கட்சிக்குள்ளும், மக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தி!

-அஜிதகேச கம்பளன்

பாமகவின் வரலாற்றிலேயே இப்படியான  கடும் அதிருப்தியை இதற்கு முன் சந்தித்திருக்க வாய்ப்பில்லை! கட்சியில் 98 சதவீதமான நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்பவில்லை. வட தமிழக மக்களோ இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது தொடங்கி வசைபாடுகின்றனர். இவர்களின் உணர்வுகளை பதிவு செய்கிறது இந்தக் கட்டுரை;

பாமகவிற்கும் பாஜகவிற்கும் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து இன்று காலை விழுப்புரம், திண்டிவனம் ஆகிய இடங்களில் ஒரு சுற்று சுற்றி வந்ததில் பாமக கட்சியிலும், அதன் ஆதரவாளர்கள் மத்தியிலும் கட்டுப்படுத்த முடியாத அதிருப்தி வெளிப்படையாக வெளிப்படுவதைக் காண முடிந்தது என்கிறார், பாமகவில் ஆரம்ப காலங்களில் இருந்து அவர்களோடு பயணித்து தற்போது சற்று விலகி நிற்கும் ஒரு பத்திரிகையாளர்.

”பாட்டாளி மக்கள் கட்சியை பாழுங் கிணத்துல தள்ளிட்டானுவ அப்பனும், மகனும்! எத்தனை போராட்டங்கள், எவ்வளவு தடியடிகள், விழுப்புண்கள், கோர்ட்டு, கேஸு, ஜெயிலுன்னு அலைஞ்சி வாழ்க்கையை தொலைச்சு கட்சியை வளர்த்தவங்க ஏராளம்..! எல்லார் எதிர்பார்ப்புலையும் மண்ணள்ளி போட்டு கதைய முடிச்சுட்டானுங்க..”

”இந்தப் பாவிங்க நம்ம கட்சியை இப்படி அடமானம் வைப்பாங்கன்னு நெனைச்சே பார்க்கலை..’’

”இந்தக் கட்சி எந்த எதிரியாலும் அழிக்க முடியாத கோட்டையாக இருந்தது! ஆனா, இப்ப நம்ம எதிரி வேறெங்கும் இல்லை. கோட்டைக்குள்ளயே இருக்கான். அதுவும் தலைமையில வந்து உட்கார்ந்துட்டான். பாவம் டாக்டர் ஐயா என்ன செய்வாரு..? பெத்த பாவத்துக்கு பிள்ளைக்கு துணை போறாரு..’’

”இவனுங்க மட்டும் விலை போனா பரவாயில்லை! வன்னிய சமூதாயத்தையும் சேர்த்தே இல்ல வித்துப்புட்டானுங்க..”

”அட நீ போய்யா! ஓட்டை விட இவங்களுக்கு நோட்டு தான் முக்கியமா போச்சு”

ஆமாப்பா, சரியா சொன்ன! ஆனாக்க, இந்த தேர்தல்ல வாங்குற அடியில கட்சியே காணாம போகப் போவுது. சின்னமும் கிடைக்காத நிலை வரும் பாரு!

”சின்னமா..! அதான் அந்த மாம்பழம் தான் இப்ப அழுகிப் போச்சே..”

”அதிமுகவோட சேர்ந்து நின்றிருந்தால் ஏதோ மூணோ, நாலோ எம்.பி சீட்டை தூக்கி இருக்கலாம். இப்ப திருவோட்டைத் தான் தூக்கனும். அவங்க ஒருத்தருக்கு மட்டும் ராஜ்ய சபாங்கிற பிச்சை கிடைச்சிரும். இதுல வேற 2026 லயும் பாஜகவுடன் தான் கூட்டாம்! இன்னும், இதை பார்த்துகினு எவன் இருப்பான் இந்தக் கட்சியில”

”அப்ப கட்சியில மற்ற எவனும், எம்.பியோ, எம்.எல்.ஏவோ, ஏன் கவுன்சிலராகக் கூட ஆவ முடியாது. அந்த பிசேபிகாரனோட சேர்ந்து! இந்த தேர்தலோட கட்சி கந்தலாயிடும் பார்த்துக்க…”

மஞ்சள் துண்டை தோளில் போட்டு நடந்தால் ஒரு காலத்துல கெத்து! இப்பவோ அசிங்கமா பார்க்க்கறாங்க! ”என்னங்கடா நல்ல பெரிய பெட்டியா வாங்கிட்டாரா.. ஒங்க ஐயா..”ன்னு நக்கல் பண்றாங்க..!

