கொந்தளிப்பில் மக்கள்! குதூகலத்தில் ஆட்சியாளர்கள்!

-பவா சமத்துவன்

எனது ஊர் ஏகனாபுரம்..  3

நில எடுப்புக்கு களம் இறங்கிவிட்டது தமிழக அரசு! கொந்தளிப்பில் இருக்கும் மக்களுக்கு எந்த தகவல்களும் வெளிப்படையாக சொல்லவில்லை! ஏன் தேவைக்கும் அதிகமாக நிலம் பிடுங்கப்படுகிறது..? எதிர்கட்சி நிலையில் எதிர்ப்பதும், ஆளுங்கட்சி ஆனவுடன் ஆதரிப்பதுமாக திமுகவிற்கு ஏன் இந்த இரட்டை வேடம்..?

பரந்தூர் புதிய விமான நிலையத்தை எதிர்த்து போராடும் இருபது கிராமங்களில், ஏகனாபுரத்தில் மட்டும் இப்போராட்டம் கொதி நிலையை அடைந்து உக்கிரமான உஷ்ணத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது. புதிய விமான நிலைய திட்டத்தால் முற்றிலும் அழிக்கப்படும் நிலையில் உள்ள ஏகனாபுரத்தில் கடந்த மார்ச் பதினாறாம் தேதி அன்று, இக் கிராம மக்கள் நடத்தி வரும் போராட்டம் 600 -வது நாளை எட்டியது.

அன்று ஏகனாபுரம் கிராம மக்கள் தங்களது வயல்களில் இறங்கி தாங்கள் விளைவித்த நெற்பயிர்களை நெஞ்சோடு அணைத்து, வாய் விட்டு கதறி அழுத ஓலக்குரல் காற்றில் பரவி தமிழகம் முழுக்க எதிரொலித்தது என்று தான் சொல்ல வேண்டும்.

” நாங்க என்னய்யா பாவம் பண்ணோம் ..

எங்களை உயிரோடு புதைக்கிறீங்களே..!”

“… இந்த பாவம் உங்களை சும்மா விடுமா ..

உங்க ஏழு தலைமுறையை அழிச்சிடும்..!

” விட்ருங்கய்யா.. விட்ருங்கய்யா.. எங்க நிலத்தை அழிக்காம விட்டுருங்ங்கய்யா..!”

” காப்போம்.. காப்போம் விவசாயம்..காப்போம்!”

என கிராம பெண்கள் தங்கள் மார்பிலும் நெஞ்சிலும் அடித்துக்கொண்டு அழுத காட்சியை தமிழகமே திரும்பிப் பார்த்தது.

ஒட்டு மொத்த கிராமமே ஓலக்குரல் எழுப்பும் இந்த பிரச்சனையில் தமிழக முதல்வர் இதுவரை வாய் திறக்காதது ஏன்…?

ஆனால், –  சில மாதங்களுக்கு முன்னர் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் பட்ஜெட் பற்றி தமிழக முதல்வர் கூறியதை இந்த நேரத்தில் நாம் குறிப்பிட்டாக வேண்டும்.

“திமுக அரசு உழவர்களை உயிராக நினைக்கிறது” என்றார்!

சொல்லுக்கும் செயலுக்கும் எவ்வளவு வித்தியாசம்.

உயிர் உருக ஓலக் குரல் எழுப்பும் விவசாயிகளைப் பற்றி ஒரு வார்த்தையும் கூறாமல், நாங்கள்  உங்கள் உயிர் நண்பன் எனக் கூறுவது எத்தகைய  கொடூர சிந்தனை.

எதிர்க் கட்சியாக இருக்கும்போது ஒரு திட்டத்தை எதிர்ப்பதும், ஆளுங்கட்சியானால் அதே திட்டத்தை நடைமுறைப்படுத்துவதும் திமுகவின் ஆதி காலத்து வழக்கம்.

மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு மாற்றாக ஒரு புதிய விமான நிலையம் நிறுவப்பட வேண்டும் என்று பல காலமாக கூறப்பட்டது வந்தது .

இந்நிலையில் –

புதிய விமான நிலையத்தை அமைக்க பல்வேறு இடங்களில் ஆய்வுகள் செய்யப்பட்டன .

அவை:

செய்யாறு

பன்னூர்

பரந்தூர் போன்றவை .

அதிமுக காலத்தில் பன்னூரில் தான் விமான நிலையம் அமைக்கப்படும் இன்று கூறப்பட்டது.

எத்தனை கிராமங்கள் கையகப்படுத்தப்படும் என்று எந்த விவரமும் வெளியாகாத நிலையில் துவக்க நிலையிலையே பன்னூர் மக்கள் இதை எதிர்த்தார்கள்.

