பாஜகவை தாங்கி பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ் தூண்கள்!

- சாவித்திரி கண்ணன்

பாஜக எப்படி ஒரு பலமான இயக்கமாக மேலெழுந்து வந்தது? இதன் பின்னணியில் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் எப்படி அடித்தளமாக இயங்கி கொண்டுள்ளது.. என்பதை புரிந்து கொள்ளாமல், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு வெற்றி சாத்தியமில்லை. எத்தனை திட்டமிடல்கள்! எவ்வளவு செயல்பாடுகள்..!வாவ்!

பாஜக என்ற அரசியல் கட்சி அடிப்படையில் பலவீனமானது! ஆனால், அதற்கு அடித்தளமாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ் என்ற சித்தாந்த அமைப்பு மிக வலுவானது. இதில் பயிற்சி பெற்றவர்கள் தாம், பாஜகவில் தலைமை பொறுப்புக்கு பெரும்பாலும் வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தும் அரசியல் செயல் திட்டமாகவே பாஜக வளர்த்தெடுக்கப்பட்டு உள்ளது.

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பின், ஆன்லைனில் ஆர்.எஸ்.எஸ்.சில் இணைபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளதாம்! அந்த அமைப்பின் இணைப் பொதுச் செயலர் மன்மோகன் வைத்யா பெருமை பொங்க கூறியுள்ளார்.

இந்த வெற்றிக்கு பின்னணியில் ஆர்.எஸ்.எஸின் பெரும் திட்டமிடலும், கடும் உழைப்பும் இருந்துள்ளதை நாம் கவனிக்க வேண்டும். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக இந்தியா முழுமையும் உள்ள சிறியதும், பெரியதுமான 9.85 லட்சம் கோவில்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. மாநகரம் தொடங்கி சிற்றூர்கள், குக்கிராமங்கள் வரையிலுள்ள சாதாரண தெருக் கோவில்களைக் கூட விட்டு வைக்காமல், இந்த நிகழ்ச்சியை நடத்தியதின் மூலம் இந்தியாவின் கடைக் கோடி மனிதர்களுக்கும் ராமர் கோவில் முக்கியத்துவத்தை கொண்டு சேர்த்துள்ளனர். இதற்காக 19.38 கோடி குடும்பங்களுக்கு அழைப்பிதழ் நேரடியாக கொடுக்கப்பட்டது என்பதை நினைத்து பார்த்தாலே பிரமிப்பாக உள்ளது.

ராமர் கோவில் பிராண பிரதிஷ்டையில் மோடி, மோகன் பாகவத்

ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்த ஜனவரி 22ல் அதே நாளில் நாடு முழுவதும் 5 லட்சத்து 60 ஆயிரம் இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில்  27.81 கோடி பேர் பங்கேற்றனர் என்பது அசாதாரணமானதாகும். இதனால் தான் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பிரதமர் மோடியுடன், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பாகவத் சரிக்கு சமமாக பங்கேற்றார்.

இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு 52,000 கிளைகள் உள்ளன. 60 இலட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இவற்றை நிர்வாகம் செய்ய முழு நேரப் பணியாளர்கள் அல்லது நிர்வாகிகள் என்ற வகையில் 1.20,000 பேர் உள்ளனர். பாஜகவின் சகோதர அமைப்பு அல்லது துணை அமைப்புகள் என்ற வகையில் சேவா பாரதி, பஜ்ரங் தள், சுதேசி ஜாக்ரண் மஞ்ச், வித்தியா பாரதி, பாரதிய யுவ சேவா சங்கம், பெண்களுக்கான ராஷ்டிரிய சேவிகா சமிதி, விவேகானந்தா கேந்திரா உள்ளிட்ட 26 அமைப்புகள் உள்ளன! இதில் பழங்குடிகளுக்கென வனவாசி கல்யாண் ஆஸ்ரமம், முஸ்லீம்களுக்கு ராஷ்டிரிய முஸ்லீம் மஞ்ச் என்ற அமைப்புகளும் உள்ளன. இந்தியா முழுமையும் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் சார்ந்த 72,000 பள்ளிக் கூடங்கள் நடக்கின்றன. அமெரிக்கா, மலேசியா, இலண்டன் உள்ளிட்ட பல வெளி நாடுகளிலும் ஆர்.எஸ்.எஸ் வெவ்வேறு பெயர்களில் செயல்படுகிறது.