முன்னல்லாம் ஐயா ஓட்டுக் கேட்டு வரும் போது ஊரே திரண்டு ஆரத்தி எடுப்பதென்ன..? குழந்தையை தூக்கி கொடுத்து பேர் வைக்க சொல்வது என்னா? மாலை, துண்டுன்னு மரியாதைகள் எவ்வளவு..? இப்ப யாரும் வீட்டை திறந்து எட்டிக் கூட பார்க்கமட்டாங்க! வருவது தெரிஞ்சாலே எஸ்கேப் ஆயிடுவாங்க.. வெறும் தெருவைத் தான் பார்க்கப் போறாரு..’’

இப்படி சொல்ல முடியாத அதிருப்தி குரல்கள்…, ஆதங்கங்கள்… வெளிப்பட்டன! சிலர் பேசிய வசவு சொற்களை நாகரீகம் கருதி, அச்சில் ஏற்றாமல் தவிர்க்கிறோம்.

தேர்தல் காலத்தில் பலமான கூட்டணி எது, நமக்கு பாதகமில்லாத கூட்டணி எதுன்னு சீர்தூக்கிப் பார்த்து கூட்டணி சேர்வதில் ஒவ்வொரு கட்சித் தலைமையும் முடிவு எடுக்கும். ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி இருப்பதிலேயே பலவீனமான கூட்டணியாகப் பார்த்து சேர்ந்ததன் மூலம் தன்னழிப்பை தடையின்றி நிகழ்த்த தொடங்கியுள்ளது என்பதே வட தமிழக மக்களின் பார்வையாக உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் வருவதை ஒட்டி பாட்டாளி மக்கள் கட்சி முதலில் பலமான திமுக கூட்டணியில் சேர ஆசைப்பட்டது. அந்தக் கட்சியை கூட்டணியில் சேர்க்க திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் போன்றோரும் முயற்சி எடுத்தனர். ஆனால், ‘பாமகவின் வாக்கு வங்கி பலவீனமாகிவிட்டது. அவர்களின் செல்வாக்கு சரிந்துள்ளது, மேலும் வெற்றி பெற்றவுடன் அவர்கள் பாஜக பக்கம் நகர்ந்து விடுவார்கள். அவர்கள் வருகையால் நாம் விசிகவையும் இழக்க நேரிடும். ஆகவே, பாமக கூட்டணி தேவையில்லை’ என திமுக தலைமை கறார் காட்டியது.

ஆகவே, பாமக அடுத்த பலமான கூட்டணியான அதிமுக பக்கம் நகர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இரு முறை தைலாபுரம் சென்று டாக்டர் ராமதாஸிடம் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார். ஆனால், அன்புமணி ராமதாஸுக்கோ பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் தான் ஆர்வம் இருந்தது. இவ்வாறு தந்தையும், மகனும் இருவேறுபட்ட நிலை எடுத்த சூழலில் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அழைத்துப் பேசியதில் நூற்றுக்கு நூறு சதமானோர் அதிமுக கூட்டணியை விரும்புவது பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. அதிமுக ஆட்சியில் தான் 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு தரப்பட்டது என்பதும் இதில் ஒரு காரணம்.