அப்போது – எதிர்க் கட்சியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தலைவர் ஸ்டாலினும்

”பன்னூர்  திட்டத்தை வரவே விடமாட்டோம்”

”இது மக்கள் விரோத திட்டம் இத்திட்டத்தை எதிர்த்து மக்களைத் திரட்டி போராடுவோம்”

என்று கூறினார்கள்.

இன்று – அதே திமுக அரசு ஆட்சியில் அமர்ந்த பிறகு மக்களாட்சியின் மாண்புகளையும் சட்ட நெறிமுறைகளையும் பின்பற்றாமல் அசுர வேகத்தில் அவசரகுதியில் இந்த திட்டத்தை நிறைவேற்ற துடிப்பதன் காரணம் என்ன..?

பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு முதலில் 12  கிராமங்களும் அவற்றில் உள்ள  சுமார் 4 650 ஏக்கர் நிலங்களும் கையகப்படுத்தப்படுவதாகவும், உத்தேச மதிப்பீட்டுச் செலவு இருபதாயிரம் கோடியாகும் என்று கூறப்பட்டது .

பின்னர்-

இத்  திட்டத்திற்கு 20 கிராமங்கள் தேவைப்படுவதாகவும், அவற்றில் உள்ள 5,750 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட இருப்பதாகவும் தமிழக அரசு அறிவித்தது.

இத்திட்டத்திற்காக மேலும் ஏழு கிராமங்கள் சேர்க்கப்படுவதும் கூடுதலாக ஆயிரம் 1,250 ஏக்கர் கையகபடுத்தப்படுவதும்,

திட்ட மதிப்பீடு  30,000 கோடி என ஏன் உயர்ந்தது என்று தமிழக அரசு இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.

ஆயிரம் ஏக்கரே போதுமென்ற ஒரு திட்டத்திற்கு இவ்வளவு அதிக நிலங்கள் ஏன்..?

மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் பெரும் திட்டம் என்பதாக மார் தட்டிக் கொள்ளும் தமிழக அரசு இந்த விஷயத்தில் எந்த ஒன்றிலும் வெளிப்படையாக இல்லை என்பது கசப்பான உண்மை.

கடந்த 2007 ஆண்டு சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு,

துரைப்பாக்கம், கெரகம்பாக்கம், மணப்பாக்கம் போன்ற, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை ஓட்டியுள்ள பகுதிகளில்  852 ஏக்கர்  நிலம் கையகப்படுத்தப்படும் என தமிழக அரசு ஆணை வெளியிட்டது.

இன்று வரை இந்த அரசு ஆணை செயல்படுத்தப்படாமல், தொடர்பே இல்லாத 20 கிராமங்களை நோக்கி நகர்ந்து, பல்லாயிரம் பேரின் வாழ்வாதாரங்களை காவு வாங்குவதன் காரணம் என்ன..?

தமிழக அரசு முன்னதாக கையகப்படுத்த நினைத்த 857 ஏக்கரும் குடியிருப்புகள் மட்டுமே! என்பதை இங்கு சுட்டிக் காட்டுவது பொருந்தும் என நான் கருதுகிறேன

தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் கிராமங்களின் வளர்ச்சி திட்டத்திற்கான சட்டத்தின்படி  (Tamil Nadu town and country planning act) எந்த ஒரு திட்டத்தை மாநிலத்தில் மேற் கொள்வது ஆனாலும் அத் திட்டத்தினால் ஏற்படும், பொருளாதார உயர்வு, சுற்றுச்சூழல் பாதிப்பு, சமூக விளைவுகள் அனைத்தையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறுகிறது.

பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தில் இவர்கள் கூறும் பொருளாதார உயர்வுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை .

ஆனால்- மிகக் கடுமையான சுற்றுச் சூழல் சீர்கேட்டை இத்திட்டம் ஏற்படுத்தும் என பல சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்தபடியே உள்ளனர்.

சமூக விளைவை பொருத்தவரை ஆண்டாண்டு காலமாக நிலத்தையும், நீர்நிலைகளையும் வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் பல்லாயிரம் மக்களின் வாழ்க்கையும் அவர்கள் சந்ததியினரின்  எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது.

தொலை நோக்குப் பார்வையில் இப் பெருந் திட்டம் பல மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் இத்திட்டத்தை யாருக்காக அரசு செயல்படுத்த துணிகிறது…?

இந்திய அரசுக்கு என்று ஒரு விமான நிறுவனமும் இப்போது இல்லை. அப்படியானால் இந்த விமான நிலையம் எதற்காக..?