 

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் வட தமிழகம், தென் தமிழகம் என இரண்டு மாநிலங்களாக செயல்படுகிறது. ஆண்டு தோறும் ஏழு நாட்கள் நடைபெறும் சிறப்பு சாகாக்களில் நான்காயிரத்திற்கு மேற்பட்டோர் பயிற்சி பெறுகின்றனர். இது தவிர 20 நாட்கள் பயிற்சி முகாம்களிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்.எஸ்.எஸிற்கு அலுவலங்கள் உள்ளன! ஒவ்வொரு தாலுகாவிலும் கிளைகள் உள்ளன.

இப்போதும் கூட நாக்பூரில் நடந்து கொண்டிருக்கும் தேசிய செயற்குழுவில் லோக்சபா தேர்தல் பணிகள் குறித்த திட்டமிடல்கள் நடந்து.ள்ளன. தேர்தல் தேதி அறிவுப்புக்கு முதல் நாள் தொடங்கி மூன்று நாட்கள் நடந்துள்ளது. தேர்தல் முடியும் வரை  ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்களை முற்றிலும் தவிர்த்து தேர்தல் பணியிலேயே முழு கவனத்தையும், சிந்தாமல், சிதறாமல் செலுத்துவது என முடிவாகியுள்ளதாம்.

வரும் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டாக உள்ளதால் ஆண்டு முழுவதற்குமான கொண்டாட்டங்களை ஆங்காங்கே நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

நிர்வாக வசதிக்காக ஆர்.எஸ்.எஸ். இந்தியாவை 45 மாநிலங்களாக பிரித்து செயல்படுகிறது. வருங்காலத்தில் இந்த 45 மாநிலங்களை பாஜக அரசே  நாட்டில் நடைமுறைபடுத்த உள்ளதாம்.

இந்த ஆண்டு மார்ச் 1ம் தேதி நிலவரப்படி ஒவ்வொரு நாளும் இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெறும் ஷாகாக்களின் எண்ணிக்கை 73,117 ஆக உள்ளது. இது தவிர 27,717 வாராந்திர சாகாக்களின் நிகழ்வுகள், 10,567 மாதாந்திர சாகாக்களின் நிகழ்வுகள்  நடந்து வருகின்றன. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு ஷாகாக்களின் எண்ணிக்கை 4,466 அதிகரித்துள்ளது. காரணம், கடந்த ஓராண்டில் ஒரு லட்சம் கூடுதல் உறுப்பினர்கள் ஆர்.எஸ்.எஸில் இணைந்துள்ளனராம்!

ஷாகாக்களுக்கு வருபவர்களில் 60 சதவீதத்தினர் மாணவர்களாக உள்ளனர் என்பதும், அதற்கடுத்த நிலையில்  தொழிலாளர்கள் அதிகமாக வருகின்றனர் என்பதும் கவனத்திற்கு உரியது. இப்படி வருவோரில் 89 சதவீதத்தினர் 40 வயதுக்கு கீழ் உள்ள இளவயதினர் என்பது மிக முக்கியமானது