ஆனபோதிலும் கூட அன்புமணி ராமதாஸை பொறுத்த வரை அவர் பாஜக பக்கம் செல்வதில் பிடிவாதம் பிடித்து வந்தார். இதையடுத்து டாக்டர் ராமதாஸ், மகன் அன்புமணியை குடும்பத்துடன் வீட்டுக்கு வரவழைத்து விருந்தளித்து, ”பாரப்பா, எனக்கு வயசாயிடுச்சு இந்த நான் பிரச்சாரம் செய்வதற்கான உடல் நிலையிலே இருக்கிறேன். இதுவே நான் முடிவெடுக்கக் கூடிய கடைசி தேர்தல்… அடுத்தடுத்த தேர்தல்களில் நீ என்ன வேணா முடிவெடுத்துக்கோ… நாம் பாஜகவோட சேருவதை கட்சியில் மேல் மட்டம் தொடங்கி, அடித்தளம் வரையிலும் யாரும் விரும்பவில்லை. அதனால், நாம் அதிமுகவுடன் சேர்வோம்” என பெரியவர் சொல்ல, சின்னவரும் மனம் மாறி அப்பா சொல்லுக்கு இசைந்தாராம்.

இதையடுத்து எம்.எல்.ஏ அருளை எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு டாக்டர் ராமதாஸ் அனுப்பி வைத்து பேச்சு நடத்தவும் கட்சிக்குள் ஒரு மகிழ்ச்சி கரை புரண்டது. எடப்பாடி தைலாபுரம் வந்து உடன்பாட்டில் கையெழுத்து போட்டு கூட்டணி முடிவாக உள்ளதாகவும் பரவலாக செய்திகள் இறக்கை கட்டிப் பறந்தன!

இதையடுத்து தான் யாருமே எதிர்பாராத விதமாக வடிவேல் ராவணன் தைலாபுரம் தோட்டத்தில் பிரஸ் மீட் வைத்து பாமக-பாஜக கூட்டணியை அறிவித்தார்! அதாவது பெரியவரும் பிரஸை சந்திக்க விரும்பல. சின்னவரும் பிரஸை சந்திக்க விரும்பலன்னு தெரிஞ்சது. இதற்கான பின்னணியை விசாரித்தால், ”அன்புமணி மத்திய சுகாதாரத் துரை அமைச்சராக இருந்த போது கணக்கு வழக்கின்றி செய்த முறைகேடுகள் தொடர்பான வழக்கை காட்டி மிரட்டி பணிய வைத்து விட்டார்கள்” என்பது மக்கள் பரவலாக சொல்லும் அனுமானமாக உள்ளது.

பாமகவிற்கு சிந்திக்க அதிக நேரம் தந்தால் மனம் மாறிவிடலாம் என பயந்த பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலையும், மத்திய அமைச்சர் எல்.முருகனும் அதிகாலையே சென்னையில் இருந்து புறப்பட்டு தைலாபுரம் வந்து கூட்டணி ஒப்பந்தத்தை முடிவு செய்து விட்டனர்.

இந்த முடிவு கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் ஒருங்கே உருவாக்கி உள்ளது. இதனால், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களில் யாருக்குமே பாஜக கூட்டணிக்கு வேலை பார்க்கவோ, ஓட்டு கேட்கவோ விருப்பமில்லை. கணிசமானவர்கள் அதிமுக, திமுக நோக்கி நகரத் தொடங்கி உள்ளதாகவும் தெரிய வருகிறது.

2016 தேர்தலில் பலமான திமுக கூட்டணியில் தேமுதிக சேரும் என நினைத்த கட்சியினருக்கு பலத்த அதிர்ச்சி வைத்தியம் தந்து மக்கள் நலக் கூட்டணி கண்டு பலத்த அடி வாங்கி படுத்த, படுக்கையான தேமுதிக அதற்குப் பிறகு எழுந்து கொள்ளவே இல்லை!

அது போல இந்த தேர்தலில் கட்சிக்காரர்களின் விருப்பத்திற்கு முற்றிலும் மாறாக, மக்களாலும் ஏற்க முடியாத ஒரு கூட்டணியை தேர்வு செய்திருப்பதன் மூலம் தனகான அழிவு அத்தியாயத்தை தானே எழுத தொடங்கியுள்ளது என்றே தோன்றுகிறது. பாட்டாளி மக்களுக்காக கட்டி எழுப்பட்ட ஒரு கட்சி கால வெள்ளத்தில் தன் முற்போக்கு முகத்தை இழந்ததோடு குடும்ப கட்சியாக சுருங்கிவிட்டதையே மேற்படி நிகழ்வுகள் உணர்த்துகின்றன!

அஜிதகேச கம்பளன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time