இந்தியாவின் மும்பை, டெல்லி, லக்னோ, அகமதாபாத், மங்களூரு, ஜெய்ப்பூர், குவாஹாத்தி, திருவனந்தபுரம் ஆகிய ஏழு நகரங்களில் உள்ள விமான நிலையங்களை விழுங்கி செறித்து வரும் அதானி குழுமத்திற்கு மேளும் ஒன்றை கொடுக்கவே இந்த இடம் மக்களிடமிருந்து அராஜகமாக பிடுங்கப்படுகிறது. வரவுள்ள இந்த விமான நிலையத்தின் கட்டுமான பணிகள் கூட அதானி நிறுவனத்திற்கே கொடுக்க வாய்ப்புள்ளது என்றும் அரசு வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

திட்டத்தால் பாதிப்புக்குள்ளாகும் மக்களை கலந்து ஆலோசிக்காமல் அவர்களின் இசைவில்லாமல் இந்த திட்டத்தை நிறைவேற்ற துடிப்பது ஏதோச்சதிகாரமல்லவா..?

இத்திட்டத்தை மேற் கொள்வதற்காக அரசு மேற்கொண்ட முதல் பொதுமக்கள் கருத்தறியும் கூட்டத்தின் “அவலட்சனங்களைப்” பற்றி இன்னமும் பேசுகிறார் ஏகனாபுரம் பொதுமக்கள் போராட்டக் குழுவின் செயலாளர் திரு. சுப்பிரமணியன் .

“.. விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மக்கள் கருத்து கேட்டு கூட்டம் நடைபெறுவதாக வருவாய்த்துறையினர் மூலம் எங்களுக்கு தகவல் சொல்லப்பட்டது.

ஒரு வாரம் பத்து நாள் என எந்த அவகாசமும் அளிக்காமல் இரவோடு இரவாக வந்து ,காலையில் நடைபெறும் கூட்டத்திற்கு கலெக்டர் ஆபீஸுக்கு வாருங்கள் என்று அழைத்தார்கள்.

அவர்கள் கூறியதை மதித்து 12 கிராம மக்களும் சென்றோம்.

பல மணி நேரம் பதில் சொல்ல  அங்கு ஆள் இல்லை .

இதனால் மதியம் வரை காத்துக் கிடந்தோம் .

காத்துக் கிடந்த எங்களுக்கு கூட்டத்தை யார் நடத்துகிறார்கள் அதில் யார் யார் எல்லாம் கலந்து கொள்கிறார்கள் .

அமைச்சர்கள் -அதிகாரிகள் – எம்எல்ஏ -எம்பி வருகிறார்களா..? என எந்த தகவலும் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.

கடைசியாக நண்பகலுக்கு பின் கூட்டம் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் இருந்து ஐந்து பேராக வாருங்கள்.

”தனி அறையில் வைத்து கருத்து கேட்கிறோம்” என்றார்கள்.

பொது அரங்கத்தில் பொதுமக்கள் மத்தியில் கருத்து கேட்பு எனக் கூறிவிட்டு, தனி அறையில் விசாரணை என  இவர்கள் இப்போது ஏன் கூறுகிறார்கள் என எங்களுக்கு தெரியவில்லை.

அரசும், அதன் அதிகாரிகளும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் அலட்சியமாகவும், சர்வாதிகாரமாகவும் நடந்து கொண்டனர்.

இதனால் அதிர்ச்சியுற்ற 12 கிராம மக்களும், இனி பொது மக்களிடம் கருத்து கேட்பது என்றால், கிராமங்களுக்கு வந்து நடத்துங்கள் என்று கூறிவிட்டு அத்தனை பேரும் வெளிநடப்பு செய்தோம்..”என்கிறார் .

வெளி நடப்பு செய்த கிராம மக்கள்..!

அன்று முதல் இன்று வரை பரந்தூர் ஒரு புதிய விமான நிலைய திட்ட த்தை பொறுத்தவரை,

தமிழக அரசின்  முன்னெடுப்புகளும் செயல்பாடும் மக்களுக்கு எதிர்மறையாகவே உள்ளது.

அது எப்படித் தெரியுமா..?

ஒரு பக்கம் கருத்து கேட்புக் கூட்டம் என்ற ஒன்றை பொய்யாக நடத்திக் கொண்டு, இன்னொரு பக்கம் பாராளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் திட்டத்திற்கு அனுமதி கேட்டு கோரிக்கை எழுப்புகிறார்கள்.

திட்டத்தைப் பற்றி ஆய்வு செய்ய தொழில்நுட்ப குழு அமைக்கப்படும் என்று கூறிக் கொண்டே ,

ஆய்வு செய்து அறிக்கை வரும் முன்னரே தமிழக நிதி அமைச்சர் மத்திய நிதி அமைச்சரை பார்த்து திட்டத்திற்கு நிதி ஒதுக்குங்கள் என்று கோரிக்கை விடுக்கிறார் .