ஆர்.எஸ்.எஸ்.,ஸின் மகளிர் அமைப்பான ராஷ்ட்ர சேவிகா சமிதியும் ஒரு வலுவான அமைப்பாகும். இந்த அமைப்பு சென்ற ஆண்டு மட்டிலுமே நாடெங்கும், 460 இடங்களில் நடத்திய மகளிர் மாநாடுகளை நடத்தியுள்ளது. இவற்றில் 5 லட்சத்து 61 ஆயிரம் பெண்கள் பங்கேற்றுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ் நடத்தும் தினசரி ஷாகாக்கள் ஒரு பூங்கா, பள்ளிக் கூடங்கள் அல்லது திறந்த வெளி மைதானம் ஆகியவற்றில் அதிகாலை நேரத்தில் நடத்தப்படுகிறது. யோகா, தியானம், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் என இவை மிகவும் பயன் சார்ந்த நிகழ்வாக உள்ளதால் மக்கள் இதில் ஈர்க்கப்படுகின்றனர். இப்படி வருபவர்களை மெல்ல,மெல்ல அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறார்கள்! இந்து வேதங்களிலிருந்து சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிப்பதற்கும், காவி-ஆரஞ்சு கொடிக்கு வணக்கம் செலுத்துவதற்கும் கற்றுத் தருகிறார்கள்!

கோவையில் உள்ள அரசு பள்ளியில் நடந்த ஆர்.எஸ்.எஸ் ஷாகா நிகழ்வு

இதில் இந்து சமத்தின் முக்கியத்துவத்தை சொல்கிறார்கள். நம் நாடு முகலாயர்களுக்கும், பிரிட்டிஷாருக்கும் பல நூற்றாண்டுகள் அடிமைப்பட்டதால் இந்து சமூகம் பின் தங்கி விட்டது. ஆகவே அதை மீட்க வேண்டும் என்ற உத்வேகம் ஊட்டப்படுகிறது. இத்துடன் இஸ்லாமிய துவேஷமும் மிக சாதுரியமாக புகுத்தப்படுகிறது. இதில் முளைச் சலவை பெற்றவர்கள் சுலபத்தில் பாஜகவை புறக்கணிப்பதில்லை

1947 இல் இந்தியர்கள் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றபோது, ​​அவர்கள் மதச்சார்பற்ற கொள்கைகளின் அடிப்படையில் பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயகத்தை நிறுவினர். ஆனால், பெரும்பான்மையான இந்து மத நம்பிக்கையின்படி இந்தியாவை மறுவரையறை செய்வதே ஆர்எஸ்எஸ்ஸின் குறிக்கோள் என்பதை மனதில் ஆழப் பதிய வைக்கிறார்கள்!

மோடி இளைஞராக இருந்த போது ஆர்.எஸ்.எஸ் தொண்டராக பேசுகிறார்!

இப்படித் தான் மோடி போன்ற பாஜகவின் ஏராளமான தலைவர்கள் வளர்த்து எடுக்கப்பட்டனர். தற்போது லட்சக்கணக்கானோர் வளர்த்து எடுக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் தெளிவான செயல் திட்டத்துடன் இடையறாது இயங்கிக் கொண்டுள்ளனர்.

இது போன்ற சீரிய செயல் திட்டத்துடன் இயங்கும் மிகப் பிரம்மாண்டமான தன்னார்வ அமைப்பு உலகில் வேறெங்கும் இல்லை. பாஜகவிற்கு மாற்றாக தன்னை சொல்லக் கூடிய காங்கிரஸ் இயக்கம் காந்தியக் கொள்கைகளை, சோஷலிச தத்துவங்களை, அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கும் மதச்சார்பற்ற கோட்பாடுகளை பயிற்றுவிக்கும் செயல் திட்டத்துடன் ஒரு தாய் அமைப்பையோ, தொண்டர் படையையோ ஏற்படுத்திக் கொள்ளாமல் பாஜகவை வெல்வது என்பது அரிதிலும், அரிதாகும். திராவிட அரசியல் கட்சிகளும் இதை கவனத்தில் கொள்ளாவிட்டால், எதிர்காலம் அவர்களுக்கு இல்லை.

– சாவித்திரி கண்ணன்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time