கிருஷ்ணாவின் கள்ள மெளனத்தின் பின்னணி என்ன?

-சாவித்திரி கண்ணன்

டி.எம்.கிருஷ்ணாவிற்கான சங்கீத கலாநிதி விருது சர்ச்சையானதில், பெரியார் தான் பார்ப்பன சமூகத்தின் ‘டார்கெட்டாகி’யுள்ளார்! கிருஷ்ணாவை ஆதரித்து பொதுச் சமூகமே வாள் சுழற்றிக் கொண்டுள்ளது. ஆனால், தன்னை முன்னிட்டு, பெரியார் தாக்கப்படுவது குறித்து, தற்போது வரை கிருஷ்ணா கள்ள மெளனம்  சாதிப்பதன் பின்னணி இது தான்;

கிருஷ்ணாவிற்கு விருது வழங்கப்படுவதை சாக்காக வைத்து தான் பெரியார் பெரிய அளவில் தாக்கப்பட்டு வருகிறார்!

பெரியார் இனப் படுகொலை செய்யத் துண்டியதாக அபாண்ட பழி சுமத்துகிறார்கள். மீண்டும், மீண்டும் இந்தப் பழியை ரஞ்சனி, காயத்திரி, துஷ்யந்த் ஸ்ரீதர், விசாகா ஹரி, திருச்சூர் சகோதரர்கள் மட்டுமல்ல, பாஜகவின் அண்ணாமலை, உமா ஆனந்த் உள்ளிட்ட பலர் பெரியாரை இழிவு படுத்தும் வாய்ப்பாக இந்த சந்தர்ப்பத்தை மாற்றுகிறார்கள்!

பெரியாரை இழிவுபடுத்தும் கர்நாடக சங்கீத வித்வான்கள்!

“பிராமணர்களை இனப் படுகொலை செய்ய வேண்டுமென வெளிப்படையாக பேசிய, இந்த சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்ணையும் இழிவுபடுத்திய,  ஈ.வெ.ரா என்ற பெரியாரை எப்படி புகழலாம்..என்பதே இவர்களின் கேள்வி!

ஆனால், பெரியார் அப்படிப்பட்டவரல்ல, உங்கள் புரிதலே தவறு என பேசி இருக்க வேண்டிய கிருஷ்ணா மெளனம் சாதிக்கிறார்! யாரை முன்னிறுத்தி, தனது முற்போக்கு பிம்பத்தை கட்டமைத்து பிரபலமானாரோ _ தமிழகத்திற்கான கல்வி கொள்கை உருவாக்கக் குழு உள்ளிட்டவற்றில் இடம் பெற்றாரோ – அந்தப் பெரியார் கடும் தாக்குதலுக்கு உள்ளாகும் போது கனத்த மெளனம் சாதிக்கிறார் கிருஷ்ணா!

திராவிட ஆட்சியால் பார்ப்பன சமூகம் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாம்..!

”அப்படி பெரியாருக்கு முட்டுக் கொடுத்து அவர் ஏதாவது விளக்கம் தந்தால், அவருக்கு சங்கீத கலாநிதி விருது தர முடியாத நிலை தோன்றிவிடும்’ என்ற அளவுக்கு மியூசிக் அகாதெமியின் நிர்வாக அமைப்பிற்குள் சரிபாதியினர் கொந்தளித்து இருக்கிறார்கள் என அவருக்கு சுட்டிக் காட்டப்பட்டதாம்!

”அவனை இந்த பக்கம் நிற்கச் சொல்லுங்க, அல்லது அந்தப் பக்கமே போகச் சொல்லுங்க! இரண்டுங்கெட்டானா பெரியாருக்கு முட்டுக் கொடுத்து ஏதாவது அறிக்கை விடுவான் என்றால், சங்கீத கலாநிதி விருது தரப்படமாட்டாது என்பதை உரக்கச் சொல்லிடுங்க’’ என எச்சரிக்கப்பட்டுள்ளதாம். அதைத் தொடர்ந்தே கிருஷ்ணா கப்சிப்பாகிவிட்டாராம்!

டி.எம்.கிருஷ்ணாவை காப்பாற்றவும், தூக்கி கொண்டாடவும் சமூகத்தின் அனைத்து தரப்பும் களமாடுமாம்! ஆனால், அவர் மட்டும் கள்ள மெளனம் சாதித்து, மியூசிக் அகாதெமியின் மனம் கோணாமல் நடந்து கொள்வாராம்!

மியூசிக் அகாதெமி தலைவர், தி ஹிந்து நாளிதழ் இயக்குனர் முரளி!

மியுசிக் அகாதெமி தலைவர் முரளி ரஞ்சனி,காயத்திரி சகோதரிகளுக்கு தந்த பதிலில் கூட, பெரியார் பற்றிய அவதூறுகளுக்கு எந்த பொறுப்பான ஒரு வரி விளக்கம் கூட தராமல் தான் தந்துள்ளார். அதே சமயம் ரஞ்சனி, காய்த்திரி சகோதரிகளை வசைபாடி உள்ளார். ஆக, மியூசிக் அகாதெமிக்குமே பெரியார் குறித்த சரியான புரிதல் இல்லை. இதுவே, சங்கராச்சாரியார் என்றால், வரிந்து கட்டி பக்கம், பக்கமாக விளக்கம் அளித்து இருப்பார்கள்! ”பெரியார் இனப் படுகொலை செய்யத் தூண்டினார்” என பாஜக ஆதரவு பார்ப்பனர்கள் பேசி வருவதில் மியூசிக் அகாதெமியின் நிலைபாட்டை அவர்கள் கண்டிப்பாக வெளிப்படுத்த வேண்டும்.

