தூக்கினார்களே.., இதற்கெல்லாம் உடனுக்குடன் பணம் எப்படி கிடைக்கிறது! தேர்தல் பத்திரங்கள் வாயிலாகவா இது போன்ற நேரங்களில் பணத்தை வாங்குவார்கள்..?
இது போன்றவற்றுக்கு இந்தக் கட்சிகளின் கஜானாக்களை போல செயல்படுவர்கள் தாம் மேற்படி பட்டியலில் இல்லாத தொழில் நிறுவனங்களும், அதிபர்களும்! ஆகவே, தேர்தல் பத்திரங்களை மட்டுமே கொண்டு அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகளை மதிப்பிடுவது என்பது குருடர்கள் யானையை தடவிப் பார்த்து அதன் உருவத்தை கற்பனை செய்து கொண்டது போலத் தான்!
Also read
நடந்து முடிந்த மற்றும் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தது 100 கோடிகள் அள்ளி இறைக்கிறார்களே..! எனில், 543 தொகுதிகளில் தங்களுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் செலவழிக்க போகும் பணத்திற்கு தற்போது தேர்தல் பத்திரங்கள் வழியே கிடைத்துள்ள பணம் அரசியல் கட்சிகளுக்கு போதுமானதா..? நம் கவனத்திற்கு தெரிய வந்துள்ளது கொஞ்சமே! வராததே அதிகம்! பணம் பெறுவதற்கு ஆயிரம் வழிமுறைகளை அறிந்து வைத்துள்ள ஜித்தர்களே நமது அரசியல்வாதிகள்!
தேர்தல் பத்திரங்களைக் கடந்து தொழில் நிறுவனங்களிடம் பணம் பெறும் நுட்பமான வழிமுறைகள் பலவற்றை ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் கடைபிடிக்கின்றனர். அவை மிகவும் சூட்சுமமானவை! எளிதில் அறிந்து கொள்ள முடியாதவை என்பதையும் தற்போது கவனத்தில் கொள்வோமாக!
-சாவித்திரி கண்ணன்
இந்த பட்டியலில் அரசுக்கு நெருங்கிய பெரும் நிறுவனங்கள் இல்லை என்பதே வேறு வழியில் பணம் பெறப்படுகிறது என்பதற்கு சான்று. இந்த அமைப்பே கார்ப்பரேட் நடத்துவது தானே.