விவசாயிகள் போராட்டம் நாட்டின் கெளரவம் சம்பந்தப்பட்டது! மிக முக்கியமாக உலக வர்த்தக நிறுவனத்துடனான இந்தியாவின் அடிமை சாசனத்தை தூக்கி எறிய வேண்டும், கார்ப்பரேட்களின் கள்ள உறவால் கொண்டு வரப்பட்ட நில அபகரிப்பு சட்டம், மின்சார சட்டங்களை ரத்து செய்வது போன்றவை சம்பந்தப்பட்டதாகும்;
விவசாயிகளின் கோரிக்கைகள் நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013 ஐ மீண்டும் நடைமுறைப்படுத்துதல், உலக வர்த்தக அமைப்பில் இருந்து விலகுதல் மற்றும் முந்தைய போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை உள்ளடக்கியது.
பாஜக அரசு பலத்த அதிகார அழுத்தங்கள் தந்தும், பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு பார்த்த போதிலும் கூட, இந்த முறை சன்யுக்த் கிசான் மோர்ச்சா தலைமையிலான விவசாயிகள் போராட்டத்தில் பிகேயு (ஷாஹீத் பகத் சிங்), பிகேயு (ஏக்தா சித்துபூர்), கிசான் மஸ்தூர் மோர்ச்சா, பாரதிய கிசான் நௌஜவான் யூனியன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இயக்கங்கள் போராட்டத்தில் உறுதியாக ஈடுபட்டுள்ளன.
பாஜக அரசின் சதியால் பல்பீர் சிங் ராஜேவால் மற்றும் ஜக்ஜித் சிங் தலேவால் ஆகியோரின் பிகேயு பிரிவுகள் இந்த போராட்டத்திலிருந்து விலகி நிற்கின்றன.
இந்தியா உலக வர்த்தக அமைப்பில் 1995 முதல் இருக்கிறது. உலக வர்த்தக அமைப்பு விவசாயிகளுக்கு மானியங்கள், சலுகைகள் வழங்குவதை கடுமையாக கண்டிக்கிறது. அவ்வாறு வழங்குவது சர்வதேச வர்த்தகத்தை பாதிப்பதாக உலக வர்த்தக அமைப்பு கறாராக சொல்கிறது. மேலும் விவசாய உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஒரு விலை உத்திரவாதம் தருவதையும் முற்றாக தவிர்க்க வேண்டும் என கட்டளை இடுகிறது. சந்தை பொருளாதாரத்தில் வணிகர்கள் பேரம் பேசி குறைந்த அடி மாட்டு விலைக்கு வாங்குவதை தடுப்பது நியாயமல்ல எனச் சொல்கிறது. இதனால், தான் நமது அரசுகள் அது காங்கிரஸ் ஆனாலும், பாஜக ஆனாலும் எம்.எஸ்.பி எனப்படும் குறைந்தபட்ச ஆதார விலையை கொடுப்பதாகச் சொல்லி வாக்கு கேட்டாலும் அதை அமல்படுத்த முடியாதவர்களாகவே தொடர்ந்து விவசாயிகளை தவிக்கவிடுகின்றனர்.
உலக வர்த்தக அமைப்பின் (WTO) ஒப்பந்தத்தில் இருந்து விவசாயத் துறையை விலக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்தின் பல இடங்களில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தியதோடு WTO வின் கொடுபாவியை எரித்தார்கள்! விவசாயிகள் டெல்லி சலோ போராட்டத்தின் ஒரு அங்கமாக உலக வர்த்தக அமைப்பின் (WTO) ஒப்பந்தத்தில் இருந்து விவசாயத் துறையை விலக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் தினத்தை (WTO Quit Day) மிகுந்த கோபத்துடன் அனுசரித்தனர் என்பது கவனத்திற்கு உரியதாகும்!
உலக வர்த்தக அமைப்பு விவசாயிகளுக்கு எதிரான விதிகளையும் கொள்கைகளையும் உருவாக்குகிறது. மேலும், அது விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்களை நிறுத்தி, விவசாய நிலத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்க நமது அரசுக்கு அறிவுறுத்துகிறது.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் அழுத்தத்தால் உலக வர்த்தக அமைப்பின் கோரிக்கைக்கு இந்தியா அடிபணியக் கூடாது என்றும், அது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலக வர்த்தக அமைப்பில் 164 நாடுகள் உள்ளன! இவை தாம் உலகின் 98 சதவிகித வர்த்தகத்தை கட்டுபடுத்துகின்றன. FTA எனப்படும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என்பது வணிகர்களின் சுதந்திர வணிகத்திற்காக விவசாயிகளை பிழிந்தெடுக்கலாம் என்ற கொள்கையை உள்ளடக்கியதாகும். ஆகவே, ஒரு விவசாய உற்பத்தி பொருளுக்கான விற்பனை விலையை அதை உற்பத்தி செய்த நாடு நிர்ணயிப்பதை அவர்கள் நிராகரித்து, மிகக் குறைந்த விலையை அவர்கள் தீர்மானிக்கிறார்கள்! இது போதாது என சில தேவையில்லாத அயிட்டங்களை இறக்குமதி செய்யவும் இந்தியாவை அது நிர்பந்திக்கிறது. உதாரணத்திற்கு இந்தியாவில் சக்கரையோ, கோதுமையோ தேவைக்கும் அதிகமாக இருக்கிறது என்றாலும், ஒப்பந்தப்படி இறக்குமதி செய்தே ஆக வேண்டிய கட்டாயம் உண்டாகிறது. இதனால், இங்குள்ள விவசாயிகளின் வாழ்வாதாரமே சூனியமாகிறது. ஆகவே, ‘உலக வர்த்தக நிறுவன கட்டமைப்பு என்பது ஒரு நவீன காலனியாதிக்க அணுகுமுறை என்பதை உணர்ந்து, அதில் ஏழை இந்திய விவசாயிகளை அடகு வைக்கக் கூடாது’ என விவசாயிகள் போராடுகிறார்கள்!
நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம், 2013 இல் அன்றைய காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டது. பல வருட கால விவசாயிகளின் போராட்டங்கள், நீதித் துறையின் தலையீடு ஆகியவற்றால் சில பாதுகாப்பு அம்சங்களை அது விவசாயிகளுக்கு தந்தது.
அந்த வகையில் நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீட்டை அது உத்திரவாதப்படுத்தியது.
அது மட்டுமின்றி அரசாங்கம் எதற்காக? யாருக்காக நிலம் எடுக்கப்படுகிறது என்பதில் வெளிப்படைத் தன்மைமையோடு இருப்பதையும், விவசாயிகளின் விளக்கம் கேட்கும் உரிமையையும் உறுதிபடுத்தியது. உள்ளாட்சி அமைப்பான கிராம சபையுடன் வெளிப்படைத் தன்மையுடன் கலந்தாலோசிக்க கட்டாயப்படுத்துகிறது.
இரண்டாவது நோக்கம், சொத்து கையகப்படுத்தப்படும் நில உரிமையாளர்கள் அனைத்து பொருளாதார மற்றும் சமூக காரணிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு சமமான மற்றும் நியாயமான இழப்பீட்டைப் பெறுவதற்கு உத்தரவாதம் அளித்தது.
மூன்றாவது நோக்கமாக நில உரிமையாளர்களைத் தவிர, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சொத்தை நம்பியிருக்கும் பிற குடும்பங்களும் அதை வாங்கும்போது பாதிக்கப்படுவதால் அவர்களது குடும்பங்களின் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் ஆகியவற்றுக்கு கண்டிப்பாக முக்கியத்துவம் தர வேண்டும் என்றது.
இவை அனைத்துக்கும் மேலாக கையகப்படுத்தப்பட்டு, பயன்படுத்தப்படாத நிலத்தைத் திருப்பித் தர வேண்டிய காலகட்டத்தை மசோதா நிர்ணயித்தது. இதன் படி கையகப்படுத்தப்பட்ட நிலம் ஐந்தாண்டுகளுக்குப் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அதை அசல் உரிமையாளர்களிடம் திருப்பித் தர வேண்டும் என்று 2013 சட்டம் கூறுகிறது.
இவை அனைத்தையுமே பாஜக அரசு வந்தவுடன் நிராகரித்து புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. அதன்படி அரசுக்கு தேவைப்படின் விவசாயிகளிடம் இருந்து அதிரடியாக நிலத்தை அபகரித்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தருவதற்கு புதிய சட்டம் வழிவகுக்கிறது! ஆகவே, புதிய சட்டத்தை முற்றிலுமாக வாபஸ் வாங்க வேண்டும் என்பது விவசாயிகளின் பிரதான கோரிக்கையாகும்.
Also read
பாஜக அரசு அறிமுகம் செய்துள்ள ‘மின்சார வரைவுத் திருத்தச் சட்டம் 2020’ மின்சார உற்பத்தியையும், வி நியோகத்தையும் தனியாரின் ஏகபொக உரிமையாக மாற்றுகிறது. அதாவது அதானி, அம்பானி போன்றோர்களிடம் இருந்து அவர்கள் நிர்ணயிக்கும் விலைக்கு மின்சாரம் வாங்க நிர்பந்திக்கிறது. இதனால், விவசாயிகளை மேன்மேலும் பல வழிகளில் கார்ப்பரேட்டுகள் சுரண்டிக் கொழுக்க வழி வகை செய்கிறது.
மொத்தத்தில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் என்பது, ”இந்திய விவசாயிகளையும், நாட்டையும் வெளி நாட்டு மற்றும் உள் நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களுக்காக காவு கொடுக்காதே..” என அரசுக்கு எச்சரிக்கை தருவதாகும். ஆகவே, விவசாயிகளின் போராட்டம் என்பது அவர்கள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, நாட்டின் கெளரவம் சம்பந்தப்பட்டது.பொது நலன் சம்பந்தப்பட்டது. மக்கள் அனைவரும் ஆதரிக்க கடமைப்பட்டது.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
Leave a Reply