ஆக, கோபத்திற்கு தூண்டப்பட்ட இசை சகோதரிகள் ”விருது வழங்குவதற்கான உங்களின் உரிமையை நாங்கள் கேள்வி எழுப்பவில்லை. ஆனால், அதே சமயம் இனப் படுகொலையாளர்களையும், இழிவான சொற்பொழிவாளர்களையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. மேலும், மியூசிக் அகாதெமி நிறுவனத்தை நாங்கள் மதிக்கிறோம். ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்து இசைக் கலைஞர்கள் உருவாகும் மியூசிக் அகாதெமி கட்டிடத்தில் ஆதிக்கம் செலுத்துவது எங்களுக்கும், லட்சக்கணக்கான மக்களுக்கும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மியூசிக் அகாதெமி ஆடிட்டோரியம் அனைத்து சமூகங்கள் மற்றும் மதச் சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினராலும் நிரம்பி இருக்கும் நாளை பார்க்க விரும்புகிறோம்” என  பந்தை எதிர்பக்கம் தூக்கி போட்டுள்ளனர் சகோதரிகள்!

இதைக் கண்டு மிரண்டு போயுள்ளது மியூசிக் அகாதெமி வட்டாரம். மியூசிக் அகாதெமியின் அடிக்கட்டுமானத்திற்கே வேட்டு வைக்கும் அளவுக்கு நிலைமை செல்வதை கண்டு அதிர்ந்த அகாதெமி தலைவர் முரளி கூட்டத்தினர் அவர்களின் தி இந்து நாளிதழில் இசை சகோதரிகளின் இந்த அறிக்கையை பிரசுரிக்காமல் கமுக்கமாக அமுக்கிவிட்டு, மற்ற  நாளிதழ்கள் பலவற்றிலும் வராதபடி ‘லாபி’ செய்து மறைத்து விட்டனர்.

மியூசிக் அகாதெமி என்பது முழுக்க, முழுக்க பார்ப்பனர்களால், பார்ப்பனர்களுக்காக நடத்தப்படுவது! ஆகவே, அவர்களால் சகோதரிகளின் வேண்டுகோளுக்கு பதில் சொல்ல முடியாது என நாம் புரிந்து கொள்ளலாம்!

ஆனால், முற்போக்காளரான டி.ம்.கிருஷ்ணா தொடர்ந்து மெளனம் சாதிப்பது ஏன்?

பிற்போக்காளர் என கருதப்படுகிற சித்ரவிணை ரவிக்கிரண் தான் கொண்ட கொள்கைக்காக தனக்கு மியுசிக் அகாதெமி முன்பு வழங்கிய விருதை திருப்பி கொடுப்பதாக அறிவிக்கிறார்! ஆனால், கிருஷ்ணா தன் முற்போக்கு பிம்பத்தையும் தக்க வைத்துக் கொண்டு, ஒரு பிற்போக்கு அமைப்பான மியூசிக் அகாதெமி தரப் போகிற விருது கை நழுவி போய்விடுமோ.. என கள்ள மெளனம் சாதிக்கிறார்!

உண்மையில் கிருஷ்ணா யார்? அவர் நிஜமாகவே முற்போக்காளர் தானா? என விலாவாரியாக அலசி ஒரு கட்டுரை ஒன்றை நான் நம்முடைய அறம் இணைய இதழில் எழுதியுள்ளேன்.

டி.எம்.கிருஷ்ணா உண்மையில் முற்போக்காளரா..?

முற்போக்காக பேசுவது, தோற்றம் காட்டுவது எளிது. ஆனால், வாழ்வதற்கு சில இழப்புகளை எதிர் கொள்ளும் மன திடம் மட்டுமல்ல, சீரிய செயல் திட்டமும் வேண்டும். பார்ப்பனர்கள் மட்டுமே நிரம்பியுள்ள மியூசிக் அகாதெமியை ஜனநாயகப்படுத்த கிருஷ்ணா செய்யப் போவது என்ன? இந்த விஷயத்தில் மியுசிக் அகாதெமியை நிர்பந்திக்கும் துணிச்சல் அல்லது அறப் பார்வை அவருக்கு இருக்குமானால் அவர் இப்போதும் மஎளம் சாதிக்கமாட்டார்!

கிருஷ்ணா ஒரு கடைந்தெடுத்த சுயநலவாதி. எல்லா வகையிலும் தன்னை முன்னிலைப்படுத்தி கொண்டு ஆதாயம் பெறவே முற்போக்கு பேசுகிறார்! சனாதனக் கூட்டத்தின் சகவாசத்தில் எல்லா பலாபலன்களையும் அனுபவித்துக் கொண்டு, முற்போக்கு பிம்பத்தையும் ‘மெயிண்டெய்ன்’ செய்வது கிருஷ்ணாவின் ஆகப் பெரிய சாகஸம் தான்!

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time