இத்திட்டத்தின் தேவை என்ன ?

இத்திட்டம் தமிழக அரசால் எதனால் முன்னெடுக்கப்படுகிறது என்பதை பற்றி நாளிதழில் ஒரு பக்க அறிக்கை வெளியாகிறது .

அந்த அறிக்கை அறிக்கையில் அதிகாரியின் பெயரோ அமைச்சரின் பெயரோ அல்லது தமிழக அரசு துறைகளில் பெயரோ ஏதும் இடம் பெறவில்லை.

இந்த “வினோதத்தை “பற்றி என்ன சொல்ல ..?

இது மக்கள் விரோதம் அல்லவா ..?

கிராம சபைகள் தான் மக்களாட்சி ஊற்றுக்கண் என ஒவ்வொரு முறையும் தமிழக முதல்வர் கூறுகிறார் .

ஆனால்- பரந்தோர் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து ஏகனாபுரம் கிராம சபையில் இதுவரை ஆறு முறை தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளது.

இதற்கு தமிழக அரசு இன்று வரை பதில் அளிக்கவில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு மக்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் பற்றி யோசித்தால், எதிர்கால இந்தியா பற்றி  கவலை தான்  நமக்கு மேலோங்குகிறது.

“…எதை எடுக்க போறாங்க.. எத்தனை ஏக்கர் எடுக்க போறாங்க எதுவுமே தெரியலப்பா..’’

“…வீடு இருக்குமா? விளை நிலம் இருக்குமானு இதுவரைக்கும் எந்த அதிகாரியம் வந்து

சொல்லல…!

நாங்களும் தாசில்தார் – கலெக்டர்- எம்எல்ஏ -எம்பி- ன்னு தினம் தோறும் போய் மனு கொடுத்து பார்த்தும்,

யார் கிட்ட இருந்து எந்த பதிலும் வரல..!

அதனால எந்த நேரத்துல எது நடக்குமோன்னு பயந்துகிட்டே கிடக்கிறோம்..

இழப்பீடு தரேன்னு சொல்றாங்கப்பா.. அதெல்லாம் எத்தனை நாளைக்கு வரும்..?

குடும்பத்துல கல்யாணம் -காட்சி வீட்ல இருக்கிறவங்களுக்கு நோய் + நொடி என்று வைத்திய செலவு வந்தா எல்லா காசும் கொஞ்ச நாள்ல கரைஞ்சு போயிடும்பா.. அப்புறம் – எங்க போயி எங்க வச்சு எங்க குழந்தைகளை கரை சேர்க்கறது..?”

என்று கண்ணீர் விடுகிறார் திருமதி கலைவாணி. ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இல்லத்தரசி இவர்.

இதோ இந்திய பாராளுமன்றத்துக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்தல் அட்டவணையும் வெளியாகிவிட்டது.

வேட்பு மனு தாக்கல் தொடங்கி இருக்கிறது.

மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையும் வெளியாகி இருக்கிறது.

அதில்- திமுக வேட்பாளர்கள்  வெற்றி பெற்றால், திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தல், என்னென்ன செய்வோம் என்பதை வாக்குறுதியாக அளித்திருக்கிறார்கள்.

அதில் – தமிழகத்தில் செயல்படுத்த போகும் திட்டங்கள் என்ற பகுதியில், விமான நிலையங்கள் என்ற ஒரு பிரிவும் வருகிறது .

அதில் சென்னை- கோவை- சேலம் தூத்துக்குடி போன்ற விமான நிலையங்கள் விரிவுபடுத்தப்படும் என்று மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. மேலும் – ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் பற்றியும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறுகிறது.

காஞ்சிபுரம் – திருவள்ளூர் மாவட்டங்களை பொறுத்தவரை தமிழக அரசு இப்போது முன்னெடுத்து வரும் பரந்தோர் புதிய விமான நிலைய திட்டம் பற்றி , அதில் ஒரு  எழுத்து  ஒரு வார்த்தையும் இடம் பெறவில்லை.

பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும்  மேம்பாலங்களைப் பற்றி கூட கூறும் திமுகவின் தேர்தல் அறிக்கை, மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களுக்கு இடையே மேற்கொண்டு வரும் பெருந்திட்டோம் பற்றி, மக்களிடம் ஏதும் கூறாமல் மறைப்பதன் மர்மம் என்ன..?

தொடரும்…

கட்டுரையாளர்; பவா சமத்துவன்

மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time